புதுக்கோட்டை வடகாடு: சாதிவெறி தாக்குதல் குறித்து
அரங்க குணசேகரன்

யுத்தம் தொடர்கிறது.!
கோவில்களை மையமாக வைத்து பறையர்கள் மீதான போரை சாதிவெறியர்கள் தொடுத்துவருகின்றனர்.
சாதி அமைப்புக்களுக்குள் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மெல்ல மெல்ல இரகசியமாக ஊடுருவுகிறது.
அவர்களின் ஊடுருவல்கள் சாதி அதிகாரத்துக்கு திமுக அரசும் அதன் அமைச்சர்களும் காவல்துறையும் பக்கபலமாக இருந்து பறையர்களை அழிப்பதில் முனைப்பாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு சாதிவெறி அதிகார ஆதிக்க அத்துமீறிய தாக்குதலின் போதும் காவல்துறை உண்மையான காரணங்களை மறைத்து பொய்யாக ஒரு காரணத்தை இட்டுக்கட்டிவருவது அரசின் காவல்துறையின் வழக்கமாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு 05.05.2025 திங்கள் மாலை முன்னிரவு கிராமத்தில் கோவில் திருவிழாவில் திட்டமிட்டு மோதலை உருவாக்கிய முத்தரையர்கள் அதன் தொடர்ச்சியாக பறையர் தெருவுக்குள் கூட்டம் கூட்டமாகச் சென்று தாக்குதல் தொடுத்துள்ளனர்
பத்து மாடி வீடுகள், ஓட்டுவீடுகள், உடைக்கப்பட்டது. ஒரு வீடு எரிக்கப்பட்டுள்ளது. ஆறு மோட்டார் சைக்கிள்கள் உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்கள் முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது.
ஆறு பெண்கள் ஏழு இளைஞர்கள் பலத்தகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
நான்கு இளைஞர்களுக்கு தலையில் கொடுங்காயம்.
காயத்தின் ஆழம் உள்ளே பாதிப்பு என்ன என்பது ஸ்கேன் எடுத்த பிறகுதான் தெரியவரும்.
முதலில் பறையர் தெருவுக்குள் முத்திரையர்
இளைஞர்கள் ஏன் நுழைந்தனர் என்பதற்கு காவல்துறை கனத்த மவுனம் சாதிக்கிறது.
பிரச்சினையை திசை திருப்ப பெட்ரோல் பங்கில் யாருக்கு முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் கலவரம் தொடங்கியதாக காவல்துறை கதைவசனம் எழுதுகிறது.
பறையர்களுக்கு வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடும் வழக்கம் தவிர கோவிலுக்கு மண்டகப்படி உரிமையோ வரி கொடுக்கும் உரிமையோ இல்லை.
ஐந்து ஏக்கருக்கும் மேலாக சொத்துக்கள் கொண்ட முத்துமாரியம்மன் கோவிலை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் விடாமல் வடகாடு பதிணெட்டுப் பட்டி கரைதாரர்கள் தங்கள் சாதியின் ஏகபோக தனிச்சொத்தாக வைத்துள்ளனர்.
இதேபோல் பறையர்கள் அடைக்கலம் காத்த அய்யனார் என்னும் கோவிலை தங்கள் தனி வழிபாட்டு உரிமைக் கோவிலாக கொண்டாடி வருகின்றனர்.
அந்தக் கோவிலை ஒட்டி பறையர்களுக்காக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஆதிதிராவிடர் சமூக கூடம் ஒன்றைக்கட்டி அதுவும் சேதமடைந்துள்ளது.
அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கும் ஆதிதிராவிடர் சமூக கூடத்துக்கும் எதிரே சில பத்துசென்ட் நிலம் காலியாக கிடக்கிறது.அந்த நிலத்தில்தான் பறையர்கள் பொங்கலிட்டு படையல் விழா நடத்துவது வழக்கம்.
இளைஞர்கள் விளையாட இடம் கேட்டு பறையர்களின் இடத்தை தற்காலிமாக பெற்ற முத்தரையர்கள் கால ஓட்டத்தில் தங்களின் சொந்த நிலம்போல ஆக்கிரமித்துக் கொண்டு பறையர்களையே அவ்விடத்திலிருந்து விரட்டும் வேலைகளில் இறங்கினர் முத்தரையர்கள்.
அதாவது தாங்கள் வழிபடும் முத்துமாரியம்மன் கோவிலிலும் சட்டப்பூர்வமான உரிமைகளை மறுப்பார்களாம்.
பறையர்கள் தாங்கள் வழிபடும் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் இடத்தையும் முத்தரையர்கள் ஆக்கிரமிப்பார்களாம்.
இந்த அக்கிரமம் அநீதி 20 ஆண்டுகளாக இரண்டு சாதிகளுக்கும் இடையே தொடர்கிறது.
இந்துசமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக்கு இந்தப் பிரச்சினை தெரிந்தும் இதை தீர்க்க அதிகார வர்க்கமும் அரசியல் வாதிகளும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்தக் கலவரத்துக்கு தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமுமே முழுப்பொறுப்பேற்று உரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சாதிமோதலின் தாக்குதலின் வேர் இதுதான்.
பெட்ரோல் பங்க் பிரச்சினை என்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர் மெய்யநாதனின் தந்திரத்துக்கு காவல்துறை சப்பைக்கட்டு கட்டுகிறது.
முத்துமாரியம்மன் கோவிலுக்கான சொத்துக்களை கணக்கிட்டு அதை இந்துசமய அறநிலையத்துறை ஆட்சியின்கீழ் வரம்பிட வேண்டும்.
இதேபோல் ஐந்து ஏக்கருக்கும் கீழாக சில பத்துசென்ட் நிலம் சொந்தமாக கொண்ட அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலை இந்துசமய அறநிலையத்துறையின் பட்டியலிடப்படாத un titled கோவிலாக அறிவித்து சட்டவிதிகளின்படி கோவில் பூசாரியை நம்பகர் பொறுப்பு ஆக்கப்பட வேண்டும்.
சாதிமோதலில் தாக்கப்பட்ட பறையர்களுக்கு உரிய சட்டப்பூர்வமான இழப்பீடும் சேதமடைந்த வீடுகள் கார்கள் மோட்டார் சைக்கிள்களை குற்றவாளிகளிடமே தண்டம் வசூலித்தும் அரசும் பொறுப்பேற்று புதிதாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சட்டப்பூர்வமான வழக்குகள் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தேசிய மனித உரிமைக் கமிசன் தேசிய எஸ்சி கமிசன் தலையிடவேண்டும்.
மேற்கண்ட விவரங்களை தொகுப்பதிலும் கண்டறிவதிலும் பரிந்துரையிலும் பங்குபெற்ற எம்முடன் பயணித்த எமது அமைப்பின் தோழர்கள் பழ.திருமுருகன் மாநில அமைப்பாளர் இரா.மதியழகன் தஞ்சைமாவட்ட இளைஞர் அணி செயலாளர் மா.சின்னத்துரை புதுகை மாவட்ட செயலாளர் ஆகியோரின் பங்களிப்புக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
===========================
எது வதந்தி?
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையே பொது விவாதத்துக்கு தயாரா?
பெட்ரோல் பங்கில் மோதல் என்றால் 500க்கும் மேற்பட்ட முத்தரையர்கள் பறையர் தெருவுக்குள் புகுந்தது தீவைப்பில் ஈடுப்டது இருதர்ப்பு மோதலா?சாதிய மோதலா?
மதுபோதையில் கலவரம் என்கிறீர்களே?
திருவிழா நடக்கும் நாட்களில் மதுக்கடைகளை திறந்து வைத்தது ஏன்?
பொய்யான அறிக்கைகளை தயாரிக்க காவல்துறை தேர்ச்சி பெற்ற வல்லுநர்களை வைத்துள்ளதா?
தலையில் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்குதல் நடந்ததன் பின்னால் இருப்பது சாதிவெறியா?மதுபோதையா?
அறிவார்ந்த பட்டியல் சமூக வழக்கறிஞர்களே சனநாயக உணர்வுகொண்ட வழக்கறிஞர்களே
இன்றைய தினமணியில் அறிக்கைவிட்டுள்ள
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக விடுமுறைக்கால நீதிமன்றம் கூடும்போது வழக்குப் போடுங்கள்!
SP யின் அறிக்கை 100க்கு 100 பொய்.உண்மையை மறைக்கும் சதி.
கடமைதவறும் குற்றம்!
இருதரப்பு மோதல் என்றால் முத்தரையர்களுக்குள்ளேயே இரதரப்பு மோதலா?
பறையர்களுக்கு உள்ளேயே இருதரப்பு மோதலா?
சாதிய தாக்குதலை மூடிமறைக்கும் இப்படியான அறிக்கைவிட காவல்துறையை நிர்ப்பந்திப்பது யார்?எது?
அரங்க குணசேகரன், தலைவர் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் - 9047521117
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு