ஆயிரம் அஜித் கதைகள் சொல்லவா?
வினோத் குமார்

திருப்புவனம் காவல்துறை சித்திரவதையால் இறந்து போன அஜித்குமார் சம்பவம் இன்று நாடும் முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட காவல்துறை மரணம் ஏற்பட்டதுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அஜித் இறந்து போனதால் வெளி உலகத்திற்கு வந்துள்ளது ஆனால் போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் அடிபட்டு சித்திரவதைக்கு உள்ளாகி சாகாமல் நடைப்பிணமாக வாழ்பவர்களின் கதைகளை சொல்லட்டா??
கடந்த 23/6/ 2025 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகாந்த் அவரது தம்பி தனுஷ், விஜயகாந்த் மனைவி செல்லம்மாள் 8மாத குழந்தை மற்றும் 8 வயதான மாற்றுத்திறனாளி மகன் ஆகியோர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க தஞ்சாவூர் சென்ற போது மாலை 7மணியளவில் தற்போது தமிழக அரசு கலைத்துள்ள சீருடை அணியாத க்ரைம் போலீசார்கள் அவர்களை அடித்து இழுத்து அவர்கள் வந்த TATA ACE வாகனத்தையும் சேர்த்து கடத்தி சென்று பெரம்பலூரில் வைத்து இரண்டு நாட்கள் விஜயகாந்த் தனுஷ் மேலும் சுரேஷ் என்பவரையும் சேர்த்து முகத்தை மூடி வாயில் துணியை வைத்து சங்கிலியால் கட்டி பத்திற்கு மேற்பட்ட போலீசார்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்..
இன்று அஜித்தின் சம்பவம் சிசிடிவி ஃபுட்டேஜ் வெளியாகி உள்ளது. ஆனால் போலீஸ் செய்யும் ஏராளமான குற்றங்கள் அவர்கள் நன்கு திட்டம் போட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத , சிசிடிவி ஃபுட்டேஜ் இல்லாத அறைகளுக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி குற்றத்தை ஒப்பு கொள்ள் செய்வார்கள்.
உலகமே தொழில்நுட்பத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கும் போது இன்னமும் போலீசார் அடி, உதை ,மிளகாய் பொடி ஷாக் ட்ரீட்மென்ட் என பழமையான முறைகளை கையாண்டு வருகின்றன.
இவ்வாறாக மேற்படி விஜயகாந்த்,தனுஸ்,சுரேஷ் ஆகியவர்கள் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதனாலே அவர்கள் திருட்டு தொழிலை செய்திருப்பார்கள் என்று இரண்டு நாட்கள் கடத்தி சென்று அடைத்து வைத்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது.
போலீசாரின் காட்டுமிராண்டித்தனம் தாக்குதலால் விஜயகாந்த் என்பவருக்கு சிறுநீர் கழிக்கும் போது ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் விஜயகாந்த் சுரேஷ் தனுஷ் செல்லம்மாள் அவரது குழந்தைகள் காணாமல் போனதை குறித்து புகார் அளித்து எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை இன்னும் சொல்லப்போனால் அவர்கள் குறவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் அவர்கள் கொடுக்கும் புகாரையும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க கூட யாரும் இல்லை.
உடனே மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் WITNESS FOR JUSTICE அமைப்பு தலையிட்டு பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு இது சம்பந்தமான புகார் அளித்தது. இந்த புகாரை கண்ட போலீசார் செல்லமாவின் மூலம் உறவினர்களுக்கு போன் செய்து மேற்கொண்டு புகார் கொடுத்தால் இங்கு இருக்கும் அனைவரும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எச்சரித்துள்ளனர் .
அதன் பிறகு நான் WITNESS FOR JUSTICE அமைப்பு சார்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் BNSS பிரிவு 100&பிரிவு 101 மனு தாக்கல் செய்து காவல் துறையால் சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட விடுவிக்க கோரி வாதாடினேன் .இதனை அறிந்த போலீசார் 25.6.2025 அன்று மாலை மேற்படி 3 பேரையும் பொய்யான வழக்கின் கீழ் பெரம்பலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் இரண்டில் ஆஜர் படுத்தினர்.
மூன்று பேருக்கும் போலீஸ் நடத்தி காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் முகம் தோள்பட்டை தொடை முதுகு பாதம் என அனைத்தும் வீக்கம் அடைந்து இருந்தது போலீசார் மேற்படி மூன்று நபர்களிடமும் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து சித்தரவதை செய்ததை நீதிபதியிடம் சொன்னால் மனைவியையும் வழக்கில் சேர்த்து விடுவோம் குண்டாஸ் போட்டு விடுவோம் ஆகவே குளவி கடித்து விட்டது கீழே விழுந்து விட்டேன் என்று கூற சொல்லி மிரட்டி உள்ளனர் மருத்துவரிடம் கொண்டு காண்பிக்கும் போதும் போலீசார் அவர்களுக்கு ஏற்றவாறு மருத்துவ ஆவணங்களை தயார் செய்து கொண்டனர்.
போலீசை போல ஒரு கிரிமினலை நீங்கள் யாரும் பார்த்திருக்க முடியாது ஒரு தவறை செய்யும் போது அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகளோ அதை அனைத்தையும் பக்காவாக செய்து முடிப்பார் இதுபோல் தினம் ஏராளமான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை கைது செய்து ஒரு வாரம் ,ஐந்து நாள் பத்து நாள் என அவர்களது கஸ்டடியில் வைத்து பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்து அவர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்து வீடியோ எடுத்துக்கொண்டு பிறகுதான் அவர்களை நீதிமன்றத்தின் ஆஜர் செய்வார்கள்.
இதற்கு எந்த சாட்சிகளையும் அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் சிசிடி ஃபுட்டேஜ் நேரடி சாட்சியங்கள் என அனைத்தையும் இல்லாமல் செய்து விடுவார்கள்..
அப்பாவி குறவர் மக்களும் போலீசின் மிரட்டலுக்கு பயந்து இந்த கொடூரமான காட்டுமிராணித்தனமாக தாக்குதல்களை வெளியே சொல்லவே மாட்டார்கள் சொன்னால் பிணையில் வெளியே வந்த பிறகு அடுத்தடுத்து வழக்குகளில் போலீசார் மாட்ட வைத்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள் ஆக்குவார்கள் என பயந்து போலீஸ் மீது புகார் கொடுப்பதற்கு அஞ்சுவார்கள்..
இவ்வாறு தனது வாழ்க்கையில் தினமும் காவல் நிலையம், சிறை, கோர்ட்டு என அவர்களின் வாழ்க்கை இப்படியே முடிந்து போகின்றது.
நான் மேலே சொன்ன உண்மை சம்பவத்தில் விஜயகாந்தின் மனைவி தனது 8 மாத குழந்தைக்கு பாலூட்ட கூட அனுமதிக்காத காவல்துறை அவர்கள் முன்னே பாலூட்ட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளது அவர்கள் இயற்கை உபாதை கூட போலீசார் முன்னிலையிலேயே கழிக்க செய்துள்ளனர் அவரது மாற்றுத்திறனாளி மகன் அவர்களது அப்பா 10 பேர் கொண்ட போலிசு கும்பலால் தாக்கப்பட்டு தனது அப்பா வலியால் அழுததை தனது அம்மாவிடம் சைகையின் மூலம் விவரித்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி மகன்.
இவ்வாறு தமிழக காவல்துறையால் குறவர் மக்கள் மீதான அத்துமீறல்களும் தாக்குதல்களும் தினம் தினம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது ஸ்பெஷல் டீம் என்று சொல்லக்கூடிய இந்த சீருடை அணியாத காவலர்கள் அதிகாலை நேரங்களில் வீடு புகுந்து குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை தூக்கி சென்று தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள பொய் வழக்குகளில் அவர்களை சேர்த்து விடுகின்றனர்..
ஆனால் இவர்களின் குடும்பத்தாருக்கு எந்த வழக்கில் யார் கைது செய்தது எங்கு உள்ளார் அந்த வழக்கிற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று எதுவும் தெரியாமல் கதறிக்கொண்டு இருப்பார்கள்.
குறவர் சமுதாயத்தின் ஆண்கள் மீது மட்டுமல்ல பெண்களின் மீதும் பொய்யான வழக்குகளை கைது செய்து சித்திரவதை செய்து வழக்கு பதிவு செய்யும் முறை இன்று வரையும் நடைமுறையில் உள்ளது.
பெரும்பாலும் ஆண்கள் மீது வழக்கு போடுவார்கள் அவர்களுக்கு வயதான பிறகு அவர்களின் மகன்கள் மீது வழக்கு போடுவார்கள். இவ்வாறு தலைமுறை தலைமுறையா போலீசால் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் 10 வழக்கு 20 வழக்கு முப்பது வழக்கு என அவர்களது வாழ்க்கையே வழக்கை நடத்தி தான் குற்றம் அற்றவர் என நிரூபிக்கவே அவர்கள் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலையில் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
வழக்கறிஞராக சொல்ல வேண்டும் என்றால் சட்டத்தின் ஆட்சியில் சட்டபடியாக அனைத்தையும் குடிமக்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அரசுகள். காவல்துறையை மட்டும் அவர்கள் நினைத்தவாறு எந்த சட்டத்தையும் பின்பற்றாமல் தனியான அவர்களுக்கென சட்ட திட்டங்கள் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன .அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கவோ அவர்களுக்கு எதிராக புகார் அளிக்கவோ எளிதான எந்த நடைமுறையும் இதுவரை வகுக்கப்படவில்லை.
நான் தற்போது குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை பொய் வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்து வழக்கில் மாண்புமி கு நடுவர் என் இரண்டு பெரம்பலூரில் ஆஜராகி விட்டு வீடு திரும்பும் வழியில் இதனை பதிவிடுகிறேன்
பிணைக்காக சென்ற வழக்கில் பிணை விசாரணையை தள்ளி போடுவதற்காக இன்று காவல்துறை சார்பாக கொடுக்க வேண்டிய பதில் மனு கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளது. காரணம் இன்னும் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் குறவர் சமூதாயத்தை சேர்ந்த அப்பாவிகளை சேர்ப்பதற்கான திட்டம் தான் இது..
இப்படிக்கு
- சி.வினோத் குமார் க.இ.ச.இ, இளம் வழக்கறிஞர்
https://www.facebook.com/share/p/16pAKTJdjN/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு