ஏகாதிபத்தியங்களும் மதவாதமும்
தெய்வ சுந்தரம் நயினார்
மதங்களின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களும் அவர்களுடைய தரகர்களும் தங்களுடைய நாட்டில் பாசிசத்தை உயர்த்திப்பிடிப்பது என்பது ஏகாதிபத்தியங்களின் இறுதிக்கட்ட நீடிப்பு இயக்கத்தின் ஒரு இயற்கைவிதி. இதைத் தூக்கியெறிந்து மக்கள் ஜனநாயக அல்லது பாட்டாளிவர்க்க அரசை நிறுவுவதும் சமுதாய வளர்ச்சியின் ஒரு கட்டாய, இயற்கை விதி.
இந்தக் கட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க (பெரும்பான்மை மதத்தினரின் ஆதரவோடு) மதவெறியைத் தூக்கிப்பிடிப்பதும் உண்மையான கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை (சதீஷ்கர்) அழித்துவிட முயல்வதும் வழக்கம். இந்த இரண்டுமே இந்தியாவில் இன்று நீடிக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது உண்டு. குறிப்பிட்ட நாடுகளில் எந்த மதம் ஆதிக்கம் வகிக்கிறதோ அந்த மதத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, சிறுபான்மை மதங்களை ஒடுக்குவது நடைபெறும். கிறித்துவம், இசுலாம், இந்து மதங்கள் உட்பட எந்த ஒரு மதமும் இதற்கு விதி விலக்கு இல்லை!
ஆதிக்கம் வகிக்கிற மதத்தின் மக்களே ஜனநாயக சக்திகளின் தலைமையில் ஒன்றிணைந்து ஆளும் வர்க்க அரசுகளை எதிர்த்து கிளர்ந்தெழும்போது, அதாவது மதவாதம் நீடிக்கமுடியாத நிலையில் , நேரடியாக ஏகாதிபத்தியங்கள் மதத்தைத் தாண்டிய பாசிசத்தை நடைமுறைப்படுத்தும்.
இன்று இந்தியாவில் பா ஜ க அரசு இந்தியாவின் ஆதிக்க மதமான இந்து மதத்தைப் பயன்படுத்துகிறது. எதிர்காலத்தில் இந்த அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து மத அடிப்படை தாண்டி மக்கள் அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்போது , இந்து மதவெறியையும் தாண்டிய நேரடியான பாசிச அரசியல் செயற்பாட்டுக்கு வரும்.
வரலாற்றில் மதங்கள் எப்போதும் ஏதாவது ஒருவகையில் ஆளும் வர்க்கங்களுக்கு வலதுகரமாகச் செயல்படும். இறை நம்பிக்கையானது மதம் என்னும் நிறுவனமாக்கப்படும்போது அது தொடங்குகிறது. நிறுவனமயமாக்கத்தின் அடிப்படை நோக்கமே அதுதான்.
சமுதாய அமைப்புகள் மாறினாலும் மதங்கள் நீடிக்கும், ஆளும் வர்க்கங்களாகச் சுரண்டும் வர்க்கங்கள் நீடிக்கிறவரை! ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் தங்கள் 'தேவைகளுக்கேற்ப' இந்த மத நிறுவனங்களைப் பயன்படுத்தும்.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் . . . இராணுவ அடக்குமுறைக்கு இணையாக மதநிறுவனங்கள் பயன்படுத்தப்படும். மதவாதம், மதவெறி , சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகப் பெரும்பான்மை மதத்தினரைப் பயன்படுத்துதல் போன்றவற்றை ஆளும் சுரண்டுவர்க்கங்கள் பயன்படுத்தும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிற ஐரோப்பிய நாடுகள் கிறித்துவத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் புரட்சிகர இயக்கங்களில் ஊடுருவியுள்ள பல்வேறு தன்னார்வக் குழுக்கள் பெரும்பாலனாவை கிறித்துவ மத ஆதரவுக் குழுக்கள் என்றும் கூறப்படுகிறது.
ஈரான், ஈராக், அரபுநாடுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இசுலாமியத்தைப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் இந்துமத வெறி பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, இன்றைய நிலையில் - முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டமாக ஏகாதிபத்தியம் அமையும்போது - ஏகாதிபத்தியம் மிகவும் பிற்போக்கானதாகவும், அழுகிய நிலையிலும் நீடிக்கும்போது - ஏகாதிபத்தியங்களும் அவர்களது தரகுநாடுகளும் தங்களது பாசிச நடவடிக்கைகளில் - மதவெறியை, மதத் தீவிரவாதத்தை ஒரு முக்கியமான பாசிச ஆயுதமாகப் பயன்படுத்தும். இதில் எந்த மதமும் விதிவிலக்கு இல்லை என்பது எனது கருத்து.
மதம் அல்லது மத நிறுவனம் என்பதே ஆளும் சுரண்டும் வர்க்கங்களின் ஒரு கருவியே! மதங்களைக் காப்பாற்றுவதற்கான மதவெறி நடவடிக்கை என்பது சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையே என்று நான் கருதுகிறேன். இதுபற்றி மேலும் ஆழமான ஆய்வு தேவை .
தெய்வ சுந்தரம் நயினார்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு