தொழிலாளர் விரோத அலங்கோல ஆட்சியின் களங்கத்தை துடைக்க முடியுமா - காரல் மார்க்ஸ் சிலையால்?
சாவித்திரி கண்ணன்
இந்த நாடகத்தையெல்லாம் நாம் பார்க்க வேண்டி இருக்கிறதே..!
என்னைப் போன்ற கோடினு கோடி இடதுசாரி தத்துவத்தின் பால் ஈர்ப்பு கொண்டோரின் சித்தத்திலும், ரத்தத்திலும் நிறைந்திருப்பவர் காரல் மார்க்ஸ்.
மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள் ஊன் உறக்கமின்றி, வறுமையையும், வாட்டும் பசியையும் பொருட்படுத்தாமல் – ஒரு கர்மயோகியாய் வாழ்ந்து - வார்த்தெடுத்த சித்தாந்தமே கம்யூனிசம்.
அப்படிப்பட்ட மாமனிதரின் சிலையை – அவரது சித்தாந்தத்திற்கு நேர் எதிரான – எளிய மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும் – ஆட்சியாளர் திறந்து வைத்து, ’சிவந்தது சென்னை’ என்கிறார்!
ஆம், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிவந்தது சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுமையுமே!
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்கியும், பாடுபடும் விவசாயிகளின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பறித்து, கார்ப்பரேட்களுக்கு தந்து - போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி சிறையில் தள்ளி அடக்குமுறை ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்தும் விட்டுள்ள உங்கள் ஆட்சியில் தமிழகமே பாதிக்கப்பட்டோரின் ரத்தக் கண்ணீரால் சிவந்து தான் கிடக்கிறது.
பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை திறந்தோம் என பீற்றிக் கொள்வது யார்?
தனியுடமை பித்தலாட்டத்தின் பிதாமகனாகத் திகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
நடக்குமா இந்த அட்டூழியம் வேறெங்கும்? பொறுக்குமா, தொழிலாளி வர்க்கம் இந்த நாடகத்தை?
ஆட்சியாளர் என்ற அருகதை ஒன்றே காரல் மார்க்ஸ் சிலை திறக்கும் தகுதியை உங்களுக்கு தந்துவிட்டதாக கருதி விடாதீர்கள் ஐயா!
சாம்சன் தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்யப் பயந்த உங்கள் கார்ப்பரேட் விசுவாசம் மறக்கக் கூடியதா?
சாம்சன் தொழிலாளர்களின் நேர்மையான போராட்டத்தை இரவோடு இரவாக பந்தலை பிய்த்தெறிந்து தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி , நிர்பந்தித்து சமரசம் செய்தீர்கள்!
அதன் பிறகும் போராடிய தொழிலாளர்களை பழி வாங்கலில் இருந்து பாதுகாக்க முடியாத உங்களுக்கு காரல் மார்க்ஸ் சிலையை திறப்பதற்கு என்னய்யா அருகதை உள்ளது?
சட்ட சபையில் முன்னறிவிப்போ , முறையான விவாதமோ இன்றி எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க அதிரடி சட்டம் கொண்டு வந்ததும் , அது கடும் எதிர்ப்பை சந்தித்த பிறகு பின் வாங்குவது போல பேர் பண்ணிக் கொண்டு மறைமுகமாக தமிழகமெங்கும் அமல்படுத்தி வரும் ஆட்சியாளரே, இந்த பாவக் கறை காரல் மார்க்ஸ் சிலை திறப்பால் கழிந்துவிடும் என கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொன்னார்களா.. என்ன?
தூய்மை பணியாளர்களை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு காவு கொடுத்து, அதை ஏற்க மறுத்த தூய்மை பெண் பணியாளர்களை நள்ளிரவில் துவம்சம் செய்து, கதறக் கதற கைது செய்து எங்கெங்கோ எடுத்துச் சென்று அலைக்கழித்தீரே..அந்தக் கொடுமைக்கு பிராயச்சித்தமா மார்க்ஸ் சிலை!
அங்கன்வாடி தாய்மார்களை அடிமாட்டுக் கூலிகளாய் பாவித்தும்,
ஆரம்ப சுகாதார மைய செவிலியர்களின் அடி வயிற்றில் அடித்தும்,
பகுதி நேர ஆசிரியர்களை பதறி அழுது போராட வைத்தும்,
உயிர் காக்கும் மருத்துவர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்டால், மயிர் போல உதாசீனப்படுத்தியும்,
பல்கலைக் கழக பேராசிரியர்களையே அத்துக் கூலிகளாக வேலை வாங்கியும்…,
போக்குவரத்து கழகங்களை படிப்படியாக தனியார்மயமாக்கி, போக்குவரத்து தொழிலாளர்களை போக்கற்றவர்களாக்கி போராட வைத்தும்..,
இப்படியாக உழைப்புக்கு உரிய ஊதியத்தை மறுத்துவிட்டு, கேட்காத இலவசங்களை அள்ளி இறைத்து வள்ளலாய் தோற்றம் காட்டியும்,
சமூக நீதி என்று சொல்லிக் கொண்டே அரசாங்கப் பணியிடங்களுக்கு சாமாதி எழுப்பி, எங்கும், எதிலும் ஒப்பந்தக் கூலி முறையை எழுதப்படாத விதியாக அமல்படுத்தி வருகின்ற..,சாமார்த்தியத்திற்கு சாட்சியா, மார்க்ஸ் சிலை?
உள் நாட்டு சுரண்டல் போதாது என்று வெளிநாட்டு கார்ப்பரேட்களை வேண்டி அழைத்து அவர்களுக்காக தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி எரிந்து, இஷ்டப்படி சுரண்டி அடிமைப்படுத்த அனுமதித்தும்,
மக்களாட்சியின் பெயரால் மன்னராட்சி மனோபாவத்தில் குடும்ப வழிமுறையிலான அதிகார கோலோச்சலை அரங்கேற்றிய வண்ணம், நடந்து கொண்டிருக்கும் தொழிலாளர் விரோத அலங்கோல ஆட்சியின் களங்கத்தை துடைக்க முடியுமா, அந்த காரல் மார்க்ஸ் சிலையால்?
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/1G13Giptki/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு