பல்லாயிரம் கோடி ஊழல்களை பகிரங்கமாக செய்யும் நேரு!

அறம் இணைய இதழ்

பல்லாயிரம் கோடி ஊழல்களை பகிரங்கமாக செய்யும் நேரு!

மக்களோடு மிக நெருக்கமான தொடர்புடையது உள்ளாட்சித் துறை. சமூகத்தின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவு நீரகற்றல், தூய்மை பணிகளில் அவுட்சோர்சிங், உட்புறச் சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல்.. போன்ற பலவற்றில் தற்போது இந்த ஆட்சியில் நடந்துள்ள பகாசூர ஊழல்கள் பகீர் ரகமாகும்;

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது எந்த மாதிரி வரைமுறையற்ற ஊழல்களில் ஈடுபட்டு தற்போது தண்டிக்கப்படாமல் வழக்குகளை சமாளித்து வருகிறாரோ, அதே பாணியில் தானும் ஊழல் செய்து, அவரை விட அதிக பணம் பார்த்து விடுவது என்பதில் சாதனையே நிகழ்த்தி உள்ளார், அமைச்சர் கே.என்.நேரு.

ஏற்கனவே, அக்டோபர் 27 , 2025 அன்று அமலாக்கத்துறைஉதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளை அமைச்சர் கே.என். நேரு  தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெற்ற வகையில், 884 கோடிகள் முறைகேடு நடந்துள்ளதை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியிருந்தது.

தற்போது தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் டெண்டர்களை விடுவதன் மூலம் ரூ. 1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.. என மற்றொரு மெகா ஊழலை அம்பலபடுத்தி உள்ளது.

இதை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய சகாக்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்கள் வழியே கண்டறிந்ததாக சொல்லி உள்ளனர்..!

’’இந்த ஊழல் மீது தமிழ்நாடு காவல்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)-ன் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்…”எனக் கூறியுள்ள அமலாக்கத்துறை, இந்த ஊழல் தொடர்பாக 258 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை டிசம்பர் 3 அன்று மாநில தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் (DVAC) ஆகியோருக்கு அனுப்பியுள்ளது.

உள்ளாட்சித் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்கள் கமிஷன் வசூலித்து உள்ளனர். இந்த பணத்தை பெற்றுக் கொண்டு டெண்டர் முறைகேடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிகள் தரப்பட்டுள்ளன. இவையாவும் ரெய்டின் போது நேருவின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் சாட் மூலம் அறிய வந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இத்துடன் நில்லாமல் மேலும் கூடுதல் நிதியை நிர்பந்தித்து உள்ளாட்சி ஒப்பந்ததாரர்களிடமிருந்து ‘கட்சி நிதி’யும் பெறப்பட்டுள்ளதாம்.

கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், ரூ. 1,020 கோடி லஞ்சம்  பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்களை அமலாக்கத்துறை எடுத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் எல்லாமே அரசாங்க ஒப்பந்தங்களில் நடக்கும் ஒரு பெரிய முறைகேட்டின் சிறு துளி மட்டுமே என்ற அமலாக்கத்துறை மேலும் பல வழிமுறைகளில் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதன் மதிப்பு இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பட்டுள்ளது. அதாவது,

#  சமூகத்திற்கான கழிவறைகள் கட்டுதல், மற்றும் கழிவறைகளுக்கான பினாயில் , துடைப்பங்கள் வாங்குவதில் ஊழல்!

# துப்புரவுத் தொழிலாளர்களை உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பணியமர்த்தாமல் அவுட்சோர்சிங் செய்தல்,

# துப்புரவு தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் அமைத்தலில் ஊழல்.

# நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் உட்புறச் சாலைகள் போடுவதில் ஊழல், அவற்றுக்கு மின் விளக்குகள் போடுவதில் ஊழல்.

# நீராதாரங்களை தூர்வாருவதில் ஊழல்..

என ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் கமிஷன் வசூலிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தி உள்ளது.

கமிஷன் பணம் பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளால் திட்ட அனுமதி மற்றும் பில் பாஸ் செய்யும் போது ஒப்பந்த மதிப்பில் 20  முதல் 25% என்பதாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பெரும் தொகையானது ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் சொத்துகளாக வாங்கப்பட்டுள்ளதாம்.  நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனின் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes) சம்பந்தப்பட்ட வங்கி மோசடி தொடர்பான பண மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும் போது,  அந்த தகவல்கள் அமலாக்கத்துறைக்கும் தரப்பட்டுள்ளது.

இந்த மெகா ஊழலை விசாரிக்க வழக்குகள் பதிவு செய்யுமாறு மாநில அரசை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருப்பது, குற்றவாளிக்கு உதவுவதாகும் என்றும் மாநில காவல்துறைக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இவை ஒருபுறமிருக்க, நேற்றைய தினம் ( டிசம்பர்-8, 2025) தமிழகம் தழுவிய அளவில்  தூய்மை பணியாளர்கள் சி.ஐ.டி.யு தலைமையில் மறியல் போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி உள்ளனர்.

ஏமாற்றப்படும் தூய்மை பணியாளர்கள் சி.ஐ.டி.யூ தலைமையில் எழுச்சி கொண்டு நடத்திய மறியல் போராட்டங்கள்!

இந்தப் போராட்டங்கள் வழியே எவ்வளவு அநீதிகள் அவுட்சோர்சிங்கில் நடந்து கொண்டுள்ளன என்பது அம்பலமாகியுள்ளது.

#  தூய்மைப் பணியை தனியார்  மயமாக்கும் அரசாணைகள் 152,  139 யை ரத்து செய்ய வேண்டும்.

#  சிஐடியு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டபடி நியாயமான ஊதியம் வழங்கி,பணி  நிரந்தரம் செய்ய வேண்டும்.. என  ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சியில் வேலை  செய்யும் தொழிலாளர்கள் ஆங்காங்கே நடத்திய போராட்டங்களே  நேருவின் ஊழல்களுக்கு நேரடி சான்றாகும்.

சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் தூய்மை பணியாளர்களுக்கு உள்ளாட்சிகள் தர வேண்டிய சம்பளத்தையும், தற்போது தந்து கொண்டிருக்கும் சம்பளத்தையும் அம்பலப்படுத்தி தூய்மை தொழிலாளர்கள் இந்த அரசு தங்களுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தை தோலுரித்துள்ளனர் இந்த போராட்டங்களில்!

மாநகராட்சிகளில்  தினக் கூலி தர வேண்டியது ரூ 761, தருவதோ ரூ 590.

நகராட்சிகளில் தினக்கூலி தரவேண்டியது ரூ 646, தருவதோ ரூ 480

பேருராட்சிகளில் தினக்கூலி தரவேண்டியது ரூ 569, தருவதோ 400

காவல் பணிகளுக்கு தரவேண்டிய மாத ஊதியம் ரூ 12,780, தருவதோ 8,000

இப்படியாக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும்  பல்லாயிரக்கணக்கிலான அடி நிலை தொழிலாளர்களின் ஊதியத்தை அபகரித்து ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைப் பணமே பல ஆயிரம் கோடிகளாகும். பல்லாண்டுகள் வேலை பார்க்கும் பல்லாயிரம் அடி நிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அவுட்சோர்சிங்கை அராஜகமாக செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆட்சியாளர்களை தண்டிக்காமல் தீர்வில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23472/minister-nehru-corruption/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு