கார்ப்பரேட் நலன்களுக்காக சிறிய இரத்த பரிசோதனை மையங்களை இழுத்து மூடும் திமுக அரசு

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க ஊடக செய்தி

கார்ப்பரேட் நலன்களுக்காக சிறிய இரத்த பரிசோதனை மையங்களை இழுத்து மூடும் திமுக அரசு

ஊடகங்களுக்கான செய்தி 

நாள்:24.12.2024 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம்

சிறிய  இரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில் தமிழக அரசு செயல்படுவதை கைவிட வேண்டும். 

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பில் சென்னை  பத்திரகையாளர் சந்திப்பில் இன்று விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. 

தமிழக அரசு சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில் செயல்பட்டு வருகிறது. இது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 28.11.2024 அன்று  GO (MS)No : 390 வெளியிடப் பட்டுள்ளது. 

இந்த அரசாணை மூலம் இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் மற்ற பரிசோதனை நிலையங்கள் செயல் பட‌ தேவையான  அளவு இட வசதி குறித்த நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் படி நகர்புறத்தில் உள்ள இரத்தப் பரிசோதனை நிலையங்கள் ( Clinical Laboratories),ஜெனிடிக் பரிசோதனை நிலையங்கள்( Genetic Laboratories), நோய்குறியியல் பரிசோதனை நிலையங்கள் ( Pathological Laboratories)  மற்ற பிறவற்றிற்கும், 500 முதல் 700 சதுர அடி பரப்பளவும்,கிராமப்புறத்தில் உள்ள இத்தகைய  பரிசோதனை நிலையங்களுக்கு 300 சதுர அடி பரப்பளவும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மரபியல் ( Genetic ) இரத்தப் பரிசோதனை நிலையங்கள் 100 க்கும் குறைவாகவே உள்ளன. 

எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்கின்ற நிலையங்கள் 15 லிருந்து 20 விழுக்காடு அளவிற்கு மட்டுமே உள்ளன . 

மீதமுள்ள 80 விழுக்காடு பரிசோதனை நிலையங்கள் , வெறும் ரத்தப் பரிசோதனைகளை மட்டுமே செய்கின்றன. அவை சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களாகவே உள்ளன. 

அந்த சிறிய இரத்த பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை - எளிய மக்கள் அவர்களுடைய சக்கரை அளவு உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளை, மிக குறைந்த கட்டணத்தில், எளிதாக தங்கள் வாழ்விடங்களுக்கு  அருகிலேயே செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்,

இந்த அரசாணை 390 என்பது சங்கிலித் தொடர் போல் நாடு முழுவதும் பரிசோதனை மையங்களை தொடங்கிவரும்  பெரிய மற்றும் கார்ப்பரேட் கிளினிக்கல் இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. 

அவற்றின் வளர்ச்சிக்காக, லாப வேட்கைக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டுவதாக உள்ளது. 

மருத்துவத் துறையில், மக்கள் நலன்களுக்கு எதிராக  உருவாகி வரும் கூட்டுப் பயனாளி முதலாளித்துவத்தின் (Crony Capitalism) வெளிப்பாடாக இந்த அரசாணை எண் 390 உள்ளது. 

எனவே, சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான இந்த அரசாணையை  உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். 

நகர்ப்புற  இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு குறைந்த பட்ச இடவசதி 150 சதுர அடி எனவும், கிராமப்புற லேப்களுக்கு 100 சதுர அடி எனவும் நிர்ணயிக்க வேண்டும். 

இதை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறோம். 

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். 

இதைத் தொடர்ந்து ,கடந்த அஇஅதிமுக அரசு 2019 மார்ச் 1 அன்று, எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 

அதன் முடிவில் எங்கள் தரப்பு நியாயங்களை உணர்ந்து இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்தது.

தற்போது தி.மு.க அரசு எங்களை அழைத்துப் பேசாமல்,  எங்கள் கருத்துக்களை கேட்காமல் சிறிய இரத்த பரிசோதனை நிலையங்களை  மூடும் வகையில் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது . 

மிக முக்கிய விசயம் என்னவெனில், 

ஒன்றிய அரசு அடிப்படை ( Basic) இரத்தப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட, எந்த வித குறைந்த பட்ச இட நிர்ணயத்தையும் அறிவிக்கவில்லை என்பது தான்.

அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவில்லை.மூடி மறைக்கிறது. 

இந்த அரசாணை மூலம் லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை கிடைக்காததால்,  தனியாக சொந்தமாக சிறிய கிளினிக்கல் இரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள டெக்னீசியன்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.

சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களை, கார்ப்பரேட் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இதர பரிசோதனை நிலையங்களுக்கான கூலித் தொழிலாளிகளாக மாற்றும் நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது .

அதே சமயம் , இந்த அரசாணை மூலமாக பெத்தாலஜிக்கல் பரிசோதனை நிலையங்கள், ஜெனிடிக் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இவை போன்ற பல பரிசோதனை நிலையங்களை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, அரசு மிகப்பெறும் சலுகையை காட்டியுள்ளது. சாதகமாக செயல்பட்டுள்ளது. 

அதாவது , சிறிய இரத்த பரிசோதனை நிலையங்களையும் பெத்தாலஜிக்கல் பரிசோதனை நிலையங்களையும் மற்றும் ஜெனிடிக்  பரிசோதனை நிலையங்களையும் , அவற்றைப் போன்ற பரிசோதனை நிலையங்களையும் சமமாக ஒன்றாக ஆக்கி, ஒன்றாக வகைப் படுத்தி , இவை அனைத்திற்குமே நகர்புறங்களில் 500 முதல் 700 சதுர அடி இடம் இருக்க வேண்டும், கிராமப்புறங்களில் 300 சதுர அடி இடம் இருக்க வேண்டும் என அரசாணை மூலம் அறிவித்துள்ளது என்பது  மிகப்பெரிய அந்த நிறுவனங்கள்,  சிறிய இடங்களில் கூட பரிசோதனை நிலையங்களை தொடங்கிட வழி வகுத்துள்ளது. 

கார்ப்பரேட் பரிசோதனை நிலையங்களுக்கு வசதியாக தமிழ்நாடு அரசு, அரசாணை  வெளியிட்டு உள்ளது . 

இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒன்றிய அரசு , அடிப்படை( Basic) நடுத்தர ( Medium) மற்றும் முன்னேறிய (Advanced ) என வகைப்படுத்தி  2012 ம் ஆண்டு, மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்ட விதிமுறைகளின் மூலம் அறிவித்துள்ளது. 

அதைப் போல் தமிழ்நாடு அரசு வகைப் படுத்திடாமல், அனைத்துவகை பரிசோதனை மையங்களையும், ஒரே வகையினமாக, சமமானவையாக (Equal)வகைப் படுத்தியதின் மூலம்,  தமிழ்நாடு அரசு சிறிய இரத்தப் பரிசோதனை  நிலையங்களை ஒழித்துக் கட்ட முயல்கிறது. 

தமிழ்நாடு அரசு சிறிய இரத்தப் பரிசோதனை மையங்களையும், பெத்தாலஜிக்கல், ஜெனிட்டிக்கல் போன்ற பல வகைப்பட்ட பரிசோதனைகளை செய்யும், இதர பெரும் பரிசோதனை மையங்களுடன் இணைத்து ஒன்றாக வகைப்படுத்தி, இடவசதியை நிர்ணயம் செய்துள்ளது கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதாகும்.

இது சிறிய இரத்தப் பரிசோதனை மையங்களை ஒழித்துக் கட்ட வேண்டும்,  பெரிய நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகப்படுத்திட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட, திட்டமிட்ட நடவடிக்கையாகும். 

இது கடும் கண்டனத்திற்குரியது. 

இது ஏழை எளிய நோயாளிகளின் நலன்களுக்கும் எதிரானதாகும். 

சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் குறைந்த கட்டணத்தில் நகர்ப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஏழை எளிய நோயாளிகளுக்கு பரிசோதனைகளை செய்து வருகின்றன . 

அவை ஒரு நாளைக்கு  10 முதல் 30 நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. அத்தகைய நிலையங்கள் அதிகப் பரப்பளவு உள்ள இடங்களில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினால், அவைகளால் வாடகை செலுத்த இயலாத நிலை ஏற்படும். அதன் காரணமாக அவற்றை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஏழை நோயாளிகளுக்கு எதிரானதாகும். அவர்களை கடுமையாக பாதிக்கும். 

சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூடப்படுவது கார்ப்பரேட் இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு சாதகமானதாகும். 

சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டும் நோக்குடன், ,தற்போதைய  தி.மு.க அரசு  செயல்பட முயல்வது சரியல்ல. 

எனவே,  

* தற்பொழுது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை  28.11.2024 அன்று வெளியிட்டுள்ள GO 390 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 

* எக்ஸ்ரே போன்ற பல்வேறு வேறு வகையான பரிசோசனைகளை செய்யாமல், ரத்தப் பரிசோதனைகளை மட்டுமே  செய்கின்ற நிலையங்களுக்கு குறைந்த இடமே தேவைப்படுகிறது. எனவே, இரத்தப் பரிசோதனைகளை மட்டுமே செய்கின்ற‌  நிலையங்களுக்கு தேவைப்படும் இடம் பற்றி,  அரசாணையில் தனியே  அரசு அறிவிக்க வேண்டும். 

* நகர்புற  இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு குறைந்த பட்ச இடவசதி 150 சதுர அடி எனவும், கிராமப்புற இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு 100 சதுர அடி எனவும் நிர்ணயிக்க வேண்டும். 

*  இரத்தப் பரிசோதனை மையங்களை பரிசோதனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஏற்ப வகைப்படுத்திட வேண்டும். அதற்கேற்ப இட வசதிகளை, சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிர்ணயிக்க வேண்டும். 

*  ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒன்றிய அரசு அறவித்துள்ளது போல் அடிப்படை (Basic), நடுத்தர (Medium), மற்றும் முன்னேறிய ( Advanced ) என வகைப் படுத்திட வேண்டும். 

மேற்கண்ட , கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2025 ஜனவரி  மாதம் 19 ம் தேதி ஞாயிறு அன்று  சென்னையில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும். 

அரசு, கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் போராடரடங்கள் நடத்தப்படும். 

இன்றைய  பத்திரிகையாளர் சந்திப்பில்

டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,

ப.காளிதாசன்,

எஸ்.தனவந்தன்,

எஸ்.ஆறுமுகம்,

என்.சரவணன்

உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

இவண்,

டாக்டர்.

ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், Doctors' Association for Social Equality. 

ப.காளிதாசன், அகில இந்திய தலைவர், பாரா மெடிக்கல் லேப்  கல்வி மற்றும் நலச்சங்கம். 

- Ravindranath GR (முக நூலில்)

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid025HVpg2jUabo71LJrCdCV2hPUu2adZHu2GRZKfStir5yBZQzKbsS1uUCAYSEBiMdWl&id=100002774229697&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு