மணிப்பூரிலிருந்து வரும் இரத்தவாடை...!

அறம் இணைய இதழ்

மணிப்பூரிலிருந்து வரும் இரத்தவாடை...!

எங்கு பார்த்தாலும் கண்ணீர்….. கவலை…… உயிரச்சம்…… எந்த நேரமும் யாரும் கொல்லப்படலாம் என்கிற பதற்றம்! ஒரு பக்கம் கேட்பாரற்ற பிணங்கள், மறுபக்கம் உணவின்றி பசியில் துடிக்கும் அகதிகள்! மனிதாபிமானம் மரித்துப் போனதோ மணிப்பூரில்? களத்திற்கு சென்ற எழுத்தாளர் பாபு வர்கீஸ், கரண் தாப்பருக்கு அளித்த நேர்காணல்;

மோடி அரசின் ஸ்பான்சரில் நிகழ்த்தப்பட்ட குஜராத் கலவரங்களை மிஞ்சும்படி உள்ளது மணிப்பூர் கலவரங்கள்! மைத்தேயி இன முதல்வரான பைரோன்சிங் மணிப்பூரில் அரசு ஸ்பான்சரில் அதிகொடூரமான கலவரங்களை நிகழ்த்தி, குக்கி பழங்குடி இனத்தவரை அழித்தொழிக்கும் செயல்பாடுகளுக்கு அனுசரணையாக இருக்கிறார் என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் பின்னணியில்  கலவர பூமியான மணிப்பூரில் ஐந்து நாள்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார் பாபு வர்கீஸ். அவருடன் புனித டாக்டர் ஜான்சனும், ஆசியா நெட், ஷாஹினா டிவி, குட்நெஸ் டிவி ஆகிய ஊடகங்களைச்  சேர்ந்தவர்களும் பயணித்தனர். இக் குழுவினர் ஒவ்வொருநாளும் 12 முதல் 13 மணிநேரம், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்து வந்துள்ளனர். காவல்துறையினரும், அதிரடிப்படியினரும் கெடுபிடிகளுக்கு இடையிலும் இவர்களுக்கு சற்று உதவியுள்ளனர்.

இனி, ஊடகவியலாளரும்,எழுத்தாளருமான பாபு வர்கீஸுன் வார்த்தைகளில்;

மணிப்பூர் மாநிலம் முழுக்க இரத்தவாடை அடிக்கிறது. வீடுகளும், தேவாலயங்களும், பள்ளிகளும், கடைகளும், நிறுவனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. சாம்பலால், அம்மாநிலத்தின் மண் கறுத்துக் கிடப்பதைக் கண்டோம்.

எங்களின் பார்வையில் பட்டது வெகுசில காட்சிகள் மட்டுமே. ஆனால் நடந்த வன்முறையில் ஏற்பட்ட சேதம் விவரிக்க முடியாதது.

இச் சிறிய பயணத்தில்,  எங்கள் குழுவினர், மைத்தி – குக்கி இனத் தலைவர்களையும், இந்து- கிறித்தவ மதத் தலைவர்களையும், நாகா இனத் தலைவர்களையும், மாணவ அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும், பெண்ணுரிமை அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும் சந்தித்து பேசினோம்.

மைத்தி இனத்தவரும், குக்கி இனத்தவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்கின்றனர்.

‘நீ யார்? என்ன செய்துகொண்டிருக்கிறாய் இங்கே?’ என்கிற கேள்விகளுக்குப் பிறகு, தாக்குதல் மட்டுமே அரங்கேறுகிறது!

மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில், மைத்தி இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.  அங்கு எங்கள் குழுவினர், ஒரு பெண்மணியைச் சந்தித்தோம். அப் பெண்மணியின் மிகுந்த அச்சத்திலும், நடுக்கத்திலும் காணப்பட்டார். தன் அண்ணி மைத்தி இனத்தவருக்கு பயந்து கடந்த 82 நாள்களாக, வீடுவீடாக, மறைந்து வாழ்வதாகவும், அவருடன் அவரது இரண்டு வயது ஆண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்த அப் பெண், காணாமல் போன தனது கணவனைத் தேடிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

காங்கோபி என்கிற சிற்றூரில், புதைக்கப்படாத ஏழு உடல்களை  எங்கள் குழுவினர் கண்டோம். அப் பிணங்களைப்பற்றி யாரும் கவலைப்படும் நிலையில் இல்லை. கெடு வாய்ப்பாக, அப் பிணங்களை நாய்கள் தின்று கொண்டிருப்பதைப் பார்த்த நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அவ்வூரில் சுமார் 200 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.  நெருப்பு எதையும் விட்டுவைக்கவில்லை. அந்த அவலங்களை நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

குக்கி இன உரிமை அமைப்பின் பெண் தலைவரான திருமதி கின்லே என்கிற பெண்மணியை  எங்கள் குழுவினர் சந்தித்தோம். அவர் முகத்தில் அச்ச உணர்வோடு எங்களிடம் பேசினார். இம்பாலில் உள்ள செவிலியர் கல்லூரிக்குள், மைத்தி இனத்தவர் சிலர் நுழைந்து, அங்கிருந்த மாணவிகள் சிலரை வன்புணர்வு செய்ததாகவும், அதில் ஒரு பெண் கொல்லப்பட்டதாகவும் கின்லே கூறினார்.

கடந்த மே மாதம் 4 -ஆம் நாள், இம்பாலில் உள்ள தன்னுடைய மகளுடைய மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டார். திடீரென சில கலவரக்காரர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து, யாரையோ தேடினர். சிலரைக் கொலை செய்யப் போவதாக அவர்கள் கூறினர். அவர்கள் தேடி வந்தவர்கள் யாரும் அங்கு இல்லாததால், அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் அருகிலிருந்த ஒரு ஆயுதக் கிடங்கிலிருந்து பல ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, மூன்று மைத்தி இன ஆண்கள் அங்கு வந்தனர். அவர்கள் அப் பெண்மணியிடம், தங்களைக் காப்பாற்றுமாறு அடைக்கலம் கேட்டனர். உடனே அப் பெண்மணி தனது மருத்துவமனையின் கதவை மூடி, அவர்களைக் காப்பாற்றினார்.

காங்கோபி பகுதியிலுள்ள ஒரு சிற்றூரில், ஒரு பெண்ணை நாங்கள் ஒரு பெண்ணை சந்தித்தோம். அப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன், தனது தாயாரையும், வேறு மூன்று பெண்களையும் அழைத்துக் கொண்டு, மூன்று நாள்களாகக் காடுகளில் மறைந்து திரிந்திருக்கிறார். பிறகு நாகா இன மக்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். கத்தோலிக்க கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள ஓர் அகதி முகாமில் தாங்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பேர், அகதி முகாம்களில் இருக்கிறார்கள். தாம் தங்கியுள்ள அகதி முகாம்கள், அவ்வாறு அழைக்கப்படுவதை, அவர்கள் ஏனோ விரும்பவில்லை. அவ்விடங்களில், சில நிமிடங்கள்கூட, நம்மால் நிற்க முடியாது. நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் வானத்தை நோக்கிக் கதறுகின்றனர்:

கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங்

“நாங்கள் பெற்றோரை இழந்துவிட்டோம்; இருக்க இடமில்லை. பசி எங்களைத் தின்கிறது… எங்களுக்கு உண்ண உணவில்லை;   உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா…?”

இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.

அங்கிருந்த ஓர் இளைஞர், தான் ஒரு பள்ளி ஆசிரியன் என்றும், தனது பள்ளி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், இனி எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை..என்றும் அழுதபடி கூறினார்.

இப்படி சில சம்பவங்களல்ல, ஆறாயிரம் உண்மைக் கதைகள் இருக்கின்றன. எல்லாக் கதைகளும் வலிகள் கொண்டவை; கண்ணீர் நிறைந்தவை; அச்சம் நிறைந்தவை; அதிர்ச்சி தருபவை; எதிர்காலத்தைத் தொலைத்தவை.

இரண்டு இனத்தவர்களுக்கு இடையே நடைபெறும் இவ் வன்முறைகளுக்கு இரண்டு தரப்புமே காரணமாக உள்ளன. குக்கி இனத்தவர், தாங்கள் தாக்குவதில்லை என்றும், தங்களது தேவாலயங்களும், வீடுகளும் தான் எரிக்கப்பட்டுள்ளன என்றும், தங்களைத் தாங்கள், தற்காத்துக் கொள்ள முயல்வதாலேயே எதிர்தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிட்டனர்.

ஜூன் மாத நடுவில், மைத்தி இனத்தவர் நள்ளிரவில் ஒரு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 100 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், சில அறிக்கைகள் கூறுகின்றன. இச் சம்பவம் பற்றி எங்களால் உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதை நான் சொல்ல முடியும்.

லாம்கா என்கிற பகுதியில், மைத்தி இனத்தவரின் நான்கு வீடுகள் இடிக்கப்பட்டிருப்பதை,  எங்கல் குழுவினர் உறுதி செய்தோம். நல்வாய்ப்பாக, வீட்டில் இருந்த மனிதர்கள் வெளியேறிய பிறகே, வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை உறுதிசெய்ய, எந்த மைத்தி இனத்தவரும் அங்கு இல்லை.

இம்பாலில், 36 மணிநேரத்தில், 241 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன; அழிக்கப்பட்டு இருக்கின்றன. மே 3 அல்லது 4 – ஆம் நாள், 67 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தேவாலயத்தை, நூறுக்கும் மேற்பட்டவர்கள், அழிக்க முயன்றனர். அதன் கதவு உறுதியான இரும்பால் ஆனதால், அதை அவர்களால் உடைக்க முடியவில்லை. இக்காட்சிகளைத் தாம் கண்காணிப்புக் கேமராவில் நாங்கள் பார்த்தோம்.

இம்பாலில், மேலும் 10 தேவாலயங்கள் அழிக்கப்பட்டதை நாங்கள் கண்டோம். மைத்தி இனத்தவரின் தேவாலயங்கள், குக்கி இனத்தவர்களால் அழிக்கப்பட்டன என்று கூறுமாறு, ரோஹித், சாமுவேல் ஆகிய இரு இளைஞர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இதில் உண்மை இல்லை என்று சாமுவேலின் தந்தை இதனை மறுத்துள்ளார்.

பல இடங்களில், பல நேரங்களில் அதிரடிப்படையினர் கெடுபிடிகள் செய்தாலும் கூட எங்களுக்கு உதவினர். மீராபாய் என்கிற பெண், தங்களை சோதித்த போது எங்களிடம் பணம் கேட்டார். பலரிடமும் 500 ரூபாய் வரை,  தான் வாங்கியதாகவும், ஆயுதங்கள் வாங்க அப்பணம் பயன்படும் என்றும் அவர் கூறினார்!  எங்களுடன் வந்த டாக்டர் ஜான்சன், தன்னிடமிருந்த பணம் மொத்தத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது.

இம்மாநிலத்தில் காவலர்கள் கையறு நிலையிலேயே இருக்கின்றனர். காவல் நிலையங்களிலில் இருந்து, ஏறக்குறைய 4,500 துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஓர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கூறினார். ஆனால், சில பத்திரிகையாளர்கள், களவுபோன துப்பாக்கிகளின் எண்ணிக்கை 8000-கும் மேல் இருக்கலாம் என்றனர்.

மணிப்பூர் கலவரம், இம்மாநிலத்தோடு நின்றுவிடாமல், வடகிழக்கு முழுவதும் பரவி வருவது தான் எங்களுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சத்தீஸ்கர், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு ஆயிரமாயிரம் மக்கள் நகர்ந்துகொண்டிருப்பதை கண் கூடாகக் கண்டோம்.

கடந்த புதன்கிழமை. ஒரு குக்கி இன இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறையின் விசாரணையின் போது அவர் இறந்தாரா? பாலத்தில் இருந்து குதித்து இறந்தாரா? இரயிலில் இருந்து குதித்து இறந்தாரா? என்பது போன்ற பல ஐயங்கள், அவரது மரணத்தில் இருக்கின்றன. ஆனால், அவர் கடைசியாகத் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் சொன்ன கடைசி வார்த்தைகள்:  ‘மைத்திகள் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஆபத்தில் இருக்கிறேன்…’என்ற வார்த்தைகளே!

நேர்காணலின் முடிவில், பாபு வர்கீஸ், மணிப்பூரின் துயரத்தை முடிவுக்குக்கொண்டுவர, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் கைகூப்பி, கண்ணீர் விட்டு அழுது, வேண்டிக் கொண்டார். அவ் வேண்டுதல் பார்ப்போர் மனதை உலுக்கியது.

இந்நாட்டின் கோடிக்கணக்கான எளிய மக்களின் வேண்டுதலும் இதுவாகத் தானே இருக்க முடியும்…..!

“தி வயர்”- இணைய இதழில் வந்த ஆங்கில நேர்காணலின் சாராம்சமான தமிழ் வடிவம்: முனைவர் தயாநிதி

- அறம் இணைய இதழ்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு