பெகாசஸ்: ஏகாதிபத்தியங்களின் உளவுத்துறை பாசிசம் - பகுதி 1
சமரன்
இந்தியாவில் பெகாசஸ்:
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குப் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இஸ்ரேலிடம் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இன்றைய மதிப்பில் ரூ.16,000 கோடி மதிப்பில் பெகாசஸ் உளவு மென்பொருளும் ஏவுகணைகளும் வாங்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது" என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 40 செய்தியாளர்கள் உட்பட 300 பேரின் திறன்பேசிகளில் (Smart Phone) தகவல்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், பத்திரிக்கைகளும், ஜனநாயக சக்திகளும் பல்வேறு தளங்களில் தங்களின் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் பதியவைத்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடக்கின. பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில், பெகாசஸ் உளவு செயலிமூலம் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் இராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுபான்மைத் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதத் தலைவர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர்கள் போன்றவர்களை பெகாசஸ் உளவு செயலிமூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் காங்கிரசை சேர்ந்த எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கட்சிகளுக்கு தேர்தல் யுக்தியை வகுத்து கொடுத்துவந்த பிரசாந்த் கிஷோர், மத்திய புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியாக இருந்த அலோக் வர்மா, பிராந்திய போட்டியில் பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களான கர்நாடகத்தை சேர்ந்த குமாரசாமி, சித்த இராமைய்யா, மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஷேக் பேனர்ஜி போன்றவர்களும் அடங்குவர். 'தி வயர்' செய்தி நிறுவனத்தின் நிறுவனரான சித்தார்த் வரதராஜன், இடது சிந்தனையாளரும் ஜனநாயக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த உமர் காலித் (2020ல் ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்), கிருத்துவ பாதிரியும் சமூக செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி (பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு சித்திரவதை காரணமாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் 84 வயதில் ஜூன் 2021ல் சிறையிலே இறந்தார்) என்று பட்டியல் நீள்கிறது. இந்த கைபேசிகளில் சில, பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, உளவு செயலி கண்காணித்திருப்பதை மிண்ணணு தடவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த பின்னணியில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பெகாசஸ் மென்பொருள் தொடர்பாக ஜனவரி 28-ம் தேதி விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "மோடி அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் திறன்பேசிகள் உளவு பார்க்கப்பட்டன. இது தேசத் துரோகம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பெகாசஸ் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், பெகாசஸ் உளவு மென் பொருள் வாங்கியது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்களின் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெகாசஸ் குறித்தான ஊடக விசாரனையை 17க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஊடகங்களின் கூட்டு புலனாய்வு முயற்சியாகும்.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே பெகாசஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை நடைபெற்ற விசாரணைகளின்போது, பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த உப்பு சப்பில்லாத விசாரணைக்குகூட, மத்திய அரசு அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்காத நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தகுழுவின் உறுப்பினர்களாக அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர்கொண்ட விசாரணைக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மேலும், 'இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட அலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க, அவர்கள் குறித்தான தரவுகளைச் சேகரிக்க, இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? இந்திய அரசே இந்திய மக்களை உளவு பார்த்ததா? ஒருவேளை இந்திய அரசு உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? உள்ளிட்ட தகவல்களை விசாரணைக்குழு வழங்க வேண்டும்' என வழிகாட்டுதலையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இந்த நிலையில், மூன்று பேர்கொண்ட விசாரணைக்குழு ஆகஸ்ட் 2022ல் சமர்ப்பித்த அறிக்கையில், "29 செல்போன்களை ஆய்வு செய்ததில் ஐந்தில் உளவு மென்பொருள் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், அது பெகாசஸ் உளவு செயலியா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்தான மேலதிக விசாரணைக்கு மத்திய பா.ஜ.க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, சிலர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான தகவல்கள் இருப்பதால் அதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, ஆய்வறிக்கையில் எந்தப் பகுதியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி குறைந்தபட்ச விசாரணைக்குகூட, இன்னும் சொல்லப்போனால் பேருக்கு நடக்கும் விசாரணையைக் கூட தாங்கிக்கொள்ளாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது.
பாசிச மோடி கும்பலும் பெகாசசும் :
பெகாசஸ்சின் உளவு செய்திகள் உலகம் முழுக்க அம்பலமானப்பிறகு, இந்தியாவிலும் இராணுவ ரீதியான உளவு செயலியின் அதிகாரப்பூர்வ பயன்பாடு எந்தவித கட்டுப்பாட்டிலும் இயங்கவில்லை என்பது நமக்கு காட்டியுள்ளது. இந்தியாவில் தனிநபர் கண்காணிப்பு என்பது இரு சூழ்நிலைமைகளில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன. ஒன்று தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளபோதும் மற்றொன்று பொது ஒழுங்கு அவசரகாலத்திலும் பயன்படுத்த இந்திய சட்டம் கண்காணிப்பை அனுமதிக்கிறது.
பெகாசஸ் உளவு செயலியில் மோடி கும்பல் ஈடுபட்டிருப்பதற்கு 'தி வயர்' பத்திரிக்கை ஐந்து ஆதாரங்களை முன்வைக்கிறது.
என்.எஸ்.ஒ நிறுவனம் இச்செயலியை எக்காரணத்திற்காகவும், அரசு சட்ட நிறுவனங்களைத் தவிர்த்து வெளியே தருவதில்லை என்று உறுதியாக கூறுகிறது. இந்தியாவிற்கு பெகாசஸ் விற்றதை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. அதேப் போல மோடி அரசும் பெகாசஸ் பயன்பாட்டை மறுக்கவில்லை.
இரண்டாவதாக, இந்தியாவில் இத்தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களைப் பார்த்தால் புரியும் - ஊடகவியலாளர்கள் முதல் அரசியல் எதிரிகள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள், அதிருப்தி தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு இளம் பெண் - போன்றவர்கள் பார்த்தால் இது தெளிவாகிறது. மேற்கூறிய அனைவரும் இந்திய அரசாங்க அமைப்பின் இலக்குகளாக இருந்திருக்கின்றனர். அதேபோல இவர்கள்மீது எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு இந்த நபர்கள் மீது ஆர்வம் இருந்திருக்க முடியாது என்பது தின்னம்.
மூன்றாவதாக, அதே அரசாங்க உளவு பட்டியலில் வெளிநாட்டு இராஜதந்திர எண்கள் மற்றும் இம்ரான் கான் உட்பட பாகிஸ்தானில் இருந்து பல நூறு பேர் உள்ளனர்.
நான்காவதாக, கசிந்த தரவுகளை கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த குறிப்பிட்ட அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்கள் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்துதான் தொடங்குகின்றது. இந்த குறிப்பிட்ட காலம் NSA அஜித் தோவல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2017ம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் இஸ்ரேலுக்குச் சென்று திரும்பிய பிறகு. இந்த உளவு செயலிகளின் செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த பயணத்தின்போதுதான் பெகாசஸைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் முறைப்படுத்தப்பட்டது.
ஐந்தாவது, சிட்டிசன் மிண்ணனு தடவியல் ஆய்வு கூடத்தின் நிபுணரான பில் மார்க்சாக் என்பவர் பெகாசசைப் பற்றி 'தி வயர்'-ரிடம் கூறியதன் அடிப்படையில், ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (RAW) மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ (Intelligence Bureau) ஆகிய இரண்டு இந்திய உளவு நிறுவனங்களும் பெகாசஸைப் பயன்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது. "நாங்கள் இதை உறுதிபடுத்த டிஎன்எஸ் கேச் ப்ரோபிங் (DNA Cache Probing) உட்பட பல்வேறு ஸ்கேனிங் நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த மேற்கூறிய விசயங்கள் இந்திய அரசாங்கம்தான் பெகாசசை கொண்டு உளவுபார்த்துள்ளது என்பதை அறுதியாக வெளிப்படுத்துகிறது.
இச்செயலியை கொண்டு மோடி கும்பல் தன் பாசிச அரசு கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் ஜனநாயக மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதில் எப்படி பயன்படுத்தினர் என்பதை தொடர்ந்து காண்போம். இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது பீமா கொரேகான் வழக்குதான். இவ்வழக்கில் மொத்தம் 16 சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை. இதற்கு அவர்கள் ஆதாரமாக கொண்டது பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் மடிக்கணிணியில் மாவோயிஸ்டுகளுக்கு எழுதிய கடிதங்கள் இருந்ததாக அறிவித்தது. அக்கடிதங்களில் இந்திய பிரதமர் மோடி அவர்களை கொல்ல சதி செய்திருப்பது தெரிய வந்ததாக கூறி பலரை கைது செய்தது. இவர் 8ந்தேதி அக்டோபர் 2020ல் கைது செய்யப்படுகிறார். இந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த கொடிய நோய் தாக்கப்பட்டவரை செயலிழக்க செய்யும். அவரின் வேலைகளை அவரால் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் மாஷூசட்ஸ் -ஐ தளமாகக் கொண்டு, டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்சனல் கன்சல்டிங் இன் புதிய அறிக்கை கூறுவது, "சுவாமி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையினரால் அவரது மடிக்கணிணி கைப்பற்றப்படும் வரை, நீண்ட காலமாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவரது கணிணி உளவு செயலியின் பாதிப்புக்கு இலக்காக இருந்துள்ளது," என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. உளவாளிகள் ஸ்டேன் ஸ்வாமியின் கணினியின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டுள்ளனர், அவருக்குத் தெரியாமல் டஜன் கணக்கான கோப்புகளை மறைக்கப்பட்ட கோப்புறையில் (Hidden Folder) இறக்கியுள்ளனர். சுவாமி தனது மடிக்கணினியில் புகுத்தப்பட்ட ஆவணங்களை எப்போதும் திறந்ததுமில்லை பயன்படுத்தியதுமில்லை என்பதை தடவியல் நிபுணர்கள் ஆணித்தரமாக நிரூபிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் அர்சனல் கன்சல்டிங் அந்த 45 கோப்புகளும் ஒரு சில வினாடிகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது. எந்த ஒரு நபரும் அவ்வளவு குறுகிய நேரத்திற்குள் 45 கடிதங்களை ஒரு சில வினாடிகளில் உருவாக்கிவிட முடியாது என்பதும் அறிந்ததே. இப்படி மோடி கும்பலின் உளவு மற்றும் சட்ட நிறுவனங்கள் வேண்டுமென்றே அரசியல் எதிரிகளை வேட்டையாட இல்லாத ஒன்றை உருவாக்கி, உளவு என்ற பெயரில் வேட்டையாடுகிறது. பார்கின்சன் மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் ஸ்டேன் ஸ்வாமி அவரால் உணவு உட்கொள்ள முடியாததற்கு உறிஞ்சி குடிக்கும் குவளையை பயன்படுத்த கோரிக்கையைகூட இந்த அரசு அவ்வளவு முடியாத சூழலிலும் அவருக்கு மறுத்துள்ளது. தொடர்ந்து நோய் தீவிரத் தன்மை அடைய, அவருக்கான அடிப்படை மருத்துவ வசதியும் மறுக்கப்பட்டு தள்ளாடும் 84 வயதிலும் அவரை அல்லல்படுத்தி அலைக்கழித்து இந்த அரசு கொன்றுள்ளது. அவருக்காக சட்ட போராட்டம் நடத்திய பாதிரியார் சேவியர் என்பவர் ஸ்டான் ஸ்வாமியைப் பற்றி நினைவு கூறும்போது, ஒரு நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அவருக்கு உறுஞ்சி குடிக்கும் குவளைக்கு அனுமதி கொடுக்கப்பட்டபோதும் "என்னை விட மோசமான வாழ்க்கையை வாழ்பவர்கள் சிறைகளில் இருப்பதாகவும், அதனால் இவ்வரசின் அனுசரனை எனக்கு தேவையில்லை." என்று அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
இதேபோல்தான் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ரோனா வில்சனின் திறன்பேசியும் பெகாசஸ் உளவு செயலியால் பாதிக்கப்பட்டுள்ளதை அர்சனல் கன்சல்ட்டிங் தடவியல் நிறுவனம் கண்டறிந்துள்ளது. வில்சன் ஜூன் 6, 2018 அன்று கைது செய்யப்படுகிறார். அவரின் திறன்பேசியும் மடிக்கணிணியும் ஒரு வருடமாக தொடர்ந்து கண்காணிப்புக்கு உள்ளகியுள்ளதையும், அதுமட்டுமில்லாமல் இந்த குற்ற ஆவணங்கள் சதித்தனமாக உளவு நிறுவனங்களே செலுத்தி உள்ளதை கடந்த ஆண்டு டிசம்பரில், அர்சனல் கன்சல்டிங் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மிக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், நம்மை மேலும் இம்முடிவுகளை நோக்கி நகர்த்துகிறது. "இவர்களைக் கைது செய்த நபர்களுக்கும், சாட்சியங்களை புகுத்திய நபர்களுக்கும் இடையே ஒரு நிரூபணமான தொடர்பு உள்ளது" என்கிறார் சென்டினல் ஒன்னின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜுவான் ஆண்ட்ரெஸ் குரேரோ-சாடேவும் சக ஆராய்ச்சியாளரான டாம் ஹெகலுடன் சேர்ந்து ஆகஸ்ட் மாதம் நடந்த பிளாக் ஹாட் பாதுகாப்பு கருத்தரங்கில் வெளிப்படுத்தியுள்ளார். ரோனா வில்சன் மற்றும் வரவர ராவ் ஆகிய இருவரை நீண்டகாலமாக ஹாக் செய்த மையமான "மோடிஃபைட் எலிஃபண்ட்" (Modified Elephant) என்ற அமைப்பிற்கும் புனே நகர காவல்துறைக்கும் இருக்கும் தொடர்பை ஆணித்தரமான ஆதாரங்களுடன் செண்டினல் ஒன்ஸ் நமக்கு நிறுவியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றவர்களை இலக்குகளாக மையப்படுத்தி நடத்தப்பட்ட திட்டத்திற்கு பெயராகதான் "மோடிஃபைட் எலிஃபண்ட்" என்று செண்டினல் ஒன் மிண்ணனு தடவியல் நிறுவனம் பெயர் கொடுத்துள்ளது. இது குறைந்தது 2012 முதல் இயங்கி வருகிறது, மேலும் குறிப்பிட்ட நபர்களை மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளது. மோடிஃபைட் எலிஃபண்ட்-இன் நோக்கம் நீண்ட கால கண்காணிப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த அமைப்பு இந்திய அரசின் நோக்கங்களை மட்டும் அடிப்படையாக வைத்து இயங்கியுள்ளதை செண்டினல் ஒன் நிறுவனம் தரவுகளுடன் நிறுவியுள்ளது. இந்த மோடிஃபைட் எலிஃபண்ட் அமைப்புதான் 'புனையப்பட்ட தரவுகளை' - குறிப்பிட்ட குற்றங்களில் சம்பந்தப்படுத்தும் கோப்புகளை-வசதியாக உள்ளீடு செய்வதன் மூலம் வழக்குகளை ஜோடித்து நிரபராதிகளை குற்றவாளிகளாக கைது செய்து தண்டிப்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தியிருப்பதும், அதன் அடிப்படையில்தான் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் கணிணிகளும் ஹாக் செய்யப்பட்டு உரிய தரவுகளை இது சொருகியுள்ளதையும் செண்டினல் ஒன் அறிக்கை ஒன்றை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட மூன்று மின்னஞ்சல் கணக்குகளில் மீட்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண்கள் ஆகியவை மீட்பு தரவுகளாக சேர்க்கப்பட்டன என்பதை செண்டினல் ஒன் கண்டுபிடித்தது. அந்த மூன்று கணக்கின் சொந்தக்காரர்கள்தான் ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு. இவர்களின் கணிணியை ஆய்வு செய்த தடவியல் நிபுணர்களே ஆச்சரியப்படும் வகையில், மூன்று கணக்குகளிலும் உள்ள மீட்பு மின்னஞ்சல் முகவரி பீமா கோரேகான் வழக்கில் நெருக்கமாக தொடர்புடைய புனேவில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியின் முழுப் பெயர் இருந்துள்ளது. அடுத்து முகவரியாக Pune@ic.in என்று இருந்துள்ளது. இது பூனே காவல் துறையின் மின்னஞ்சல். அதுமட்டுமில்லாமல் அந்த ரோனா வில்சன் அக்கவுண்டின் கைப்பேசி எண்ணாக பூனே காவல் துறை அதிகாரியின் எண் கொடுக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்துள்ளனர். அதே காவல் துறை அதிகாரிதான் வரவர ராவ் கைதுசெய்த போது பத்திரிக்கையாளர்களுக்கு முன்னின்று புகைப்படத்தையும் எடுத்துள்ளார். அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத தடவியல் ஆய்வு செய்த மிண்ணனு தடவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில் "நாங்கள் பொதுவாக யார் இந்த தாக்குதலை தொடுத்தார்கள் என்பதை அறிய கொடுப்பதில்லை. ஆனால் இப்படி செய்து செய்து எனக்கே மிகவும் கலைப்பாகி விட்டது. இவர்கள் தீவிரவாதிகள் பின் ஓடவில்லை. இவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களை குறி வைத்துக்கொண்டுள்ளனர். இது மிகவும் தவறானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக மோடிஃபைட் எலிஃபண்ட் ஆல் குறிவைக்கப்பட்ட பல நபர்களின் திறன்பேசிகள் பெகாசஸ் உளவு செயலியின் மூலமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். பீமா கோரேகான் வழக்கு தொடர்பான மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் தொடுக்க NSO குழுமத்தின் Pegasus பயன்படுத்தப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அடையாளம் கண்டுள்ளது. பீமா கோரேகான் வழக்கின் பிரதிவாதியான ரோனா வில்சனின் ஐபோன், அர்செனல் கன்சல்டிங்கால் டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, அந்த திறன்பேசி 2017 முதல் பெகாசஸால் குறிவைக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2016 தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செயல்பாட்டாளர் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா உட்பட மூன்று முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் இஸ்ரேலிய உளவு செயலியான பெகாசஸைப் பயன்படுத்துவதில் உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமர் காலித்தை கடந்து இரண்டு ஆண்டுகளாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செவிவழி ஆதாரத்தை வைத்து தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். அவர் டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டியதாக டெல்லி காவல்துறை கதையை புணைந்து அவரை சிறையில் அடைத்துள்ளது.
இதுமட்டுமில்லாமல் மோடி கும்பல் தங்களின் சொந்த நலன்களுக்கு எவ்வித சட்ட அணுகுமுறையையும் கையாளாமல் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நிறுவனங்களை வைத்தே சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது. ஒருவர் பாதுகாப்பு வளையத்தின் உளவுக்குள் வருவதற்கு தீர்க்கமான காரணங்களும், ஆதாரங்களும் வேண்டும். பின்பு பல வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய சட்டம் முறைப்படுத்துகிறது. ஆனால் அப்படி ஏதுமே இல்லாமல் சொந்த நலன்களுக்கு மோடி அரசு பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தி உள்ளது.
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திய எதற்காக உளவு பார்க்கப்பட்டுள்ளார்? அவர் என்ன தீவிரவாதியா? அவரை எதன் அடிப்படையில் உளவு பார்த்தனர்? உளவு பார்க்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது? இவர் மட்டுமல்ல தலைமை நீதிபதி மீது செக்ஸ் புகார் கொடுத்த பெண்ணைக்கூட இவர்கள் பெகாசஸை பயன்படுத்தி உளவு பார்த்துள்ளனர். மத்திய புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியையும் விடவில்லை; அதே நேரத்தில் தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுக்கும் பிரசாந்த் கிஷோரையும் விடவில்லை தேர்தலை நடத்த நெறிபடுத்தும் தேர்தல் ஆணைய அதிகாரியையும் விட்டு வைக்கவில்லை. இப்படி தங்களின் அதிகாரங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளது மோடிகும்பல். இதற்கு அனைத்து அரசு துறைகளும் இதுவரை சேவைப்புரிந்து வருகின்றன. பாசிசம் குறைந்தபட்ச சட்ட ஒழுங்கையும் சீர்குலைத்து சட்ட ஒழுங்கு துறைகளையே சட்ட விரோதமாக்கும் என்பதற்கு மேற்கூறியவைகள் ஒரு சிறிய உதாரணங்களே.
தொடரும்...
சமரன்
(ஜனவரி 2023 இதழில்)