"மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' - தேன் தடவிய ஒரு தோட்டா!
ஏகாதிபத்திய ஒற்றர்களின் ஏமாற்று வித்தையே
''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்ற ஒரு தொடர் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் தங்களை '' மார்க்சியவாதிகள்'' என்று கூறிக்கொண்டேதான் இந்த முழக்கத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கிற வாதங்களில் மிக முக்கியமான இரண்டு கருத்துகள் - (1) உலகில் அனைத்தும் மாறக்கூடியதே. அனைத்தும் மாற்றத்திற்கும் உட்பட்டது என்று கூறுகிற விதியைத் தவிர, பிற விதிகள் அனைத்தும் மாறக்கூடியதே. இதுவே மார்க்சியத்தின் அடிப்படைக்கொள்கை. எனவே மார்க்சியமும் மாற்றத்திற்கு உட்பட்டதே. (2) மார்க்சியத்தின் அடிப்படையே சமுதாயம் மாற மாற, வேறுபட வேறுபட, அச்சமுதாயங்களைபற்றிய மார்க்சிய முடிவுகளும் மாறுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவச் சமுதாயத்தின் பண்புகள்பற்றிய மார்க்சின் '' மூலதனம் '' என்ற ஆய்வில் கூறப்பட்டுள்ள கருத்துகள், 20 ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்துள்ள ஏகாதிபத்தியச் சமூகத்திற்குப் பொருந்தாது. எனவேதான் லெனின் ஏகாதிபத்தியம்பற்றிய தனது புதிய கருத்துகளை முன்வைத்தார். அதுபோன்றே, சீன சமுதாயத்தில் மாவோ தலைமையில் புரட்சி வெற்றிபெற்றதற்குக் காரணமே , சீனாவுக்கேற்ற '' மார்க்சியத்தை'' மாவோ முன்வைத்ததே காரணம்.
மேற்கூறியதோடு, மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கிற மற்றொரு கருத்து.... '' ரசியா உட்பட பல சோசலிச நாடுகளில் கம்யூனிசம் தோற்றுவிட்டது. எனவே சமுதாயம்பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது''
முதலில் மார்க்சியம் என்றால் என்ன என்பதுபற்றிய வினாவுக்கான விடை காணவேண்டும். இயற்கை, சமுதாயம் ஆகியவற்றின் இயக்கங்களுக்கு அடிப்படையான அறிவியல் விதிகளே அவை. அந்த விதிகளைக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகிற சமுதாயப் பண்புகளை ஆராயவேண்டும். ஒரு நாட்டின் சமுதாய அமைப்பு மற்றொரு நாட்டின் சமுதாய அமைப்பிலிருந்து, பல பண்புகளில் வேறுபடலாம். ஆனால் அவற்றைக் கண்டறிய அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிற பொது விதிகளே.... ஆய்வுமுறைகளே மார்க்சியம். முதலாளித்துவச் சமுதாயம்பற்றிய மார்க்சின் ஆய்வுக்கும், ஏகாதிபத்தியம்பற்றிய லெனின் ஆய்வுக்கும், சீனச் சமுதாயத்தின் அரைக் காலனித்துவ அரை நிலப்புரபுத்துவ நாட்டைப்பற்றிய மாவோவின் ஆய்வுக்கும் ... இவை அனைத்துக்கும் பின்பற்றப்பட்ட அடிப்படை ஆய்வு விதிகள் .... ஒன்றே. இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அணுகுமுறையே ... அனைத்திலும் பின்பற்றப்பட்டன. மேற்கூறிய சமுதாயங்கள்பற்றிய முடிவுகள் மாறுபட்டவை. ஆனால் ஆய்வுமுறைகள்.... விதிகள்.... ஒன்றே. இந்த ஆய்வுமுறைகள்தான் மார்க்சியம்.
பிரபஞ்சத்தின் (Universe) இயக்கம்பற்றிய அறிவியல் விதிகளில் மிக முக்கியமானவை ஈர்ப்பு (gravitation) , ஈர்ப்புவிசை (gravity) பற்றியவை ஆகும். இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் (stars) கிரகங்களுக்கும் (planets) பொருந்தும். இதற்கு உட்படாத எந்த ஒன்றும் பிரபஞ்சத்தில் கிடையாது. பிரபஞ்சம் என்பது ஒரு மிகப்பெரிய படுக்கை விரிப்பு என்று கொள்வோம். அதில்தான் அனைத்து நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கே உரிய இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது கிரகத்தின் பொருள்திணிவு (mass) , அளவு ஆகியவற்றைப் பொறுத்து.... அவை பிரபஞ்சத்தில் பெற்றுள்ள இடவெளியும் (space) குழி அல்லது பள்ளமும் அமைகின்றன.
அவ்வாறு அமைகிற நட்சத்திரம் அல்லது கிரகம், தனது குறிப்பிட்ட பொருள்திணிவால் பிரபஞ்ச இடவெளியில் உருவாக்கியுள்ள குழிகளின் ஆழ அகலத்தைப் பொறுத்து.... அது தன்னருகே வரும் பிற பொருள்களை ( பிற நட்சத்திரம், கிரகம் உட்பட) ஈர்க்கிறது. இதுவே ஈர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. எந்த விகிதத்தில் அது பிறவற்றை தன்னைநோக்கி இழுத்துக்கொள்கிறது (attracting or pulling) . , அதுவே ஈர்ப்புவிசை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஈர்ப்பு, ஈர்ப்புவிசை என்ற அறிவியல் கோட்பாடுகள் பிரபஞ்சத்தில் நிலவும் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது கிரகத்தின் ஈர்ப்பு விசையின் அளவு மாறும். அவ்வளவுதான். பிரபஞ்சத்தில் நிலவுகிற கருந்துளைகள் (Black holes) என்ற அமைப்புகள் மிகப்பெரிய அளவில் ஈர்ப்புவிசை கொண்டவை. அவற்றால் உள்ளே இழுக்கப்பட்ட எதுவும் மீண்டு வரமுடியாது. இங்கு நாம் மிகக் கவனமாகக் கவனிக்கவேண்டியது.... ஈர்ப்பும் ஈர்ப்பு விசையும் பொதுவான அறிவியல் கோட்பாடுகள் (Universal laws) . ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு நட்சத்திரங்களின் அல்லது கிரகங்களின் ஈர்ப்பு விசைகளை அளக்கும்போது ... அவற்றின் அளவுகள் மாறுபட்டு இருக்கும். மாறுபட்டுத்தான் இருக்கிறது.
இதுபோன்றதுதான் மார்க்சியத்தின் அடிப்படை ஆய்வுக்கோட்பாடுகளான இயங்கியல் பொருள்முதல்வாதமும் (Dialectical Materialism) வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் (Historical Materialism) ஆகும். அவற்றைக்கொண்டு குறிப்பிட்ட சமுதாயங்களின் அமைப்புகளை ஆராயும்போது, அச்சமுதாயங்களின் பண்புகள்பற்றிய முடிவுகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் ஆய்வுமுறை ஒன்றுதான். எவ்வாறு ஈர்ப்பு, ஈர்ப்புவிசைபற்றிய கோட்பாடு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம், கிரகத்திற்குக் கிரகம் மாறாதோ, அதுபோல்தான் மேற்குறிப்பிட்ட மார்க்சின் ஆய்வியல் கோட்பாடுகள் அல்லது நெறிகள் அல்லது, விதிகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் மாறாது.
இந்த மார்க்சிய விதிகளைக்கொண்டு, வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த மார்க்சிய ஆய்வாளர்கள் தங்கள்தங்கள் நாட்டின் சமுதாய அமைப்பை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும் என்பதே மார்க்சியம். குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்புகளைப்பற்றிய முடிவுகள் வேறாக இருக்கும். ஆனால் ஆய்வுமுறை - மார்க்சிய அறிவியல் - ஒன்றே.
பிரபஞ்சத்தில் கிரகத்திற்குக் கிரகம் தனித்தனி ஈர்ப்பு, ஈர்ப்புவிசை விதிகள் கிடையாது. அவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆராயும்போது, குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்புவிசை எவ்வளவு என்பதுதான் வேறுபடும்.
குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்புவிசைபற்றிய அறிவியலாரின் முடிவுகள் சரியாக இருந்தால்தான், அக்கிரகத்திற்கு அனுப்பிவைக்கும் விண்கலங்களும் சரியாகச் சென்று அடையமுடியும். முடிவுகள் தவறாக இருந்தால் ... தோல்வியே. விண்கலத்தின் அமைப்பும் செயல்பாடும் குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்பு, ஈர்ப்புவிசையை எதிர்நோக்குகிற அளவுக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் தோல்விதான். ஆனால் தோல்வி தற்காலிகமானதுதான். ஈர்ப்புவிசைபற்றிய முடிவுகள் தவறாக இருந்தாலும், அல்லது விண்கலத்தின் அமைப்பில் கோளாறுகள் இருந்தாலும்.... மீண்டும் அவற்றைச் சரிப்படுத்தி... வெற்றிபெறுகிறோம். இங்கு நாம் கவனிக்கவேண்டியது ஈர்ப்புபற்றிய அறிவியல் விதி ஒன்றுதான்!
அதுபோன்றதுதான் மார்க்சிய அறிவியலைக் கொண்டு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்புகளைப் புரிந்துகொள்வதும் அல்லது குறிப்பிட்ட புரட்சிகர உத்திகளை முடிவுசெய்வதும் ஆகும். இதில் தவறுகள் ஏற்படலாம். ஆனால் தவறுகள் சீர்படுத்தப்படலாம். சீர்படுத்தப்படவேண்டும்.
எனவே ''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்று கூறுவது ''கிரகத்திற்குக் கிரகம் ஈர்ப்பு, ஈர்ப்புவிசைபற்றிய விதிகள் வேறு'' என்று கூறுவதற்கு ஒப்பாகும். அதுபோல. குறிப்பிட்ட ஒரு சோதனையில் விண்கலத்தைச் செலுத்துவதில் தோல்வி ஏற்பட்டால், ஈர்ப்புபற்றிய அறிவியல் விதியே தவறானது என்று கூறுவது எவ்வாறு தவறானதோ .. அதுபோல ஒரு குறிப்பிட்ட புரட்சி தோல்வி அடைவதால், மார்க்சிய அறிவியலே தவறானது, மார்க்சியம் பொய்த்துவிட்டது என்று கூறுவது திட்டமிட்ட சதியே.
'' தேன் தடவிய தோட்டாவே!''
''ஏகாதிபத்திய ஒற்றர்களின் ஏமாற்று வித்தையே'!''
( தெய்வ சுந்தரம் நயினார் முகநூல் பதிவு )
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு