வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும் உரிமைகள்!

அறம் இணைய இதழ்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும் உரிமைகள்!

கோவை, சேலம் மாநகரங்களை சூயஸ் நிறுவனம் குடிநீர் விநியோகத்தின் பெயரால் சூறையாட உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளில் பல வில்லங்கங்கள் உள்ளன. குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் தரும் போது ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை மற்ற நாடுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து அலசுகிறது இந்த கட்டுரை;

விடுதலை பெற்ற பிறகும் இன்னும் விட்டுப் போகவில்லையோ, அடிமை மனோபாவம்!

குடிநீர் என்பது இயற்கை தரும் வரப் பிரசாதம். அதை பயன்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை. கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துடன் 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. 8 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன.இன்னும் முழுமை பெற்றபாடில்லை.

ஒப்பந்தப்படி ஓராண்டு ஆய்வு மற்றும் 4 ஆண்டுகள் கட்டுமானத்துக்கான காலம். ஆனால் 8 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பல பகுதிகளில் இதை அந்த நிறுவனம் செயல்படுத்தவில்லை. 1.50 லட்சம் இணைப்புகளில் 1.40 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. ரூ 2961 முதலீடாம்! 646 கோடி பராமரிப்பு செலவாம்.

எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ”குடிநீரில் பணம் பறிப்பதா? அட்டூழியம்” எனக் கூறி, திமுக இதை கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் செய்தது. ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்துவிடுவோம் என்றது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த நிறுவனத்திற்கு கூடுதல் நிதி செய்து திட்டத்தை செயல்படுத்திவிட்டது.

டிஜிட்டல் முறையில் தண்ணீர் பயன்பாடு அளவிடப்பட்டு பணம் வசூலிக்கிறார்கள். கட்டணத்தை நினைத்த போது இரட்டிப்பாக்கி தர நிர்பந்திக்கிறார்கள். சீரான குடிநீர் விநியாகம் இல்லை…என பல புகார்கள் கோவைவாசிகளால் கூறப்படும் நிலையில் இந்த திட்டத்தை சேலத்தில் சுமார் 4,300 கோடி செலவில் பெரிய அளவில் நிறைவேற்ற சூயஸ் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் 2025- ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுவிட்டார்.

இதை புதிதாக பொறுப்பேற்ற  முதல்வர் விஜய்யின் தவெக அரசு ரத்து செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  தற்போது (2026 ஜூலை) தமிழ்நாடு அரசு திட்டத்திற்கு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதி  வழங்கியதோடு திட்டத்தின் மதிப்பு, பணிகள் மற்றும் செயல்படுத்தும் அம்சங்களை புதுப்பித்துள்ளதானது பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

சூயஸ் நிறுவனம் தண்ணீர் தருவதாகக் கூறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனமாகும். தாறுமாறாக கட்டணம் வசூலிப்பது, ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை குறைப்பது, கட்டணம் கட்டத் தாமதமானால் உடனே குடிநீர் இணைப்பை துண்டித்து கதறவிடுவது இந்த நிறுவனத்தின் வழக்கமாகும்.

அர்ஜெண்டினா மக்கள் சந்தித்த அவஸ்த்தைகள்;

1993 –ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அரசு புவெனஸ் அயர்ஸ் நகரின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான ‘அகுவாஸ் அர்ஜெண்டினாஸ்’ வசம் ஒப்படைத்ததும், பின்னர் அவதிப்பட்டதும் வரலாற்றின் கருப்பு பக்கங்களாகும்.

குடிநீர் ஒப்பந்தத்தின்படி கட்டணத்தைக் குறைப்பதாக நம்பிக்கை தந்துவிட்டு, பொறுப்பேற்ற சில வருடங்களிலேயே சூயஸ் நிறுவனம் குடிநீர் கட்டணத்தை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்த்தி மக்களை அலறவிட்டது.

2001-ல் அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, ஏழை எளிய மக்களால் பஞ்சம்,பசியால் கட்டணம் செலுத்த முடியாத சூழலில் தண்ணீரை நிறுத்திவிட்டது. கட்டணத்தைக் குறைக்கவே முடியாது என அழிச்சாட்டியம் செய்தது.

இது ஏழை,எளிய மக்களை பெருந்திரளாக வீதியில் இறங்கி போராட வைத்தது. இதன் விளைவாக கடும் எதிர்ப்புகளால் 2006-ல் அர்ஜெண்டினா அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஆனால், அர்ஜெண்டினா அரசு ஒப்பந்தத்தை மீறியதாக சூயஸ் நிறுவனம் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அர்ஜெண்டினா அரசிடமிருந்து சுமார் 3,875 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகப் பெற்றது.

பொலிவியா நாட்டில் பொங்கி எழுந்து விரட்டி அடித்த மக்கள்

இதே போல கடன் வாங்கும் நாடுகள் இது போன்ற கண்டிஷன்களை ஏற்க வேண்டும் என்ற விதிப்படி உலக வங்கியின் நிபந்தனையால், 1997-ஆம் ஆண்டு பொலிவியாவின் ‘லா பாஸ்’ மற்றும் ‘எல் ஆல்டோ’ நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அகுவாஸ் டெல் இல்லிமானி’  வசம் சென்றது.

குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்காக சூயஸ் நிறுவனம் விதித்த கட்டணம் $445 டாலருக்கும் (சுமார் ₹37,000) அதிகமாக இருந்தது. இது அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீறியதாக இருந்தது. ஆறு மாதம் உழைத்த சம்பளத்தை தந்தால் கூட  இந்தக் கட்டணத்தை செலுத்த முடியாது. இது தங்கள் ஊதியத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் ஏழை மக்களால் புதிய இணைப்புகளைப் பெற முடியவில்லை. இதனால் இரண்டு லட்சம் மக்களுக்கு குடிநீரே மறுக்கப்பட்டது.

லாபம் இல்லை என்பதால் வறிய மக்கள் வாழும் புறநகர்ப் பகுதிகளில் உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய சூயஸ் நிறுவனம் மறுத்தது. இதனால் சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சொல்லொண்ணா துயரம் அனுபவித்தனர். அத்துடன் குறுகிய காலத்திலேயே குடிநீர் கட்டணத்தை 35% வரை உயர்த்தியது.

இந்த கசப்பான அனுபவங்களால் கொந்தளித்த பொலிவிய மற்றும் அர்ஜெண்டினா நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். பொலிவியாவில் ‘இரண்டாவது தண்ணீர் புரட்சி’  வெடித்தது. தீவிர மக்கள் போராட்டங்களின் விளைவாக, 2005-ல் பொலிவிய அரசும், 2006-ல் அர்ஜெண்டினா அரசும் கொடூரமான சூயஸ் நிறுவனத்தை நாட்டை விட்டே விரட்டியடித்து. மக்கள் விருப்பத்தால் குடிநீர் விநியோகம் மீண்டும் அரசுடமையாக்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகள் கட்டமைக்கப்படும் மாயை;

வெளிநாட்டு முதலீடுகள் வந்தால் தான் தொழில் வளம் செழிக்கும்.

வெளிநாட்டு முதலீடுகள் தான் வேலை வாய்ப்பைத் தருகின்றன!

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளே அளவுகோல்..

என்றெல்லாம் சொல்லப்படுவதைப் போன்ற பித்தலாட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது. வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் முதலீடானது அதை பன்மடங்கு திருப்பி அள்ளக் கூடியது என்பதை ஏனோ ஆட்சியாளர்கள் மறந்துவிடுகின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகளால் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது..என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளால் இங்கு தேனாறும் பாலாறும் பெருக்கெடுத்து ஓடுகிறது என நம் காதில் பூ சுற்றுகிறார்கள்!

வெளிநாடுகளில் தங்கள் கறுப்பு பணத்தை கொண்டு போய் முதலீடுகள் செய்யும் ஏராளமான வசதி படைத்த அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் நிறைந்திருக்கும் நாட்டில், உள்ளூர் சுரண்டல்வாதிகள் போதாது என்று வெளிநாட்டு சுரண்டல்வாதிகளையும் ஏன் இறக்குகிறீர்கள்?

உள்ளூரிலே தொழில் தொடங்கும் லட்சோப லட்சம் சிறு,குறு முதலீட்டாளர்களுக்கு ஏகப்பட்ட குடைச்சல்கள், தடங்களை ஏற்படுத்தி சிறு, குறு தொழில் முனைவோர்களை சின்னா பின்னப்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்ய வந்தால் மட்டும் சிறப்பு கம்பளம் விரிப்பதானது இன்னும் இங்கே அடிமை மனோபாவம் போகவில்லை என்பதற்கு அத்தாட்சியாகும்.

கடன்களால் உருவாகும் கட்டாயம்;

கன்னா, பின்னாவென்று பல லட்சம் கோடிகள் உலக வங்கி உள்ளிட்டவற்றில் கடன்களை வாங்குவது, பின்னர் சுற்றுச் சூழலுக்கு கேடான தொழிற்சாலைகளை மக்கள் எதிர்ப்பை மீறி அனுமதிப்பது என்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். கடன் கொடுப்பவர்கள் தரும் கண்டிஷன்களை மக்கள் கவனத்திற்கு போகாமல் மறைத்து விடுகிறார்கள். நாம் வாங்கும் கடன்கள் தாம் சூயஸ் போன்ற நிறுவனங்களுக்கு கதவை திறக்கும் கட்டாயத்தை நமக்கு தருகின்றன.

ஒரு சிறு தொழில் நிறுவனத்திற்கு காணி நிலம் கேட்டால் கர்ண கொடூரமாக அலையவிட்டு இல்லாத கண்டிஷன்களை போட்டு அனுமதிக்கும்  ஆட்சியாளர்கள்  வெளி நாட்டு முதலீட்டாளர்கள் என்றால்,

நிலத்தை தூக்கி கொடுப்பார்கள்,

மின்சாரத்தை குறைந்த கட்டணத்திற்கு தருவார்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் நாட்டில் தான் சீப் லேபர்ஸ் இருக்காங்க.. என்று அடிமாட்டுக் கூலிக்கு மண்ணின் மனிதர்களை கொத்தடிமையாய் தூக்கி ஒப்படைப்பார்கள் என்றால், இந்த அரசு யாருக்கானது..?

வெளிநாட்டு முதலீடுகளால் இங்குள்ள மண் சார்ந்த சிறு குறுந்தொழில்கள் சின்னாபின்னப்படும் என்றால், அந்த முதலீடு ஆபத்தானது.

வெளிநாட்டு முதலீடுகளால் இங்குள்ள இயற்கை வளம் பாழ்படும் எனில், மக்கள் ஆரோக்கியம் சூறையாடப்படும் எனில், அந்த வெளிநாட்டு முதலீடு ஒருபோதும் தேவையில்லை.

இதில் நன்மை என்ன தீமை என்ன? என்ற வாதங்களுக்கே இடமில்லை. கொலைக் கருவியோடு நிற்பவரிடம் சமரசத்திற்கு வாய்ப்பில்லை.

புத்துயிர் பெற்று வரத் துடிக்கும் ஸ்டெர்லைட்:

பல்லாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு – 15 உயிர்களை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்த பிறகு – மண்ணும், மக்கள் நலமும் சிதந்து சின்னாபின்னப்பட்ட நிலையில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க சுய ஆதாயக் கூட்டணி ஒன்று உருவாகிக் கொண்டுள்ளது…!

அரசியல் கட்சிகளிலும், ஊடகத் துறையிலும் அன்னிய முதலீட்டாளர்கள் விட்டெரியும் ரொட்டித் துண்டுக்காக சில கறுப்பு ஆடுகள், ’’தாமிரம் முக்கியம். ஆகவே ஸ்டெர்லைடை திறக்க வேண்டும்’’ எனச் பேசத் தொடங்கியுள்ளனர். தாமிரம் பற்றாகுறை என்றால், வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள முடியும். ஆனால், அழித்தொழிக்கப்படும் இயற்கை வளத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் மீட்க முடியாது.

ஆரம்பத்திலேயே இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மக்களை வாழவிடுங்கள்! ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு  தூத்துக்குடியில் யாரும் வேலையின்மையால் வெம்பிக் கிடக்கவில்லை. ஸ்டெர்லைட் நிறுத்தப்பட்டதால் தூத்துக்குடி முடங்கிவிடவில்லை. எங்கள் வ.உ.சி வாழ்ந்த மண் பிறர் வந்து வாழ்விக்கும் நிலையில் இல்லை.

அன்னிய முதலீடுகள் குறைந்த வேலை வாய்ப்பையே தருகின்றன. அந்த அன்னிய முதலீடுகள் இங்குள்ள விவசாயத்தை அழிக்கின்றன. நீர் நிலைகளை நிர்மூலமாக்குகின்றன. இதனால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்து சுய தொழில்கள் செய்வோர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது.

அன்னிய முதலீடுகளின் குறைந்தபட்ச பாசிடிவ் அம்சங்களை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களும், அதிகார மையங்களும் அதன் கொடூரமான நெகடிவ் அம்சங்களை முழுக்க மறைத்துவிடுகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளுக்கு விலையாக தரப்படுவது மக்களின் உரிமைகளே.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் இருந்த போது உலக வர்த்தக அமைப்பு (WTO) கட்டளைப்படி 2000-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சீனப் பொருட்களுக்கான  இந்திய சந்தையைத் திறந்து விட்டு இந்திய சிறு தொழில் உற்பத்தியாளர்களின்  பேரழிவுக்கு காரணமானார்.

உலக வர்த்தக அமைப்பின் தோகா பிரகடனத்தில்  2001-ஆம் ஆண்டு இதே வர்த்தக அமைச்சர் முரசொலிமாறன் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியாவில் சிறு தொழில்களை காப்பாற்றுவதற்காக அது நாள் வரை தடை செய்திருந்த பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியச் சந்தையை விரிவாக திறந்திட்டார்.

அன்னிய பொருட்கள் பகிஷ்கரிப்பு, அன்னிய துணிகள் எரிப்பு, சுதேசி தொழில்கள் பாதுகாப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றல்.. என அன்னிய முதலீட்டாளர்களை விரட்டியடிப்பதற்காக தங்கள் ரத்தம் சிந்தியும், இன்னுயிரை இழந்தும் நடந்த விடுதலை வேள்வியின் பயன்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது அன்னிய முதலீடுகளுக்கான ஆர்ப்பாட்ட வரவேற்புகள்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/25109/foreign-investment-suez-water/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு