ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?

அருஞ்சொல்

ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?

ஹிஜாப்: இதை அணிவதா, கூடாதா – இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் இரண்டு  நீதிபதிகள் அக்டோபர் 13 அன்று பதில் அளித்துள்ளனர். அவை இரண்டும் இருவிதக் கருத்துகள்; அதனால் அவை விடையளிக்கவில்லை. அதன் விளைவாக, கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில், குந்தபுரா என்ற சிறு நகரில் பிறந்து வளர்ந்த அயஷத் ஷிஃபா, தேரினா பேகம் என்ற இரண்டு மாணவிகளாலும் அரசினர் புகுமுகக் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாத தேக்கநிலை ஏற்பட்டுவிட்டது. 

இரு மாணவிகளும் இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர். முந்தைய ஆண்டு கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அவர்கள் ஹிஜாப் என்ற, முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணியும் தலை முக்காட்டை அணிந்துதான் வந்தனர். அந்தத் துணி தலையையும் கழுத்தையும் மறைக்கும் – முகம் தெரியும். கல்லூரியில் அணிய வேண்டிய சீருடையுடன் ஹிஜாப்பையும் அணிந்துவந்தனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் அவர்கள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டு, ‘ஹிஜாப்பை அகற்றிவிட்டுத்தான் கல்லூரிக்குள் வர வேண்டும்’ என்று கூறப்பட்டனர். அப்படிச் செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால், ‘கல்லூரிக்குள் நுழையக் கூடாது’ என்று அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை கடந்த எட்டு மாதங்களாக அதே நிலையில்தான் இருக்கிறது.

ஹிஜாப் என்பது வித்தியாசமானதல்ல

ஒரு பெண் ஹிஜாப் அணிவதால் மற்ற யாருக்கும் ஒரு தீங்கையும் செய்துவிடுவதில்லை. அது பொது அமைதியையோ, கண்ணியத்தையோ, தார்மிக நெறிகளையோ – ஏன் சுகாதாரத்தையோகூட கெடுக்கும் ஆடையல்ல. ஹிஜாப் அணியும் பெண்கள் எந்த வகையிலும் - சேலை முக்காட்டையே இழுத்து தலைக்கும் போர்த்திக்கொள்ளும் பெண்களைவிடவோ, துப்பட்டா அணியும் பெண்களைவிடவோ வித்தியாசமானவர்கள் அல்ல.

ஆண்களும் மத வழக்கப்படி தலையில் இப்படித் துண்டுகளை அணிந்துகொள்கின்றனர். சீக்கிய ஆண்கள் ‘பக்டி’ என்ற துணியைத் தங்களுடைய கேசத்தை மறைத்து அணிகின்றனர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பருவங்களில் விதவிதமான தலைப்பாகைகளை அணிகின்றனர். மைசூரு பகுதியில் ‘பேட்டா’ என்ற தலையணியும் இதில் ஒன்று.

இந்த சர்ச்சையின் மையக் கருத்துதான் என்ன?

பத்திரிகைகளில் தீப்பறக்கும் தலைப்புகள், தொலைக்காட்சிகளில் காது சவ்வைக் கிழிக்கும் கர்ண கொடூர விவாதங்கள், வெள்ளமெனப் பாயும் விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகள், எள்ளல்கள், ஆவேசத் தாக்குதல்கள், மதிப்புமிக்கத் தலைவர்களின் கருத்துகள் என்ற களேபரங்களுக்கு இடையே இந்தப் பிரச்சினையின் மையக் கருத்து எது என்பதே காணாமல் போய்விட்டது.

என்னுடைய கருத்துப்படி, இந்த விஷயத்தில் பிரச்சினை எதுவென்றால் – எந்த வகை ஆடை அணிவது என்பதில் ஒருவருக்குள்ள தனிப்பட்ட ‘தேர்வு’ (விருப்பம்) அல்லது ‘ஆடைச் சுதந்திரம்’தான்.

கவர்ச்சிகரமான சொற்சிலம்பம்

இந்த விவகாரம் தொடர்பாக, கவர்ச்சிகரமான சொற்சிலம்பம் ஆடப்படுகிறது. ஹிஜாப் அணியும் விருப்பம் தொடர்பாக இருவிதமான அணுகுமுறைகள் உள்ளன. இந்த இரண்டு அணுகுமுறைகளையும் மாண்பமை நீதியரசர்கள் ஹேமந்த் குப்தா, சுதர்சன் துலியா ஆகியோர் வழக்கு விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளிலிருந்தே விளக்குகிறேன்.

நீதிபதி குப்தா: ஹிஜாப் அணிவது மதம் சார்ந்த நடைமுறையாக இருக்கலாம், அவசியமான மதச் சடங்காகக்கூட இருக்கலாம், இஸ்லாத்தைப் பின்பற்றும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக நடைமுறையாகவும் இருக்கலாம், ஆனால் அரசின் நிதியில் நடத்தப்படும் மதச்சார்பற்ற பள்ளிக்கூடத்தில் மதம் சார்ந்த நடைமுறைகளுக்கு இடம் இல்லை.

நீதிபதி துலியா: ஹிஜாப் அணிவது அவசியமான மதச் சடங்கா இல்லையா என்பது இந்த விவகாரத்தில் முக்கியமே இல்லை. அந்த நம்பிக்கை உண்மையானது, அது எவருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யவில்லை என்றால் வகுப்பறையில் ஹிஜாப்பைத் தடை செய்ய நியாயமான காரணங்கள் ஏதும் இல்லை.

நீதிபதி குப்தா: நிர்ணயிக்கப்பட்ட சீருடையை மாணவர்கள் அணிந்து வருவதை கல்லூரி வளர்ச்சிக் குழு உறுதிசெய்வது கட்டாயம் என்ற மாநில அரசின் முடிவு, அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவை எந்த வகையிலும் மீறுவதாகாது; மாறாக, அரசமைப்புச் சட்டத்தின் 14வது கூறின்படி சமத்துவ உரிமையையே அது நிலைநாட்டுகிறது.

நீதிபதி துலியா: கல்லூரியின் புகுமுக வகுப்பு மாணவியை வாயிலில் நிறுத்திவைத்து, ‘ஹிஜாப்பைக் கழற்று’ என்று கூறுவது அவருடைய அந்தரங்கத்திலும் கண்ணியத்திலும் குறுக்கிடும் செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) மற்றும் 21 ஆகிய கூறுகள் அளிக்கும் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

நீதிபதி குப்தா: நீதி, சுதந்திரம், சமத்துவம், தோழமை ஆகிய அனைத்துமே நன்றாக நிலைநாட்டப்பட, மதரீதியிலான வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைவதும், மாணவர்கள் பெரியவர்களாவதற்கு முன்னால் அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துவதுமே அரசமைப்புச் சட்ட முகப்பு வாசகத்தின் லட்சியமாகும்.

நீதிபதி துலியா: வெவ்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்கள், அடுத்தவர்களின் உணர்ச்சிகளை மதிப்பதற்கும் பரிவைக் காட்டுவதற்கும் பரஸ்பரம் புரிந்துகொள்வதற்கும் அவர்களைத் தயார்படுத்துவதற்கு இதுவே உற்ற தருணம். நம்மிடையே காணப்படும் வேற்றுமைகளால் வெருட்சி அடையாமல், அந்தப் பன்மைத்துவத்தைப் பார்த்து மகிழ்ச்சியடையவும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடவும் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் இதுவே உரிய தருணம்.

படிக்க: ஹிஜாப் தடை: பகுதி-1 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

ஹிஜாப் தடை: பகுதி-2 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

நீதிபதி குப்தா: சீருடை விதிகளின்படி உடை அணிந்து வகுப்புகளுக்கு வரமாட்டோம் என்று அவர்கள் தீர்மானித்தால், அது அவர்களாகவே எடுத்துக்கொள்ளும் முடிவு, அதை அரசமைப்புச் சட்டத்தின் 29வது கூர் மீறப்படும் செயலென்று கருதிவிடக் கூடாது.

நீதிபதி துலியா: வகுப்பறைக்குள்ளும் ஹிஜாபை அணிய மாணவி விரும்பினால் அவளைத் தடுத்த நிறுத்த முடியாது. அதை அவர் விரும்பித்தான் அணிகிறார் என்றால், கட்டுப்பெட்டியான அவருடைய குடும்பத்தாரின் அனுமதி பெற்று பள்ளிக்கூடம் சென்று படிப்பதற்கு அது மட்டுமே வழியாக இருக்கும், அப்படியென்றால் அவர்கள் கல்விபெற அந்த ஆடைதான் அங்கே துணை செய்கிறது.

விருப்பமா – விதியா?

பழமைவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஈரானில், ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்று பெண்கள் திரண்டு போராடி வரும்போது, வகுப்பறைகளிலும் ஹிஜாப் அணிவதற்கான உரிமையை முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், நவீன இந்தியாவில் தாங்கிப்பிடிப்பது வியப்பாக இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விமர்சனம் முற்றிலும் தவறானது. நன்றாக இந்த விவகாரங்களைக் கவனித்தால் ஒன்று புரியும், ஈரானிலும் இந்தியாவிலும் முஸ்லிம் பெண்கள் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்திப் போராடுகின்றனர் –  ‘என் ஆடை என்னுடைய உரிமை, அதை நான்தான் தேர்வுசெய்ய வேண்டும்’ என்பதே அது. கருக்கலைப்பு செய்யும் உரிமை தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் பெண்கள் போராடுவது தொடர்பான சர்ச்சையைப் போலத்தான் இதுவும்.

இந்த சர்ச்சையானது ‘விருப்பம்’ – ‘விதி’ தொடர்பானது. ‘விருப்பம்’ என்பது சுதந்திரம், கண்ணியம், அந்தரங்கம், பன்மைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ‘விதி’ என்பது பேரினவாதத்தின் விளைவு, சகிப்பற்றத் தன்மையால் முகிழ்ப்பது, எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும் என்று சீர்மையைத் திணிக்கப் பார்ப்பது.

பொது ஒழுங்கு, கண்ணியம், நன்னடத்தை, சுகாதாரம் ஆகிய காரணங்களுக்காக ‘விதி’யை வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ‘விருப்பம்’ என்ற வாய்ப்பு விடைபெற்றாக வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் 19(2), 25(1) ஆகிய பிரிவுகள் சுட்டுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பான மூன்றாவது பாகங்களில் உள்ள சில பிரிவுகளும்கூட இதற்கு வழி செய்கின்றன. ஆனால், அப்படியான நிலைமை ஏதும் இல்லாதபட்சத்தில் அவரவருடைய ‘தேர்வுக்குத்தான்’ முன்னுரிமை தரப்பட வேண்டும், ‘விதிக்கு’ அல்ல.

நீதிபதி துலியா, தேர்வுசெய்யும் உரிமையை ஆதரித்தே கருத்து தெரிவித்தார். ஏனென்றால், ஹிஜாப் அணிந்துகொள்ள மாணவி முன்வந்தால்தான் அவர்களுடைய குடும்பத்தார் மேற்கொண்டு படிக்க அனுமதிப்பார்கள். நீதிபதி ஹேமந்த் குப்தாவோ அரசின் விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் - அந்த விதியை அமல் செய்தாக வேண்டிய கட்டாயம் என்ன என்பதை அரசு விளக்காதபொழுதும்கூட!

உச்ச நீதிமன்றத்தின் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடுத்து இதை ஆராய்ந்து சட்டத்தை வகுக்கட்டும். இதற்கிடையே நீங்கள் மாணவிகளின் ‘தேர்வை’ ஆதரிக்கிறீர்களா அல்லது அரசின் ‘விதியை’ ஆதரிக்கிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

- ப. சிதம்பரம் 

(தமிழில்: வ.ரங்காசாரி)

அருஞ்சொல் இணைய தளம்

கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.arunchol.com/p-chidambaram-on-hijab-point-and-counter-point

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு