இன்னும் எத்தனை காலங்கள் இந்த ஆன்மீக பித்தலட்டங்கள்?

சாவித்திரி கண்ணன்

இன்னும் எத்தனை காலங்கள் இந்த ஆன்மீக பித்தலட்டங்கள்?

இன்னும் எத்தனை காலங்கள் இந்த ஆன்மீக பித்தலட்டங்கள்?

இன்றைக்கு எனது நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் தினமணியில் அரவிந்தர் குறித்து எழுதிய கட்டுரையைக் கண்டு அயர்ந்தேன்.

எத்தனையோ சித்தர்கள், யோகிகள் வரிசையில் இராமலிங்க வள்ளலாரும் அவதரித்த தமிழ் மண்ணில் பிரிட்டிஷ் காவல்துறைக்கு பயந்து வங்கத்தில் இருந்து புதுச்சேரியில் அடைக்கலமான அரவிந்தரை ஆன்மீக யோகியாக சித்தரிக்க முயன்று என்னென்னவோ பொய், புனைவுகள் கொண்டு ஒரு மாயத் தோற்றத்தை கட்டி எழுப்புகிறது, இந்த ஆதிக்க சாதிக் கூட்டம்!

அரவிந்தர் எப்படி திடீர் சாமியாரானார்? 

இதனால், அரவிந்தரிடமிருந்து பாரதியார் எப்படி விலகினார் என்ற சுவாராசியமான சில வரலாற்று செய்திகளை சொல்ல வேண்டும் என எனக்குத் தோன்றியது;

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் குறித்த பல மர்மங்களுக்குள் நான் போக விரும்பவில்லை.  ஆனால், ஒரு விடுதலைப் போராளியான அரவிந்தர் எப்படி ஆன்மீகவாதியானார், ஏன், எதனால்? என்பதற்கு பாரதியார், பாரதிதாசன், வ.ரா ஆகியோர்களே சாட்சியாகும்;

பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்து விடுபட்டு பிரென்ச் அரசின் வசமிருந்த புதுச்சேரியில் பாரதி அடைக்கலமான செய்தி அறிந்து, தானும் புதுச்சேரி வந்து சேர்ந்தார் அரவிந்தர். தன்னை நம்பி வந்த அரவிந்தரை தமது நண்பர் சங்கர செட்டியார் வீட்டின் மூன்றாம் மாடியில் தங்க வைத்து  பாதுகாத்தார் பாரதியார். பிறகு தான் அரவிந்தர் தனி இடம் பார்த்து குடிபோனார்.

அரவிந்தர் இலக்கியத் தரமுள்ள எழுத்தாளர் பெரிய மேதாவி, பல மொழிகள் அறிந்தவர். கலை ரசனையாளர், அறிஞர். 

நமது பாரதியாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? ஆங்கிலம், பெங்காளி,சஸ்கிருதம் என ஆறேழு மொழிகள் தெரிந்தவராதலால் அரவிந்தரும், பாரதியாரும் ஒத்திசைந்த கருத்துக்களோடு மிக நெருங்கி பழகினார்கள். 

ஆயினும் பிரிட்டிஷ் போலீசார் புதுச்சேரிக்கு வந்து பல இடையூறுகளை செய்த வண்ணம் இருந்தனர். ஆனால் அதையெல்லாம் கடந்து பாரதியார் இந்தியா இதழை நடத்தி வந்ததோடு, சுதேசமித்திரனுக்கும் சுதந்திர வேட்கை தரும் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி அனுப்பி வந்தார். இதனால் பாரதியார் நடத்திய இந்தியா இதழ்கள் வாசகர்களை சென்றடையவிடாமலும், அவருக்கு சந்தா பணம் கிடைக்காமலும் தடுத்து விட்டனர். 

பாரதியார் மிகப் பெரிய மேதாவி. அவர் நினைத்திருந்தால் பிரிட்டிஷ் அரசில் பெரிய உத்தியோகம் பெற்று கை நிறைய சம்பாதித்து காதல், இயற்கை ரசனை, ஆன்மீக, பக்தி பாடல்கள் எழுதி தாகூரைப் போல சுகபோகவாசியாக இருந்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருந்த போதிலும் தவிர்த்தவர். லட்சியங்களுக்காக வறுமையை வலிந்து ஏற்றவர்.

அரவிந்தரோ பணக்கார வீட்டுப் பிள்ளை. இங்கிலாந்தில் கேம்பிரிஜ் கல்லூரியில் படித்தவர். மிகப் பெரிய பரோடா சமஸ்தானத்தில் சம்பளத்தில்  உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர். அந்தக் காலத்து பெரிய, பெரிய வி.ஐ.பிக்களின் நட்புள்ளவர். சுதந்திர தாகத்தால் புதுச்சேரி வந்த அரவிந்தருக்கு அவரது நண்பர்கள் பணம் அனுப்பி வந்தனர். ஆனால், அது போலீசாரால் தடுக்கப்பட்டதால் தடுமாறினார்.

அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? என வ.ரா எனப்படும் வா.ராமசாமி தன்னுடைய 'மகாகவி பாரதியார்' நூலில் கூறி இருப்பதாவது;

போலீசார் சுதேசிகளின் பண வருவாய் ஊற்றுகளை அடியோடு வற்றும்படி செய்துவிட்டார்கள். இந்த முயற்சியின் பயனாக அரவிந்தரிடமும் பணமில்லாமல் போய்விட்டது. எப்படி உணவுப் பொருட்களை வாங்குவது?

நான் அப்போது அரவிந்தரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் காலையில் சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

''காய்கறி வாங்கக் கூட பணமில்லை என்ன செய்வது?''

என அரவிந்தரைக் கேட்டோம். 

''என்ன சாமான்கள் மிச்சமிருக்கின்றன?'' என அவர் கேட்டார்.

''அரிசி, மிளகாய் வற்றல், நல்லெண்ணெய், உப்பு'' என்றோம்.

''சாதம் சமைத்து மிளகாய் வற்றலை பொறித்து வையுங்கள்..”

இந்த வறுமைச் சூழல் அரவிந்தர் முன்பின் அறியாதது. வறுமையை எதிர்கொள்ளும் துணிச்சல் பாரதியாரிடம் இருந்தது. ஆனால், பாவம் அரவிந்தரிடம் இல்லை.

அன்றைய தினம் இந்தியாவின் விடுதலை வேள்விக்கு தலைவராக போற்றப்பட்ட திலகர் சொன்னது நினைவுகூரத்தக்கது; தேச பக்தன் ஒருவன் தீவிரவாதியாகவோ, புரட்சிக்காரனாகவோ தன் வாழ்க்கையைத் தொடங்கி தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி காணாமல் போனால் அவன் வேதாந்தியாக மாறிவிடுகிறான்’’ என்கிறார்.

அது தான் அரவிந்தர் விஷயத்திலும் நடந்தது.

இதை இப்படி விவரிக்கிறார், வ.ரா; இந்த மாறுதல் பாரதியாருக்கு பிடிக்கவில்லை. இந்தியாவின் விடுதலைக்கு அரும்பாடுபட்டு வருகிறார் என்று தான் பாரதியாருக்கு அரவிந்தரிடத்தில் பிரேமை இருந்தது. ஆனால், அரவிந்தர் போராட்டத்தை விட்டு விலகிப் போவதாகத் தெரிந்ததும், பாரதியார், கொஞ்சம் கொஞ்சமாக அவரை அணுகுவதையே தவிர்த்துக் கொண்டார் என்கிறார்.

இந்தச் சூழலில் அரவிந்தரிடம் ஒரு  மாற்றத்தை காண்கிறார், பாரதியார். அரவிந்தரிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்து பாரதியார் பாரதிதாசனிடம் கூறியதை பாரதிதாசன் வார்த்தைகளிலேயே கேட்போம். ( ஆதாரம் பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதி நூல்)

அரவிந்தரை சந்தித்துவிட்டு வழக்கம் போல இல்லம் திரும்பிய பாரதியார், மிகச் சோர்ந்து காணப்பட்டார்.

''ஏன் இவ்வாறு வாடியிருக்கிறீர்கள்'' எனக் கேட்டேன். 

''நானும், அரவிந்தரும் உரையாடிக் கொண்டிருந்தோம். முன்பின் தெரியாத எவனோ ஒருவன் அரவிந்தர் காலில் விழுந்தான். அவரும் ஆசி வழங்கினார். பிறகு அரவிந்தர் என்னைப் பார்த்து, ’’நீரும் இவ்விதம் ஊரார் வணங்க சீரும், சிறப்பும் தேடலாமே’’ என்றார். அரவிந்தர் உள்ளம் சமத்துவ உணர்வுடையதன்று அறிந்தேன். அது மேடு,பள்ளங்கள் நிறைந்த காடு..’’ என்றார், பாரதி.

இது குறித்து வ.ரா சொல்கிறார். பாரதியார் ஆஷாடபூதி வேதாந்தி அல்லர். விரைவில் பரலோக யாத்திரை சித்திக்க வேண்டும் என்ற சோம்பேறிகளின் கூட்டத்தைக் கண்டால் சீறி விழுவார் ’’ என்று சொல்லும் வ.ரா அவர்களும், பாரதியாரைப் போலவே அரவிந்தரிடம் இருந்து விலகி வந்துவிட்டார்.

வெறும் கையோடு புதுச்சேரி வந்த அரவிந்தர் பெயரில் இன்று பல ஆயிரம் கோடிச் சொத்துக்கள் இருக்கலாம். பணம் படைத்தோருக்கும், வெளிநாட்டாருக்கும் அது சொர்க்க பூமியாக இருக்கலாம். இதைத் தொடர்ந்து அங்கு பாலியல் புகார்கள், கொலை,தற்கொலை, நிர்வாகச் சீர்கேடு… சர்ச்சைகள் அணிவகுக்கலாம். எதற்கு இதைப் பற்றி வீண் பேச்சு, நேர விரையம்!

பொய்மையை புறம் தள்ளி உண்மையாக வாழ்ந்து மறைந்தார், நம் பாரதியார், தமிழ் திருநாட்டில் வெள்ளத்தின் பெருக்கை போல கவிப் பெருக்கையும், கலை பெருக்கையும் ஏற்படச் செய்து பல கோடித் தமிழர்களை பள்ளத்தில் இருந்து மீட்டு விழி பெற்று, பதவி கொள்ள செய்திருக்கிறார்…!

 'அறிவே தெய்வம்' என்றவர், பாரதியார்.

''காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா;

பாவித்தல் போதும், பரம நிலையெய்துதற்கே!''

என்றார்,பாரதி.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/38686923747565045/?rdid=JWkUvAYHiY02YFI1

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு