வந்தேறிகளும், ஓடுகாலிகளுமாக அதகளப்படுகிறது, தமிழக அரசியல்!
சாவித்திரி கண்ணன்
திமுக தலைவர்களின் வாரிசுகளான திருச்சி சிவாவின் மகள் காயத்திரி, ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் தவெகவில் சேர்ந்துள்ளனர்.
அழகிரியின் மகள் தவெகவிற்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்தோ அணியணியாக வந்து கொண்டுள்ளனர்.
திமுக தலைவர்களின் தவெகவில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இந்த வாரிசு அரசியல் என்ற வசவில் இருந்து திமுவை விடுவிக்க பாடுபட்டுள்ளது தவெக.
வாரிசுகள் தந்தை இருக்கும் கட்சியிலேயே அதிகாரத்திற்கு வந்தால் அதை மன்னராட்சி என சொல்லும் தவெக, வாரிசுகள் என்பதற்காகவே வந்தவுடன் அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது மன்னராட்சிக்கு மறுவடிவம் தரும் செயல் தானே!
முன்னதாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி விஜய்யின் பதவி ஏற்புக்கு வந்ததோடு, விஜய்யை தலைமை செயலகத்தில் சந்தித்து தவெகவில் சேரும் விருப்பத்தை சொல்லிச் சென்றார். அவருக்கு மதுரை மேயராகும் விருப்பம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆனால், கலைஞரின் குடும்பத்திற்குள் இருந்து வருபவர்களை கட்சியில் இணைத்து சங்கடப்படுத்தக் கூடாது என ஜெயலலிதா கறாராக இருந்தார். அந்த வகையில் ஒரு கட்டத்தில் மாறன் சகோதரர்கள் சேர முனைந்ததையும், மு.க அழகிரியே சேர முயன்றதையும் அவர் ஏற்கவில்லை. இதையே விஜய்யும் பின்பற்றுகிறாரோ, என்னவோ?
உள்ளாட்சி அமைப்புகளின் திமுக கவுன்சிலர்கள் பலர் தவெகவில் சேர்ந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே ஐந்து திமுக கவுன்சிலர்கள் தவெகவில் சேர்ந்து விட்டதாகவும் மேலும் 10 பேர் சேரத் தயாராக உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் ராஜுனாமா செய்து வந்துள்ளனர். இது வரை நான்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் சேர்ந்துள்ளனர். ஆனால், ஒன்றிய செயலாளர்களும்,பகுதி செயலாளர்களும் பெரிய அளவில் வரவில்லை. அதிமுகவில் உறுதியாக உள்ளனர்.
அதிமுகவில் உள்ள 90 சதவிகிதம் பேர் தவெகவிற்கு வர உள்ளதாகவும், அதிமுகவும், தவெகவும் வேறு, வேறு அல்ல என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இதை தேர்தலுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தி இருந்தால் 35 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்காது.
அதாவது, இன்னொரு குட்டி திமுகவாகவும், மறுவடிவம் பெற்றுள்ள மற்றுமொரு அதிமுகவாகவும் தவெக தன் தோற்றத்தை தகவமைத்துக் கொண்டுள்ளதன் மூலம் அது தன் சுயத்தை இழந்து வருகிறது. புதிதாக கட்சிக்குள் நுழைந்த திமிங்கலங்களால் தவெகவின் உண்மைத் தொண்டர்கள் தனிமைப்பட்டு போகிறார்கள்!
தன்னை வளர்த்து உருவாக்கி ஆளாக்கிய கட்சியைத் துறந்து வெற்றியின் விலாசத்தை தேடி புதிய கட்சியில் அடைக்கலமாகிறவர்கள், இன்னொரு வெற்றிக் கட்சியை காண நேர்ந்தால் இங்கிருந்தும் இடப் பெயர்ச்சி செய்வார்கள் என்பது எழுதப்படாத விதியாகும்.
அதற்கு இன்றைய சாட்சியாகத் திகழ்வது திரிணாமுல் காங்கிரஸ்.
15 வருடம் தொடர்ந்து மேற்கு வங்க ஆட்சியில் கோலோச்சிய மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று விலகுவோரால் கரைந்து கொண்டுள்ளது.
அன்று புத்தம் புதிய கட்சியான திரிணாமுல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது, அதில் 33 வருடம் அதிகாரத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஒரு பெரும் கூட்டமும், காங்கிரசில் இருந்து ஒரு கூட்டமும் திரிணாமுல் கட்சிக்குள் நுழைந்து வாய்ப்புகளையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டது. திரிணாமுல்லில் இருந்த உண்மை தொண்டர்கள் உதாசினப்படுத்தப்பட்டனர்.
தற்போதைய தோல்விக்கு பிறகு அப்படி திரிணாமுல்லுக்குள் வந்த கூட்டம், ’அற்ற குளத்து அருநீர் பறவை போல’ பறந்து, பாஜகவின் கட்டளைப்படி, தனி ஆவர்த்தனம் செய்கிறது. கட்சியின் 80 எம்.எல்.ஏக்களில் 60 எம்.எல்.ஏக்கள் மம்தா பானர்ஜியை எதிர்த்து ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையில் கட்சி தலைமையகத்தையே கைபற்றியுள்ளனர். இந்த ரிதப்ரதா பானர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தவெகவிற்கு பாடம் கற்க நிறைய உள்ளது.
இவர்கள், ’’திரிணாமுல் கட்சிக்குள் மம்தா ஜனநாயகத்தை கொன்றுவிட்டார். வாரிசு அரசியலைத் திணித்து எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்தார்’’ என்கிறார்கள் கோரசாக!
இவர்களின் குற்றச்சாட்டு உண்மை தான்! ஆனால், அதிகாரத்தில் இருக்கும் போது, இவர்கள் தங்கள் சுயமரியாதையை தியாகம் செய்து கொண்டு, வாரிசுத் தலைவருக்கு வணக்கம் வைத்து வலம் வந்தவர்கள் தான். சமயம் பார்த்து திருப்பி அடிக்க காத்திருந்து இருக்கிறார்கள் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணி. கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடிக்க முடியாத திடகாத்திர கட்சி என்ற தோற்றம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது. உள்ளுக்குள் கட்சி நிர்வாகிகள் மத்தியிலே சொல்ல முடியாமல் அடக்கி வைக்கப்பட்ட கோபம் வாய்ப்பு கிடைத்த போது வாசலை தேடிச் சென்று விட்டது.
மேற்படி சம்பவங்களில் திமுகவிற்கு பாடம் உள்ளது.
திமுக தன் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டு பாஜகவுடன் மறைமுக நட்பு பாராட்டி பாசாங்கு அரசியல் செய்து வருகிறது என கடந்த ஐந்தாண்டுகளாக நான் இடையறாது எழுதி வந்தேன்.
இந்த உண்மையானது தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தன்னை தக்க வைத்துக் கொள்ள பாஜக கட்டளைப்படி அதிமுகவை அரியணை ஏற்ற முயன்றதில் தானாகவே அம்பலப்பட்டது.
பொருந்தா உறவுக்கு பொருந்தி செல்ல முயன்றதால் அதிமுகவிற்குள் கலகம் உருவாகி அது கலகலத்துக் கிடக்கிறது…! எனினும், அந்த கட்சியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு மாறியவர்கள் அதிகார விரும்பிகளே அன்றி, அருகதைக்குரியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் அம்பலப்படுத்தியது என்னவோ, உண்மை தான்!
ஆனால், நடந்தவற்றை அப்பட்டமாக மறைத்து, ஒரு வெற்றிகரமான நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளது திமுக தலைமை. இதனால், அந்தக் கட்சிக்குள் தலைமை மீதான மரியாதை தரைமட்டமாகி உள்ளது. இதை மூத்தவர்கள் வெளிப்படுத்தாமல் ஆதாயம் கருதி அடக்கி வாசித்தாலும், அவர்களின் வாரிசுகளான இளையோர் கட்சி மாறுவதன் மூலம் காண்பித்துக் கொண்டுள்ளனர்.
ஒதுக்கப்பட வேண்டிய ஓடுகாலிகளையும், வாசலிலேயே தடுக்க வேண்டிய வந்தேறிகளையும் கட்சிக்குள் இணைப்பதன் மூலம் காற்று அதிகமாக நுழைந்து, வீங்கிப் பெருத்து வெடிக்க காத்திருக்கும் பலூனாகி வருகிறது தவெக.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/37819455557645206/?rdid=eyvGAl2a4Heub4qo
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு