பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை எப்படி அணுகுவது? இது வளர்ச்சிக்கு எதிரானதா?
திருமுருகன் காந்தி
இந்திய அரசால் கடந்த 40-50 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருந்திட்டஙகளால் ஏற்பட்ட வளர்ச்சியும், வீழ்ச்சியும் எப்படியாக இருந்திருக்கின்றன என்பதை சற்று கவனித்தால் ஏன் மக்கள் போராட்டஙகள் நடக்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம்.
மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி உருவான திட்டங்களினால் ஏற்பட்ட வளர்ச்சி 'நிதிமூலதன நிறுவனங்களுக்கு' (Financial mrkt/Finance Capital ), நிறுவனங்களுக்கு பெருமளவில் லாபத்தை கொடுத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக உற்பத்தி/தொழிற்சாலைகள்/கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு/ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளன. இவை நகரமயம் சார்ந்த வளர்ச்சியாகவும் சில அமைந்தன. இந்தத் திட்டங்களால், தொழில் சார்ந்த திறன்பெற்ற தொழிலாளர்களுக்கு (Skilled Labour/Employable technical or non-technical sector) இது வேலைவாய்ப்பை கொடுத்தது. இவை இப்பகுதியில் வசித்த மக்களோடு தொடர்புடையதாக அமையவில்லை. அப்பகுதிகளின் பூர்வகுடிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை மாறாக migrant -labours/workers/employee எனுமளவில் அமைந்தன.
இந்த திட்டஙகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும்/மக்களுக்கும் எவ்வித எதிர்காலம் அமைந்தன?
விவசாய உற்பத்தியில், நிலம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டொருக்கு இந்த வளர்ச்சியில் இடமில்லாது போயின. நிலம் என்பதை முதலீடாக வைக்கும் விவசாய தொழில்சார்ந்த தொழிலாளர்களுக்கு, நிதியை-தொழிற்நுட்பத்தை மூலதனமாக வைத்து நடக்கும் நிறுவனங்கலளில் வேலையில்லாது போனது. இவ்விடங்களில், காவலாளி, தோட்டப்பராமறிப்பு, கூலிவேலை போன்ற பணிகளே மிஞ்சின. இவையெல்லாம் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பை அம்மக்களுக்குக் கொடுப்பவை அல்ல. இந்த தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்த இயலாத நிலையிலேயே நிலமளிக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனுக்காக நிலமளித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவருக்குக் கூட நிரந்தர பணி NLCஇல் கடந்த 30 வருடங்களில் கொடுக்கப்படவில்லை. ONGCக்கு அளித்த நிலங்களிலும் இதேநிலை. இதேபோல சிப்காட்டுகளுக்கு நிலமளித்தவர்களுக்கும் வேலைகள் நிரந்தரமாக்கப்படவோ, பணியமர்த்தப்படவோ இல்லை. NLCஇல் அன்றாட கூலிகளாக 14,000 நெய்வேலி மக்கள் வேலை செய்கிறார்கள். NLCக்காக கையகப்படுத்தப்பட்ட 20,000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தரிசாக வளர்ச்சித்திட்டம் கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. 8 வழி சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் நிலை இதுதான். NHAI தேசிய நெடுஞ்சாலைக்கு நிலமளித்தவர்கள் அதிகபட்சமாக டோல்கேட்டுகளில் டிக்கட் வசூலிப்பவராக வேலைபார்க்கிறார்கள்.
சரி, நிலத்தை கொடுப்பதால் கிடைக்கும் நிதியை/நட்டஈடு பணத்தை என்ன செய்தார்கள் என கேட்கலாம்.
நிதி-பணம் என்பது மூலதனமாக இயஙகும் போது லாபகரமாக இருக்கும், அல்லாது போனால் அவை அசையா சொத்துகளாக (தங்கநகை, வீடு, வாகனம்) மட்டுமே இருக்க இயலும். இவை பொருளாதார வளர்ச்சிக்கான தொழிலை தராது. பணத்தை மூலதனமாகக் கொண்டு இயஙகும் பயிற்சி விவசாயிகளுக்குக் கிடையாது. அதாவது எப்படி ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், பைலட், சார்டட் அக்கவுண்டண்டால் நிலத்தை வாங்கினாலும் விவசாயம் செய்யத் தெரியாதோ அதே போல விவசாயிகளால் பணத்தை நிதிமூலதனமாக மாற்றத்தெரியாது. இதனாலேயே நிலத்திற்கு நட்ட ஈடாக கிடைத்த சொற்ப பணத்தை விரைவில் இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் கூலிவேலைக்குள் நகர்கிறார்கள். இவர்களை ஏ.டி.எம் வாசலில், கம்பெனியின் வாயிலில், பார்க்கிங் பகுதியில், தோட்டங்கள் அமைத்த பகுதியில் ஒதுக்கப்பட்டோர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அல்லது இதுபோல வளர்ச்சிக்கு உத்திரவாதமில்லாத பணிகளில் அன்றாடங்காய்ச்சிகளாக மாறிப்போவார்கள். இவர்கள் நிலம் கொடுத்த அதே ஊர்களில்/பகுதிகளில், (வளர்ச்சி திட்டத்தை காட்டி) ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறப்பதால், ஒண்டுவதற்கு வீடு வாடகைக்கு கூட எடுக்க இயலாமல் ஊருக்கு வெளியே துரத்தப்பட்டு தொலைதூரம் நகர்வார்கள் அல்லது சாலைகளில் இடம் தேடுவார்கள்.
OMR-IT corridor, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், இருங்காட்டுகோட்டை சிப்காட், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகள் அமைந்த பின்னராக இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தால் தெரியும். இப்பகுதியில் வாழ்ந்தவர்களில் ஓரளவு கல்வியறிவு பெற்றவர்கள் ஃபாக்ஸ்கான், ஹுயுண்டாய், செயிண்ட்கோபெய்ன், சாம்சங் மற்றும் அங்கிருக்கும் ஏராளமான ஆட்டோ ஸ்பேர் உற்பத்தி நிறுவனங்களில் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக ரூ8,000-18,000 சம்பளத்திற்கு பணி செய்கிறார்கள். இதில் பெரும்பாலான பெண்கள் முறையான வசதிகளற்ற தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க இயலாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெண்கள் அடிப்படை உணவு, இருப்பிட வசதிக்காக சென்னை-பெங்களூர் சாலையை மறித்து போராடியதை நாம் மறந்திருக்கலாம். சாம்சங் தொழிலாளர சங்கத்திற்காக போராடியது நினைவில் இருக்கலாம். இச்சமயத்தில் தமிழக அரசுகள் என்ன செய்தன? காவல்துறையை கம்பெனிகளுக்கு ஆதரவாக ஏவல்துறையாக மாற்றின. போராடிய தொழிலாளர்களை அடித்து ஒடுக்கின.
இது சிறுதுளி மட்டுமே. அடிப்படையில் இத்திட்டங்கள் மூலதனம் செய்பவர்களுக்கு லாபமளிப்பவையாக இருந்தன. இதன் வளர்ச்சியில்/ லாபத்தில் இப்பகுதியில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, மக்களுக்கு பங்கில்லாமல் வறுமையில் தள்ளப்பட்டனர். சிறு குழுக்களாக, ரவுடிகளாக, மாபியாக்களாக மாறியவர்கள் இந்த நிறுவனங்களில் கிடைக்கும் கழிவுகளுக்காக(metals scraps waste) வன்முறைகளை நடத்தி தம்மை வசதியானவர்களாக்கிக் கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் தொழில்நகரத்தில் இதுகுறித்து ஏராளமான கதைகள் உண்டு.
'நிலம்' என்பது விவசாயிகளின் மூலதனம்.
'தொழிற்பேட்டை-விமானநிலையம்' என்பது நிதி நிறுவனஙகள், பெரு நிறுவனங்களின் மூலதனம். ஒன்றை அடுத்தது ஈடு செய்யாது.
இந்த 'வளர்ச்சி' திட்டங்களால் சாமானிய மக்களுக்கு பயனில்லை என்பதை பல நிகழ்வுகள் உறுதி செய்ததாலேயே, தமிழ்நாடெங்கும் நிலம் கொடுக்க மறுத்து மக்கள் எதிர்க்கிறார்கள். இது திருவண்ணாமலை -பாலியப்பட்டு சிப்காட், காஞ்சிபுரம்-மேல்மா சிப்காட் ஆகிய திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பை கடந்த 2021-26 திமுக காலத்தில் எதிர்த்தார்கள். 2016-21 காலத்தில் 8 வழி சாலைக்கு எதிராகவும், கெயில் பைப்லைனுக்கு எதிராகவும், ITPL குழாய்க்கு எதிராகவும் விவசாயிகளும், மேலமணக்குடி பகுதியில் துறைமுக உருவாக்கத்திற்கு எதிராக மீனவர்களும் போராடினார்கள். இந்த போராட்டங்களே இந்த கட்சிகளுக்கு தேர்தலில் தோல்வியை கொடுத்தன.
இதனாலேயே பாதிக்கப்படும் மக்கள் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தார்கள். கடந்த காலத்தில் ' வளர்ச்சி'க்காக நிலம் கொடுத்தவர்களின் எதிர்காலத்தை அரசும், அதிகாரிகளும், நிறுவனஙகளும் உறுதி செய்து, வளர்ச்சியில் பங்காளிகளாக மாற்றியிருந்தால், பரந்தூர் மக்களுக்கும் 'வளர்ச்சி', 'விமான நிலையம்' ஆகியவற்றின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அவர்கள் வளர்ச்சிக்கு எதிராக இல்லை, அரசு-அதிகாரவர்க்கம்-காரப்பரேட்டுகளின் கூட்டு அயோக்கியத்தனத்திற்கு எதிராக போராடி தமது சந்ததிகளை காத்துள்ளனர்.
திருமுருகன் காந்தி
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு