அரவிந்தர் ஆசிரமத்திற்குள் நடக்கும் இந்துத்துவ அஜந்தா!

அறம் இணைய இதழ்

அரவிந்தர் ஆசிரமத்திற்குள் நடக்கும் இந்துத்துவ அஜந்தா!

பல்லாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள 3,300 ஏக்கர் கொண்ட ஆன்மீகத் தளமான ஆரோவில்லை அபகரிக்க ஆர்.எஸ்.எஸ் களம் இறக்கப்பட்டுள்ளது. அதற்காக குஜராத்தில் இருந்து தயாரான ஒரு ஐ.ஏ.எஸ் சொர்ணா அக்காவை களத்தில் இறக்கி, அதி உச்சகட்ட அதிகார அத்து மீறல்களை செய்து அரவிந்தர் ஆசிரமத்தை கொஞ்சம், கொஞ்சமாக ஆட்டையப் போடுகிறது, இதயமில்லா மத்திய அதிகார மையம்;

நமக்கு அரவிந்தர் ஆசிரமம் குறித்து பல விமர்சனங்கள் இருந்த போதிலும், அங்கே நடைபெறும் பல சமூகப் பணிகள், அதில் தங்களை அர்ப்பணிப்புடன் ஒப்புக் கொண்டிருக்கும் சாத்வீக செயற்பாட்டாளர்கள், அதன் மூலம் இந்த சமூகம் பெறும் நற்பலன்கள் இவற்றை கருத்தில் கொள்கிறோம். அந்த வகையில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை உருவாக்கியதில் ஆரோவில்லுக்கு முக்கிய பங்கு இருகிறது என்பது கவனத்திற்குரியது.

ஜெயந்தி ரவி ஐ.ஏ.எஸ்சின் கிரிமினல் பின்னணி;

ஜெயந்தி ரவி சென்னை பல்கலைக் கழகத்தில் படித்தவர்.  ஆச்சாரமான பிராமண குலத்தில் பிறந்த இவர் ஆரம்பம் தொடங்கி குஜராத்தில் தான் நீண்ட நெடிய காலம் ஐ.ஏ.எஸ் ஆக பணியாற்றினார். அங்கே இவர் தன் பணிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்களோடு நெருக்கமான பிணைப்பை உருவாக்கிக் கொண்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து கலவரம் வெடித்த போது அந்த மாவட்டத்திற்கு அதிரடியாக ஆட்சியர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஜெயந்தி ஐ.ஏ.எஸ் இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாண்டவத்திற்கு பொருத்தமாக களம் அமைத்துக் கொடுத்தவர். பாதிக்கப்படும் மக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காத வண்ணம் அவர்களின் கைகளை கட்டிப் போட்டவர்…என அந்த காலகட்ட மீடியாவால் அடையாளப்படுத்தப்பட்டார்.

இது மட்டுமா? கொரனா காலகட்டத்தில் குஜராத்தின் சுகாதாரச் செயளாளராக இருந்த ஜெயந்தி ரவி ஐ.ஏ.எஸ் ஈவு இரக்கமில்லாமல் பல முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி ஊழல்களில் சம்பந்தப்பட்ட செய்திகள் அன்றைய தினம் தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தன.

இவ்வளவு  அபகீர்த்தி பெற்ற இந்த பெண்மணியை இன்னும் குஜராத்திலேயே வைத்திருப்பது நல்லதல்ல.  தமிழகத்தை இந்துத்துவ களமாக்க இவரை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்த மோடி, ஆரோவில்லுக்கு 2018ல் வந்த போது, ‘இந்த இடத்தை எப்படி தூக்குவது’ என்ற சிந்தனை ஓட்டத்திற்கு, ‘ஜெயந்தி தான் பொருத்தமானவர்’ என அமித்ஷாவிடம் சொல்லி இருக்க வாய்ப்புள்ளது.  ஜுலை 2021 -ல்  குஜராத்தைவிட பெரிய ‘புராஜக்டை’ ஜெயந்திக்கு தந்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஜெயந்திக்கு பிரென்ச் மொழியும் நன்றாகத் தெரியும்.

அந்த வகையில் உலகத்திற்கே ஒரு முன்மாதிரியாக 60 நாடுகளின் ஆன்மீக உணர்வாளர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆரோவில் சர்வதேச நகரத்தின் செகரட்டிரியாக நியமிக்கப்படுகிறார் ஜெயந்தி. இந்த பொறுப்புக்கு இவரை நியமித்ததோடு, சுமார் ஆயிரம் கோடிகள் ஆரோவில்லுக்கு அள்ளித் தருகிறது மத்திய அரசு.

ஏன்?,எதற்கு? அதற்கான தேவை என்ன? யதார்த்தத்தில் வெளியில் இருந்து எந்த உதவியும் தேவைப்படாத ஒரு சுயசார்பு சர்வதேச நகரம் தான் ஆரோவில். இயற்கையின் வனப்புள்ள இருபது இயற்கை பண்ணைகள் இவர்களுக்குண்டு. அதில் உற்பத்தியாகுபவை அனைத்தும் இங்கிருப்பவர்களின் உணவு தேவைக்கும் அதிகமானது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வேலை செய்யும் சுமார் 10,000 க்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு ஆரோவில் ஒரு வாழ்வாதாரமாக உள்ளது.

இது குறித்து இங்கே தங்கியுள்ள முன்னாள் ராணுவ மேஜர் அருண் அவர்கள் நம்மிடம் பேசும் போது,

சூறையாடப்படும் அரவிந்தர் ஆசிரமம்!

ஆயிரம் கோடி ஆரோவில்லுக்கு வழங்கப்பட்டது, அதை அழிப்பதற்கானது என்பது அடுத்தடுத்து வெளியாகிவிட்டது. ஆரோவில்லுக்குள் குறுக்கும், நெடுக்குமாக பல சாலைகள் போடுகிறார்கள்? எதற்கென்றே தெரியவில்லை. அப்படி சாலை போடுவதற்காக அங்குள்ள 40,000 மரங்கள் வெட்டி, வீழ்த்தி சூறையாடப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து ஆசிரம அன்பர்கள் கண்ணீர்விட்டு அழுது துடித்து தடுத்து மன்றாடினார்கள். இப்படி மரம் வெட்டப்படுவதை தடுக்க போராடியவர்களை உள்ளுர் ரவுடிகளை அழைத்து வந்து அடித்தார்கள்! காவல்துறையில் கம்ப்ளையிண்ட் கொடுத்தால் நான் மோடி, அமித்ஷாவுக்கு வேண்டப்பட்டவள். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது’’ என்கிறார், ஜெயந்தி ரவி.

ஜேசிபி கொண்டு மரங்கள் வெட்டப்பட்டு, சிறிய குடில்கள் இடிக்கப்பட்ட போது கதறி அழுத தம்பதியினர்!

அத்துடன் இங்குள்ள மணலை லாரி.லாரியாக அள்ளி வெளியில் விற்கிறார்கள். இங்கே தேவையில்லாமல் சாலை போடுவது எதற்காக எனத் தெரியவில்லை? ஆனால், அந்த காண்டிராக்டிலும் பல கோடி முறைகேடுகள் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஐ.ஐ.டி காமகோடிக்கு கைமாற்றப்பட்ட அரவிந்தர் ஆசிரம நிலங்கள்!

அன்னபூரணா இயற்கை வேளாண் பண்ணையும், மேஜர் அருணும்.

தமிழக மக்களுக்கு இயற்கை விவசாயத்தில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய நம்மாழ்வார் அதற்கான உந்துதலைப் பெற்ற இடம் இங்குள்ள அன்னபூர்ணா பண்ணையாகும். சுமார் 135 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அன்னபூரணா இயற்கைப் பண்ணையில் – இயற்கை விவசாயத்தில் பல பரிட்சார்ந்த முன்னெடுப்புகளை செய்வோருக்கு பெரும் வழிகாட்டியாக பார்க்கப்படுகிற சூழலில் – இதில் இருந்து 100 ஏக்கரை தூக்கி எடுத்து  சென்னை ஐ.ஐ.டிக்கு தந்துள்ளார், தற்போதைய ஆரோவில் செகரட்டரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயந்தி ரவி ஐ.ஏ.எஸ். ஆதுவும் 33 வருடத்திற்கு வெறும் ஒரு ரூபாய் ஒத்திகைக்கு! இந்த இயற்கை பண்ணையை நாசமாக்கி அங்கே ஐ.ஐ.டியின் லேப்புகள், தனியார் கூட்டுடன் தொழிற்சாலைகள் வர உள்ளனவாம்!

இந்த இடங்கள் எதையும் தூக்கி எடுத்து விற்பது என்பது அதிகார துஷ்பிரயோகம். இவை அனைத்தும் இந்த அரவிந்தர் சொசைட்டிக்குள் வாழ வந்தவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று எடுத்து வந்து இங்கு கொடுத்த பணத்தால் வாங்கப்பட்டவையாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் இங்கே இவர்கள் அனைவருமாக ரெஸிடென்சியல் போர்டு எனப்படும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு இண்டர்னேஷனல் கமிட்டியும் உண்டு. நாங்கள் கூடி முடிவெடுத்தால் மட்டுமே எதையும் விற்கவோ, வாங்கவோ முடியும். மத்திய அரசாங்கத்தால் மேற்பார்வை செய்வதற்காக அனுப்பட்ட ஒரு அதிகாரி தன்னிச்சையாக எங்களுக்கான சொத்தை எடுத்து வெளியாருக்கு தாரை வார்ப்பது சட்டப்படி மிகத் தவறானதாகும். இந்த நிலங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் வருவதால் இவை அனைத்தும் தமிழக அரசின் வரம்பில் வருவதாகும். தமிழக பத்திரப்பதிவு அலுவலகம் வாயிலாகத் தான் இந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ வேண்டும். ஆகவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்’’ என்றார்.

பாஜக தமிழகத்தில் காலூன்றாத நிலையிலேயே இத்தனை களவாணித்தனங்களை இவர்களால் இங்கே செய்ய முடிகிறதே என்பதே நம் அதிர்ச்சி.

சர்வதேசத்தினரும் சங்கமித்துள்ள அரவிந்தர் ஆசிரமம்!

1926 – இந்த அரவிந்தர் ஆசிரமம் உருவான போது எளிமையாகத் தான் இருந்தது. இதன் பிறகு பிரான்ஸ், இங்கிலாந்து,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த ஆன்மீக அன்பர்கள் தங்கள் நாடுகளில் தாங்கள் சம்பாதித்த சொத்து அனைத்தையும் இந்த ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக மார்க்கத்தில் பயணிப்பதற்காக அரவிந்தர் சொசைட்டி பேரில் இங்கேயே நிலம் வாங்கி தங்கிவிட்டனர்.

இந்த வகையில் இங்கு தற்போது ஆரோவில்லுக்கு சொந்தமான 3,300 ஏக்கர் நிலத்தில் 2,865 பேர் சுமார் 400 கட்டிடங்களில் வசிக்கின்றனர். இங்கே 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,

மொத்தமுள்ள 2,865 பேரில்,

இந்தியர்கள் -1,888 பேர்.( இதில் தமிழர்கள் 800 பேர்)

பிரெஞ்ச் நாட்டினர்- 413 பேர்.

ஜெர்மன் நாட்டினர்- 283 பேர்.

இத்தாலி நாட்டினர் – 161 பேர்.

அமெரிக்கா -103 பேர்

மற்ற நாடுகளில் இருந்து வந்தோர் குறைவானோர்களே.

இந்த அடாவடி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயந்தி ரவியின் சம்பந்தி தான் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜன். இவர் தற்போது தவெகவில் சேர்ந்துள்ளார். தன் சம்ப்ந்தையின் அத்துமீறல்களுக்கு அரசியல் பாதுகாப்பு அரணாக இவர் செயல்படுகிறார்’’ என அரவிந்த் ஆசிரம ஆன்மீக அன்பர்கள் வருத்தப்படுகின்றனர்.

உண்மையில் இந்த ஆசிரம அன்பர்கள் சாதி, மதம், இனம், நாடுகள் என்ற எல்லைகளைக் கடந்தவர்கள். இங்கு மத உணர்வு என்பதே கிடையாது. இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களோ தற்போது அரவிந்தர் சமாதியை வணங்க வரும் பக்தர்களை இடைமறித்து, உள்ளே ராமர் கோவிலின் மாதிரி ஒன்றை அமைத்துள்ளோம். பார்த்துச் செல்லுங்கள் என நிர்பந்திக்கிறார்கள். காலப் போக்கில் அரவிந்தர் ஆசிரமம் பிரம்மாண்ட ராமர் கோவிலாக மாற்றம் காணவும் வாய்ப்புள்ளது போலத் தெரிகிறது.

இங்கே வாழ்ந்த வெளிநாட்டு ஆன்மீக அன்பர்களில் சுமார் 300 பேர் இந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் இங்கே செய்யும் அட்டுழியங்களைக் கண்டு அதிர்ந்து இங்கே இவர்களோடு போராட முடியாது என வெளியேறிவிட்டனர். மற்றும் பலர் வெளியேற நினைத்தாலும் தங்கள் முழுச் சொத்தையும் அங்கே அர்ப்ப்பணித்துவிட்ட காரணத்தால் வெளியேறி எங்கே சென்று எப்படி வாழ்வது? என்று கலங்கியுள்ளனர்.

சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் கிராம மக்கள் இங்கு நடக்கும் மாற்றங்கள், அத்துமீறல்களை ஏன்? எதற்கு? எனக் கேட்டால், அவ்வளவு தான். அவங்களுக்கு அடுத்த நிமிடமே வேலை போய்விடுகிறது. அந்த வகையில் ஒரு அறுபது பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்தியா முழுமையிலும் ஆர்.எஸ்.எஸ்சில் செல்வாக்காக  உள்ளவர்கள் இங்கே உள்ள வந்து மாதக்கணக்கில் இலவசமாக தங்கி சாப்பிட்டு செல்லும் வாய்ப்பை ஜெயந்தி உருவாக்கிவிட்டார். இந்த அமைப்பின் பல நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் காரியகர்த்தாக்கள் பலரை நியமித்துள்ளார்.

ஊழல் முறைகேடுகளைச் செய்வதிலும், அராஜகங்களை அரங்கேற்றுவதிலும், கூச்ச நாச்சமில்லாமல் பொதுச் சொத்துக்களை சூறையாடுவதிலும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸுக்கு இணை சொல்ல இன்னொரு இயக்கம் இந்தப் பூவுலகில் இல்லை!

தமிழ்நாட்டை இந்துத்துவ களமாக்கி சூறையாடுவதற்கான முன்னோட்டமாக தற்போது அரவிந்தர் ஆசிரம அத்துமீறல்களை செய்வதாகவே தோன்றுகிறது. முந்தைய திமுக அரசின் கவனத்திற்கு இந்த அத்துமீறல்களைக் கொண்டு சென்றோம். எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழக அரசு கவனத்திற்கும் இதை கொண்டு சென்றுள்ளோம். இதில் தமிழக அரசு தலையிட்டு இந்த ஆசிரம நிர்வாகத்தின் அக்கிரமங்களை தடுக்க வேண்டும். இதற்கு கட்சிகளைக் கடந்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்…” என்கிறார்கள், இந்த ஆன்மீக அன்பர்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/32947/aurobindo-ashram-scame-jayanthi/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு