புதினுக்கு டெட்லைன் - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை - கோபத்தில் ட்ரம்ப் - நட்பில் விரிசலா?

விகடன் இணையதளம்

புதினுக்கு டெட்லைன் - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை - கோபத்தில் ட்ரம்ப் - நட்பில் விரிசலா?

'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்...' என்று கூறி வருகிற அமெரிக்க அதிபர் ட்ரம்பால், இன்னும் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை நிறுத்த முடியவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, அவர் எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தும் ஒரு பலனும் இல்லை.

ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கே இன்னும் இறங்கி வரவில்லை.

ட்ரம்ப் எவ்வளவோ எச்சரித்து பார்த்தும் ஒரு பயனும் இல்லை. இப்போது அவர் கடைசி அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

அதாவது, புதின் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யாவின் மீதும், ரஷ்யா உடன் வணிகம் செய்து வரும் நாடுகளின் மீதும் வரி விதிக்க உள்ளார் ட்ரம்ப்.

கடைசியாக புதினுடன் பேசிய போன்கால் குறித்து ட்ரம்ப், 'ஏமாற்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு, அவர் இன்னொன்று செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்... ஆனால், புதின் ஒருப்படி கூட இறங்கி வருவதாக இல்லை.

அதனால், அவருக்கு ட்ரம்ப் ஆகஸ்ட் 8-ம் தேதியை டெட்லைனாக கொடுத்துள்ளார்.

அவர் அதற்குள் போரை நிறுத்தவில்லை என்றால், அவர் நாட்டின் மீது வரி விதிப்பு பாயும் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் ட்ரம்ப்.

ஆனால், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், பாலஸ்தீனத்தில் இருந்து மக்கள் பசியால் வாடி வருகின்றனர். பலர் பசியால் இறந்தும் வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் உலகம் முழுக்க பரவி, எதிர்ப்புகளைக் கிளப்பி வருகின்றது.

இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை, நெதன்யாகு உடன் போன்கால் பேசினார் ட்ரம்ப். அதுவும் ஏமாற்றம் அளிப்பதாகவே கூறியுள்ளார்.

தொடர்ந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், ட்ரம்பின் குடியரசு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது என்று கூறப்படுகிறது.

சீக்கிரம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு நெதன்யாகுவை எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பிற்கு கசக்கும் நட்புகள்...

தற்சமயத்தில் ட்ரம்பிற்கும், நட்பிற்கும் சரிப்பட்டு வராத காலம் போல.

காரணம், புதின் மற்றும் நெதன்யாகு இருவருமே ட்ரம்பின் உற்ற நண்பர்கள் தான்.

ஆனால், ட்ரம்பின் பேச்சை கேட்கவோ, அவரது மிரட்டலுக்கு பணியவோ புதின் மற்றும் நெதன்யாகு தயாராக இல்லை.

இந்தப் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் உறுதியாக இருக்கிறாராம்.

இதுவும் ட்ரம்பிற்கு நெருக்கடியாகத் தான் உள்ளது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், ட்ரம்பின் நண்பர் இந்திய பிரதமர் மோடியும், ட்ரம்பின் வர்த்தக கண்டிஷன்களுக்கு ஒத்துவரவில்லை.

வட கொரியா கூட, தற்போது ட்ரம்பின் நட்பு வளையத்தில் அவ்வளவாக இல்லை.

ஆக, இப்போது ட்ரம்பிற்கு நட்புகளில் சறுக்கல் ஏற்பட்டு வருகிறது.

எது எப்படியோ, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் நின்றால், அந்த நாடுகளின் மக்களுக்கும் நல்லது... உலக நாடுகளுக்குமே நல்லது.

(நிவேதா. நா)

விகடன் இணையதளம்

https://www.vikatan.com/government-and-politics/trump-warning-to-putin-netanyahu-on-wars-august-2025

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு