ஜாகிர் உசேன் படுகொலை : கொலையாளிகளை காப்பாற்றும் திமுக அரசு
லிங்கம் தேவா

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
திரு. ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் வக்ப்க்கு சொந்தமான பொது நிலத்தைக் காக்க நடத்திய தொடர் போராட்டமும் ஒரு வருடத்திற்கும் மேலாக தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி அவர் அரசின் பல்வேறு கதவுகளைத் தட்டி அலைந்ததும்
-----------------------.
திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்த திரு. ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தௌபீக் எனும் நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். (கால்கள் உடைத்து, துரத்தி, சுற்றிவளைத்து, சுட்டு என எத்தனை முன்னொட்டுகள் இதில் இருந்தாலும் அவை நடந்து முடிந்த எந்த ஒரு விஷயத்தையும் மாற்றக் கூடியதல்ல என்பதாலும் அதன் வழி முழுமையான அல்லது சரியான விசாரணை உறுதிப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கில்லை என்பதாலும் அந்த முன்னொட்டுகள் எந்த ஒரு முக்கியத்துவமும் பெறுவதில்லை.)
தௌபீக் இன் கைது மட்டுமே இக்கொலைக்கான நீதி என்று நாம் ஏற்க முடியாது. ஜாகீர் உசேன் அவர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி இருக்கிறார். அவருக்குத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் அநீதிகள் இழைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் இறுதியில் தான் அவர் கொலை செய்யப் பட்டிருக்கிறார். எனவே நாம் கொலை, கைது நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கடந்தும் இப்பிரச்னையைப் பார்க்க வேண்டியுள்ளது. இது அரசின் பல்வேறு துறைகளையும் நிர்வாகங்களையும் சில முக்கியப் புள்ளிகளையும் கூட கேள்விக்குள்ளாக்குகிறது.
பொதுவாக, வக்ப் வாரியத்தின் உத்தரவின்படி முத்தவல்லியாக நியமிக்கப்படும் நபர், வக்ப்க்கு சொந்தமான நிலங்களையும் சொத்துக்களையும் நிர்வகிக்கவும் அவற்றில் வரும் வருமானத்தைக் கொண்டு சமூக மற்றும் மதப் பொதுப்பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும். அதன்படி முர்த்திம் ஜைக்கான் தைக்காவுக்கு முத்தவல்லியாக நியமிக்கப்பட்ட ஜாகிர் உசேன் அதன் சொத்துக்களை பராமரித்தும் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு டியூஷன் சென்டர், தையல் பயிற்சி மற்றும் இஸ்லாமிய மார்க்க கல்வி ஆகியவற்றை நடத்தி வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வக்ப்க்கு சொந்தமான நிலங்களுக்கு மின் இணைப்பு வாங்குவது, தரை வாடகை விடுவது, ட்ரான்ஸபோர்ம் நிறுவப்பட்டது, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க நினைத்தது என பல வகைகளில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துள்ளன. அத்தனை பிரச்சனைகளையும் ஒற்றை ஆளாய் நின்று எதிர்கொண்டுள்ளார்.
மார்ச் -18 ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னைச் சுற்றி என்னென்ன பிரச்சனைகள் நடக்கின்றன என்றும் தனக்கான ஆபத்துக்கு யார் யார் காரணமாவார்கள் என்றும் குறிப்பிட்டு முதலமைச்சரிடம் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ஹிந்து திசை உள்ளிட்ட சில பத்திரிக்கைகளிலும் பல பேஸ்புக் பதிவுகளிலும் அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் பகிர்ந்ததாகக் குறிப்பிடப்பட்ட அந்தக் காணொளி அவரது முகநூலில் பிப்ரவரி 9 ஆம் தேதி பகிரப்பட்டதாகும். அந்த ஒரு காணொளியில் மட்டும் அல்ல கடந்த ஒரு வருடமாக பல்வேறு வழிகளில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தொடர்ந்து பதிவு செய்தும் புகார் அளித்தும் இருக்கிறார். அவற்றில் ஏதாவது ஒன்று, அவர் முறையிட்ட ஏதாவது ஒரு காதிற்கு கேட்டிருக்குமேயானால் இக்கொலை தடுக்கப்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட அந்தக் காணொளியிலும் அதற்கு அடுத்தடுத்து அவர் வெளியிட்டுள்ள காணொளிகளிலும் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றிற்கான ஆதாரங்களையும் அவற்றோடு இணைத்துள்ளார். ஏற்கனவே வக்ப் க்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை தரை வாடகைக்கு எடுத்தவர்கள் அந்த இடத்தை போலிப்பத்திரப் பதிவு மூலமாக தங்களுக்கு சொந்தமாக்க முயற்சி செய்துள்ளார்கள். அதை தொடர் சட்டப் போராட்டம் வழி வென்றிருக்கிறார். தீர்ப்பு வக்ப்க்கு சாதகமாக வரவே அந்த வழக்கு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் தௌபீக் என்பர் அந்த இடத்தின் மற்றொரு பகுதியை தனக்குரியது எனக் கூறி ஆக்கிரமிக்க முயன்றதாகத் தெரிகிறது.
இவ்விவகாரத்தில், ஜனவரி 1, 2024 ஆம் தேதியே பார்ட்டப்பத்து ஜமாத்தைச் சேர்ந்த தலைவர் அபூபக்கர் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து, அருகே இருந்த வேலியை அடித்து உடைத்துள்ளதாக சி.சி.டி.வி காட்சிகளோடும் புகைப்படங்களோடும், போனில் பேசிய ஆடியோ பதிவோடும் 8 ஜனவரி 2024 இல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் அப்புகார் மீது மேல்முறையீடாக பாளையங்கோட்டை காவல் ஆணையாளரிடம் புகாரளித்துள்ளார். அதில், "ஐயா, செல்வாக்கு பெற்ற இவர்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள். இவர்கள் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கும் சிவில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், உயிரைக் காக்கும்படி வேண்டிய அந்தப் புகாரின் பேரில் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என பிப்ரவரி 12, 2025 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டு, ஏப்ரல் 17, 2024 இல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. நீதிமன்றத்திலும் அந்த வழக்கு முறையாக தீர்க்கப்படாமல் இன்னும் நிலுவையில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளார்.
இவரது வழக்குகள் சம்பந்தமாக பிப்ரவரி 13 ஆம் தேதி - நெற்றிக்கண் பத்திரிகையில் வெளியான/ வெளியாக இருந்த கட்டுரை ஒன்றை பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். அதன்படி குறிப்ப்பிட்ட தௌபீக் என்ற நபர் மீது திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் மொத்தம் நான்கு புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் எதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஜூன் 1, 2024 அன்று சி.சி.டி.வி ஆதாரங்களோடு கொலை மிரட்டல் செய்யப்பட்டதாக புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
(இதன் தொடர்ச்சியாக 25 பிப்ரவரி 2025 இல் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது)
டிசம்பர் 9, 2024 அன்று, தௌபீக் போன்ற நபர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பும் நீதியும் வேண்டும் என்றும் டவுன் ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் பதிவு செய்யப்படுமா என்ற சந்தேகத்தில் பதிவு தபால் வாயிலாக அடுத்த நாள் டிசம்பர் 10, ஆம் தேதி அதே புகாரை அனுப்பி இருக்கிறார். ஆனால், அந்தப் புகாரை 14 பிப்ரவரி 2025 தான் அவர் கொடுத்ததாகவும் அதன் நகலை பிப்ரவரி 24 ஆம் தேதி மனுதாரர் பெற்றுக் கொண்டதாகவும் சி.எஸ்.ஆர் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை மிரட்டலுக்கான அந்தப் புகார் சிவில் வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கையெழுத்தைப் போலியாகப் போட்டு மோசடி செய்ததற்காக ஒரு புகாரை 21 டிசம்பர் 2024 இல் அளித்திருக்கிறார். ஆனால், அதுவும் 18-பிப்ரவரி-2024 இல் அளிக்கப்பட்டதாகவும் அதற்கு பிப்ரவரி 24 இல் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த மோசடிப் புகாரும் வெறும் சிவில் வழக்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில் டிசம்பர் 9, 2024 அன்று அளிக்கப்பட கொலை முயற்சி வழக்குக்கான வீடியோ ஆதாரம் அவரது பேஸ்புக்கில் வீடியோவாக இன்றும் உள்ளது. அதில் காவல்துறையினர் முன்னிலையிலேயே, 'இதே போல வேலை செய்து கொண்டிருந்தால் வேறு வழியில்லை என்ன செய்வோம்னு உங்களுக்கே தெரியும். அதைத்தான் செய்வோம்' என்று கூறுகிறார்கள். காவலர்கள் அதைக் கேட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாட்கள் எப்படி இருந்தார்களோ அதே போல.
இவ்வாறு டிசம்பர் மாதம் இவர் அளித்த புகார்கள் எவையும் எடுத்துக் கொள்ளப்படாமல் பிப்ரவரி மாதம் சிவில் வழக்குகளாக பதியப்பட்ட அதே நேரம், நிலத்தை அபகரிக்க நினைக்கும் தௌபீக் வழியாக அதே டிசம்பர் 9 ஆம் தேதி ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் மீதும் அவரது மனைவியின் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. PCR வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு முறையான நடவடிக்கையும் இதில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக PCR வழக்கு என்பது பட்டியலின/ தலித் மக்களுக்கு எதிராக சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்டது. 1950 இல் உருவான சட்ட சரத்துப்படி இந்து மதத்தை சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே பட்டியலினம் என்ற வரையறைக்குள் வர முடியும். பின்னர் 1956றிலும் 1990றிலும் அரசியல் அழுத்தங்களால் செய்யப்பட்ட மாறுதல்களின்படி சீக்கிய மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் பட்டியலினம் என்ற வரையறைக்குள் வருவார்கள். ஆனால் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் வெளிநாட்டில் இருந்து வந்த மதங்கள் என்பதாலும் அவற்றில் வேறு வகையில் ஒடுக்குமுறை இருந்தாலும் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்றும் சாதிய இடுக்குமுறையில் இருந்து விடுபடவே மக்கள் இந்த மதங்களுக்கு மாறுகின்றனர் என்றும் கூறி இந்த மதங்களுக்கு மாறிய ஒருவர் பட்டியலினம் என்ற வரையறைக்குள் வர முடியாது என வரையறுக்கப்படுகிறது.
தௌபீக் என்பர் இந்து மதத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தவர் 9 வருடங்களுக்கு முன்னதாகவே இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார். 2023 வாக்கில் (ஹாஹீர் உசேன் வார்த்தைகளில் 'இரண்டு வருடங்களுக்கு முன்னர்) தௌபீக் என்ற பெயரில் ஜாஹீர் உசேன் மீது வழக்கு ஒன்றை நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ளார். எனில், 2024 டிசம்பர் 9 ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி என்ற இந்துப் பெயரில் அவர் ஜாஹீர் உசேன் மீதும் அவரது மனைவியின் பெயரிலும் PCR வழக்கை பதிவு செய்தது எப்படி என்றும் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முறை தௌபீக் என்ற பெயரிலும் இன்னொருமுறை கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் பேஸ்புக் கணக்கின் பெயரை மாற்றுவது போல அடிக்கடி மாற்றிக் கொண்டு விரும்பிய பெயரில் புகார் பதிவு செய்ய முடியும் அளவிற்கு தான் இந்த காவல்துறையின் வழக்கு பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறதா என்று கேட்கத் தோன்றாமல் இல்லை.
மேலும், இவ்வழக்கில் பெயில் எடுத்துவிட்டு வரும் நேரத்தில், காவல் ஆய்வாளரை சந்தித்து "எங்க மேல PCR போட்டதுக்கு ரொம்ப நன்றி சார்" என ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் பேசிய ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களின் மனைவியைப் பார்த்து, "இவங்க தான் உங்க மனைவியா?" எனக் கேட்டதாகவும் பதிவு செய்துள்ளார். மனைவி(குற்றம் சாட்டப்பட்டவர்) யார் என்றே தெரியாத அளவிற்கு திறமையாக விசாரணை செய்து நடைமுறைகளை பின்பற்றி நேர்மையான முறையில் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் ஒரு கூட்டு கும்பலே கொலை செய்வதாக மிரட்டுகிறது என்று குறிப்பிடுகிறார். கொலை மிரட்டலுக்கு மிக முக்கிய காரணம் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் திரு. கோபால கிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர் திரு. செந்தில் குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தான் தனித்தனி வழக்குகளில் எதிராளிகளாக இருந்தவர்களை ஒன்று சேர்த்து ஒற்றை நபருக்கு எதிராக நிறுத்தியது என்று சொல்கிறார்.
மேலும், மூன்றாவதாக இதில் மிக முக்கியமாக ஒரு நபர் சம்பந்தப் பட்டிருப்பதாக அதே காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு மிக முக்கியமாக இதில் தொடர்பு உள்ள நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ள அந்த நபரைப் பற்றி இன்றளவும் செய்திகளோ மற்றவர்களோ பெரிதும் கவனம் செலுத்தி போதுமான அழுத்தம் கொடுத்து பதிவு செய்ததாகத் தெரியவில்லை.
மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் அருணன் :
ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் கடந்த மாதம் - பிப்ரவரி - 19 2025 ஆம் தேதி காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் திருநெல்வேலி பழைய பேட்டை மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளர் அருணன் என்பவர், தான் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் உறவினர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்றும் கூறிக்கொண்டு பல்வேறு அராஜகங்களைச் செய்வதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், அவரைப்பற்றி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டும் அதில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்தக் காணொளியிலும் அதற்கு அடுத்து பதிவேற்றம் செய்த காணொளிகளிலும் அருணன் குறித்து குறிப்பிட்டுள்ளவை:
- லஞ்சம் தர மறுத்த காரணத்திற்காக ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் விண்ணப்பித்த 8 மின் இணைப்பு விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இறந்துபோன ஒருவருக்கு கூட அவரின் பெயரியிலேயே மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
- இவரின் செயல்களை வெளியே வெளிப்படுத்தினால், அவரின் மைத்துனர் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்.
- சமீபமாக ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களின் பெயரில் இருந்த ஒரு மின் இணைப்பை MAK டைல்ஸ் என்ற பெயருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். அவ்வாறு மாற்றுவதற்காக போலியாக ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களின் கையெழுத்தை இட்டு, ஆவணங்களைத் திருத்தி இதைச் செய்திருக்கிறார். ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் மாநில பொருளாளராக அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் அது திரும்பவும் அவர் பெயருக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மனு கொடுத்தும் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- online வழியாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனத் தகவல் வந்திருக்கிறது. ஆனால், 15 நாட்களுக்குப் பின் எந்த ஒரு விசாரணையும் இன்றி அந்த புகார் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வக்ப்க்கு சொந்தமான இடத்தில் எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் அருணன் அவர்கள் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ட்ரான்ஸ்போர்ம் ஒன்றை வைத்துள்ளார். வக்ப் இடத்தில் இது போல ஆக்கிரமிப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததும் எந்த வித விசாரணையும் இல்லை நடவடிக்கையும் இல்லை.
மற்றொரு செய்தித் துணுக்கின் வழி அருணன் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளராகவும் உள்ளார் என்று அறியமுடிகிறது.
----------------------------.
சுருக்கமாகப் பார்ப்போமானால், ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். அவர் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் மாநில பொருளாளராகவும் இருக்கிறார்.
- கடந்த 2017 இல் திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக வக்ப் வாரியத்தால் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். அதன்பின்னர் காலவரை குறிப்பிடாமல் அப்பொறுப்பை அவருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வக்ப் வாரிய சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ட்யூசன் சென்டர், தையல் பயிற்சி மற்றும் இஸ்லாமிய மார்க்க கல்வி ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார்.
- 2018 ஆம் ஆண்டு தொட்டே வக்ப்க்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டு வேலைகள் நடந்து வந்துள்ளன.
- வக்ப் இடத்தின் குறிப்பிட்ட பகுதியை ரேகா பீவி என்பவருக்கு தரை வாடகைக்குக் கொடுத்துள்ளார். அவர் மோசடிப் பத்திரம் மூலம் இடத்தை அவர் பெயருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளார். வழக்கு நடத்தி அதில் இருந்து இடத்தை மீட்டுள்ளார்.
- பின்னர், நிலத்தின் மற்றொரு பகுதியை ஆக்கிரமிக்க தௌபீக் என்பவர் முயற்சி செய்கிறார். அவருடன் மேலும் சிலரும் இதில் முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
- ஜனவரி 1 2024 இல், 20 நபர்கள் அவர் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது காம்பௌண்டு சுவரை இடித்துள்ளனர். இதற்காக காவல் ஆய்வாளர், காவல் ஆணையாளர் நீதி மன்றம் என முறையிட்டு தனக்கு பாதுகாப்பு கேட்டுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லை.
- தௌபீக் வழக்கு தொடர்ந்த நில அளவையின் வரம்புக்குள் வராத வக்ப்பின் இடத்தில் ஷெட் அமைக்கும் வேலை செய்துள்ளார். அது தொடர்பாக தௌபீக் மற்றும் ஆட்களால் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே மிரட்டப்படுகிறார்.
- அதற்காக டிசம்பரில் கொலை மற்றும் மோசடி புகார்கள் அளிக்கிறார். அவற்றை பிப்ரவரியில் தான் அளித்ததாக சி.எஸ்.ஆர் பதிவு செய்கிறார்கள்.
- இதற்கிடையே முறைகேடான முறையில் ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அவரது மனைவியின் பெயரில் PCR வழக்கு பதியப்படுகிறது.
- மேலும், இவர்களோடு இனைந்து மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அருணன், வக்ப் இடத்தில் மின்சார இணைப்புகள் கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பங்களுக்கு லஞ்சம் கேட்டுள்ளார். தர மறுக்கவே விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார்.
- முறைகேடாக இவரின் கையெழுத்தை இட்டு, படிவத்தைத் திருத்தி இவரது பெயரில் இருந்த மின் இணைப்பை வேறொருவர் பெயருக்கு மாற்றியுள்ளார். எந்த வித அனுமதியும் இல்லாமல் வக்ப் இடத்தில ட்ரான்ஸ்பார்ம் ஒன்றை வைத்து இடையூறு கொடுத்துள்ளார். அதற்கு எதிரான புகார்களில் எந்த நடவடிக்கையும் இல்லை
--------------------------------------------
இறுதியாக, ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஓரளவு அலசிப் பார்த்ததில் அவர் தனிப்பட்ட வகையில் தன் சொந்தப் பிரச்சனைகள் குறித்து எதுவும் பதிவிட்டிருக்கவில்லை. நேர்மையாகவும் சட்டத்தின்படியும் வாழ நினைத்த அவர் வக்ப் வாரியத்தின் முத்தல்லியாக நியமிக்கப்பட்ட பின்னர், மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தைப் பாதுகாத்து அது உரிய மக்களுக்கு பொதுவாகப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று பாடுப்பட்டுள்ளார். அதை அபகரிக்க நினைத்த ஒவ்வொரு நபருக்கு எதிராகவும் நின்று போராடியுள்ளார்.
தற்போது அவர் இறந்துவிட்டார். அரசு தனது ஜிகினா ஜோடிப்புகளைச் செய்யத் துவங்கிவிட்டது. செய்தி ஊடங்கங்களும் கூட முழுமையாக எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஒரு வரி செய்திகளுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டு அடுத்த செய்திக்குச் சென்று விட்டார்கள். பேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்கள் பெரிய அளவிற்கு பயன்படுத்த தெரியாத அந்த மனிதன் ஏதோ ஒரு வகையில் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களை நம்பியுள்ளார். அவர் பிப்ரவரி 9 முதல்வருக்கு வெளியிட்ட அந்தக் காணொளியை தோழர் திருமா அவர்களுக்கு tag செய்ய நினைத்து திருமா அவர்களின் பெயரில் உள்ள ஏதோ பயன்பாட்டில் இல்லாத பேஸ்புக் பக்கத்தை tag செய்துள்ளார். பேஸ்புக் algorithm அவர் முன்னர் வெளியிட்ட அனைத்து காணொளிகளையும் சிறிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது.
அந்த வெள்ளந்தி மனிதன் இறைவனுக்கு அடுத்த நிலையில், மக்களையே முழுமையாய் நம்பி இருந்துள்ளார் என்று தெரிகிறது. ஒவ்வொரு காணொளியின் துவக்கத்திலும் தன் அழுத்தமான குரலால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று குறிப்பிட்ட பின்னரே பேசத் துவங்குகிறார்.
மேலும் ஒவ்வொரு வீடியோ இறுதியிலும் இதை நிறைய பேருக்கு தெரியப் படுத்துங்கள். நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள். இந்த நியாயத்தை எதிர்த்து குரல் கொடுங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார். அவர் இறப்பிற்குப் பின்னான தற்போதேனும் அது நடக்கட்டும்.
- முதல் விசயமாக, வக்ப் போர்டுக்கு பாத்தியப்பட்டு ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களின் பொறுப்பில் இருந்த சொத்துக்கள் மீண்டும் அளந்து உறுதி செய்யப்பட வேண்டும். சொத்தை அபகரிக்க நினைத்தவர்கள் மீண்டும் வக்ப் வாரிய பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளதால், அவ்வாறு உறுதி செய்யப்பட்ட சொத்துக்கள் இனி எவரொருவரும் தனிப்பட்டு அனுபவிக்க முடியாத நிலையில் எக்காலும் அது அம்மக்கள் சொத்தாக, அம்மக்களுக்குப் பயன்படும் பொதுச் சொத்தாகவே இருக்கும் என்று அறிவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- மாநில ஆளும் கட்சி பிரமுகர் உட்பட பலரும் தொடர்புபட்டுள்ள இந்தக் கொலை வழக்கை CBI க்கு மாற்ற வேண்டும். இல்லையேல், நீதிபதி சந்துரு போன்ற மூத்த தோழர்களைக் கொண்ட குழுவின் தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும்.
- கால் உடைப்பு, கை உடைப்பு ஆகியவற்றைத் தாண்டி, முறையான நடவடிக்கை 'அனைத்து' குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
- காவல்துறையினருக்கு இதில் பெரும்பங்கு இருப்பதாக ஏற்கனவே தான் முதலமைச்சருக்கு வெளியிட்ட காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட, கொலை மிரட்டல் விடுக்கும் போதும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்த, பின்னர் 2லட்ச ரூபாய் கொடுத்தும் வழக்கை வாபஸ் வாங்கியும் கொள்ளும்படி பேரம் பேசிய அத்தனை காவல் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக மட்டுமல்லாமல் கொலைக்கு காரணமாகவும் மோசடிக்கு துணையாகவும் இருந்த காரணத்தைக் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். நீதி வேண்டும்; தன்னை பாதுகாக்க வேண்டும். என தொடர்ந்து அவர் கொடுத்த/அனுப்பிய புகார்கள், மனுக்கள், வழக்குகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன, அலைக்கழிக்கப் பட்டுள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன. காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையம், நீதிமன்றம் என அனைத்து கதவுகளையும் தட்டியுள்ளார். எந்த ஒரு இடத்திலும் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை.
- இந்நிலையில் 2024 இல் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி முறையிட்டும் அதை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட ஆய்வாளர், ஆணையர் தொடங்கி எந்த முகாந்திரமும் இல்லாமல் PCR பதிவு செய்தவர்கள், சி.எஸ்.ஆர் தேதியை மாற்றி எழுதியவர்கள் தொட்டு பேரம் பேசியவர்கள் வரை அத்தனை பேரும் இக்கொலைக்கு ஏதோ வகையில் காரணம் தான் என்பதாலும், அவர்கள் செய்த அனைத்துக்குமான ஆதாரங்கள் தயார் நிலையில் இருப்பதாலும் அவர்கள் அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின்சார வாரிய உதவி பொறியாளர் அருணன் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அவரைப்பற்றி முதமைச்சரின் தனிப்பிரிவு வரைக்கும் புகார்கள் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, மிகவும் குறிப்பாக அவர் மீதும் அவருக்கு துணைபோகும் அதிகாரிகள் தொட்டு நடவடிக்கை எடுக்காத தனிப்பிரிவு வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அரசு இவற்றைச் செய்யச் சுணங்கும் எனில் நேரடியாக அது கொலையாளிகளுக்கும் மோசடிக்காரர்களுக்கும் துணை நின்று மக்களையும் மக்களுக்கானவர்களையும் காவு கொடுப்பதாகத் தான் கொள்ளப்படும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
நன்றி வணக்கம் !
- லிங்கம் தேவா
https://www.facebook.com/share/1PMJiQN9Gg/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு