டாஸ்மாக் ஊழலில் திமுக -பாஜகவின் கள்ளக் கூட்டு
அறம் இணைய இதழ்

டாஸ்மாக் ஊழலில் பாஜக – திமுக டீலிங் என்ன..?
ஆட்சி கையில் இருக்கிறது, செயல்படுத்தும் அதிகாரமும் இருக்கிறது அமலாக்கத் துறை கண்டெடுத்த ஆதாரங்கள் இருக்கிறது. நடவடிக்கை பாயாமல், போராட்டங்கள் நடத்தி, திசை திருப்புவானேன், பாஜகவினர்..? 2 லட்சம் கோடி ஊழலை வெறும் 1,000 கோடி என்று சுருக்கிக் காட்டுவதேன்…? என்ன தான் டீலிங்..?
டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டங்கள், ஆவேசப் பேச்சுக்கள்..எல்லாம் தூள் கிளப்புகிறது..!
இது எல்லாமே எனக்கு 2015, 2016 காலகட்டத்தில் மதுவை எதிர்த்து பேசி பல போராட்டங்களை முன்னெடுத்த திமுகவை நினைவுபடுத்துகிறது. அன்றைக்கு இதைவிட வீரியமாகவே மதுவை எதிர்த்து போராடி ஒரு நம்பிக்கையை விதைத்தது, திமுக!
ஆனால், அதற்கு முன்பாக சுமார் நான்காண்டுகள் நாங்கள் – பல மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து – மதுவுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தோம். இதற்கிடையே நண்பர் வழக்கறிஞர் தங்கவேலு மூலமாக சசி பெருமாள் எனக்கு அறிமுகமானார். அவரிடம் உள்ள அபாரமான மன உறுதியையும் ,போராடும் ஆற்றலையும் கண்டு சசி பெருமாளை முன்னிறுத்தி போராட்ட வியூகம் வகுத்தோம். 2013 ஆம் ஆண்டு 33 நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த போது அனைத்து மீடியாக்களிலும் நேரலையானது.
இந்த நான்காண்டுகளில் மக்கள் இயக்கங்கள் மதுவுக்கு எதிராக உருவாக்கி இருந்த மக்கள் எழுச்சியை ஓட்டு அறுவடைக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் கடைசியாக திமுகவும் களம் கண்டது. அப்போது ஸ்டாலினும், கனிமொழியும் மதுவுக்கு எதிராக பேசாத பேச்சில்லை.
அதே தன்மையைத் தான் தற்போது பாஜகவின் அண்ணாமலை பேச்சிலும், போராட்டங்களிலும் பார்க்கிறேன். இதுவும் ஒரு அரசியல் ஸ்டண்ட் தான்! மதுவுக்கு எதிரான குரல்கள் தாய்மார்கள், சமூக நல விரும்பிகளின் ஆதரவை ஓரளவு வென்றெடுக்கலாம்.
ஆனால், பாஜகவுக்கு போராட்டம் நடத்த எந்த தார்மீகத் தகுதியும் இல்லை. கடந்த நான்காண்டுகளாக திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஊழல் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பே டாஸ்மாக் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக நான்கைந்து மாதங்கள் ரெய்டு நடத்தி, செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தார்கள்! உண்மையான காரணத்தை மறைத்து, அதிமுக ஆட்சி காலத்து பழைய வழக்கில் கைது செய்ததாக கதைவிட்டனர்.
ஆனால், டாஸ்மாக் ரெய்டில் என்னென்னவெல்லாம் கண்டறியப்பட்டது என்பதை கமுக்கமாக மறைத்து விட்டது, அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியின் தம்பியை இன்று வரை கைது செய்ய முடியவில்லையாம்!
சரி அதை விடுங்க, 10 நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை டாஸ்மாக் தலைமையகத்தில் ரெய்டு செய்த போது கூட, உற்பத்தியாகும் மதுவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கணக்கு காட்டாமல் விற்று சொந்த ஆதாயம் அடைந்ததாக செய்தியை கசியவிட்டனர். தினமணியின் முதல் பக்கத்திலேயே வந்த செய்தி இது.
அப்படிப் பார்த்தால் ஆண்டுக்கு 50,000 கோடிகளை அபேஷ் பண்ணி இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்!
இந்த உண்மையை மறைக்கும் விதமாக வெறும் ஆயிரம் கோடி ஊழல் பெரிதுபடுத்தப்படுகிறது. அந்த ஆயிரம் கோடியும் டாஸ்மாக் சம்பந்தப்பட்டதில்லை. மது உற்பத்தி ஆலைக்கும், அவர்களுக்கு பாட்டில் சப்ளை செய்யும் நிறுவனத்திற்குமானதே. ஆகவே, இந்த குற்றச்சாட்டு ஆட்சியாளர்களை கடுகளவும் பாதிக்காத குற்றச்சாட்டே!
பாஜகவிற்கும், திமுகவிற்கும் நல்ல மறைமுக ‘அண்டர்ஸ்டேண்டிங்’ இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், வெறும் 100 கோடி சம்பந்தப்பட்ட டெல்லி ஆம் ஆத்மி ஊழலுக்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் , கட்சி நிர்வாகிகள் என ஆம் ஆத்மியை அலைக்கழித்து முடக்கிய பாஜக, திமுக விவகாரத்தில் எதிர்ப்பது போல ‘பாவ்லா’ காட்டி கொண்டுள்ளது.
நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் அதிமுக பக்கம் நிற்காமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் ‘ஜகா’ வாங்கியது பாஜக. இது மறைமுகமான திமுக ஆதரவின்றி வேறல்ல.
தற்போதைய அரசியலை அவதானித்தால் எந்தக் கட்சி தலைமையும் எந்த கட்சி தலைமைக்கும் உண்மையான விரோதியல்ல. அரசியலில் அவரவர் முறை வரும் போது அவங்க பங்கிற்கு அவங்க எடுத்துக் கொள்ளலாம். நடவடிக்கை பாயாமல் இருக்க உரிய பங்கை மேலிடத்திற்கு தந்து தப்பலாம். தண்டிக்கும் வாய்ப்புள்ள இடத்தில் – மத்திய அரசையே தன்வசம் வைத்துள்ள பாஜக, போராட்ட நாடகம் போடுவானேன்..?
அண்ணாமலையின் சமூகத்தை சேர்ந்தவர்களே , குறிப்பாக அவருக்கு வேண்டப்பட்ட உறவினர்களே இன்றைக்கு டாஸ்மாக் வியாபார விவகாரங்களில் அதிகமாக கொடிகட்டிப் பறக்கிறார்கள்! அவர்கள் அடையும் ஆதாயங்களை தடுக்கும் அளவுக்கு அண்ணாமலை பொது நலவாதியுமல்ல.
பாஜகவினர் வெயிலில் போராடினால் கருத்து விடுவார்கள், சோர்ந்து விடுவார்கள் என வீட்டைவிட்டு புறப்படும் போதே கைது செய்வதாக அழைத்துச் சென்று அழகாக திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மதிய உணவை தடபுடலாக வாங்கித் தந்து, மாலை, காபி, டீ, ஸ்நாக்ஸ் எல்லாமே அரசு செலவில் தந்து வழி அனுப்பி வைத்துள்ளது, ஸ்டாலின் அரசு. அவங்களும் எல்லோரும் ஒன்றிணைந்து நாள் பூராம் பேசவும், அரட்டை அடிக்கவும் அதே சமயம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்டதாக பேரெடுக்கவும் வாய்ப்பானது.
பெரும்பாலும் அரசியல்வாதிங்க எல்லோருமே ஒன்னுக்குள்ள ஒன்னா தான் இருக்கிறாங்க. ஏச்சு, பேச்சு, ஆவேசம் எல்லாமே அரசியல் ஸ்டண்ட் தான்! உண்மையில் மதுவின் தீமையால் இந்த சமூகம் சீரழிவது பற்றிய அக்கறையே இல்லை. ஆனால், அப்படி அக்கறை இருப்பது போல பாசாங்கு செய்வார்கள்.
இதில் ஒரு சில அரசியல்வாதிகளே விதிவிலக்குகள்..!
மக்கள் மட்டும் நிரந்தர ஏமாளிகள்!
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/21063/tasmac-dmk-bjp-dealing/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு