சிவப்பே உவப்பு செங்கொடி உயர்த்து!
துரை. சண்முகம்

தொழிலாளர் வர்க்கம் ஜனநாயகப் பூர்வமாக என்னதான்! முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு ஜனநாயகவாதிகளை ஆதரித்தாலும், அவர்கள் ஒருபோதும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள்!
கோவையில் தொடங்கி தென்காசி வழியாக பிரச்சார நடை பயணத்தை தூத்துக்குடியில் நிறைவு செய்வதற்கு தூய்மை பணியாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. ஆனால் தொடங்கும் இடத்திலேயே அவர்களுக்கு அரசு அனுமதி இல்லை. அங்கங்கே தொழிலாளர்களின் வீடுகள் வேறு ஏதாவது அலுவலகங்கள்
என்று நிகழ்ச்சி நிரலை வீட்டுச் சிறைக்குள் அடைக்கிறது அரசு. தூய்மைப் பணியாளர்களை வாயைத் திறந்து பேசவே விடாமல் ஒடுக்குகிறது திமுக அரசு.
ஆக்ஸ்போர்ட்டில் போய் பெரியார் படத்தை திறக்கலாம்.
உலகமயப் பெரியாரை உயர்த்திப் பிடிக்கலாம்! ஆனால் தனியார்மயத்தை எதிர்க்கும் தமிழகத்தின் அடித்தட்டு மக்கள்,
அவர்களது அரசியல் படியே சனாதனத்தால் ஒடுக்கப்பட்ட சேவை தொழிலாளர் வர்க்கம்
இங்கே தனது வாயைக் கூட திறக்க முடியாது என்பதுதான் பெரியாரை உயர்த்திப் பிடிப்பவர்களின் சமூக நீதியாக இருக்கிறது.
பெரியாரே கூட தொழிலாளர் வர்க்கத்திற்கான போராட்டங்களை ஒரு அளவுக்கு மேலே அரசுக்கு எதிரான அதன் கலகங்களை ஆதரிக்காதவர்.
அவரை மையப்படுத்தி தூய்மை பணியாளர் போராட்டத்தை திட்டமிடுவது அரசியல் ரீதியாகவே பொருத்தமற்றது.
பெரியாரின் இந்துத்துவ எதிர்ப்பு பிம்பத்தை உயர்த்திப்பிடித்தால் அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதெல்லாம் வர்க்க கணக்கில் செல்லாதவை.
தமிழகத்தில் விவசாயக் கூலிகள் தொழிலாளி வர்க்கத்துக்காக போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பு பாலன் போன்ற தியாகிகள் நாளை அந்த அரசியலின் உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடித்து அதை முதன்மைப்படுத்தி இருக்கலாம் தோழர்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு குணம் கொண்ட வ. உ. சி. அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் நிறைவு செய்து
நாட்டுப்பற்றுக்கான கொள்கை பிரச்சாரமாக இணைத்து இருக்கலாம்.
பெரியாரை வேறு இந்துமத எதிர்ப்பு கருத்துகளுக்காக ஆதரிக்கலாம். ஆனால் வர்க்கப் போராட்டத்திற்கு அவரிடம் வழியில்லை. அவர் கொள்கையை ஏற்றுக் கொண்டு "திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் " அமைத்தவர்களையே பண்ணையார்களை எதிர்த்து தீவிர போராட்டம் கலகம் எல்லாம் கூடாது என கழட்டி விட்டவர் அவர். தேர்தல் நலனுக்காக காமராஜர் ஆதரவு காங்கிரஸ் ஆதரவு என கீழத்தஞ்சை விவசாயிகள் வர்க்கப் போராட்டத்திற்கு எதிர் நிலையாகப் போனார்.
அவரிடம் உள்ள வர்க்க கண்ணோட்டப்படி சமூக உணர்வும் சமூகப் போராட்ட குணமும் கூட இல்லாத,
பெரியார் அடையாள அரசியல்வாதிகளாக பிழைப்பு வாத கொள்கைகளின் வழியாக
உலகமயம் தனியார்மயம் எனும் தனியார் முதலாளிகளுக்கான கொள்கை திட்டத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ள திமுக அரசிடம் பெரியாரைக் காட்டி எல்லாம் சமூகநீதியை உணர்த்த முடியாது.
திமுக என்று அல்ல தமிழகத்தில் ஆளும் அரசின் வர்க்க பாத்திரம்
அதிமுகவாக இருந்தாலும் இதுவே.
முதலாளித்துவ நீதியை நிலைநாட்டும் சித்தாந்தவாதிகளிடம் சமூக நீதியை எதிர்பார்ப்பது ஏமாற்றமே தரும்!
செங்கொடியை
உயர்த்தி பிடித்து
சிவப்பின் அரசியலை
உரக்க முழங்கி
வர்க்கப் போராட்டத்தின் பயணங்கள் தொடரட்டும்! வெல்லட்டும்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/19qsuJ5D4V/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு