நானொரு தற்குறியா ?
சந்திரன் தா
தவெகவினருக்கு கொள்கை இல்லை,
இது ஒரு கொள்கையற்ற கூட்டம் என்று முகநூலில் பலரும் எழுதுவதை பார்க்கிறோம்.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சர்யமில்லை.
ஆனால் கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்பவர்கள்,
கம்யூனிச ஆசான்களை முகப்புப் படமாக வைத்திருப்பவர்கள் இப்படிச் சொல்வது சரியா என யோசிக்க வேண்டும்.
" ஒன்றுமில்லாததிலிருந்து எதுவும் தோன்றாது,
ஏனெனில் ஒன்றுமில்லாதது என்று ஒன்றில்லை "
இது மார்க்சியத்தின் பாலபாடம்.
அதாவது சூனியம் என்ற ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை, இயங்கிக் கொண்டேயிருக்கும் பொருட்களால் நிரம்பியதே இப்பிரபஞ்சம்.
அதைப்போலவே கொள்கையில்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
பொருட்களால்தான் சிந்தனைகள் உருவாகிறது.
மேலும் அந்த சிந்தனைகள் எப்படி கருத்துக்களாக, குறிக்கோளாக, கொள்கையாக, லட்சியயமாக உருவெடுக்கிறது என்பதை மார்க்சின் அறிவுத் தோற்றவியலை கற்கும்போது அறிந்து கொள்ளலாம்.
தனக்கு எந்தக் கொள்கையுமில்லை என்று யாராவது சொன்னால் கூட அவர்களும்,
இந்த சமூகத்தில் ஏற்கெனவே நிலவி வருகிற சமூகக் கருத்துக்களை தங்கள் சிந்தையில் நீக்கமற நிறைத்திருப்பவர்களேயாவர்.
அதாவது முதலாளித்துவம் மற்றும் மீதமிச்சமுள்ள
நிலப்பிரபுத்துவத்தின் கருத்துக்கள் அவர்களையறிமாலே அவர்களுடைய கொள்கையாக நிலைபெற்றிருக்கும்.
மேற்கண்ட முதலாளித்துவ கொள்கையை மாற்றி மார்க்சிய கொள்கையை கற்று,
ஏற்றுக் கொண்டு தங்களுடைய சிந்தனையை மார்க்சிய முறையில் அதாவது இயக்கவியல் முறையில் சிந்திக்க தன்னை மாற்றிக் கொள்ளுபவர்கள் மட்டும் மார்க்சிய கொள்கையை ஏற்றவர்கள் ஆகிறார்கள்.
மற்றவர்கள் அனைவரும் முதலாளித்துவ மற்றும் மீதமிச்சமுள்ள நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை,
கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள்தான்.
எனவே கொள்கையற்றவர்கள் என்று பேசுவது
நாமே அவர்களை முதலாளித்துவ கொள்கையாளர்களல்ல என்று ஒப்புக் கொள்வது போலாகிவிடும்.
எல்லா முதலாளித்துவ கட்சிகளும் தங்கள் கொள்கையாக முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
முதலாளித்துவ பொருளாதார அடித்தளத்தின் மேற்கட்டுமானங்களான பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றில் சிற்சில மாற்றங்களை வைத்துள்ளனர்.
ஒருவேளை இன்னமும் நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமான கொள்கைகளை வைத்திருக்கும் முதலாளித்துவ கட்சிகளோடு ஒப்பிடும் போது
முதலாளித்துவ மேற்கட்டுமானங்களை கொள்கையாக வைத்திருப்பவர்கள் முற்போக்காளர்கள் என்று ஒப்பீட்டு அடிப்படையில் அழைக்கப்படலாம்.
ஆனால் இவர்கள் யாரும் சமூகத்தை தலைகீழாக மாற்றும் புரட்சிகர கொள்கை கொண்டவர்களில்லை.
இந்த வித்தியாசத்தை புரியாமல் கொள்கையற்ற அரசியல் கட்சி என்று மார்க்சியம் பேசுபவர்கள் பேசுவதென்பது
இவர்கள் மார்க்சியத்தையே அறியவில்லை என்பதையே காட்டுகிறது.
தவெகவிற்கு வாக்களித்த அனைவரையும், குறிப்பாக இளைஞர்களை அறிவற்றவர்கள், மூளையற்றவர்கள் என்று அவதூறு பரப்புவதை முதலாளித்துவ கட்சிகள் செய்யலாம்,
ஆனால் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அப்படி செய்யலாமா என்று யோசிக்க வேண்டும்.
தவெக கட்சியை விமர்சிப்பதை இங்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடாது.
நான் கூற வருவது தவெகவிற்கு வாக்களித்தவர்களை அவதூறு செய்வதைப் பற்றியதுதான்.
இப்படி அவதூறு செய்துவிட்டு யாரிடம் நமது தத்துவத்தை எடுத்துக் கொண்டு போகப் போகிறோம்.
இதே இளைஞர்களிடம்தான் நாம் செல்ல வேண்டும்.
அப்படியானால் இளைஞர்களை குறை சொல்லவே கூடாதா என்றால் நிச்சயம் சொல்லலாம்,
அது விமர்சனமாக இருக்கலாமேயொழிய அவதூறாக இருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து.
இன்றைய இளைஞர்களிடம் என்னென்ன பலம்,
பலவீனம் உள்ளது,
அவர்கள் அரசியலை
பார்க்கும் பார்வை,
அவர்களுடைய பங்கேற்பு
போன்றவற்றிலுள்ள குறைகளை விமர்சிக்க வேண்டும்.
அந்த விமர்சனம் மற்ற முதலாளித்துவ கட்சிகளின் அவதூறைப் போலன்றி, அவர்கள் மீதும், அவர்களுடைய எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டது என்று அவர்கள் உணருகிற வகையில் இருக்க வேண்டும்.
மேலும் மார்க்சியவாதிகளின் விமர்சனம் மற்றவர்களின் விமர்சனத்திலிருந்து தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியது அத்தியாவசியம்.
மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக அல்ல தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அதோடு இதற்கு முன்பாக அரசியலில் அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் நடவடிக்கைகளை நாம் எவ்வாறு விமர்சித்துள்ளோம் என்றும்,
இதற்கு முன்பாக இதுபோல அரசியலில் எழுச்சிகள் ஏற்பட்ட போது அன்றைய சூழ்நிலையை எவ்வாறு அணுகியுள்ளோம் என்றும் விளக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக மூளையற்றவர்கள், அறிவற்றவர்கள் என்று பேசுவதால் மொத்தமாக இளைய சமுதாயத்தை நம்மை விட்டு தூர நிறுத்துகிறோம் என்பதை உணர வேண்டும்.
அதோடு இப்படிப்பட்ட அவதூறுகளால் ஒட்டுமொத்த கம்யூனிச அமைப்புகள் மற்றும் கம்யூனிசம் என்ற தத்துவத்திலிருந்தே இந்த தலைமுறையை தூர தள்ளுகிறோம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதை செய்பவர்கள் தற்போதைய அரசியல் சூழல் அல்லது தவெக மீதான கோபத்தில் செய்தால்,
அதை உணர்ந்து இளைஞர்களை நம்மிடமிருந்து விலகாத வகையிலான விமர்சனமாக மாற்றிக் கொள்வது நலம்.
அதற்கு பதில் திமுகவின் வாடகை வாய்களாக தங்களை மாற்றிக் கொண்டு செய்தால் அவர்களை அம்பலப்படுத்த வேண்டியது கம்யூனிஸத்தின் மீது பற்றுள்ளவர்களின் கடமை.
காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய், விஜயகாந்த், சீமான் இப்படி பல தலைவர்களோட தனித்தன்மைகள்னு அவங்கவங்களோட கட்சிக்காரங்க பெருமையா பேசறது மட்டுமில்லாம,
ஊடகங்களும் பயங்கர பில்டபு தருவாங்க,
அது போக இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், சமூக ஆராய்ச்சியாளர்கள் இப்படி சமூகத்துல அறிவிருக்கறவங்கனு நம்ப வைக்கப்பட்ட பலரும்
இந்த பிம்பத்தை செமயா டெவலப் பண்ணுவாங்க.
இவங்க எல்லாருமே முதலாளித்துவ அரசியல் கட்சிகளோட தலைவருங்க.
இவங்க அரசியலை தீர்மானிக்கறது முதலாளித்துவம்தான்.
அதுக்காக முதலாளிகளும் அவங்க பங்குக்கு அவங்களும் சினிமா, ஊடகம் மாதிரியான மீடியங்கள் மூலமாவும் ஊதி பெருசாக்குவாங்க.
இவங்களோட பிம்பம் டேமேஜ் ஆகாம காப்பாத்தறதுக்கு படாதபாடு படுவாங்க.
ஆனா இந்தத் தலைவருங்களே அவங்க நடவடிக்கையாலேயே அந்த பிம்பத்தை சிதைச்சு விட்ருவாங்க.
அடுத்தவங்களையும் சகட்டு மேனிக்கு விமர்சிச்சு டோட்டல் டேமேஜ் பண்ணிருவாங்க .
ஊடகங்களும் கட்சி பிரிச்சுட்டு ஒருபக்கம் ஊதிப் பெருசாக்கறதும், மறுபக்கம் ஓட்டை போட்டு காலி பண்றதுமான வேலையை செய்வாங்க.
ஆனா இடதுசாரி தலைவர்கள், முற்போக்கு இலக்கியவாதிகள், மார்க்சிய பேரறிஞர்கள், தொழிற்சங்க மாமேதைகள்னு சொல்ற பலரும் இதே பிம்பங்களை முதலாளித்துவவாதிகளோட கூலிப்படையினர் மாதிரியே உயர்த்திப் பிடிக்கறதும், டேமேஜ் பண்றதுமா இருக்காங்க
அது ஏன் அப்படீங்கறதுதான் கேள்வியே.
தன்னைத்தானே அம்பலப்படுத்திக்கற முதலாளித்துவ தலைவர்களை இடதுசாரிகள் ஏன் காப்பாத்தப் போறாங்க ?
அவங்க சண்டைல இவங்க ஏன் ஒருத்தரை உயர்த்தியும், மற்றவரை தாழ்த்தியும் பேசறாங்க
இதுக்கு காரணமா இப்படிப்பட்டவங்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் இருக்குனு சொல்றாங்க.
அது உண்மைதான் , ஆனா மார்க்சியத்தை ஏத்துகிட்டு தன்னோட வாழ்க்கையையே அதுக்காக அர்ப்பணிச்சுட்டதா சொல்லிட்டு
அப்புறம் எப்படி தனிப்பட்ட லாபத்துக்காக போவாங்க,
அந்த தத்துவம் நம்மை பிடிச்சுருச்சுனா தப்பு பண்ணவோ, தனிப்பட்ட லாபத்துக்காகவோ நம்மால முதலாளித்துவவாதிகள் மாதிரி மாற முடியுமா ?
கண்டிப்பா முடியாது.
ஆனா ஏன் நடக்குதுனா,
இப்படிப்பட்டவங்க மார்க்சியத்தையே புரிஞ்சு ஏத்துகிட்டு, அதுக்குத் தகுந்தபடி நடக்கறதில்லை அதனாலதான் ஸ்லிப் ஆகறாங்க,
இதை நான் சொல்லல,
பேராசான் மார்க்சே சொல்லிருக்காரு,
" புலன் உணர்வை
நடைமுறை நடவடிக்கையாகப் புரிந்து கொள்ளாத பொருள்முதல்வாதம் , அடைந்திருக்கக் கூடிய உச்சகட்டம் " குடியுரிமைச் சமுதாயத்தில் " உள்ள தனிநபர்களைப் பற்றிய சிந்திப்பே ஆகும் "
இதை தன்னுடைய 27வது வயசுல
" ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகள் " கட்டுரையில எழுதறாரு.
அதாவது மார்க்ஸ் செழுமைப்படுத்திய முரணில்லாத, முழுமையான பொருள்முதல்வாதத்திற்கு பதிலாக
மார்க்சுக்கு முந்தைய முரண்பாடான , முழுமை பெறாத கொச்சைப் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டால்
அது தனிநபர்கள் பற்றிய சிந்தனையில் போய் முட்டி,
அதுக்கப்புறம் போக முடியாம நின்னுக்கும்னு எழுதறாரு.
அவர் 27 வயசுல எழுதுனதை 67 ஆகியும், 87 ஆகியும் படிக்காம , புரிஞ்சுக்காம
பிம்ப அரசியலை பேசறவங்களை என்னனு சொல்றது
மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட " இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் " கிற தொகுப்பு நூல்ல இருக்கிற இந்த வரிகள்,
புத்தகத்தை திறந்தா நாலாவது பக்கத்துலயே இருக்கு.
சோவியத் யூனியன் இது மாதிரியான நூல்களை தமிழுக்கும், உலகமெங்கும் கொண்டு போய் மார்க்சிய, லெனினியத்துக்கு செஞ்ச சேவையை மறக்க முடியுமா,
அதோட சிதைவு உலகு தழுவிய உழைக்கும் மக்களுக்கு எப்படிப்பட்ட பின்னடைவுனு
அந்தப் புத்தகஙகளை பார்க்கும் போதெல்லாம் அங்கலாய்ப்பா இருக்கு
படிங்க பரமாத் மாக்களே
சந்திரன் தா
https://www.facebook.com/61557347300989/posts/122291047730244910/?rdid=NPfKlyEd92Wwwnd5
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு