தண்ணி தராது... கர்நாடகா காங்கிரசுஅரசு!
துரை. சண்முகம்
காவிரிப் பிரச்சனையில் எப்போதும் பகையாகவும் நீதியற்றதாகவும் கர்நாடக அரசுகள் இருக்கின்றன.
காங்கிரஸ், பாஜக ,ஜனதாக்கள் யார் வந்தாலும் இதுதான் நிலைமை.
ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்சனைகளை ஒழுங்குப்படுத்தி
உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குதான் உள்ளது.
அதன் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் ஒழுங்காற்று ஆணையம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை கேனயமாக மதிப்பது ஒன்றிய பாஜக அரசுதான்.
ஆற்று நீர் உரிமை பிரச்சனையை அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான அரசியல் நீரோட்டங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு வந்திருப்பது கடந்த கால வரலாறுகள்.
அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் ஒன்றிய இந்திய அரசு மாநில உரிமைகளை ஜனநாயகப்படி அணுகி தீர்க்காமல் பிரிட்டிஷ் காலத்து பிரித்தாளும் சூழ்ச்சியை போலவே தானும் நடந்து கொள்கிறது.
அனைத்திலும் தேசிய இன மக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் ஒற்றைச் சர்வாதிகார ஒன்றிய அரசின் பகுதியாக காவிரிப் பிரச்சனையும் ஓடுகிறது.
நியாயப்படியான உரிமை நீரோட்டத்திற்கு ஒரு வெங்காயத்திற்கும் லாயக்கு இல்லாமல் நாட்டாமை செய்து கொண்டு இதில் தேசிய நீரோட்ட பித்தலாட்டம் வேறு.
தேசிய நீரோட்டத்தில் அனைவரும் கலக்க வேண்டும்! என்று சொல்லிக் கொண்டே காவிரி நீரோட்டத்தில் தேசிய அரசியல் நியதிப்படி கூட கலக்காமல் ஒதுங்கி நின்று மறைமுகமாக உரிமைகளை பறிப்பது ஒன்றிய அரசுகள்தான்.
எனவே இந்த விசயத்திற்காக போராடும் திமுக தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜக அரசு தான் என்பதை பகிரங்கமாக பேச வேண்டும். அதை விட்டு தவெக வஞ்சிப்பதாக மடை மாற்றுவது தன்னுடைய அரசியல் நீரோட்டத்திற்காகத்தான் என்பது தெரிய வருகிறது.
அதிகாரம் தமிழக அரசு கையில் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. எந்த அரசு ஆண்டாலும் இந்த சட்ட நியதிக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் இதுவும் செய்கிறது. சட்டவாதங்களில் தங்களது இயலாமையை கழுவிக்கொள்ளும் அரசாங்கமாக தமிழக அரசுகள் இருக்கின்றன.
தவெக அரசு இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது ஒரு மரபு ஜனநாயகம் என்ற வகையில் அங்கீகரித்து செய்ய வேண்டும்.
மக்களுக்கும் கூட அரசியல் அரங்கில் இது தேவை. தேர்தல் கட்சிகளின் அரசியல் எல்லைகளை தெளிவுபடுத்திக் கொள்ளவும் இது உதவும்.
ஆனாலும் சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதை தவிர இந்த ஒன்றிய கூட்டாட்சி அதிகாரத்தில் ஒரு வெங்காயமும் இல்லை.
சட்டப் போராட்டத்துடன் கூடவே கர்நாடக அரசின் அடாவடி ஒன்றிய அரசின் வஞ்சிக்கும் போக்கு இவைகளை மையப்படுத்திய அரசியலை தவெக எடுக்க தவறுவதால் எதிர்க்கட்சிகள் இதை தங்களது மாநில ஆட்சி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தத்தான் செய்யும்.
முதலமைச்சராக இருந்து கொண்டு மக்கள் பாதிக்கும் பிரச்சனைகளில் முதன்மையாக தனது கருத்தை பதிவு செய்வது மக்களுக்கு நிலைப்பாட்டை கூறுவது எனும் அடிப்படை ஜனநாயகனாக இல்லாமல் அனைத்தையும் அதிகார வர்க்கம் பார்த்துக் கொள்ளும் எனும் மௌன அரசியல் கண்டனத்துக்கு உரியது.
சட்ட நடைமுறைகளின் படி இந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்துக்கான 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும். இரண்டு முறை ஆணையம் கூடி தமிழ்நாடு அரசு வாதங்களை வைத்த பிறகும் 4 புள்ளி 50 டிஎம்சி 15 நாட்களுக்கு தர வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்தின் இந்த நீதியற்ற உத்தரவை கூட இங்குள்ள கட்சிகள் ஒன்றாக கண்டிக்கவும் கவனப்படுத்தவோ விரும்பவில்லை. தங்கள் கட்சி அரசியல் நலனுக்கு ஏற்ப காவிரி பிரச்சனையை கையாளுகிறார்கள்.
ஜூன் மாதம் தரவேண்டிய 9 புள்ளி 19 டி எம் சி தண்ணீரை தராமல் வெறும் 2.91 டிஎம்சி மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது. இதிலேயே 6 புள்ளிக்கு டி எம் சி க்கு மேல் நமக்குத் தரவேண்டிய தண்ணீர் நிலவை உள்ளது.
ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தமிழகத்திற்கு தரப்பட வேண்டும்.
இதையும் கர்நாடக அரசு ஒழுங்காக கடைப்பிடிப்பது இல்லை.
அங்கே வெள்ளம் வந்தால் உபரி நீரை வழிய விட்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளும் முறைகேடுகளை எல்லாம் செய்கிறது.
இதையெல்லாம் கண்டிக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
ஆணையம் மற்றும் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது.
எனவே ஒன்றிய அரசுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமாக இது கட்டியமைக்கப்பட வேண்டும்.
மேகதாது உட்பட பல பிரச்சினைகளில் கர்நாடக காங்கிரசு அரசின் அடாவடி நடவடிக்கைக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை, பாசிச பாஜக அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் சட்டத்தில் இணைக்க வேண்டும்.
இதுதான் மையமான அரசியலாக எழுச்சி பெற வேண்டும்.
இதை விடுத்து காவிரி பிரச்சனையிலும் கூட இவர்கள் திமுக × தவெக என்று இவர்கள் பிரச்சனையின் பகுதியாக மக்களை இணைக்க பார்க்கிறார்கள்.
இதில் இடதுசாரிகளின் பார்வை
தமிழ்நாட்டு அரசை உரிமைக்காக போராடத் தூண்டும் கடமைகளை உறுதிபடச் செய்ய உணர்த்த வேண்டிய அரசியலை போராடிச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் ஆற்று நீர் உரிமை தொடர்பான
பிரச்சனையில் உழைக்கும் மக்களுக்கான அரசியல் ஆதாயங்களே முக்கியமானவை.
இதை பாசிச பாஜக உடன் சமரசமாகும் எந்த கட்சிக்கும் இரையாக்க கூடாது எனும் அரசியல் நீரோட்டமும் கவனத்தில் கொள்ளத்தக்கது
==============================
தண்ணி காட்டியே பழக்கம்
தண்ணி தராது
கர்நாடகா அரசு ! காங்கிரசு!
தேசிய நீரோட்டம் பேசிக்கொண்டே
காவிரியின் குரல்வளையை மிதித்து தமிழ்நாட்டு உரிமையை தடுப்பதே பாஜக ஆர். எஸ். எஸ். சு!
கோமாதா! கோமாதான்னு! கூத்தாடுற
உன் கோமாதா குளிக்கவும்
ஒரு வாய் குடிக்கவும் கூட
ஆத்துல தண்ணி இல்ல!
எங்கடா கோமாதாவுக்காக உன் குரல காணல!
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் கர்நாடக அரசு மதிக்காது
நீட்டுக்கு போராடும் மாணவர்களிடம் வந்து
நீட்டும் ஆயுதத்தை
ஒன்றிய பாஜக
காங்கிரசு அரசு பக்கம் திருப்பாது
இந்திய பாசிசத்தின்
இரு முகங்கள் இரண்டும்
தமிழ்நாட்டுக்கு ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தரக் கூடாதுன்னு பாஜக ஆர் எஸ் எஸ் கன்னட இனவெறி அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து
அங்கே போர்க்களம் .
பாயாசமோ
பெங்களூருக்கு பிளைட்டு
பாசிசம் பூந்துரும்!
தஞ்சாவூர்ல தவெக வை
எதிர்த்து ஃபைட்டு
எப்போதும் போல் எதிரி
எட்டி நின்று சிரிக்கிறான்!
துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு