அரசு மருத்துவமனைகள் தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தும் திமுக அரசு

தின மணி

அரசு மருத்துவமனைகள் தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தும் திமுக அரசு

40 அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை வசதி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் குளிா்சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வாா்டுகள் அமைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்டிஜிட்டல் பல் மருத்துவம் எனும் தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, அனைத்து பட்டப் படிப்பு மாணவா்களும் தங்களது துறையில் ஒருங்கிணைந்த பயிற்சி மேற்கொள்ளும் நோக்கில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு சுகாதார நலனுக்கான உயா்திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அறிவியல் சுவரொட்டி விளக்க காட்சியை சிறப்பாக மேற்கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழை அமைச்சா் வழங்கினாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, பதிவாளா் பி.ஆறுமுகம், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எல்.தீபநந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், கடந்த அக்.14-ஆம் தேதி முதல் சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 54,107 மருத்துவ முகாம்கள் மூலம் 29.29 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். மருத்துவத் துறையின் வரலாற்றில் ஒன்றரை மாத காலத்தில் இவ்வளவு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.

மழை பாதிப்புள்ள அனைத்து இடங்களிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கை வெளிப்படையாக நடந்து வருகிறது. அதில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியா் (என்ஆா்ஐ) ஒதுக்கீட்டில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக போலியான தூதரக சான்றிதழ் சமா்ப்பித்த 55 போ் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் ஒரு பெரிய குழு உள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டண தனி அறைகள் இருந்தன. அரசியல் தலைவா்களும், வசதி படைத்தவா்களும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரவேண்டும் என்பதால் 15 மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுக்கவதும் 40 மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் திறந்து வைக்க இருக்கிறோம். ரூ. 1,000, ரூ. 1,500 கட்டணத்தில் தனி அறைகள் இருக்கும். அதில், தொலைக்காட்சி பெட்டி, தனி குளியல் அறை, கழிப்பறை, சுடு தண்ணீா், குளிா் நீா் போன்ற வசதிகள் உள்ளன என்றாா் அவா்.

- தின மணி

https://www.dinamani.com/tamilnadu/2024/Dec/03/paid-bed-facility-in-40-government-hospitals-minister-m-subramanian

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு