ஹிஜாப் தடை: பகுதி-2

இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

ஹிஜாப் தடை: பகுதி-2

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் பாசிசத்திற்கெதிரான செயல்தந்திரமும்

மதம் சுரண்டலின் விளைவாக தோன்றும் சமூக நிகழ்வாகும். மக்களிடம் மதநம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். அது சுரண்டலின் (நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை உள்ளிட்ட) அனைத்து வடிவங்களையும் பாதுகாக்கிறது. வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிக்கைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. சுரண்டலும் வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற - வர்க்கங்களற்ற புதிய சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம்தான் மதத்தை ஒழிக்க முடியும். எனவே இந்து மதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், பவுத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் அதன் நம்பிக்கைகளும் பிற்போக்கானதே; அவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது கோட்பாடு ரீதியாக சரியான ஒன்றுதான். அரசிடமிருந்து இன்றும் பிரிக்கப்படாத அங்கமாக இருந்துவரும் இந்துமதத்திற்கும் அதன் நம்பிக்கைகளுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டும், இசுலாமிய சிறுபான்மை மக்களுக்கெதிராக அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் பாசிசமயமாக்கப்பட்டும் வரும் இச்சூழலில் மதப்பிரச்சனையை செயல்தந்திர ரீதியாக எவ்வாறு அணுகுவது?

இந்துமதம் அரசிடமிருந்து பிரிக்கப்படாமல் அரசின் ஒரு அங்கமாகவும் சிறப்புச் சலுகையுடன் அதன் ஒடுக்குமுறைக் கருவியாகவும் செயல்பட்டு சிறுபான்மை மத உரிமைகளை நசுக்கி வருகிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக அனைத்து மதங்களும் பிற்போக்கானதாகவும், ஒழிக்கப்பட வேண்டியதாக இருப்பினும் செயல்தந்திர ரீதியாக ஒடுக்கும் மதத்தையும் ஒடுக்கப்படும் சிறுபான்மை மதத்தையும் சமமாகப் பார்க்க முடியாது. ஜனநாயகப் புரட்சியின் மூலம் அரசிடமிருந்து இந்து மதம் பிரிக்கப்பட்டு மதச்சார்பற்ற அரசு அமைந்த பிறகுதான் செயல்தந்திர ரீதியாகவும் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்க முடியும்.  

மோடி கும்பலால் அரங்கேற்றப்படும் இந்துத்துவ பாசிசம் வெறும் மதப்பிரச்சனை மட்டுமல்ல. இந்து ராஜ்ஜியம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அது இந்து மதத்திலிருக்கும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே. இது தேசிய இனப்பிரச்சனை; ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் எனும் பெயரில் ராமராஜ்ஜியமாக இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைத்து அமெரிக்க மாமனுக்கும் அம்பானி, அதானிகளுக்கும் சேவை செய்யும் பிரச்சனையே. அதை வெறும் மத நடவடிக்கையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது தவறு. இந்த நிலையிலிருந்துதான் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மத ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும், சாதி ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் நாம் ஒடுக்கப்படும்   தேசிய இன ௹ சாதி - மத சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்பது பாசிசத்திற்கெதிரான  செயல்தந்திர ரீதியான சரியான அணுகுமுறையாக இருக்கும். அவ்வகையிலேயே நாம் இதுவரை பாசிசத்திற்கெதிராக போராடி வந்தோம், போராடி வருகிறோம்.

இசுலாமிய அடிப்படை வாதத்தையும், இசுலாமிய உழைக்கும் மக்களின் மதநம்பிக்கைகளையும் சமப்படுத்திப் பார்ப்பது தவறான போக்காகும். இசுலாமிய அடிப்படைவாதம் முறியடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதேசமயம், இசுலாமிய அடிப்படைவாதத்தின் தோற்றத்திற்கு காரணமென்ன? என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இசுலாமிய  அடிப்படைவாதத்தின் ஊற்றுக்கண் ஏகாதிபத்திய பயங்கரவாதமே 

இந்து மத நம்பிக்கைக் கொண்ட உழைக்கும் மக்களுக்கும் இந்து மத வெறி பாசிசத்தை  நடைமுறைப்படுத்தும் சங்பரிவார கும்பல் உள்ளிட்ட பாஜக அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையோ (சொல்ல போனால் அது அவர்களுக்கும்  எதிரானதே), அது போல இசுலாமிய உழைக்கும் மக்களின் மதநம்பிக்கைகளுக்கும்  இசுலாமிய அடிப்படை வாதிகளின் செயல்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அது இசுலாமிய உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே.

சர்வதேச அளவில் இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதன  ஆதிக்க வெறிக்கும்பல்களே! மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இஸ்லாமியப் பயங்கரவாத குழுக்கள் அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் விளைபொருளாக உள்ளன. அரசு பயங்கரவாதத்தின் எதிர்விளைவே தனி நபர் அல்லது குழு பயங்கரவாதம் என்கிறது மார்க்சியம். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் ஏகாதிபத்தியம் என்கிறது லெனினியம்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தங்களின்    காலனியாதிக்க   நலனிலிருந்து  ஈரான், ஈராக்கில் இசுலாமிய அடிப்படைவாதத்தை தோற்றுவித்தனர். மேலும் புனிதப் போர் (ஜிஹாத்) பற்றிய மதவாத நூல் இயற்றினர். ஜார் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கெதிராக இந்த அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டு மத அடிப்படைவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினர். அதேபோன்று இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான  புதிய காலனிய கட்டத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் (ஆப்கன் மக்களை  கொன்று குவித்த சோவியத்திற்கெதிராக) முஜாகிதின் என்ற அமைப்பை உருவாக்கியது. எண்ணெய் வளம் நிறைந்த இசுலாமிய நாடுகளை தன் பிடிக்குள் கொண்டு வரும் நோக்கில் மத்திய ஆசியாவில் மதவெறியைத் தூண்டி தேசிய இன உணர்வுகளை மழுங்கடிக்கும் நோக்கில் மீண்டும், "சர்வதேச புனிதப் போர்" என்ற பெயரில் தாலிபான்கள் உள்ளிட்ட பல இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களைத் தோற்றுவித்து தனது காலனியாதிக்க கொள்ளை லாப வெறிக்கு கருவியாக பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தாலிபான்களுக்கும் வெடித்த  முரண்பாட்டின் காரணமாக 2001ல் இரட்டை கோபுரம் - பென்டகன் மீதான தாக்குதல் நிகழ்ந்தது. அதன் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் "இஸ்லாம் மத பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்" என்ற முழக்கத்தையே வெளியுறவுக் கொள்கையை அறிவித்தது. எனவே சர்வதேச அளவில் இசுலாமிய அடிப்படை வாதத்திற்கு காரணமாக இருப்பது ஏகாதிபத்திய கும்பல்களே ஆகும். இசுலாமிய பயங்கரவாதத்தால் என்றும்  ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்பதற்கு ஆப்கனே சாட்சி. அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தையும் இசுலாமிய அடிப்படைவாதத்தையும் கூட சமப்படுத்தக் கூடாது; ஆனால் இவர்கள் அமெரிக்கா ஏகாதிபத்திய நலன்களிலிருந்து கட்டியமைக்கப்படும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான இசுலாமியர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையும் சமப்படுத்துகின்ற மோசமான தவறிழைக்கின்றனர்.   

இந்தியாவிலும், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்திலிருந்தே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு இசுலாமியர்களுக்கெதிராக  இந்து மதவெறித் தூண்டி விடப்பட்டது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள்தான் பாபர் மசூதி பிரச்சனையை தோற்றுவித்தனர். ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் பாஜகவின்  இந்துத்துவ பாசிசமும், காங்கிரஸின் பெருந்தேசிய வெறி  பாசிசமும் ஐரோப்பிய காலனியாதிக்க கும்பல்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆரிய இன மேன்மைவாத கோட்பாட்டிலிருந்தே கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியப் பாசிசத்தின் சித்தாந்த வேர் காலனிய இனவியிலில் புதைந்துள்ளது. அதுவே இன்றும் தொடர்கிறது. இந்தியா தனது விரிவாதிக்க நலனிலிருந்து - காஷ்மீர் தேசிய இனத்தின் விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு மாறாக, அதை நசுக்கும் வகையில் மதவாத பிரச்சனையாக சித்தரித்து - இசுலாமிய அடிப்படைவாத குழுக்களின் தோற்றத்திற்கு வித்திட்டது. தனது பெருந்தேசியவெறிக் கொள்கையிலிருந்து காங்கிரசு அரசும், இந்துராஜ்ஜியக் கொள்கையிலிருந்து பாஜகவும், இந்துமதவெறியையும் இசுலாமிய அடிப்படைவாதத்தையும் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்தன. இந்துத்துவ பாசிசப் போக்கே இந்தியாவில் இசுலாமிய அடிப்படைவாதத்திற்கும் காரணமாக அமைந்தது. ஏற்கனவே கூறியது போல இந்த இந்துத்துவ பாசிசம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தரகுமுதலாளித்துவ கும்பல்களுக்கும் சேவை செய்கிறது. எனவே இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தாமல் இசுலாமிய அடிப்படைவாதத்திற்கெதிராக மட்டும் போர்க்கொடி தூக்குவதென்பது முதலில் தவறு. இரண்டாவதாக, மத நிறுவனங்கள் கல்வி உள்ளிட்ட அரசுத்துறைகளில் தலையிடக் கூடாது என்பதும், கல்வி நிலையங்களில் மக்களின் மத உரிமைகளை கோரும் உரிமையும் வெவ்வேறு. இரண்டையும் சமப்படுத்துவதும் தவறு. மூன்றாவதாக, ஹிஜாப் அணிவதற்கும் - கல்விக்காகவும், மத உரிமைகளுக்காகவும், குடியுரிமைக்காகவும் இசுலாமிய சிறுபான்மை மக்கள் போராடுவதும் இசுலாமிய அடிப்படைவாதமும் ஒன்றல்ல. அனைத்து இசுலாமியர்களையும் ௹ தாலிபான்களாக பார்க்கும் சிந்தனையானது - ஆழ்மனதில் இசுலாமிய வெறுப்பு புரையோடிப் போயிருப்பதையே காட்டுகிறது. இது ஐயத்திற்கிடமின்றி சங்பரிவார கும்பலின் சிந்தனையே. இரண்டையும் சமப்படுத்தி இன்று அனைத்து மதங்களுக்கெதிராக போராட அழைப்பது கொச்சை பொருள்முதல்வாதமும் அராஜகவாதமும் ஆகும்; இது செயல்தந்திர ரீதியாக தவறிழைப்பதாகும்; இது மதச் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கும் போர்த்தந்திரத்திற்கு எவ்வகையிலும் சேவை செய்யாது; மாறாக உழைக்கும் மக்களை மேலும் நசுக்கும் இந்துத்துவ பாசிசப் போக்கிற்கே சேவை செய்யும்.

இந்தியாவில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்படாமலிருப்பதற்கு காரணம் இந்தியா புதிய காலனியாக நீடிப்பதே

முதலாளித்துவ புரட்சி முடிந்த நாடுகளில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டது. அங்கு பாசிசம் மத வடிவம் எடுப்பதில்லை; இன வடிவமே எடுக்கிறது. இருப்பினும், டோக்ளியாட்டி கூறியது போல பாசிசம் பச்சோந்தித் தனமானது, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் கூட தங்களின் நெருக்கடியைத் தீர்க்க - அமெரிக்கா தொடங்கிய "இஸ்லாம் மத பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்" எனும் இஸ்லாமோபோபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்படாத இந்தியா போன்ற காலனிய நாடுகளின் நிலையை சொல்லவா வேண்டும்? இதுவரை இந்தியாவின் அரசு (1947 அதிகார மாற்றத்திற்கு பின்னான காங்கிரஸ் - பாஜக இரண்டின் அரசும் கூட) இந்து மதச் சார்புடைய அரசாகவே இருந்து வந்துள்ளது. இன்று மத்தியில் ஆளும் மோடி அரசு இந்துத்துவாவை தனது கொள்கையாக செயல்படுத்தும் ஒரு அப்பட்டமான மதவெறி அரசு. பாஜகவின் இந்துத்துவ பாசிச ஆட்சியை முதன்மைப்படுத்தி எதிர்த்து போராடாமல், அதனால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இசுலாமிய மதத்தினர் மட்டும் மத நம்பிக்கைகளில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கோருவதும்; அரசின் ஒடுக்குமுறையையே முற்போக்கான சீர்திருத்தம் என மதப் புரட்சியாளர்கள் போல பேசுவதும் கேலிக்கூத்து! அராஜகவாதம்!

இது போல அவர்கள் நிலைபாடு எடுப்பதற்கு அடிப்படை, இந்தியாவின் உற்பத்தி முறை பற்றிய தவறான மதிப்பீடும் ஆய்வும் காரணமாகும். இந்தியா முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிவிட்ட நாடு என அவர்கள் கருதுகிறார்கள். உலகமயமாக்கலும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கமும் தானாக இந்திய தரகு பெரும் முதலாளிகளை, சுதந்திர போட்டி முதலாளிகளாக உருவாக்கி விட்டது என்கிறார்கள். எந்த புரட்சியும் இல்லாமல் அமைதி வழியிலேயே உற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டது எனக் கருதுகின்றனர். இந்த கருதுகோள் மார்க்சிய விரோதமானது. இதனால் அரசிடமிருந்து மதம் பிரிக்கப்பட்டுவிட்டது என்று அனைத்து மதத்திற்கெதிரான போராட்டங்களை இன்றே நடத்த வேண்டும் எனக் கோரும் நிலைக்குச் செல்கின்றனர்.  

படிக்க: ஈரான் : ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெல்லட்டும்

இந்தியா இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாகவே நீடிக்கிறது. அதனாலேயே, ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கமும் அதற்குச் சேவை செய்யும் பெரும் தரகு முதலாளித்துவ கூட்டமும் ஏற்கனவே இங்கு நிலவும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையோடு சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறது. இந்த முக்கூட்டு புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் வீழ்த்தப்படும்போதே மதம் அரசிடமிருந்து பிரிக்கப்படும். அதன் பிறகே மத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் கலாச்சார புரட்சியும் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து இசுலாமிய மத நம்பிக்கைகளையும் அதன் மீதான இந்துத்துவ பாசிசத்தையும் சமமாக எதிர்ப்பது தவறு.

மத நம்பிக்கைகள் நிலவுவதற்கான பொருளியல் அடித்தளத்தை தகர்க்காமல் மத நம்பிக்கைகளை தகர்க்க முடியாது. சோசலிசப் புரட்சி முடிந்த பிறகும் கூட ரசியாவில் மத உரிமைகள் அங்கீகரிப்பட்டன.

மத உரிமைகளை அங்கீகரித்த சோவியத்

சோவியத் யூனியனின் அரசியலமைப்பின் பிரிவு 52 ல்  அதன் குடிமக்களுக்கு மத சுதந்திரத்தை உறுதியளிக்கிறது:

"சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் மனம் சார்ந்த சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள், அதாவது, எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் அல்லது பின்பற்றாமலிருப்பதற்கும், மத வழிபாடு அல்லது நாத்திக பிரச்சாரத்தை நடத்துவதற்கும் உரிமை உள்ளது."

முதலாளித்துவ புரட்சி நடக்காத ஆப்கனில் அமானுல்லா ஆட்சி கல்வி நிலையங்களில் புர்கா தடை விதித்தது. ஸ்டாலின் அதை கண்டித்தார்.

"பின்தங்கிய நாடாக ஆப்கானிஸ்தான் நீடித்தால் அது மோசமானதாக இருக்கும். எனவே ஆப்கானிஸ்தான் உலகத்தரத்திலான ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்; கட்டாயக் கல்வியை கொடுக்க வேண்டும்; அதிக பள்ளிகளை நிறுவ வேண்டும்" என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

(தோழர். ஸ்டாலின் மற்றும் ஆப்கானிஸ்தான் தூதர் சுல்தான் அகமது கான் இடையேயான உரையாடல், ஜூன் 6, 1946)

ஐரோப்பியா சென்று திரும்பிய அமானுல்லா கான், பெண்கள் தங்கள் சடோரை  கழற்ற வேண்டும் என்று கோரினார் (சடோர், என்பது உடல் முழுவதும் போர்த்தும் நீளமான சால்வை. கழுத்து மற்றும் கைகள் தைக்கப்பட்டியிருக்கும். இது தலை மற்றும் உடலை மறைக்கிறது. ஆனால், முகம் முழுமையாக தெரியும். சடோர் பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் இதை பிரபலமாக பயன்படுத்துகின்றனர்).

"அமானுல்லா கான் ஒரு முட்டாள், இந்த விசயத்தை அவர் தவறாக அணுகியுள்ளார்", "இசுலாமிய பெண்கள் அவர்கள் விரும்பினால் புர்கா அணிந்து வரலாம்; ஆனால் அவர்கள் கல்வி பெறுவதுதான் ஆப்கனை அதன் பின்தங்கிய நிலையிலிருந்து விடுவிக்க துணைபுரியும்" என்றார் ஸ்டாலின்

(தோழர். ஸ்டாலின் மற்றும் ஆப்கானிஸ்தான் தூதர் சுல்தான் அகமது கான் இடையேயான உரையாடல், ஜூன் 6, 1946)

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதுபோல சமுதாய வளர்ச்சி கட்டத்தைப் பற்றிய மதிப்பீடு இல்லாமல் நிலைப்பாடு எடுத்த அமானுல்லாகான் போலவே இங்குள்ள கொச்சைப் பொருள்முதல்வாதிகளும் நிலைபாடு எடுக்கின்றனர். இவர்களை பார்த்துதான் 'முட்டாள்' என கூறியுள்ளார் ஸ்டாலின். எனவே இன்றைய சூழலில் இசுலாமிய பெண்களின் மத உரிமைகளுக்காகவும், கல்வி உரிமைகளுக்காகவும் போராடுவதே ஒரு ஜனநாயகவாதியின் கடமை.

கம்யூனிஸ்ட் கட்சியில் கூட மத நம்பிக்கை கொண்டவர்கள் உறுப்பினராக அனுமதிக்கப்படுகின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் மனைவிகளின் மதநம்பிக்கையைப் போக்க அராஜகத்தை கடைபிடிக்கக் கூடாது என மாவோ பின்வரும் ஆலோசனைகளை கூறுகிறார்.

நீங்கள் நாத்திகராக இருக்கலாம். ஆனால் உங்கள் மனைவி ஆத்திகராக இருந்தால் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் அவரது உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும். கடவுள் சிலைகளை, புகைப்படங்களை நீங்கள் பலவந்தமாகத் தூக்கியெறிய கூடாது. உங்கள் மனைவிக்கு விஞ்ஞானம் குறித்து போதித்து நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அவராக உணர்ந்து சாமி சிலைகளை புகைப்படங்களைத் தூக்கி எறிய வேண்டும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். நீங்கள் பலவந்தப்படுத்துவது அராஜகம் என்கிறார் மாவோ.

அது போலவே ஹிஜாப் அணிவது இசுலாமிய பெண்களின் மதநம்பிக்கை, அதனை நாம் மதிப்பது அடிப்படை ஜனநாயக கடமை. அவர்கள் ஹிஜாப்பிலிருந்து வெளியேற அவர்களுக்கு போதிப்பதுடன் அவர்களின் சுயேச்சையான பொருளாதார வாழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.  மாறாக அதற்கு தடை விதிப்பதை ஆதரிப்பது அராஜகவாதம். இது பாசிஸ்ட்டுகளுக்கே உதவும்.

மோடி அரசு பாசிச நடவடிக்கைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் கொச்சைப் பொருள்முதல்வாதம் பேசுவதும், வறட்டு நாத்திகவாத பிரச்சாரத்தை முதன்மைப்படுத்துவதும் வர்க்கப் போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும்.

எனவே, இந்துத்துவப் பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மையினரின் மத உரிமைப் போராட்டங்களை மதப் பயங்கரவாதமாக கொச்சைப்படுத்தி பாசிஸ்டுகளுக்கு துணை போகாமல்,  கர்நாடக காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான இசுலாமிய மாணவிகளின் வீரமிக்க போராட்டங்களுக்கு துணை நிற்பதும்; பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் சிறுபான்மையின மக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதும்; வறுமை, வேலைவாய்ப்பின்மையை தீர்க்க வக்கற்ற மத்திய மாநில பாஜக ஆட்சிகளின் தோல்வியை மூடிமறைக்க சாதி மதக் கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சங்பரிவாரங்களின் மதவாத செயல்தந்திரங்களை முறியடிப்பதும்; ஆர்.எஸ்.எஸ். ஏ.பி.வி.பி, இந்து முன்னணி, வி.எச்.பி உள்ளிட்ட அனைத்து காவிப் பயங்கரவாத அமைப்புகளை கருவறுப்பதும்; ஹிஜாப் தடை எனும் பெயரில் இசுலாமியப் பெண்களின் மத உரிமை, கல்வி உரிமையை பறிக்கும் இந்துத்துவப் பாசிசத்தை வேரறுப்பதும்; இசுலாமியர்கள், ஒடுக்கப்படும் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வது இன்றைய அத்தியாவசிய கடமையாகியுள்ளது.               

 

சமரன், ஜூன்ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து

முந்தைய பகுதியை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்