இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிக் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள்
தி வயர்
தொழிலாளர் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் பல கிக் (gig) தொழிலாளர்களை எந்தவித தொழிலும் சார்ந்த பாதுகாப்போ அல்லது ஆதரவோ இன்றி தவிக்க விடுகின்றன என்றும், அவர்களில் பலர் குடிநீர், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் ஓய்வுப் பகுதிகள் போன்ற அடிப்படைப் பணிப்பிட வசதிகள் கூட இல்லை என்று தெரிவித்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜோசிகா மஹிந்த்ரு, முஹம்மது முக்தார் ஆலம் மற்றும் நிதேஷ் குமார் தாஸ் ஆகியோரைக் கொண்ட ஆராய்ச்சிக்குழுவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், போபால், ஆக்ரா, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் உள்ள செயலி வழித் தளங்களில் பணியாற்றும் கிக் தொழிலாளர்களை இவ்வாராய்ச்சிக் குழுவினர் கணக்கெடுத்து, தீவிர வானிலை மற்றும் வெப்பம் அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை முதன்மையாகக் கொண்டு அவர்களின் அன்றாட அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.
“பொது இடத்தை ஒரு பணி இடமாக அங்கீகரித்து, பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு எதுவும் இல்லாத நிலையில், செயலித் தள தொழிலாளர்கள் போக்குவரத்து ஆபத்துகள், வன்முறை, உடல்நல பாதிப்புகள், போதிய உள்கட்டமைப்பு இன்மை மற்றும் தீவிர காலநிலை உள்ளிட்ட பலதரப்பட்ட அபாயங்களை எதிர்கொள்ளும் நிலை அதிகரித்துள்ளது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பதிலளித்தவர்களில், சுமார் 38.4% பேர் செயலி வழித் தளங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதாகவும், 18.4% தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களில் 8% பேர் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையிலும், 15.6% பேர் மின்னணு வர்த்தகத்திலும் (e-commerce), 36.5% பேர் வாகனப் பயண சேவைகளிலும் (ride hailing), 39.9% பேர் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
தீவிரமான சூழ்நிலைகள்
குறிப்பாக நீண்ட வேலை நேரம் மற்றும் குடிநீர், சுத்தமான கழிப்பறைகள், ஓய்வுப் பகுதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், தாங்கள் வேலை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகப் பல கிக் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


64.5% என்ற அளவில், சோர்வு மற்றும் தூக்கக் கோளாறுகளே மிக முக்கிய கவலைகளாக இருந்தன; குறிப்பாக உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் இப்படிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் நேர வேலை (overtime) குறித்த விவாதங்களின் அவசியத்தை இது உயர்த்துகிறது. இதனைத் தொடர்ந்து, 47.42% தொழிலாளர்கள் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுதல், அமர்ந்திருத்தல் அல்லது சுமை தூக்குதலுடன் தொடர்புடைய தசை மற்றும் எலும்பு வலி ஏற்படுவதாகப் பதிவு செய்துள்ளனர்; 41.08% பேர் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தையும், 30% பேர் கண் சோர்வையும், 26.45% பேர் சுவாசப் பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளனர்.

வேலை நேரத்தில் கிடைக்கும் குடிநீர் வசதிகளின் அணுகல் மற்றும் வகை (ஆதாரம்: ஜன்பஹல் மற்றும் கிக்வா).
ஓய்வுப் பகுதிகளுக்கான அணுகல் மிகவும் குறைவாகவே இருந்தது; 74.6% பேர் ஓய்வுப் பகுதியே இல்லை என்று தெரிவித்துள்ளனர், மேலும் 66.2% பேர் வேலை நேரத்தில் "அரிதாகவே அல்லது ஒருபோதும் ஓய்வு இடைவேளை எடுக்க முடிவதில்லை" என்று கூறியுள்ளனர்.

வேலை நேரத்தில் எடுக்கப்படும் ஓய்வு இடைவேளைகளின் இடைவெளி (ஆதாரம்: ஜன்பஹல் மற்றும் கிக்வா).
இந்த அப்பட்டமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், நிறுவனச் செயலிகள் தங்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகளையோ அல்லது வழிகாட்டுதல்களையோ வழங்குவதில்லை என்று தொழிலாளர்கள் உணர்கின்றனர்; 68.4% பேர் எந்தவொரு ஆதரவும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளதால், வேலை தொடர்பான உடல்நலக் கவலைகளை மேலாண்மை செய்யும் பொறுப்பு தனிநபர்களிடமே விட்டுவிடப்படுகிறது.
பாதுகாப்பற்ற சாலைகளும் வன்முறை எதிர்கொள்ளலும்
சாலைப் பாதுகாப்பு இல்லாமையே மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக இருந்தது. பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (66.4%) தங்கள் வேலைக்கான முதன்மை போக்குவரத்து சாதனமாக இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மோசமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளின் பலவீனமான அமலாக்கம் ஆகியவை விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன. பதிலளித்தவர்களில் 62.2% பேர் தங்களது வாகனத்தில் விபத்தின் விளிம்பு வரை சென்று தப்பிய சம்பவங்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்; சுமார் 38% பேர் மோசமான சாலை நிலைகளால் காயமடைந்துள்ளனர் மற்றும் 27% தொழிலாளர்கள் போக்குவரத்து தொடர்பான விபத்துகளைச் சந்தித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், 34.1% கிக் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது துன்புறுத்தல், வசைபாடுதல் அல்லது வன்முறையைத் தாங்களாகவே நேரில் எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர், அதேவேளையில் 26.6% பேர் தங்கள் சக தொழிலாளர்களுக்கு இத்தகைய சம்பவங்கள் நடப்பதைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.

வேலையின் போது எதிர்கொண்ட துன்புறுத்தல், வசைபாடுதல் அல்லது வன்முறை (ஆதாரம்: ஜன்பஹல் மற்றும் கிக்வா).
பயிற்சியும் இல்லை, காப்பீடும் இல்லை
59% தொழிலாளர்கள் தங்களுக்கு எந்தவித பாதுகாப்புப் பயிற்சியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்; அதே சமயம் 56.8% பேர் பாதுகாப்பு கவலைகளைத் தெரிவிப்பதற்கும், அதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தங்களது நிறுவனச் செயலி பயனுள்ள வழிகளை வழங்குகிறது என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
“தொழில்சார் அபாயங்களை மேலாண்மை செய்யும் பொறுப்பு பெருமளவில் தனிநபர் சார்ந்ததாகவே மாற்றப்பட்டுள்ளது என்பதையும், நிறுவனச் செயலிகளிடமிருந்து குறைந்தளவிலான அமைப்பு ரீதியிலான ஆதரவே கிடைக்கிறது அல்லது சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளுடன் குறைந்தளவிலான தொடர்பே உள்ளது என்பதையும் இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அபாயங்கள் இவ்வளவு அதிகமாக இருந்தபோதிலும், கிக் தொழிலாளர்களுக்கு அடிப்படை காப்பீட்டுப் பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. 62%-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்றும், 44.2% பேர் விபத்துக் காப்பீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். காப்பீடு வைத்திருப்பவர்களிலும் பலர் பலன்களைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

விபத்துக் காப்பீட்டின் அணுகல் மற்றும் பலன்களைக் கோருவதில் உள்ள எளிமை (ஆதாரம்: ஜன்பஹல் மற்றும் கிக்வா).
டெல்லியில் நடைபெற்ற குழு விவாதத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களில் காசியாபாத்தைச் சேர்ந்த உணவு விநியோகத் தொழிலாளியான மஜித் அலியும் ஒருவர். சொமேட்டோ (Zomato) நிறுவனத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், ஆர்டர்களை 'சரியான நேரத்தில்' டெலிவரி செய்ய முயலும் போது பல தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவதைக் கண்டதாகக் கூறினார். மருத்துவக் காப்பீடு இல்லாததால், குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவை ஏற்பது மிகவும் கடினமாகிறது என்றும், அவர்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், அசாதாரண சூழல்களில் அவர்கள் எளிதாக சிகிச்சை பெற இது வழிவகுக்கும் என்றும் அலி வலியுறுத்தினார்.
காகிதத்தில் மட்டுமே சம வாய்ப்பு, செயல்பாட்டில் இல்லை
டெல்லியைச் சேர்ந்த மற்றொரு உணவு விநியோகத் தொழிலாளியான சீமா கவுர், சொமேட்டோவில் ஒரு வருடமாகப் பணியாற்றி வருகிறார்; இவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். இவரது மாற்றுத்திறனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு டெலிவரிக்கும் ஊக்குவிப்புத் தொகை (incentives) வழங்கப்படும் என்றும், அனைத்து டெலிவரிகளும் 3-4 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் என்றும் அவரது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்கு ஒரு டெலிவரி ஒதுக்கப்படும்போது, வாடிக்கையாளரின் ஆர்டர் ஒரு மாற்றுத்திறனாளியால் டெலிவரி செய்யப்படும் என்பதைத் தெரிவிக்க வழக்கமாக உணவகம் வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளும்; இதனால் அவர்கள் அந்த ஆர்டரை வேறு தொழிலாளிக்கு மாற்ற வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும். பல நேரங்களில், அந்த ஆர்டர்கள் மற்றவர்களுக்கு மாற்றப்பட்டுவிடும் என்றும், இதனால் தான் வேலை நேரம், தொலைபேசி மின்கலன் (battery) மற்றும் ஊக்குவிப்புத் தொகையை இழக்க நேரிடுகிறது என்றும் அவர் கூறினார்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு