காஸாவில் இனப்படுகொலை போரை மீண்டும் தொடங்கப் போவதாக இஸ்ரேல் மிரட்டல்
தமிழில்: விஜயன்

காஸாவில் இனப்படுகொலை போரைத் மீண்டும் தொடங்கப் போவதாக இஸ்ரேல் மிரட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க 10 நாட்கள் கெடு விதித்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இஸ்ரேல் சேனல் 12 திங்களன்று கூறியதாவது: காஸாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் போர் மீண்டும் தொடங்கும் என்று ஆக்கிரமிப்பு அரசு 10 நாட்கள் கெடு விதித்துள்ளது.
"சமாதான உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு முடக்கநிலையில் உள்ளது," என்று அந்த அதிகாரி சேனல் 12-யிடம் தெரிவித்தார்.
திங்களன்று நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் தொனியில், "நான் ஹமாஸிடம் சொல்கிறேன்: நீங்கள் எங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றார்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பின்னர் கூறுகையில், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்கத் தவறினால், "காஸாவின் கதவுகள் பூட்டப்படும், நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்" என்றார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் மீண்டும் போருக்குத் திரும்புவோம், இதற்கு முன்பு அவர்கள் சந்திக்காத படைகள், போர் முறைகளைக் கொண்டு தீர்க்கமான வெற்றி கிடைக்கும் வரை தாக்கும் இஸ்ரேல் இராணுவத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகும்" என்று கூறினார்.
போர் நிறுத்த திட்டத்தை மீறும் இஸ்ரேல்
போர் நிறுத்த உடன்படிக்கையின் முதற்கட்டம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, காசா பகுதிக்குள் எந்தவிதமான உதவிப் பொருட்களும் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை காலை இந்தத் தீர்மானத்தை உறுதி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ரமலான் மாதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த உடன்படிக்கையின் முதற்கட்டத்தை நீட்டிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதிக்காததே இதற்குக் காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்ட்கோஃப் கடைசி நேரத்தில் முன்வைத்த - ரமலான் திருநாள், பாஸ்குத் திருநாள் வருகிற காரணத்தால் - தற்காலிக போர் நிறுத்த யோசனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.
மேலும், இஸ்ரேல் தரப்பின் கூற்றுப்படி, காசா பகுதியில் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் இரண்டு கட்டங்களாக விடுவிப்பதற்கான திட்டத்தையும் இந்த போர் நிறுத்த யோசனை உள்ளடக்கியுள்ளது. இதில் இரண்டாவது கட்டம், நிரந்தர போர் நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவதை அடிப்படையாகக் கொண்டது.
"பிணைக்கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின் முதற்கட்டம் முடிவடைந்த நிலையில், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்ட்கோஃப் கடைசி நேரத்தில் முன்வைத்த திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்ட போதிலும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு ஹமாஸ் நிராகரித்துவிட்டது. ஆகவே, இன்று காலை முதல் காசா பகுதிக்குள் எந்தப் பொருட்களோ அல்லது உதவிகளோ செல்ல அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேல் ஒரு போர் நிறுத்தத்திற்கு அனுமதிக்காது. ஹமாஸ் தொடர்ந்து மறுத்தால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்."
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி கைதிகளைப் பல கட்டங்களாக மட்டுமே விடுவிக்க முடியும் என்று குறிப்பிட்டு, ஹமாஸ் போர் நிறுத்தத்தை இரண்டாம் கட்டத்திற்கு கொண்டு செல்ல மறுத்துவிட்ட நிலையில், இஸ்ரேல் தற்போது முன்னமே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி செயல்பட மறுக்கிறது.
காசா மீதான தாக்குதலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவது, இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேறுவது, பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பது ஆகியவற்றை உறுதி செய்யும் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு மட்டுமே தாங்கள் உடன்பட முடியும் என்று ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
உதவிப் பொருட்கள் காசாவுக்குள் செல்வதைத் தடுக்கும் இஸ்ரேலின் முடிவை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்த ஹமாஸ், “இது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கி, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கும் ஒரு பகிரங்கமான முயற்சி” என்று குற்றம் சாட்டியுள்ளது.
“காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் இஸ்ரேல் தடுத்திருப்பது ஒரு கேவலமான மிரட்டல் நடவடிக்கை மட்டுமல்ல, போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் போர்க் குற்ற நடவடிக்கையாகும். காசா பகுதியில் வசிக்கும் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு எதிரான இந்தத் தண்டனை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியஸ்தர்களும், சர்வதேச சமூகமும் இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”
போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் அதைத் தொடர்ந்து மீறி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக, காசாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் மனித உயிர்களை காக்கும் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உதவி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்குமிடம், நிவாரண உதவிகளைத் தடுத்ததன் மூலம், காசா மக்களின் நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது. காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவல்களின்படி, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 962 முறை மீறியுள்ளது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/03/israel-threatens-to-resume-genocidal-war-in-gaza-report/