மற்றவர்களை பாஜக பி டீம் எனக்கூறி -- பாஜகவின் ஏ டீமாகவே மாறி வரும் திமுக - முகநூல் பதிவு தொகுப்புகள்
துரை. சண்முகம் - சாவித்திரி கண்ணன் - சத்திய நாராயணன் - இக்பால் அகமது - சிவப்பிரியன்
பாசிசம் பூந்துடும்!
அதுக்கு?
*பட்டியலின மக்களின் மீதான தாக்குதல் உரிமை பறிப்புகளை முதன்மைப்படுத்தக் கூடாது.
* கூலிப்படை கொலை, கட்டப்பஞ்சாயத்து, வணிகர்கள் மீதான ரவுடிகள் தாக்குதல் இவைகளை முதன்மைப்படுத்த கூடாது.
* கஞ்சா சாராயம் இளைஞர்கள் சீரழிவு இதை முதன்மைப் படுத்த கூடாது.
* சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்முறை கொலைகள் இவைகளை முதன்மைப்படுத்தக்கூடாது.
* தூய்மை பணியாளர் முதல் மின்சாரம் மருத்துவம் போக்குவரத்து துறைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை, குறைந்தபட்ச ஊதியம் பணி பாதுகாப்பு ஒன்றைப் போராட்டங்களை முதன்மைப்படுத்தக்கூடாது.
* சாம்சங் முதல் அந்நிய மூலதனம் அடியெடுத்து வைக்கும் இடம் எங்கும் தொழிற்சங்கங்கள் கூடாது.
* கனிம வள கொள்ளை மணல் கொள்ளை போன்றவைகளில் பெரிய செய்தியாக பேசக்கூடாது.
* திருப்பரங்குன்றம் ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட சிக்கந்தர் தர்காவுக்கு இயல்பாக இஸ்லாமிய மக்களை அனுமதிப்பதை கெடுபிடி காட்டுவது, அவர்கள் உரிமைப் படி ஆடு கோழி பலியிட தடை செய்வது போன்றவைகளை முதன்மைப்படுத்தி பேசக் கூடாது.
* கோயில் குடமுழுக்கு பார்ப்பன வேத சாலை, பார்ப்பன தோப்பனார் வரைக்கும் தெருவுக்குப் பெயர் வைப்பது ஆர்எஸ்எஸ் ஆட்களையே அழைத்து பொறுப்பு கொடுப்பது போன்றவைகளை முதன்மைப்படுத்தி கண்டிக்க கூடாது.
* பாசிச பாஜகவை எதிர்க்க பல ஆண்டுகளாக கூடவே இருக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தலில் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு போக வேண்டும். இது நியாயமா? என தொண்டர்கள்
பொதுவெளியில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
* முக்கியமாக ஆர்எஸ்எஸ் கும்பல்கள் கையாலேயே திராவிட தலைவருக்கு சிலை திறப்பு நாணயம் வெளியீடு போன்ற கோலாகலங்கள் நடப்பதை குற்றம் சொல்லக்கூடாது.
இப்படி எல்லாத்தையுமே நீங்களா அழிக்க ஆரம்பிச்ச பிறகு , இன்னம ! பாசிசம் பூந்தா என்ன? பூராட்டி என்ன?
ஆறு மணிக்கு மேல கண்ணு தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன?
துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/968109189229211/?rdid=xduYMqwDJakySumJ
===========================================================
சீமான் குடிப்பெருமை தமிழ் குடிகள் என்ற போது திராவிடக் கருத்தாளர்கள் பொங்கி எழுந்தார்கள். இன்றைக்கு அதே வேலையை தேர்தலில் திமுக செய்கிறது. முக்குலத்தோர் புலிப்படை! முத்தரையர் தரை படை ! என சகல ஜாதி இஷ்டமித்ர ஜந்துக்களையும் சேர்த்துக்கொண்டு பார்ப்பன பாஜக எதிர்ப்பாம்! பாசிச எதிர்ப்பாம்!
சாதியம் தான் பார்ப்பனியம் என்று சொல்லிக்கொண்டு இது என்ன வகை சமூக நீதி கோமியம் என்று தெரியவில்லை.
உள்ளூரில் சாதி வெறி அட்டகாசம், ஆணவக் கொலை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு,
ஆர்எஸ்எஸ் மோடியை பாராட்டி சிலாகிக்கும் இந்துத்துவ ஊறல்கள் இவைகளை கட்டிக்கொண்டு இவர்களுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்வதற்கு பெயர் முற்போக்கு அரசியல் போல.
புதுச்சேரியில் தவெக விஜய் கட்சியில் பெரும்பாலும் பாஜக ஆட்களுக்கு சீட்டு. அதேபோலத்தான் ஆர்எஸ்எஸ் இன் பழைய ஈயம் பித்தளை பாத்திரங்களுக்கு பெயிண்ட் அடித்து திமுகவிலும் சீட்டு.
இதில் வெளிப்படையாகவே ஊடகத்தில் திமுகவில் சீட்டு வாங்கிய நபர் எந்த அமைப்பு மோடியை இந்த அளவுக்கு பாரதப் பிரதமராக வளர்த்ததோ!
அமைப்புதான் என்னையும் வளர்த்தது! மோடி சிறந்த பிரதமர் என்று பேட்டியும் கொடுக்கிறார்.
முழுக்க பாஜகவை புகுத்தி வைத்துக் கொண்டு யாரை ஏய்க்க இந்த பாஜக பூந்திடும் வேடம்?
உண்மையிலேயே பாசிச பாஜகவை வளர விடக்கூடாது என்ற அக்கறையோடு பேசுபவர்கள் ஆக இருந்தால் திமுகவுக்கு 'ஏதோ கொஞ்சம் திராவிடம்' என்று முட்டுக் கொடுக்கும் முற்போக்கு வாதிகள் இதையெல்லாம் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.
இப்படி எல்லாம் இந்துத்துவத்தின் அடிப்படையான சாதியத்தை அரவணைத்து பாதுகாப்பது என்றால் உங்களுக்கு ஓட்டு கிடையாது என நிர்பந்திக்க வேண்டும்.
ஒரு நிர்ப்பந்தமும் கிடையாது வெங்காயமும் கிடையாது.
திராவிட பொடி தூவிய உணர்வுள்ள அணிகளை ஏய்ப்பதில் திமுகவை விட தேறி விட்டார்கள் போலி முற்போக்காளர்கள்.
இதில் எதையும் செய்யாமல்
ஒவ்வொன்றுக்கும் திராவிட கருத்து சாதி ஒழிப்பு! என்று அளந்து கொட்டும் வாய்கள் இதையெல்லாம் கண்டிக்காமல் அடைத்துக் கிடக்கின்றன.
உண்மையில் வெளிப்படையான எதிரியை விட இவர்கள் தான் ஆபத்தானவர்கள். இவர்கள் இல்லாமல் பாசிசம் வளர்வது இல்லை!
துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/970594552314008/?rdid=rGrpaM1sK3LoPVkL
=============================================
" நான் ஆர்.எஸ்.எஸ்.சில் இரண்டு வகை ட்ரைனிங்கை முடித்தவன்! மோடியை உருவாக்கிய அந்த அமைப்புதான் என்னையும் இவ்வளவு திறம்பட உருவாக்கியது..."
இப்படி நெஞ்சை நிமிர்த்தி
திராவிட திராணியை புகுத்தி
பேசும் இவரையே பாசிச எதிர்ப்பு அணியில் வென்றெடுத்து விட்டோம் என்பதை பாராட்டாமல்! எங்களது பாசிச பாஜக எதிர்ப்பு செயல் தந்திரத்தை சீராட்டாமல்!
ஏதேதோ பேசுகிறீர்கள்! தென்னாட்டு இங்கர்சால் கூறியதையே உங்களுக்கும் கூற வேண்டி இருக்கிறது.
வாழ்க வசவாளர்கள்!
திமுகவின் அடலேறுகளுக்கு தேர்தல் வேலை நிறைய இருப்பதால், எங்களை ஆதரிக்கும் மார்க்சிய மடலேறுகளிடம் கேட்டுப்பாருங்கள்!
அவர்கள் சொல்வார்கள், டிமிட்ரோவின் செயல் தந்திரத்தை! சாதி உட்பட எதிரிக்கு எதிராக சரியாக பயன்படுத்தி வீழ்த்தி வெல்வோம் ஒன்றாக! என்பதை விளங்கிக் கொள்ள சாதாரண மனித மூளை போதாது! சமூக நீதி மூளை வேண்டும்.
ஏன் சீனாவின் சியாங்கே ஷேக் கோடு மாவோவே திரளும்போது, செத்த முத்தரையர் மூலோபாயத்தோடு
நாங்கள் புரளக் கூடாதா!
புனிதக் கோட்பாட்டாளர்களே உங்களால் புரிந்து கொள்ள முடியாது!
அதற்கு களத்தின் நுட்பங்கள் அறிந்த கந்து வட்டி மீட்டர் வட்டி
வேகத்துக்கான அரசியல் ஆற்றல் வேண்டும்.
சரியாக வரமாட்டீர்கள்!
மார்க்சிய மாமேதை தென்னகத்து காவுட்ஸ்கிகளை வைத்து ஒரு வகுப்பெடுத்தால் தான் வழிக்கு வருவீர்கள்!
காத்திரு பகையே !
அந்த ஆர். எஸ். எஸ். சையே விஞ்சியவர்கள் நாங்கள் என்பதை காட்டும் போது
அடங்கிப் போவாய்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/1GoayN46u8/
=======================================
'பொதுத் தளத்தில் உருவாக்கப்படும் கருத்தாக்கத்திற்கும் நடைமுறைக்கும் சம்பந்தமே இல்லை' என்பது அதிமுக கூட்டணி விவகாரத்தில் உறுதிப்பட்டுள்ளது.
ஏதோ, ''பாஜகவாக பார்த்துக் கொடுக்கப் போகும் தொகுதிகளில் தான் அதிமுக நிற்கவுள்ளது. பாஜக 40 முதல் 60 சீட்டுகள் நிற்கவுள்ளது…எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரமே இல்லை…’’ என்பதெல்லாம் வலுவாக பரப்பப்பட்ட கருத்தாக்கங்கள்!
ஆனால், பாஜகவுக்கு வெறும் 27 தொகுதிகள் மட்டுமே தந்துள்ளார், எடப்பாடி. அதுவும் ஒரே நாளில் இழுபறியின்றி மூன்று முக்கிய கட்சிகளுக்கு சீட் தந்துள்ளார். மேலும், ''மற்ற கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிடும்'' எனக் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே கண்ணியமாக தனி கட்சி கண்டு தனித்து இயங்கி வருகின்ற டி.டிவிக்கு அவர் செல்வாக்கிற்கு ஏற்ப மட்டுமின்றி, ஒ.பி.எஸ் மற்றும் சசிகலாவிற்கு செக் வைக்கும் விதமாக 11 தொகுதிகள் ஒதுக்கியுள்ளார்.
ஆறு தொகுதிகளுக்கு தகுதியில்லாத ஜி.கே.வாசனுக்கு ''கொடுப்பதை பெறுவதானால் இருக்கலாம். இல்லாவிட்டால் போகலாம்'' என்று கறார் காட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை கொத்தடிமை என்றும் பாஜகவிற்கு அதிமுகவை பலியாக்கிவிட்டார் என்றும் திமுக தரப்பில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் செல்லுபடியாகாமல் போய்விட்டது.
மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு மாநில கட்சிகளை மெலல், மெல்ல விழுங்கி வரும் பாஜகவிற்கு அதிமுக 27 இடங்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளது. ஆனால், அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 28 இடங்களை ஒதுக்கி உள்ளது திமுக.
அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன் பாஜக தந்த அழுத்ததால் தான் காங்கிரசை வெளியேறவிடாமல் 28 தொகுதிகள் தந்து தக்க வைத்தது திமுக தலைமை. திமுகவும் காங்கிரசும் பிரியக் கூடாது என டிவிட் போட்டு இதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி தான்.
‘’அமித்ஷா தான் சொன்னார், 2026-ல் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்.ஏன் அதிமுகவில் சேர்க்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறாய்?’’ என ஒபிஎஸும் அம்பலபடுத்திவிட்டார்.
வரலாற்றில் முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் பொதுக்குழு முடிவுக்கு எதிராக திமுகவுடன் தவிர்க்க இயலாமல் கசப்புடன் கைகோர்த்துள்ளது. அதே சமயம் திமுகவுக்குள் ஆர்.எஸ்.எஸின் செல்வாக்கு செலுத்தும் ஆதிக்கத்தையும் பொதுக் குழு பேசி கவனப்படுத்தி உள்ளது.
வேல்முருகன் மாத்திரமல்ல, திமுகவை ஆதரிக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரனே, ’’அனைத்து பள்ளிகளிலும் தமிழை பாட மொழியாக்க – பயிற்று மொழியாக்க – கட்டாயப்படுத்தும் சட்டத்தை கர்நாடாகவை போல இங்கு கொண்டுவர வேண்டும் என்பதை முதல்வர் விரும்பினாலும் அதை நிறைவேற்ற அதிகாரிகள் விடவில்லை’’ எனப் பதிவு செய்துள்ளார்.
எனவே நான் சொல்வது இது தான். இன்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஆட்டி வைக்கக் கூடிய ஒரே பொம்மலாட்டக்காரனாக பாஜக தான் இருக்கிறது.
அதிமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டே பாஜகவின் பகை அரசியலை மிகுந்த நிதானத்துடன் எதிர்கொண்டு தன்னை தக்க வைக்க வெளியில் தெரியாத ஒரு வலுவான போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது.
அதிமுகவை அரவணைத்து அழிக்க பார்ப்பது.
திமுகவை அரியணையில் ஏற்றி, தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக் கொண்டு, ஆட்டமாக ஆடவிட்டு அவர்களே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பது.
இதுவே பாஜக திட்டம்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/35486726237584828/?rdid=jbKU71y6fTlGSKJX
=====================================================
மத்தியில் இனி காங்கிரஸ் கட்சி இனி ஆட்சி பிடிக்கும் என்கிற நம்பிக்கையை திமுகவுக்கு சுத்தமாக இல்லை.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, மத்தியில் அதிகாரத்தை ருசிக்காமல் இருந்த திமுக தனது நிலைபாட்டை மாற்ற முன் வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏற்கனவே டில்லி அரசியலில் எந்த பயனும் இல்லாமல் இருப்பதால் இருந்து மாநில அரசியலுக்கு கனிமொழி வர முயற்சிக்கிறார்.
எதிர்காலத்தில் பாஜகவை நோக்கி நகர்வதற்கான எல்லா ஆரம்பகட்ட வேலைகளையும் திமுக ஆரம்பித்துவிட்டது..
குறிப்பாக, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகான காலங்களை பார்த்தீர்கள் என்றால்....
திமுக வெங்கையா நாயுடுவை வைத்து கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தது ராஜ்நாத் சிங் மூலம் நாணயம் வெளியிட்டது...
டெல்லியில் உள்ள அறிவாலயத்தை திறப்பதற்கான அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பிதழ் வைத்தது, என சில சமிக்ஞைகளை காட்டியது
திமுகவின் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் கூட இந்து மதங்கள் கோயில் புனரமைப்பு , கும்பாபிஷேகம், இந்து சமய அறநிலைத்துறை கல்லூரிகள், மாணவர்களை கந்த சஷ்டி கவசம் பாட வைத்தது, திருத்தணிகள் ஸ்டாலின் வேல் தூக்கி நடந்தது, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கருணாநிதியை நன்றி கூர்ந்தது...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு திமுக அமைச்சர் நிதி வழங்கியது, காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 ஐ நீக்கியது தவறில்லை நீக்கிய முறைதான் தவறு என சப்பை கட்ட்டியது என தனது பாசிச பாஜக எதிர்ப்பிலிருந்து பாயாச பாஜக நிலைபாட்டிற்கு நகர்ந்து ரொம்ப நாட்களாயிற்று.
அத்தனை ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்ட கே என் நேரு செந்தில் பாலாஜி வழக்குகள் நீர்த்துப் போய் கிடக்கின்றன.
துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் பினாமிகளின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு செய்தால் மறுநாள் காலையில் டெல்லியில் முக்கியம அமைச்சர்களை சந்திக்கிறார்கள்.
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட்டும் நாதியற்று கிடக்கிறது அந்த வழக்கு..
இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் நீண்ட காலம் பயணித்த தேமுதிக கட்சியை வலுக்கட்டாயமாக கூட்டணி வைத்து அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகுதிகள் வழங்கியது.
அது போலவே மத்தியில் பாஜக கொண்டு வந்த அனைத்து மசோதாக்களுக்கும் தவறாமல் வாக்களித்து வந்த ஓபிஎஸ் மகனையும், பாஜகவின் அடிவருடியாக இருந்த ஓபிஎஸ் ஐ யும் கட்சியில் சேர்த்துக் கொண்டது.
நீண்ட காலமாக திமுகவின் கொள்கை சார்ந்த அரசியலில் அவர்களுடன் பயணித்து வந்த இடதுசாரிகளையும், விடுதலை சிறுத்தை கட்சிகளையும் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தி அவர்களாகவே கூட்டணியை விட்டு வெளியேறும் அளவிற்கு ஒரு நிர்பந்தத்தை அளித்து, இறுதியில் கடமைக்கு சில தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறார்கள். சமீப காலமாக காங்கிரஸுடன் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருவது என திமுக தனது எதிர்கால கூட்டணிக்கான ஆயத்தங்களை துவங்கியுள்ளது.
அடுத்து வரும் காலங்களில், திமுக, பாஜக, தேமுதிக, பாமக என ஒரு புதிய கூட்டணி உருவாக 100% வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த ஆட்சி முடியும் தருவாயில் தான் பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அதானியும், மு.க.ஸ்டாலினும் சந்தித்த நிகழ்வு இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான முன்னேற்பாடாக தான், பாஜகவோடு கைகோர்த்து, அதற்கு தடைகற்களாக இருக்கும் இடதுசாரிகளையும், வி.சி.க வையும் இப்போது கழட்டி விடுவதற்கான வேலைகளை துவக்கி இருக்கிறார்கள் .
பரந்தூர் விமான நிலையம் அமைய இருப்பதை எதிர்த்த பத்துக்கு மேற்பட்ட கிராம மக்களை ஒரு வருடத்திற்கு மேலாக அறிவிக்கப்படாத ஊரங்கு உத்தரவில் வைத்திருந்தார்கள்.
எட்டு வழி சாலைக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தமிழக வரலாற்றிலேயே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள்.
திமுகவின் இன்னொரு சந்தர்ப்பவாத கோர முகத்தை அடுத்து வரும் நாட்களில் நாம் பார்க்கலாம்..
சத்திய நாராயணன்
https://www.facebook.com/100076536180950/posts/955636700330861/?rdid=3G5BbdtzGo3eVWDF
========================================================
இடதுசாரிகள் சிலையாகவே இருக்கக் கடவது
திமுக திட்டமிட்டதை நிறைவேற்றுகிறது. அதிமுக இல்லாமல் போனது திமுகவுக்கு நிம்மதிதான்; அதைவிட முக்கியம், திமுகவுக்கு இடதுசாரிகள் இல்லாத தமிழகம் வேண்டும். மற்ற கட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சரிக்கட்டலாம்.
கார்ல் மார்க்ஸ் சிலை மட்டுமல்ல, லெனின், ஸ்டாலின், இன்னும் இடதுசாரிகள் விரும்புகிற அனைத்து சிலைகளையும் தயக்கம் இன்றி திமுக அரசு நிறைவேற்றும். நாமும் புளகாங்கிதம் அடைந்து முதல் பக்கத்தில் அதை வெளியிட்டு சாம்சங் தொழிலாளர் போராட்டம், தூய்மைப் பணியாளர் போராட்டம் போன்ற அனைத்தையும் ஆறாம் பக்கத்துக்கு கொண்டு சென்று விடலாம்.
மார்க்ஸ் சிலையை இந்த அரசு நிறுவிய போது நமது தோழர்கள் செய்த அலப்பறை உச்சத்துக்கு சென்றது, கட்சிப் பத்திரிக்கையிலோ கார்ல் மார்க்சை பின்னுக்கு தள்ளி முதல்வரின் புகழ் பாடிப் பாடி களைத்துப் போனார்கள் கட்சித்தோழர்கள். மார்க்ஸ் உயிருடன் இருந்திருந்தால் அவரே வெட்கப்பட்டு விலகிச் சென்று இருப்பார், சுத்தியலை எடுத்து வந்து தன் சிலையை தானே உடைத்து இருப்பார்.
உண்மையில் நான் மிக அசிங்கமாக உணர்ந்த நாட்கள் அவை. மார்க்ஸ் சிலை திறப்பு பற்றி நான் ஒரே ஒரு பதிவைக் கூட எழுதவில்லை. மார்க்ஸ் இவர்களுக்கு நக முனை அளவும் தொடர்பு இல்லாதவர், அப்பாற்பட்டவர், இவர்களுக்கு வெகுதொலைவில் இருப்பவர்.
கோட்டையில் இருந்து அறுபது கிமீ தொலைவில் இருக்கிற
சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்வதற்கு இந்த அரசின் தொழிலாளர் நல துறையும் காவல்துறையும் எந்த அளவுக்கு தடையாக இருந்தார்கள் என்பதையும் தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவினார்கள் என்பதையும் தமிழக மக்கள் பார்த்தார்கள். தூய்மைப் பணியாளர் பிரச்சனையிலும் சரி சாம்சங் தொழிலாளர் பிரச்சினையிலும் சரி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருந்தார் என்பதை எந்த இடத்திலுமே பார்க்க முடியாமல் போனது. வலதுசாரி இந்துத்துவா அடிப்படைவாத சக்திகளை உறுதியுடன் எதிர்த்து நிற்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டை வைத்தே அக்கட்சியை பிளாக்மெயில் செய்துவிட்டது திமுக.
இடதுசாரிகள் சிலையாய் இருப்பதைத்தான் திமுக விரும்புகிறது, சட்டமன்றத்துக்கு வருவதை அல்ல.
நாடாளுமன்ற அரசியல் முறையில் இடதுசாரிகள் தம்மை கரைத்துக் கொண்டதால் ஏற்படும் தவிர்க்க இயலாத சறுக்கல்கள் இவை. இடதுசாரி கட்சிகளின் நேரமும் சக்தியும் ஊழியர்களின் உழைப்பும் இந்த முதலாளித்துவ அரசியல் அமைப்பின் தேர்தல்களால் முற்றாக உறிஞ்சப்பட்டு விட்டன.
இக்பால் அகமது
https://www.facebook.com/100000801043867/posts/26135268369416508/?rdid=m933db5LtHK35Gg8
=============================================
திமுகவிடம் ஒரு சீட்டு பெற்ற செல்வகுமார் பாஜகவுக்கு நெருக்கமானவரல்ல; ஆளே ஆர்.எஸ்.எஸ் - பாஜகவே தான்.
குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வேங்கைவயல் விவகாரத்தில் இவர் செட் செய்த நரேட்டீவைதான் தமிழ்நாடு திராவிட மாடல் அரசும் பின்பற்றியது. அதாவது பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக ஆக்கியது.
அதேபோல், வடகாடு சம்பவத்தில் தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டவர்தான் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவரும் தமிழர் தேசம் கட்சியின் தலைவருமான செல்வகுமார்.
அதியமான், ஜக்கையன், திருவள்ளுவன் ஆகியோருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில், அருந்ததியர் அமைப்புகளை திமுக கழட்டி விட்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதியை கூட திமுக ஒதுக்காது என்று சொல்கிறார்கள். இதை பற்றி எந்த முற்போக்கு முட்டுக்களாவது பேசுவார்கள் என்று நினைத்திருந்தால், அதிமுக கூட்டணியில் தனபாலுக்கு இடம் தரவில்லையா? என கொந்தளிக்கிறார்கள்.
"நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்டவன்" என பெருமை பேசும் செல்வகுமாருக்கு ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறது திமுக.
நேற்றுவரை பாஜகவையும் அதன் தலைவர்களையும் போற்றி பாடிய அவர் இன்று திராவிட மாடலை போற்றுபவராக மாறியிருக்கிறார். சாதிவெறியை தூண்டிய நபர் இன்று சாதி மறுப்பு சமூக நீதி போராளியாக புனித நீர் தெளிக்கப்பட்டு புது பிறப்பு எடுத்துள்ளார்.
கரூர் துயரத்துக்கு திமுக அரசே காரணம் என அறிக்கை வெளியிட்டவருக்கு திமுக சீட் கொடுத்திருக்கிறது. கேட்டால் பாசிச பாஜக பூந்துடும் தோழா என்பார்கள்...
த.வா.க வெளியேறியதை வரவேற்ற பெரியாரிய கடும்பேக்காளர்கள் சிலர், செல்வகுமாருக்கு சீட் கொடுத்ததை எப்படி பொறுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை...
சிவப்பிரியன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு