காவல்துறையே சொத்தை முடக்கும்? ஆபத்தான சட்டம்! புட்டுப் புட்டு வைத்த முன்னாள் நீதிபதி

ஓன் இந்தியா தமிழ்

காவல்துறையே சொத்தை முடக்கும்? ஆபத்தான சட்டம்! புட்டுப் புட்டு வைத்த முன்னாள் நீதிபதி

புதிய 3 குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல்துறைக்குக் கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருவரின் சொத்தையே முடக்கக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே இந்தச் சட்டங்கள் பாமர ஜனங்களுக்கு எதிரானது என்றும் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கென சொந்தமாக குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இதுவரையில் இருந்த குற்றவியல் சட்டங்கள் தண்டனைக்கானதாக இருந்தன என்றும் இப்போது அவை நியாயத்துக்கான சட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறிய அவர் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் முதலாவது வழக்கு, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அதிகாலை 12.10 மணிக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய 3 குற்றவியல் சட்டங்களைப் பற்றி மறுபரீசினை செய்ய வேண்டும் என்று முன்பே முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

மத்திய அரசி சில மாதங்களுக்கு முன்பு இந்த பாரதிய சக்‌ஷயா சநிதா, பாரதிய நகாரிக் சுரக்‌ஷா சநிதா, பாரதிய நியாய சநிதா 2023 ஆகிய 3 புதிய சட்டங்களும் முதலில் யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைமுறைக்கு வரும் என்றும் பிறகு படிப்படியாக நாடு முழுவதும் அமல் செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கு மாறாக இப்போது உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, அதற்கு நாடு முழுவதும் நீதித்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உண்மையில் இந்தப் புதிய 3 சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எந்த வகையில் எதிரானவை என்பது பற்றி முன்னாள் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் விளக்கங்கள் முன்வைத்துள்ளார்.

இது பற்றி அவர், “இந்தியாவில் நடைமுறையில் உள்ள நூற்றுக்கணக்கான சட்டங்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான். எனவே சட்டத்தை மாற்றலாமா? என்றால் மாற்றலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்,பாஜக அரசு மாற்றும் போது என்ன நடைமுறையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை நாம் முக்கியமாகப் பார்க்கக் கவனிக்க வேண்டும். அது மிகமிக முக்கியமானது. இதைக் கொண்டுவந்துள்ள முறை ஆட்சேபனைக்குரியது.

india Criminal Laws

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வரும்போது 143 எம்பிகளை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அப்படி கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சிகளே இல்லாமல் இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றியது ஆட்சேபனைக்குரியது.

அதுவும் இது சாதாரண சட்டம் இல்லை. குற்றவியல் சட்டத்திருத்தம். அதை விவாதிக்க வேண்டாமா? அவையில் அதைப்பற்றி அலசி ஆராய வேண்டாமா? அப்படி எதையும் இந்த அரசு செய்யவே இல்லை. கிட்டத்தட்ட 80% ஷரத்துகளை அப்படியே மீண்டும் பயன்படுத்தி உள்ளனர். மீதி உள்ள 20% மாற்றம் என்ன மாதிரியானது? பொதுமக்களுக்கு ஆதரவான மாற்றமா? இல்லை. காவல்துறைக்குக் கட்டுக்கடங்காத அதிகாரத்தை இந்த மாற்றம் கொடுத்துள்ளது. இந்த 20% மாற்றம் என்பது மிகப்பெரிய மாற்றமாக உள்ளது.

உதாரணமாக ஒன்று சொல்லி விளக்கலாம் என்று நினைக்கிறேன். காவல்துறை விசாரணையில் இருப்பவரைக் கேட்ட கேள்வி இல்லாமல் தண்டித்து அவரைக் கொலை செய்யும் போக்கு என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. லாக் அப் டெத் பற்றி பக்கம் பக்கமாகப் பேசலாம். சாத்தான்குளத்தில் மட்டும் இதைப் போன்று நடக்கவில்லை. தினந்தோறும் நடக்கிறது.

காவல்துறை விசாரணையின் போது ஒருவர் இறந்துவிட்டால், முன்பு இருந்த சட்டப்படி மாவட்ட நீதிபதி வந்து விசாரணை செய்து ஒரு அறிக்கை தருவார். இதுதான் நடைமுறை. இப்போது அது தேவை இல்லை என்று சட்டத்தைத் திருத்தியுள்ளனர். ஒரு வட்டாட்சியர் அல்லது ஆர்.டி.ஓ அறிக்கை கொடுத்தால் போதும். நீதித்துறை சுதந்திரமான அமைப்பு. ஆனால், இந்த வட்டாட்சியரும் ஆர்.டி.ஓவும் அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கம். அவர்கள் அரசுக்கு எதிராக அறிக்கை தருவார்களா?

124ஏ ராஜத்துரோக குற்றச் சட்டம் என ஒன்றுள்ளது. இதை அப்படியேதான் இப்போது நீடித்திருக்கிறார்கள். அதை நீக்கவே இல்லை. அரசை விமர்சித்தால் அது குற்றம் என்பது வெள்ளைக்காரன் போட்ட சட்டம். அதை ஏன் ஜனநாயக நாட்டில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? முதலில் ஐபிசி சட்டம் என இருந்ததை இப்போது பிஎன்எஸ் என பெயர் மாற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

முன்பு 3 ஆண்டு தண்டனை என்று இருந்தது. இப்போது ஆயுள் தண்டனையே கொடுக்கலாம் என்று மாற்றி இருக்கிறார்கள். முன்பு இருந்த சட்டப்படி கை விலங்கு போடக்கூடாது. இப்போது கை விலங்கு மாட்டலாம் என்று மாற்றி இருக்கிறார்கள். அதேபோல காவல்துறையே சொத்தை முடக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்தை முடக்க முடியாது.

இன்னொரு விசயம். உபா சட்டம். அதற்குப் பிணையே கிடைக்காது. தீவிரவாத சட்டங்கள் என்று முன் தனியாக இருந்தது. இப்போது அதை இந்த பிஎன்எஸ் சட்டத்திற்கு உள்ளாகவே சேர்த்துவிட்டார்கள். அரசை எதிர்த்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டால் அதை நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவரை தான் சேரும். இதற்கு முன்பாக அப்படிக் கிடையாது.

விவசாயிகள் டெல்லியில் போராடினார்கள். பரந்தூரில் போராடினார்கள். அதற்கு முன்பு தூத்துக்குடியில் கூட மக்கள் போராடினார்கள். இதை எல்லாம் தீவிரவாத போராட்டம் எனக் கூறி உள்ளே தூக்கிப் போட முடியும். இதற்கு இந்தச் சட்ட மாற்றம் அனுமதி அளிக்கிறது. ஆகவே, சுருக்கமாகச் சொன்னால் இது காவல்துறைக்குக் கட்டுக்கடங்காத அதிகாரத்தைக் கொடுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது” என்கிறார்.

https://tamil.oneindia.com/news/chennai/new-criminal-laws-former-judge-hariparanthaman-says-it-is-dangerous-618737.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு