குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு

விகடன் இணையதளம்

குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு

"இந்த மசோதா சட்டமாக மாறும்பட்சத்தில் தற்போதுள்ள குடியேறிகள் சம்பந்தமான நான்கு சட்டங்கள் தானாகவே மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்" - மத்திய இணையமைச்சர்.

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா குறித்து விரிவாகக் காணலாம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 11-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், `The Immigration and Foreigners Bill 2025' என்ற பெயரில் புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.

64 பக்கங்களைக் கொண்ட இந்தப் புதிய மசோதாவில், தேசியப் பாதுகாப்பு, நாட்டிற்குள் நுழைவதற்கான கடும் கட்டுப்பாடுகள், ஆவணங்களற்ற குடியேறிகளுக்கு எதிராகக் கடுமையான அபராதம் எனப் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதாவானது, பாஸ்போர்ட் வழங்குவது, இந்தியாவிற்குள் பயணம் மேற்கொள்வதற்கான ஆவணங்கள் வழங்குவது, வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்க வழிவகை செய்கிறது.

குறிப்பாக இந்தியாவின் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பாக இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, நாட்டிற்குள் நுழையவும், தங்கவும் தடை விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட அந்த தனி நபர்களை இமிகிரேஷன் அதிகாரிகள் வாரன்ட் எதுவும் இல்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய வழிவகை செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டவர் இந்தியாவில் தங்களின் பயண நோக்கம், எங்குச் செல்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்வதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

அதோடு, குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல தடை விதிப்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது. அதேபோல், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்கள் என்றால் அது குறித்து உடனடியாகக் குடியேற்ற அதிகாரிகளுக்குக் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் எந்த வழியில் அழைத்து வந்தாலும், அதில் ஈடுபடக் கூடியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது போன்றவற்றுக்கான சரத்துகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரக்கூடிய நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும், போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவிற்குள் நுழையும் தனி நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன் கூடிய இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், விசா விதிமுறைகளை மீறக்கூடிய நபர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் மசோதா கூறுகிறது.

மத்திய இணையமைச்சரின் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்!

இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்கையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய், ``சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்கும் நோக்கிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இந்த மசோதா கொண்டுவரப்படுகிறதே தவிர மற்றபடி இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. இந்த மசோதா சட்டமாக மாறும்பட்சத்தில் தற்போதுள்ள குடியேறிகள் சம்பந்தமான நான்கு சட்டங்கள் தானாகவே மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்" எனத் தெளிவுபடுத்தினார்.

மறுபக்கம், மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்தனர். காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, ``மசோதாவில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மத்திய அரசு, தங்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காகப் பலருக்கும் இந்தியாவிற்குள் நுழையத் தடைவிதிக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். மேலும் சில உறுப்பினர்கள், இந்த மசோதாவிலுள்ள பல சரத்துகள் பிரச்னைக்குரியதாக இருப்பதாகக் கூறி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர்.

முன்னதாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஷுமா சாவந்த், பெங்களூருவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைப் பார்ப்பதற்காக இந்தியா வர விசா கோரியபோது அது நிராகரிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் சாதிய நடைமுறைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால்தான் இவருக்கு விசா மறுக்கப்பட்டது எனப் பெரும் சர்ச்சையும் கிளம்பியது.

இவ்வாறிருக்க, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்துத் தொடர்ந்து பேசி வந்த மத்திய அரசு தற்போது இந்த மிக முக்கியமான குடியேறிகள் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விவாதத்திற்கு வரும்போது நாடாளுமன்றத்தில் பெரும் புயல் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(நிரஞ்சன் குமார் ஜெ)

- விகடன் இணையதளம்

https://www.vikatan.com/government-and-politics/central-bjp-govt-introduce-new-immigration-and-foreigners-bill-2025

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு