உருட்டு உடன்பிறப்பே உருட்டு!

துரை. சண்முகம்

உருட்டு உடன்பிறப்பே உருட்டு!

பாசிஸ்டுகளின் இயல்பே ஒரு எதிரியை கட்டமைத்து அதன் மீது பொழுதுக்கும் அரசியல் செய்வதுதான். 

இதன் ஊடாக உண்மையான எதிரியை மறைப்பதும் அவர்களின் வேலையில் ஒன்று.

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய பெரு முதலாளித்துவ சந்தைக்காக காங்கிரஸ்,

 தேசிய இன உரிமைகளுக்கு போராடியவர்களை பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் முக்கியமாக 'பிரிவினைவாதிகள்' எனும் பிம்பத்தை கட்டமைத்து இந்திய தேசிய வெறியின் பின்னே மக்களை அணிதிரட்டியது.

வெள்ளக்காரன்தான் வெளிநாட்டுக்காரன்! புதுசா வந்த ஆட்சி அமைப்பும் கொள்ளைக்காரன்களை உருவாக்கி இருக்கு! என்று மக்கள் காரித் துப்பி காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்த போக்கின் ஊடாக, 

இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி இந்து தேசிய வெறியை இந்திய முதலாளிகளுக்காக கட்டமைத்தது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல். 

முதலாளித்துவ வளர்ச்சி கார்ப்பரேட் மயம் ஊடாக இன்று அதுவும் மக்களிடம் கணிசமாக எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறது. 

இவர்கள் கட்டமைத்த இந்திய தேசிய வெறி, இந்து தேசிய வெறி போன்றவைகளின் மீது பிடிமானம் தளர்ந்து இருக்கும் இந்திய மக்கள் உண்மையான எதிரிகள் கார்ப்பரேட் முதலாளிகள் எனும் கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். 

மோடி பிம்பத்தை ஊதிப் பெருக்குவது மோடி கும்பல் மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின்  மறைமுக ஜோடி கும்பலான சேஃப்டி வால்வு சிஸ்ட எதிர்க்கட்சிகளும் தான்.

பீடா வாயன், மாட்டு மூத்திரம் என்றெல்லாம் தென்னகத்து இங்கர்சால்களால் இகழப்படும் வட இந்திய உழைக்கும் மக்கள் அவனுடைய புனித நகரமான உத்தரப்பிரதேசத்திலேயே தேர்தலில் செருப்படி கொடுத்தார்கள். ஆட்சி அதிகார கோட்டையான டெல்லியை முற்றுகையிட்டு போராடி வேளாண் சட்டத் தொகுப்பை பின்வாங்க வைத்தார்கள்.

இது தமிழ்நாடு! பெரியார் மண் என்று பீற்றிக் கொள்ளும் திராவிட ஆளும்வர்க்க கும்பல்களால் ஒரு நீட்டை எதிர்த்து கூட டெல்லியை முற்றுகையிடவோ பணிய வைக்கவோ அரசியல் போராட்டங்களை நடத்தவோ அடிப்படையில்லாமல் சோடா வாயர்களாக பேச்சுக் கச்சேரியோடு சரி.

அடிமை எடப்பாடி ஆட்சி இருந்த போது கூட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தான் துணிச்சலாக எதிர்த்து போராட்டங்களை நடத்தினார்கள். திராவிட கட்சிகள் ஸ்டெர்லைட் போராட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நுழைவுப் போராட்டம் போன்ற நேரத்தில் கூட வன்முறையை ஏற்க முடியாது! எனும் அளவில் வெள வெளத்து இந்துத்துவ நரம்புத் தளர்ச்சியுடன் சேர்ந்து கொண்டார்கள்.

இன்றும் கூட உண்மையான மக்கள் எதிரிகள் இந்திய பெரும் முதலாளிகளும் அவர்கள் துணையாக பங்கு வாங்கிக் கொள்ளும் தமிழக முதலாளித்துவ சக்திகளும் தான்.

இந்த மெய்யான எதிரியை இவர்கள் திணிக்கும் பாசிச ஒடுக்கு முறையை, மக்கள் இடதுசாரிகள் தலைமையில் ஒரு வர்க்க சக்தியாக திரண்டு விடாமல் தடுப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் மாற்றுப் பாதை தான், திராவிட மாடல்! 

சந்தேகமிருந்தால் அமலாகும் ஒவ்வொரு கார்ப்பரேட் திட்டங்களையும் ஆய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். 

தற்போதைய தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா கூட, பாசிச பாஜகவின் தேசிய கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியிலான தனியார் முதலாளிகளின் நலனுக்கான திட்டம் தான். 

அதனால் என்ன? 

இடதுசாரி முட்டுகளே ஏராளமாக இருக்கும்போது 

உருட்டு உடன்பிறப்பே உருட்டு! 

ஆரிய திராவிட உருட்டு 

அவரவர் பங்கை சுருட்டு! 

இதுதான் இப்போது மாடல்!

தொழிலாளர் வர்க்கமே

எதிரிகளின் 

பல வடிவங்களையும் துரத்து! 

உள்ளடக்கமான பெரு முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, பாட்டாளி வர்க்க பரம்பரை உணர்வோடு 

சுயமரியாதையோடு

உழைக்கும் மக்களை 

அணி திரட்டு! 

    - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/1ChFUA4c1k/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு