புரட்சிகர கலை இலக்கியம் சந்திக்கும் போராட்டங்கள்
துரை. சண்முகம்
புரட்சிகர சித்தாந்தத்தையும் அதற்கான அரசியலையும் தழுவும் கலை இலக்கியமும் இந்தப் போராட்டத்தை சந்திக்காமல் இருக்க இயலாது.
புரட்சி, புரட்சிகர மாற்றம் அது ஏற்படுத்தும் சமூக விளைவுகள்,
சமூகப் பயன்கள் போன்றவைகள் இன்னும் மக்களின் அனுபவத்திற்கு உட்பட்டு இருக்காதது. இருக்கின்ற நிலைமைகள் பழைய சமூக அமைப்புகளுக்கு கிடைக்கின்ற மக்களின் அனுபவத்தால் உணரத் தக்க வாய்ப்பைத் தருகிறது. புரட்சிகர கலை போக்குக்கு தொட்டறியத்தக்க பட்டறிவு அனுபவமாக அந்த வாய்ப்பு கிடையாது.
எனவே புரட்சிகர கருத்துகளை ஏற்கனவே இருக்கின்ற கலையின் விதிகளோடு பொருத்துவதில் முரண்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த முரண்பாடு சமூக அமைப்பின் முரண்பாட்டோடு தொடர்புடையது. பழைய சமூக அமைப்பிற்கும் நாம் ஏற்படுத்த விரும்பும் புதிய சமூக அமைப்பிற்குமான சமூக முரண்பாடு கலையியல் முரண்பாடாக முன்வந்து நிற்கும்.
" வீடு வரை உறவு| வீதி வரை மனைவி| காடு வரை பிள்ளை| கடைசி வரை யாரோ?"
என்று ஒரு பாடலில் கூறும் போது
அது ஒரு ஆழ்மன உணர்வோடு எளிதில் ஏற்கப்படுகிறது. காரணம் தனி உடமை சுரண்டல் சமூக அமைப்பு ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் உளவியல் அம்சம் அது. ஒரு பாடலின் கலை இயல் விதி அந்த சமூக விதியோடு பொருந்திப் போகிறது. நிலையாமை எனும் கருத்தாக்கத்தின் மூலம் , "பிறந்த எல்லோருக்கும் இதுதானே நிலைமை! " என்று சமூக உறவுகளையே இன்று யாருக்காகவும் யாரும் இல்லை! எனும் படிமமாக தனிமனித கூறில் அடக்கி விடுகிறது. "எவ்வளவு சரியா பாடி இருக்கான் பாரு! காசு பணம் பிள்ளை குட்டி பெத்து எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கடைசில ஒருத்தனுக்கு யாருமே இல்ல!" என்று வர்க்க வாழ்நிலையில் முரண்களை காண இயலாதபடிக்கு தனிமனித உயிர் வாழ்க்கையின் முடிவைக் காட்டும் ஒரு பொது அனுபவத்தின் மூலம் சமப்படுத்தி மனதில் தங்கி விடுகிறது கலை வழியான தத்துவ
கண்ணோட்டம்.
இது ஏன் எளிதில் மனித மனங்கள் ஏற்கத்தக்கதாக இருக்கிறது?
கண்ணெதிரே தாம் காணும் சமூக நடப்பாக அது இருக்கிறது. ஆகையால் இந்த வகையில் உறவாடும் கலை எளிதில் கடத்தியாக வேலை செய்ய முடிகிறது.
இதுவரை தங்கள் அனுபவத்தில் காண இயலாத ஒரு புதிய சமத்துவ சமூக அமைப்பையும் அதற்கான கருத்தையும் கலையில் சொல்லும் போது மக்கள் உணரத்தக்க மெய்யுலகம் அங்கு இல்லை.
கற்பனையாகவும் இயற்கையில் ஒன்றை சொல்லியும் அப்படி ஒரு மாற்றம் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்பதை வேறு ஒரு அறியத் தக்க இன்பத்தின் மூலம் சொல்ல வேண்டிய நெருக்கடி புரட்சிகர கலை இலக்கியத்திற்கு வருகிறது.
அடிமைகளுக்கு ஒரு சுதந்திர வாழ்வை உணர்த்தும் தேவையில்லை சினிமா பாடல்களில் ஒரு வெகுஜன கலைஞன் இந்த நெருக்கடியை சந்திக்கிறான். வெறும் கருத்தே கலை அல்ல. கருத்துக்கான உணர்ச்சி அங்கே கலைக்கு தேவைப்படுகிறது. எனவே
வேறு ஒரு கோணத்தில் இயற்கையின் அம்சங்களை தனது கருத்தின் உணர்ச்சிக்கு கையாளுகிறான்,
" அதோ அந்த பறவை போல
வாழ வேண்டும்,
இதோ இந்த அலைகள் போல
ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே!"
என்று சுதந்திர வாழ்வுக்கான கண்ணோட்டத்தை இருக்கின்ற பொது இயற்கையில் இருந்து உணர்வு ஊட்டி கலை இயல் விதியை கையாளுகிறான் கவிஞன்.
உலகமயம் புதிய பொருளாதாரக் கொள்கையை பற்றி நாம் கருத்தாக நிறைய பேசிவிடலாம்.
அதை ஒரு கலை வடிவத்தில் நாடகமாக பாடலாக கவிதையாக கதையாக இசையாக மக்களிடம் உணரச் செய்ய வேண்டும் என்றால், அது அவர்களின் வாழ்க்கையிலிருந்து வரவேண்டும். இங்கே கலைஞனுக்கு மக்களின் வாழ்க்கை தெரியவேண்டும்.
அதுவும் இந்த கருத்தை எந்த மக்களுக்கு சொல்லப் போகிறோம்? எனும் தேர்வும் நோக்கமும் தெளிவுபட இருக்க வேண்டும்.
குடிநீர் எப்படி ஒரு பண்டமாக காசுக்கு விற்கப்படுகிறது எனும் அவலத்தை மக்களின் உணர்வுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும் எனில், அதை கலையாக்கம் செய்ய வேண்டும் எனில், கலையியல் விதிகளை தலைமை தாங்கும் அரசியல் தத்துவப் பார்வை வேண்டும். குடிநீர் எப்படி பண்டமானது ?அதை செய்தது யார்? யாருடைய நலன்? இதில் மக்களின் நிலை என்ன?
இன்னும் சகலமும் தழுவிய கருத்து உறுதியான தெளிவும் பார்வையும் கலைஞனுக்கு முதலில் கற்றலில் தேர்ச்சியாக நிறைய வேண்டும்.
இதிலிருந்துதான் அவன் இது தொடர்பாக தேவைப்படும் கலை உணர்ச்சிக்கு கலையியல் விதிகளோடு மக்களிடம் கொண்டு செல்லும் வழி ஒன்று பிறக்கும்.
அன்றாட குடிநீர் தேவைக்காக மக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது எனும் வர்க்க வாழ்க்கையைப் பற்றி அவன் தெரிந்து இருக்க வேண்டும்.
இதற்கு கலை அறிவு மட்டும் ஒரு கலைஞனுக்கு போதாது. இது தொடர்பாக உள்ள மக்களைப் பற்றிய சமூக அறிவியல் அவனுக்கு தேவைப்படுகிறது.
இந்த சமூக அறிவில் இருந்து அவனுக்கு சமூகப்பார்வை பிறக்கிறது. இந்தப் பார்வை இந்த வர்க்கத்துக்காக செலுத்தப்பட வேண்டியது என்பதை அவனது அரசியல் கண்ணோட்டம் தீர்மானிக்கிறது. இதிலிருந்து மக்களுக்கான புரட்சிகர கலை இலக்கியம் துளிர்க்கிறது.
மக இக பாடல் ஒளிநாடாக்கள் தயாரிப்பின் போது இப்படிப்பட்ட சிக்கல்களை அந்த குழுவில் தோழர்கள் சந்தித்து இருக்கிறோம்.
காவிரி பற்றிய பாடல் எழுதும்போது, குறிப்பாக அடிமைச் சாசனம் எனும் ஒளிநாடா தயாரிக்கும் போது புதிய பொருளாதார விசயங்களை எவ்வாறு கலை வடிவத்தில் தருவது என்பது சவாலாகவும்
அந்த சவாலை சந்தித்த அனுபவத்தில் மக்களின் அனுபவத்திலிருந்து எவ்வாறு தொட்டு முன்னேறிச் செல்வது எனும் அனுபவமும் கிடைத்தது.
ஒரு கலைப் படைப்பு தனிமனிதன் மூலம் பிரசவிக்கப்படுகிறது.
ஆனால் அந்தத் தனிமனிதன் இதை தனி மனிதனாக நிறைவேற்ற முடியாது. இந்த சமூகத்தில் சகலமும் தழுவிய பகுதிகளைப் பற்றி எந்த அளவுக்கு அவன் முழுமை பெறுகிறானோ அந்த அளவுக்கு அவனது கலைப்படைப்பு முழுமை அடைகிறது. சக சமூக மனிதர்களின் கலையியல் விதிகள் ஏதும் அறியாமல் படைக்கத் துடிக்கும் அவர்களது வாழ்க்கையின் படைப்பிலிருந்து இவன் படைப்புக்கான இயக்கம் கிடைக்கிறது.
இந்த உண்மைகள் உரைக்காத வரை தனிப்பட்ட கொம்பு முளைத்தவர்கள் தம்பட்டம்
சகிக்க முடியாததாக இருக்கத்தான் செய்யும்.
இதில் தனி மனிதரின் ஆற்றலை பங்களிப்பை நாம் மறுக்கவில்லை.
ஆனால் சமூக உறவுகளும் மக்களும் இல்லாமல் ஒரு எழுத்து கூட நம்முடையது இல்லை என்பதை உணரும் நேர்மை முதலாளித்துவ கொம்பு முளைத்த இலக்கியவாதிகளிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.
மக்களின் சமூக வாழ்வின் மாற்றத்திற்காக சமூகம் முரண்பாடுகளோடு கலந்து இயங்கும் கலைஞன் புதிய படைப்புகளை மட்டுமல்ல தன்னையே ஒரு புதிய மனிதனாகவும் பிரசவித்துக் கொள்கிறான். அந்தக் கலையியல் அழகு முழு மனித அழகின் பகுதியாக அந்தக் கலைஞனையும் புதிய படைப்பாக பிரசவிக்கிறது.
நேரமும் மனநிலையும் வாய்க்கையில் இது போன்ற அம்சங்களை நிறைய எழுதத் தோன்றுகிறது. தேவைகளும் இருக்கிறது.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1060497883323674/?rdid=2TQEkKU6SKuzzJWa
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு