மத்திய அதிகார மையங்களிடம் மண்டியிட்டே உயிர்த்திருக்கும் திமுக!
அறம் இணைய இதழ்
திமுக ஏன் பதற வேண்டும்? விஜய் கூறியது உண்மைக்கு மாறான தகவல்களா? சர்க்காரியா கமிஷன் அறிக்கை என்பது எம்.ஜி.ஆர் கொடுத்த குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை. அவற்றில் அன்றைய ஆட்சியின் அவலட்சணங்கள் வெளிச்சம் பெற்றன. அன்று முதலமைச்சர் மகனாக மு.க.ஸ்டாலின் செய்த அத்துமீறல்களை மறக்க முடியுமா?
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் உள்ள விவரங்களை சொன்னால் தி மு க உறுப்பினர்கள் கொந்தளித்து, அவற்றை ‘அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என்கின்றனர்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கை மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலேயே திமுகவினர் உத்தமர்களாகிவிட முடியாது. இக் குற்றச்சாட்டுக்களுக்கான முகாந்திரங்கள், ஆவணங்கள் சமர்பிக்கபட்டதால் தான் இவை விசாரணைக்கு தகுந்தவை என விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆக, விசாரணை ஆணையமே ஒப்புக் கொண்ட குற்றச்சாட்டுக்கள்- பொய்யாகி விடுமா? தமிழ் சமூகம் இதிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டது?
இவற்றுக்கான விடைகளை காண நாம் சற்று பின்னோக்கி பயணப்பட வேண்டும்.
தமிழ்தேசீய உணர்வும், தனித்தமிழ் இயக்கமும் தமிழிசை ஆர்வமும் தமிழர்களின் சிந்தயை ஆக்கிரமித்திருந்த 1940 களின் பிற்பகுதியில் அத்தகைய உணர்வுகளை அரசியல் ஆயுதங்களாக மாற்ற முனைந்த அண்ணாதுரையும் அவரது சகாக்களும் 1949-ல் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தமிழர்களின் அரசியல் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் கட்சியாக திமுகவை அண்ணாத்துரை அறிமுகம் செய்தார்.
வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கிறது என்ற முழக்கமே திமுகவினரின் போர்க் குரலாக அன்று ஒலித்தது எனலாம் .
மொழிவாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, திமுக திராவிட நாடு கோரிக்கையை கை விட்டு, தி மு க , காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே உயர்த்தி பிடித்தது. பொதுவுடைமை இயக்கத்திலும் , தேசீய பாரம்பரியத்திலும் வலுவாக இருந்த தமிழக அரசியல் களம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களினால் திசைமாறி தி முக பக்கம் நகரத் தொடங்கியது . இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவும் , தமிழ் தேசீய உணர்வாளர்களின் காங்கிரஸ் எதிர்ப்பும் பாலங்கள் அமைத்து கொடுத்தன.
1967 -ல் ஏழு கட்சி கூட்டணி தி மு க தலைமையில் தேர்தலை சந்தித்தது, தி முக வினரே எதிர்பார்க்காத வெற்றியை இக் கூட்டணி கண்டது. அண்ணாத்துரையின் தலைமையில் தி மு க ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. மக்களின் ஆதரவை பெற்ற இந்த ஆட்சி 1969ல் அண்ணாவின் மறைவால், உண்மையில் தடம் புரண்டது.
ஆம், கருணாநிதி தலைமையில் 1969 ல் அமைந்த ஆட்சி தமிழ்நாட்டில் மது விலக்கை
நீக்கி, சாராயக் கடைகளை திறந்து
சீரழிவை தொடங்கி வைத்தது. அரசு நிர்வாகத்தில் கறை வேட்டிகளின் தலையீடு பெருகியது, திமுகவின் மாவட்ட செயலாளர் அந்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் பெரிய அதிகார மையமானார்கள். அரசு நிருவாகம் அரசியல் தலையீடுகளால் நேர்மை இழந்தது.
இந்த அவல நிலைக்கு எதிராக ராஜாஜி குரல் கொடுத்தார்.
திமுகவினரின் கட்ட பஞ்சாயத்து
தமிழக மக்களை கொந்தளிக்க வைத்தன. அரசியல் களத்தில் காமராஜரின் செல்வாக்கு – நாகர்கோவில் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு – உயரத் தொடங்கியது.
இளம் வயதில் ஆட்சியிலும் கட்சியிலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கருணாநிதி “பல்வேறு வழிகளை” கையாண்டார்.
சி.பா ஆதித்தனாரின் பத்திரிக்கை பலத்தாலும், கோஷ்டி அரசியல் மூலமாகவும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த கருணாநிதி மூத்த தலைவர்களான நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரங்கட்டினார்.
மக்கள் செல்வாக்கு மிக்க எம் ஜி ஆரை முடக்கி வைக்க முயன்றார். இவற்றிற்கெல்லாம்
ஒரு முடிவு 1972ல் பிறந்திருக்கும் . ஆனால் அரசியல் களம் காங்கிரசில் ஏற்பட்ட பிளவால் தலை கீழாக மாறத் தொடங்கியது.
1969 குடியரசு தலைவர் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக -இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டானது. தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான அமைப்பு ஸ்தாபன காங்கிரசாக உருவெடுத்தது. இந்த சூழலில் இந்திரா காந்தி மன்னர் மான்ய ஒழிப்பு சட்டத்தையும், 14 பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தார் . இத்தகைய முற்போக்கு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகின. இந்த செல்வாக்கை மூலதனமாக வைத்து இந்திரா 1971-ல் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார்.
உள்ளபடியே 1972-ல் தேர்தல் நடந்திருந்தால் காமராஜர் வென்று திமுக தோல்வியை சந்தித்து இருக்கும் என்பதே அன்றைய அரசியல் கணிப்பாக இருந்தது.
ஆனால் இந்திரா காந்தியின் செல்வாக்கில் நாமும் குளிர் காயலாம் என்ற எண்ணத்தில் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலோடு இணைந்து சட்டமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்தார். இதன் மூலம் காமராஜரை எதிர்கொள்ளவும், உட்கட்சி எதிரிகளை அடக்கவும் கருணாநிதிக்கு ஒரு வழி கிடைத்தது.
1971 தேர்தலில் வென்ற தி மு க வினரின் அட்டகாசமும், அதிகார அத்து மீறல்களும் எல்லை கடந்தன. கருணாநிதியின் துதி பாடிகளே ஆட்சி அதிகாரத்திலும்,கட்சி பொறுப்பிலும் இருக்க ஊழலும் ஊதாரித்தனமும் பெருகின. கருணாநிதியின் விளம்பர வேட்கைக்கோ அளவே இல்லாமல் போயிற்று, ஊரையடித்து உலையில் போடுபவர்கள் கருணாநிதியின் புகழைப்பாடியே இந்த கேவலங்களை அரங்கேற்றினர். எதிர்ப்பவர்கள் அடக்கப்பட்டனர் அல்லது அடித்து நொறுக்கப்பட்டனர்.
1970-1973 களில் நடந்த மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டங்களை உற்று தோக்கினால் கருணாநிதி ஆட்சி எவ்வாறு காட்டாட்சி நடத்தியது எனப் புரியவரும்.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர் போராட்டமும், மாணவர் உதயகுமாரை காவல்துறை கொன்றதும், பெற்ற தந்தையையே செத்தவன் தன் மகனல்ல எனச் சொல்ல வைத்ததும் முடியாத வடுக்களாகும்
இதையெதிர்த்து திருச்சியிலும்,பாளையங்கோட்டையிலும் சென்னையிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் அதில் காவல்துறை நள்ளிரவில் மாணவர்களின் மண்டைகளை பிளந்ததும் தமிழகம் மறக்கவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறக்கலாமா?
சிம்சன் போராட்டத்தில் வி. பி சிந்தனையும், ஆர் குசேலரையும் தாக்கி கொல்ல முயன்ற கொலைகார திமுக வினரை கருணாநிதி காப்பாற்றினாரே அது மறந்து போயிற்றா?
தொழிற்சங்க உரிமைகளை மறுதலித்து காட்டூர் கோபாலை தொழிற்சங்க தலைவராக்க கருணாநிதி காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியதை மறந்துவிட்டனரா, மார்க்சிஸ்ட் தலைவர்கள்?
இந்த காலத்தில் தான் திமுக தலைவர்களின் வாரிசுகள் குறிப்பாக கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினும், அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பொய்யாமொழியும் அடித்த பாலியல் லூட்டிகளும், அதிகார தாண்டவங்களும் சொல்லி மாளாது. இவர்கள் குறித்த பல புகார்களில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், எமர்ஜென்ஸி அதற்கு ஒரு வாய்ப்பானது, நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு!
இந்த நிலையில் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரித்து உண்மையை வெளிக்கொணருமாறு எம் ஜி ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான எம். கல்யாணசுந்தரமும் மத்திய அரசிடம் 1972-ம் வருடம் நவம்பர் -ல் ஒரு புகார் மனுவை சமர்ப்பித்தனர்.
1972 அக்டோபரில் எம் ஜி ஆர் தி முக விலிருந்து தூக்கியெறியப்படுகிறார். எம் ஜி ஆர் வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு பேருந்தோ அல்லது லாரியோ அல்லது பொது வாகனமோ எம் ஜி ஆரின் புகைப்படம் ஒட்டபடாமல் சாலைகளில் ஓட்ட முடியாத நிலை அன்று இருந்தது. அந்த அளவுக்கு கருணா நிதி எதிர்ப்பும், எம்.ஜி.ஆர் மீதான அனுதாபமும் தமிழக மக்களிடம் தூக்கலாக இருந்தது. மக்களிடம் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட அரசாக கருணாநிதி அரசு இருந்தது. திண்டுக்கல் இடைத் தேர்தலின் முடிவே இதனை உணர்த்தும்.
இந்த கோரிக்கைகள் மீது பிரதமர் இந்திரா காந்தி நடவடிக்கை உடனடியாக எடுக்கவில்லை. இதற்கு காரணம் இந்த குற்றச்சாட்டுக்களில் சாரமில்லை என்பதனால் அல்ல, இதன் விளைவாக தமிழகத்தில் காமராஜர் அரசியல் ரீதியாக வலுப்பெற்று விடுவார் என்ற காரணத்தினால் தன்னுடன் நட்புடன் தேர்தல் களம் கண்ட கருணாநிதி மீது விசாரணைக்கு இந்திரா காந்தி உத்தரவிடவில்லை.
பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களின் மாணவர் போராட்டங்களை தொடர்ந்து வட இந்தியாவில் அரசியல் களம் சூடேறத் தொடங்கியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுமை புரட்சி என்ற கோஷத்தினால் இளைஞர்கள் ஆளும் காங்கிரசிற்கு எதிராக திரளத் தொடங்கினர். அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பால் தனிமை படுத்தப்பட்ட பிரதமர் இந்திரா, ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வட இந்தியாவும் தென் இந்தியாவும் அணுகிய விதம் வேறு வேறானவை என்பதை நாம் மறக்கலாகாது. அரசியல் களச்சூழல்களும் வெவ்வேறானவை ஆகும்.
எமர்ஜென்சியை காமராஜர் எதிர்த்தார், தி மு க செயற்குழு கண்டித்தது. ஆனால்,
இருபது அம்ச திட்டத்தை கருணாநிதியும் தமிழக அரசும் வரவேற்றன. கருணாநிதி சஞ்சய் காந்தியின் ஐந்து அம்ச திட்டங்களையும் ஆதரிக்கும் அளவிற்கு சென்றார்!
காமராஜரின் மறைவை (அக்.1975) அடுத்து தி மு க அரசு 31/1/1976 அன்று கலைக்கப்பட்டது. ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றிற்காக தி மு க அரசு கலைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் தி மு கழகமோ அவசரநிலைக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க தி மு க குரல் கொடுத்ததால் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதாக கூறியது. உண்மை என்னவோ இவ்விரண்டு சித்தரிப்புகளுக்கும் இடையில் உள்ளது.
அந்த காலகட்டத்தில் மக்கள் விரோத அரசாக மக்களிடமிருந்து அன்னியப்பட்ட அரசாக தி முக அரசு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே மக்களிடம் பெரும் வரவேற்பை ஆட்சிக் கலைப்பு ஏற்படுத்தியது, தமிழ்நாடு நிம்மதி பெருமூச்சு விட்டது என்பதே உண்மை. இதே உணர்வு அடுத்து வந்த 1977 தேர்தலிலும் எதிரொலித்தது.
ஆட்சிகலைப்பை தொடர்ந்து 3/2/1976-ல் தி மு க அரசு மீதான ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை விசாரிக்க நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
நீதிபதி சர்காரியா கமிஷன் அமர்வில் எம்.ஜி.ஆரும். நாஞ்சில் மனோகரனும் கலந்து கொண்டு குற்றச்சாட்டுகள் குறித்த விளக்கத்தை அளித்தனர்.
வீராணம் திட்ட ஊழல் விவகாரம் , அஞ்சுகம் பிக்சர்ஸ , மேகலா பிக்சர்ஸ் , திருமதி தர்மா மற்றும் உறவினர்களுக்கு குவிந்த சொத்துக்கள் குறித்தும்,
சமயநல்லூர் மின்நிலையத்தை தனியாருக்கு விற்றதை குறித்தும்,
சர்க்கரை கொள்புதலில் நடந்த ஊழல்,
தஞ்சை கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு வங்கிகளில் நடத்தப்பட்ட ஊழல், தி மு க வின் அறக்கட்டளைகளில் ஊழல்
சென்னை சிம்சன் நிறுவனத்தில் அரசு இயந்திரத்தின் மற்றும் குண்டர்களின் மூலம் தொழிற்சங்கங்களை முடக்கிய விவகாரம்,
மாநில மின்வாரியத்தில் நடந்த முறைகேடு,
மாநில காவல்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்கிய விவகாரங்கள்:
சிங்கம்புணரியில் 27/8/1972 ல் நடந்த மோதல், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் 1971 ல் நடந்த அக்கிரமம் மற்றும் கோவையில், மதுரையில், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி நகரங்களில் நடந்த காவல்துறையினரின் அக்கிரமங்கள்,
சக்தி பைப் நிறுவன ஊழல், சென்னை மாநகராட்சியில் நடந்த மஸ்டர் ரோல் ஊழல், பூச்சி மருந்து தெளித்தல் நடந்த ஊழல்.. போன்ற விவகாரங்களை ஆணையம் தீர விசாரித்து ஆவணங்களை திரட்டி சாட்சியங்களை விசாரித்து, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி, இக் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறிந்து இவற்றின் மேல் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்க்காரியா ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.
கருணாநிதி தலைமையிலான தி மு க அரசு விஞ்ஞான ரீதியில் தெளிவாக ஊழல் செய்துள்ளது என்பதை ஆணையம் கூறியுள்ளது. ஆணையத்தின் முன் தி மு க வின் வழக்குரைஞர்களாக சாந்தி பூஷன், எஃப் எஸ் நாரிமன், கோவிந் சுவாமிநாதன் மற்றும் ஜ. ராமசாமி ஆகியோர் ஆஜராயினர்.
எதிரணியினர் (எம்ஜிஆர் மற்றும் கல்யாணசுந்தரம் சார்பாக) என்சி ராகவாச்சாரியார், கே டி பால் பாண்டியன்,என் டி வானமாமலை, வி.பி இராமன் ஆகியோர் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்குகளை முறையாக வழக்கு நடத்தி தீர்ப்பு அளிக்காமல் நீர்த்து போக வைத்தது யார் என்றும் அதற்கு துணை போனோர் யாரென்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் செல்வாக்கிழந்த தி மு க 1977ல் படு தோல்வி அடைந்தது. பாராளுமன்ற தேர்தலில் தி மு க 2 இடங்களில் மட்டும் வென்று மீதி இடங்களில் தோல்வியடைந்தது. சட்டமன்ற தேர்தலில் தி முக 48 இடங்களிலும் அதிமுக 130 இடங்களிலும் வென்றன.
புதிதாக தில்லியில் ஆட்சியில் அமர்ந்த ஜனதா அரசிற்கு மொரார்ஜி தேசாய் தலைமை தாங்கினார் . அவசரநிலை அத்து மீறல்களை விசாரிக்க ஷா கமிஷனை ஏற்படுத்தினார் இந்திரா காலத்தில் தொடுக்கப்பட்ட மிசா வழக்குகளை வாபஸ் வாங்கினார் . ஜார்ஜ் பெரனாண்டஸ் மற்றும் மது தந்தவதே போன்ற சோசலிசத் தலைவர்களின் மீது போடப்பட்ட அரசியல் வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இதை கண்ணுற்ற கருணாநிதியும் தன்மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகளை ரத்து செய்ய மொரார்ஜியிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், மொரார்ஜியோ அரசியல் வழக்குகள் வேறு ஊழல் வழக்குகள் வேறு என கறாராக கூறிவிட்டதால், கருணாநிதி நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என இந்திராவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கினார். 1980 தேர்தலில் ஆட்சியில் மீண்டும் அமர்ந்த இந்திரா காந்தி இவ்வழக்குகளை துரிதப்படுத்தாமல் இருந்ததற்கு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஆனால், உண்மை இங்கு சத்தமின்றி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதை காண்கிறோம்.
இத்தகைய அணுகுமுறையால் தன் மீது நீதிமன்றங்கள் பாதகமான தீர்ப்பு அளிக்கப்படுவதில் இருந்து தப்பித்து கொண்டார் கருணாநிதி. இதனை அரசியல் சாமர்த்தியம் என சிலர் எண்ணலாம் ஆனால், இதை நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகவோ, தாங்கள் குற்றமற்றவர்கள் என உலகம் ஒப்புக் கொண்டது என மார்தட்டிக் கொள்ளவோ இயலுமா?
மிசா வழக்கில் கைதானதே ஒரு பாராட்டு போல பலர் பேசினாலும் அன்றைய சூழலில் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு வகையிலான பாலியல் சீண்டல் புகார்கள்,அதிகார முறைகேடுகள் ஆகிய புகார்கள் சென்னையிலும் திருச்சியிலும் எழுந்தன. ஆனால் அதிகாரத்தில் அன்று இருந்தது கருணாநிதி இருந்ததால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு இருந்தன.
எனவே ஓடி ஒளிந்தவர் மீது தடுப்புக் காவல் சட்டம் (ஆட்சி கலைப்பிற்கு பின்னர்) பாய்ந்ததில் வியப்பில்லை. அவற்றை பெருமையாக பேசுவதை கண்டு தான் நமக்கு வியப்பாக உள்ளது.
குடும்ப கட்சியாக சுருங்கிவிட்ட தி மு க வை காப்பாற்ற, முட்டுக் கொடுக்க அடிமட்ட தொண்டர்கள் யாரும் முன்வராத வேளையில் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையாளர்களும், முன்னாள் முற்போக்காளரகளும், பொதுவுடைமை சித்தாந்த சாரத்தை மறந்த கட்சி தலைவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு உண்மையைச் சொன்ன விஜய்யை தாக்குவதை எப்படிப் புரிந்து கொள்வது?
ச. அருணாச்சலம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/32922/emargency-stalin-dmk/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு