அமெரிக்காவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய அல்–அசாத் ஆட்சி கவிழ்ப்பு: ஒரு பகுப்பாய்வு
தமிழில்: விஜயன்
சிரியா அரசிற்கு எதிராக ஆயுதக் குழுவினர் திடீர் தாக்குதல் தொடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதோடு, பெருமளவிலான நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நீண்ட காலமாக சிரியாவின் அதிபராக இருந்து வந்த பஷார் அல்–அசாத்‘ன் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரினால் சிதைந்து கிடக்கும் சிரியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் ஏதும் இல்லாதிருந்த சிரியாவை மீண்டும் போர்க்களமாக இந்த ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றியுள்ளது. சிரிய ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அடுத்தடுத்த நாள்களில அமெரிக்கா இந்த விவகாரத்தை எவ்வாறு பார்க்கிறது என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று அல்ஜசீரா பத்திரிகையிடம் பேசிய சில வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
“இப்படிப்பட்டதொரு சம்பவம் நிகழும் என்று அமெரிக்கா எதிர்பார்த்திருக்காது என்றே நினைக்கிறேன். பல ஆய்வாளர்களும், நான் உட்பட பல வல்லுநர்களும் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றித்தான் யோசித்து வருகிறோம்.” என்று வாஷிங்டனில் உள்ள அட்லாண்டிக் கவுன்சிலில் முதுநிலை ஆய்வறிஞராக இருக்கும் குத்தாய்பா இட்லிபி அல்ஜசீராவிடம் பேசியபோது கூறியுள்ளார்.
“சிரியாவுடனான உத்தியை பைடன் நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்கிறார் குத்தாய்பா இட்லிபி. இவர் ஒரு சிரிய அகதி என்பதும் குறிப்பிடத்தக்கது. வருகிற ஜனவரியோடு பைடனின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிற நிலையில் முழு அதிகாரம் அற்றவராக இருக்கிற நிலையில், அடுத்த அதிபராக டிரம்ப் வருவதால் அமெரிக்காவின் உத்தியில் மாற்றத்தை கொண்டு வருவது பைடன் நிர்வாகத்திற்கு எளிதல்ல.
“ஆட்சி மாற்றம் காரணமாக பைடன் நிர்வாகத்தின் செல்வாக்கும் குறைவாக இருப்பதால் மிக விரைவாக மாறி வரும் சிரிய நிலைமைகளுக்கு ஏற்ப உத்தியை மாற்றியமைப்பது எளிதல்ல,” என்கிறார் குத்தாய்பா இட்லிபி.
‘அரிய வாய்ப்பா அல்லது ஆபத்தும் நிச்சயமின்மையும் நிறைந்ததா’?
ஹயாத் தஹ்ரிர் அல்–ஷாம்(HTS) தலைமையிலான அரசு எதிர்ப்பு குழுவினர் ஞாயிறன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் பகுதிக்குள் நுழைந்த ஒரு மணி நேரத்தில் அல்–அசாத் நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்டடார். இது பற்றி முதல்முறையாக பைடன் பேசியபோது, “அரிய வாய்ப்புதான்” என்றாலும் “ஆபத்தும் நிச்சயமின்மையும் நிறைந்ததாக” இருக்கும் என்று விவரித்தார்.
சிரியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் ஈரானிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க ஆதரவு ஆயுதக் குழுக்கள், லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல், காசா மீதான இஸ்ரேல் நடத்தி வரும் போர் ஆகியவற்றுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிற காரணத்தால் அல்–அசாத்’ன் ஆட்சி முடிவுக்கு வருவதற்கு அமெரிக்காவும் பங்களித்திருக்கிறது என்று பைடன் பேசியுள்ளார்.
அல்–அசாத் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்த ரஷ்யாவின் பலம் முழுவதும் உக்ரைன் போரில் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கூட அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வருவதே காரணம் என்று பைடன் வலியுறுத்தி பேசியுள்ளார். “அவ்வகையில், வெறுக்கத்தக்க அல்–அசாத் ஆட்சியை ரஷ்யாவோ, ஈரானோ, ஹிஸ்புல்லாவே காப்பாற்ற முடியாத நிலை முதல்முறையாக ஏற்பட்டுள்ளது” என்றார் பைடன்.
இஸ்ரேல், ஈராக், லெபனான், ஜோர்டன் உள்ளிட்ட சிரியாவின் அண்டைய நாடுகளுக்கு உதவுவதில் அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று பைடன் கூறினார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போரில் குர்திஸ் ஆயுதக் குழுவினர் தலைமையிலான சிரிய பாதுகாப்பு படைக்கு உதவும் வகையில் வடகிழக்கு சிரியாவில் அமெக்க படைகள் நிலைநிறுத்தப்படும் என்றார். தற்போது, 900க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
“எல்லா சிரிய ஆயுதக் குழுவிடமும்” பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதே நேரத்தில் “எச்சரிக்கையுடனும்” இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேசினார்.
“அல்–அசாத் ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்ற சில ஆயுதக் குழுவினர் கடந்த காலங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது” என்பதையும் சேர்த்து பேசினார்.
எனினும், எச்.டி.எஸ்(ஹயாத் தஹ்ரில் அல்–ஷாம்) ஆயுதக் குழுவினர் “சரியான விஷயங்களை பேசி வருவதாக” மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
‘பதவிக் காலம் முடிவடைய ஆறு வாரங்கள் மட்டுமே உள்ளன’
இனி வரக்கூடிய காலங்களில் சிரியாவுடனான அமெரிக்காவின் கொள்கையில் என்னென்ன முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கோடிட்டு காட்டும் வகையில்தான் வெள்ளை மாளிகையிலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ செய்தியறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
இருந்தபோதிலும், ஆறு வாரமே எஞ்சியுள்ள பைடன் அரசால் நிச்சயமாக இந்த பிரச்சனைக்கு உரிய பதிலை வழங்க முடியாது என்பதே ஆரோன் டேவிட் மில்லரின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்க உள்துறை அமைச்சகத்தில் மத்திய கிழக்கு பகுதிக்கான பிரிவில் முன்னாள் ஆலோசகராகவும், உலக அமைதிக்கான கார்னீகி அறக்கட்டளையில் மூத்த ஆய்வறிஞராக மில்லர் இருந்து வருகிறார்.
“ஆறு வாரம் மட்டுமே ஆட்சியிலிருக்கும் பைடன் நிர்வாகம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் குறுகிய காலத்தில், எவ்வித பிரச்சனையோ, பேராபத்தோ வந்துவிடாமல் தடுப்பதுதான் எனது ஆலோசனையாக இருக்கும்” என்கிறார் ஆரோன் டேவிட் மில்லர்.
மிக முக்கியமான பிரச்சனைகள் பற்றிய முடிவுகளெல்லாம் டிரம்ப் ஆட்சிக்கு வந்தப் பிறகுதான் எடுக்கப்படும் என்பதே இதன் மூலம் தெரியவரும் கருத்தாக இருக்கிறது.
முதல்முறையாக டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது சிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கே முயற்சி செய்தார். சிரியாவில் அமெரிக்காவிற்கு “எந்த வேலையும் இல்லை” என்று ட்ரூத் என்ற சமூக ஊடக பக்கத்தில் சனிக்கிழமை பதவிட்டிருப்பதை பார்க்கும் போது பழைய நிலைப்பாட்டையே முன்னிறுத்துவதாக தெரிகிறது.
மாறிவரும் கள நிலைமைகளுக்கு ஏற்ப ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக சண்டையிட்டு வரும் சிரியன் ஜனநாயக படைக்கான(SDF) ஆதரவை தொடர்ந்து எவ்வாறு வழங்குவது குறித்தான தெளிவான பதிலை பைடன் நிர்வாகம் இன்னு வழங்கவில்லை. மற்ற ஆயுதக் குழுக்கள் போல, சமீபத்தில் டெயில் அஜ் ஜோர், ஈராக்குடன் இணையும் அபு கமல் எல்லை உள்ளிட்ட புதிய பகுதிகளை சிரிய ஜனநாயகப் படை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதலில் சிரிய ஜனநாயகப் படையுடன் சேர்ந்து அமெரிக்க படைகள் தாக்குதல் தொடுக்கவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்போது தெரிவித்துள்ளார்.
எனினும், மாறிவரும் கள நிலைமைகள் சிரிய ஜனநாயகப் படைக்கும், துருக்கி ஆதரவில் இயங்கி வரும் சிரிய தேசிய இராணுவ குழுவினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர் இட்லிபி கூறுகிறார்.
“இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லைதான்,” என்கிறார் இட்லிபி.
எச்.டி.எஸ் அமைப்பை “பயங்கரவாத அமைப்பாக” முத்திரை குத்தும் முடிவை பைடன் நிர்வாகம் மறுபரிசீலினை செய்வதற்கும் வாய்ப்புள்ளது. அப்போதுதான், எந்தவொரு தற்காலிக அரசாங்கத்திலும் அமெரிக்காவின் செல்வாக்கை உறுதிபடுத்த முடியும்.
ஐஎஸ்ஐஎல்(ISIS) அமைப்பால் ஜபாத் அல்–நுஷ்ரா என்ற அமைப்பு 2012ம் ஆணடு உருவாக்கப்ட்டிருந்தாலும், அடுத்த ஆண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிலிருந்து வெளியேறி அல்–கொய்தா அமைப்புடன் இணைந்தது. மற்ற பிற குழுக்களுடன் இணைந்து 2017ம் ஆண்டு அல்–கொய்தா அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு HTS அமைப்பாக மறுசீரமைத்துக் கொண்டது.
HTS அமைப்பின் தலைவராக இருக்கும் அபு முகமது அல்–ஜீலானி( உண்மையான பெயர் அகமது அல்.ஷாரா) சமத்வத்துவத்தையும், பன்முக கலாச்சாரத்தையும் ஆதரிப்பவராக தன்னை காட்டுவதற்கு முயன்ற போதிலும் சிரியாவிலுள்ள பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களை இக்குழு எவ்வாறு நடத்துகிறது என்பது இன்றளவும் சர்சையாகவே பார்க்கப்படுகிறது. இவர் தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு நீடிக்கவே செய்கிறது.
‘புறந்தள்ளப்படும்’
அல்–அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கொண்டாடினாலும், பைடன் ஆட்சி எதிர்பார்த்த விசயம் எதுவும் நடக்கவில்லை என்பது கவலைக்குரியதே என்கிறார் இட்லிப்.
சிரியாவைப் பொறுத்தமட்டில் இரண்டு உத்திகளை மட்டுமே அமெரிக்கா பின்பற்றி வந்தது. ஒன்று, அரசியல் வெற்றிடத்தை தவிர்ப்பதற்காகவும், ஈரானுடனான நெருக்கத்தை குறைப்பதற்காகவும் அல்–அசாத் ஆட்சி தொடர்வதற்கு ஆதரவு தெரிவிப்பது; இரண்டாவது, அல்–அசாத் ஆட்சியை கவிழ்த்துவிட்டு சிரியாவில் புதிய தலைமையை கொண்டு வருவது என்ற இரண்டு உத்திகளை மட்டுமே அமெரிக்கா பின்பற்றி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக பைடன் அசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதிங்கி நிற்கும் என்கிறார் இட்லிபி.
ஈரானுடனான உறவை துண்டித்துக்கொண்டு, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அல்–அசாத் ஆட்சியின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கான வாய்ப்புகளை பற்றி சமீபத்தில் அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகம பேச்சுவார்த்தை நடத்தியதாக கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பதை இட்லிபி சுட்டிக்காட்டினார்.
கடந்த 2021 முதல் முக்கியத்துவமான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படாத சிரியாவுடனான பைடன் ஆட்சியின் அனுகுமுறை குறித்து எந்தவொரு முழுமையான முடிவு எடுக்கப்படவில்லை என்றார் இட்லிப்.
“கடந்த நான்காண்டுகளாகவே சிரிய பிரச்சனை புறந்தள்ளப்பட்டதோடு, ஒரு பிரச்சனையாகக் கூட கணக்கில் கொள்ளப்படவில்லை.” என்கிறார் இட்லிப்.
சில ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலை மாறி ராஜ்ஜிய முறைகளில் அல்–அசாத் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதென்ற நிலைக்கு வந்துள்ள அமெரிக்காவின் அனுகுமுறை என்பது சிரிய உள்நாட்டுப் போர் முழுவதிலும் பல நேரங்களில் அமெரிக்கா தெளிவற்ற உத்தியை பின்பற்றுவதாகவே காட்டியுள்ளது.
முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் அல்–அசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு துவக்கத்தில் ஆதரவு தெரிவித்தது, அச்சமயத்தில் மத்திய கிழக்கு முழுவதும் இதுபோன்ற மக்கள் ஆதரவு பெற்ற கிளர்ச்சிகளுக்கும் அமெரிக்காவின் தலையீடு இருந்தது. சிரியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்த ஆயுதக் குழுக்களின் கூட்டணிக்கும் அமெரிக்க ஆதரவு தெரிவித்து வந்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிற அரபு நாடுகள் சேர்ந்து பணம், ஆயுதம், போர் பயிற்சி ஆகியவற்றை சில ஆயுதக் குழுக்களுக்கு தரலாம் என்று சி.ஐ.ஏ. திட்டம் வகுத்துத் தந்துள்ளது. முன்பு, இரகசியமாக வைக்கப்பட்ட இத்திட்டத்தை வெளியிட்டது முதல் பரவலாக விமர்சிக்கபட்டு வருகிறது. ஏனெனில், இத்திட்டத்தின் வழியாக தெரிந்தோ, தெரியாமலோ ஆயுதங்களைப் பெற்ற குழுக்களை “பயங்கரவாதிகள்” என்று மேற்குறிப்பிட்ட நாடுகள் முத்திரை குத்தியுள்ளன.
சிரியர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளை அல்–அசாத் பயன்படுத்தினால், வரையறுக்கப்பட்ட ‘எல்லை வரம்பை’ மீறுவதாகவே கருதப்படும் என்று அதிபர் ஒபாமா அப்போது எச்சரித்தார். இருந்தபோதிலும், 2013ல் கௌதா தாத்குதலில் இரசாயன குண்டுகளை சிரிய அரசாங்கம் பயன்படுத்தியபோதிலும், ஒபாமா நேரடியான இராணுவ தாக்குதலை தொடுக்கவில்லை. நான்காண்டுகள் கழித்து, கான் ஷேய்கோன் பகுதியில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சிரிய நாட்டு வான்படைத் தளத்தில் வான்வெளித் தாக்குதலை தொடுத்தார். உள்நாட்டு போர் நடந்து வந்த சமயத்தில் இதுபோன்ற நேரடி தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது அதுவே முதல்முறை.
மாறிவரும் கள நிலவரங்களுக்கு ஏற்ப அடுத்து வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்திடம் எவ்வாறு கொள்கைகளை முன்வைப்பது என்பது குறித்துகூட மறுபரிசீலினை செய்ய வேண்டியிருக்கிறது என்று சிரியாவிற்கு எதிரான அமெரிக்க கூட்டணியின்(அல்–அசாத் ஆட்சிக்கு எதிரான அமெரிக்க அமைப்புகளின் கூட்டணி) தலைவர் முகமது பராஷி அல்ஜசிரா பத்திரிகையிடம் பேசும்போது கூறினார்.
அந்நிய நாடுகளின் விவகாரங்களில் தேவையின்றி தலையிடாதவராகவும், ஈரானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்பவராகவும் இருக்கும் டிரம்பிடம், சிரியாவில் ஈரானின் பங்கு பற்றி எடுத்துக் கூறி அல்–அசாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவதில் கவனம் செலுத்தலாம் என்றுதான் முன்பு திட்டமிட்டிருந்தேன் என்கிறார் பராஷி.
ஆனால், தற்போது, “சிரியா பிரச்சனையில் விவேகமாகவும் அதே நேரத்தில் முன்னணியாகவும் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான நிர்வாகத்தை” உருவாக்குவதற்கான சிறந்த வழிகள் பற்றி யோசித்து வருவதாக பராஷி கூறுகிறார்.
“தன்னை பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு இதுவொரு அரிய வாய்ப்பு,” என்கிறார் பராஷி.
(கட்டுரையாளர்–ஜோசப் ஸ்டிபன்ஸ்கி)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2024/12/8/us-caught-surprise-syria-overthrows-al-assad-analysis