தமிழ்நாட்டிற்கான உண்மையான கல்வி கொள்கை எப்போது வரும்?
அறம் இணைய இதழ்

என்ன தான் நடந்திருக்கிறது கல்விக் கொள்கை உருவாக்கத்தில்? பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது என்ற வகையில் ஒரு சாகஸ நாடகம் அரங்கேறியுள்ளது. வெளியிடப்பட்டு இருப்பது சில அறிவிப்புகளாக உள்ளனவே ஒழிய, எங்கே இதில் கல்வி கொள்கை உள்ளது? எனக் கேட்கின்றனர் கல்வியாளர்கள்;
தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தடபுடலாக வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கல்வி குறித்த கோட்பாடோ, கொள்கையோ,தெளிவான பார்வையோ எதுவுமின்றி, வெறுமே தற்போதைய ஆட்சி செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த சுய தம்பட்டமே வெளிப்பட்டுள்ளது.
அதைக் கண்டு அந்த கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் கமிட்டியே அதிர்ந்துள்ளது.
“தமிழக அரசிடம் நாங்கள் கொடுத்த மாநில கல்விக் கொள்கை ஓராண்டு கிடப்பில் போடப்பட்டு, தற்போது வெளியானதாக அறிந்தோம். ஆனால், இது, நாங்கள் அளித்த அறிக்கையே அல்ல. இதில் நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் உள்ளன. தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என சொல்லப்பட்டு உள்ளது. உயர் கல்வியை தவிர்த்துவிட்டு, பள்ளிக் கல்விக்கு மட்டும் ஏன் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டனர் என்றும் தெரியவில்லை. வெளியீட்டு விழாவுக்கும் எங்களை அழைக்கவில்லை” என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வடிவமைத்த கல்வியாளர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆக, கல்வி குழு ஒன்றை நியமித்து, அதற்கு நிதி ஒதுக்கி வேலை வாங்கி கல்வி கொள்கை திட்டம் உருவான பிறகும், அதை வெளிடத் தாமதித்து, அதன் பிறகு சம்பந்தமே இல்லாமல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஏன் இந்த சூழல்? ‘கல்வி என்பது ‘கன்கரண்ட் லிஸ்ட்’ எனப்படும் மத்திய – மாநில அரசு இரண்டும் சேர்ந்து முடிவு செய்யும் பட்டியலில் உள்ளதாம்! அதனால், தமிழ் நாட்டுக்கு என்று தனியாக ஒன்றை நாம் உருவாக்கி செயல்படுத்தக் கூடாது’ என பாஜக அரசின் தரப்பில் கடும் நிர்பந்தம் தரப்பட்டு உள்ளதன் விளைவே இது கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால், அந்த கொடும் நிர்பந்தத்தை பொதுவெளியில் அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் அதிருப்தியையாவது வெளிப்படுத்தி இருக்கலாம்.
ஒன்றை உருவாக்க முடியவில்லை என்றால், அதை ஒத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் தான், அதற்கான தடைகளை முறியடித்து, சாதிப்பது எப்படி? எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும்!
ஆனால், நடைமுறை பிரச்சினையை மறைத்து, தேர்தல் பிரச்சார சமயத்தில் ஆர்ப்பாட்டமாக அறிவித்ததால், ”தமிழ் நாட்டிற்கான மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க, கல்வி குழு அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை 2021 ஆகஸ்டில் வெளியிட்டார் ஸ்டாலின்.
ஆயினும் தயங்கி தாமதித்தே, ஏப்ரல் 2022ல் ஒரு கல்விக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிவித்தார், முதல்வர் ஸ்டாலின்!
அதன்படி நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள் ஜவஹர் நேசன், பேராசிரியர் இராமானுஜம், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பேராசிரியர்கள் இராம சீனிவாசன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுல்தான் இஸ்மாயில், ஆசிரியர்கள் மாடசாமி, பாலு ஆகியோர் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், அதே சமயம் இந்த கல்விக் குழு கூடி செயல்படுவதற்கு அலுவலகமே வழங்காமல் இழுத்தடித்தனர் சுமார் பத்து மாதங்கள். அதன் பிறகு தான் ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜவகர் நேசன் தன்னை முழுமையாக இதல் அர்பணித்துக் கொண்டு பல்வேறு உப குழுக்களை அமைத்தும், உலக அளவில் பல கல்வியாளர்களை ஒருங்கிணைத்தும் கலந்துரையாடி தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்வி கொள்கை வரைவை தயாரித்தார்.
இந்தச் சூழலில் தேசிய கல்வி கொள்கையின் பல அம்சங்களை கவர்ச்சிகரமான பெயர்களை வைத்து தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தி வந்தார், முதல்வர் ஸ்டாலின்! இதன் தொடர்ச்சியாக அன்றைய முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், ”தமிழ் நாட்டிற்கான தனித்த கல்வி கொள்கை தேவையில்லை. தேசிய கல்வி கொள்கையையே சற்றே தோற்றம் மாற்றி தமிழக கல்வி கொள்கையாக்கி தாங்க’’ என்று ஜவகர் நேசனை நிர்பந்தித்தார்.
இதை ஏற்க மறுத்து மே-2023-ல் கல்விக் குழுவில் இருந்து வெளியேறினார், ஜவகர் நேசன். அப்போது கல்வி கொள்கை உருவாக்கத்தில் நிகழ்ந்தவற்றை விளக்கி அன்றே அறம் இணைய இதழில் எக்ஸ்க்ளுசிவ் ஸ்டோரி எழுதினோம், அது வைரலானது. ( அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.)
ஜவகர் நேசனை வெளியேற்ற நடந்த சதி திட்டங்கள்
அதன் பிறகு குழுவில் உள்ளவர்கள் ஜவகர் நேசன் உருவாக்கி தந்த 258 பக்க அறிக்கையை மேலும் விரிவாக்கி, 520 பக்கத்திற்கு கல்வி கொள்கை வரைவை தந்தனர். ஜூலை- 2024ல்! அதை பொது வெளியில் வைத்து விவாதம் ஆக்கி இருக்க வேண்டும். அதைச் செய்ய அச்சப்பட்டு, சுமார் ஓராண்டாக கிடப்பில் போட்டு விட்டது, திமுக அரசு. இதைவிட மிக மோசமாக கல்வியாளர்களை ஒரு அரசு அவமானப்படுத்த முடியாது.
தற்போது தேர்தலுக்கு இன்னும் எட்டே மாசம் இருக்கும் தருவாயில் அதிகாரிகளைக் கொண்டு ஏதோ ஒன்றை உருவாக்கி, தமிழ் நாட்டுக்கான கல்வி கொள்கை என வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது அறிவிப்பு எதுவுமே புதில்லை. ‘இரு மொழிக் கொள்கையே நடைமுறையாகும், 3,5,8,11 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை..’ போன்றவை, ‘ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தொடரும்’ என்பதேயாகும்.
இதை அம்பலப்படுத்தவே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அதில் ஜவகர் நேசன் விலாவாரியாகப் பேசினார். அவரது அந்தக் கருத்துக்கள் தனி கட்டுரையாக அறத்தில் வெளிவரும்.
ஜவகர் நேசன் அவர்களுடன் சாவித்திரி கண்ணன், அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி காந்தி ராஜா, சுதாகர்
கல்வியானது இரு அரசுக்குமான பட்டியலில் இருந்தாலும், தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை பள்ளிக் கல்வியில் இது வரை நடைமுறையில் இருந்தது தான். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் தான், இதில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து பிஞ்சு குழந்தைகளின் ஆரம்ப கல்வி தொடங்கி, தங்கள் ஆதிக்க கரத்தை நீட்டிவிட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை மறுதலித்திருக்க வேண்டிய திமுக அரசு, அதை மாற்றுப் பெயர்களில் இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் நம்ம பவுண்டேஷன், மாடல் ஸ்கூல்ஸ், எமிஸ் பதிவேற்றம் எல்லாமே தேசிய கல்விக் கொள்கையை டிங்கரிங் செய்து, முலாம் பூசி அறிமுகப்படுத்தப்பட்டவையே.
இது வரை இல்லாத வகையில் கடந்த ஓராண்டாக அரசுப் பள்ளிகளில் கமுக்கமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது UDISE updatesஎன்ற நடைமுறை. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் சகல விபரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்று விட்டனர். இது தேசியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ளபடி, நாடு முழுவதும் ஒரே கல்வியாக்கும் அம்சமாகும். இதை தான் தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி தருகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் ‘சனாதன தருமம் அழிவில்லாத நிலையான அறம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது எப்படி?
ஆக, வெளியில் சொல்வதொன்றும், நடைமுற செயலாக்கத்தில் முற்றிலும் வேறொன்றாகவும் வெளிப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?
இரு மொழிக் கொள்கை, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து, 3, 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து, கால நிலை மாற்றக் கல்வி போன்ற ஒரு சில வரவேற்கத்தக்க அம்சங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களே.
முக்கியமாக சனாதனக் கல்வியை மறுத்தல், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தல், கல்வி மையப்படுத்தப்பட்ட அதிகாரமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு, தமிழ் மண் மற்றும் பண்பாடு சார்ந்த கல்வி ஆகிய எதுவுமே இதில் இல்லை.
ஒரு நாட்டை சீரழிப்பதற்கு, அந்த நாட்டின் கல்விக் கொள்கையை அதற்கேற்ப கட்டமைத்தாலே போதுமானது. பிஞ்சு குழந்தையாக பள்ளி செல்வது முதல் கல்லூரி படித்து வெளியே வரும் வரை ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் கற்பிக்கப்படுகிறதோ, அதுவே அவன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கிறது! அதனால் தான் பாஜக அரசு பதவி ஏற்றது தொடங்கி கல்விக் கொள்கையை மாற்றுவதில் கண்ணும், கருத்துமாக இயங்கியது.
பாஜக அரசின் தேசிய கல்வி கொள்கை என்பது பல நூறு வருடங்களுக்கு இந்தியாவை பின்னுக்கு தள்ளுகிறது என்பதே நாம் இதை எதிர்க்கக் காரணம். இதையே வழி மொழிந்து செயல்படுத்துகிறது திமுக அரசு என்பது மிகவும் அதிர்ச்சியானதாகும்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/22450/dmk-govt-is-not-making-state-education-policy/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு