பாசிச எதிர்ப்பு முன்னணியை யாரால் உருவாக்கமுடியும்?
தெய்வசுந்தரம் நயினார்
இந்தியாவில் பாசிசம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பது தெரிந்ததே! இதற்கு எதிராக ஒடுக்கப்படும், அடக்கப்படும் வர்க்கங்களை ஒன்றிணைத்து, பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது இன்று வரலாற்றுத் தேவை என்பதில் ஐயமே இல்லை!.
இப்பணியை மேற்கொண்டு, தலைமை தாங்கும் பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கே ஆகும். ஆனால் அந்தக் கட்சியானது பாசிச அரசின் எந்தவொரு ஒடுக்குமுறையையும் எதிர்த்துநின்று, மக்களைப் பாசிச சக்திகளைப் போராடவேண்டும். கட்சியின் அமைப்பு மிகத் திடமாகவும் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துநின்று போராடுகிற வலிமையான ஒரு அமைப்பாகவும் இருக்கவேண்டும். மற்றபடி இன்றைய தேர்தல் கட்சிகள் எல்லாம் அடிப்படையில் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் கட்சிகள் இல்லை! இடது, வலது உட்பட!
ஆனால் அப்படிப்பட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இன்று முழுமையாக உருவாகவில்லை. பல்வேறு குழுக்களாகவே நீடிக்கின்றன. 1970-இல் சாருமசூம்தார் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட இதற்கான நடவடிக்கைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டு, சிதறுண்டு இருக்கின்றன. எனவே, இன்றைய முக்கியப்பணி . . . வலுவான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி அமைப்பதே ஆகும்.
பிளவுண்டு நீடிக்கிற புரட்சிகரக் குழுக்கள் இப்பணியில் வெற்றிபெறும்போதுதான், உண்மையான பாசிச எதிர்ப்பு முன்னணி அமையும். அவ்வாறு செய்யாமல், கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கலாம் என்று நினைத்து, தேர்தல் கட்சிகளான காங்கிரசு, திமுக, அதிமுக தலைமையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளமுடியும் என்று கருதுவது சரி இல்லை!
பாசிச நடவடிக்கைகளில் இரண்டு வகைகளைப் பார்க்கலாம். ஒன்று , ஆளும் வர்க்கங்களின் ஒரு கட்சியான பா ஜ க -வானது மற்றொரு கட்சியான காங்கிரசு, ஆளும் வர்க்கங்களின் மாநிலக் கட்சிகளான திமு,க அதிமுக போன்ற கட்சிகளின் 'ஜனநாயக உரிமைகளைப் ' பறிக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள்! மற்றொன்று சதீஷ்கார் போன்ற பகுதிகளில் நடைபெறுகிற மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவிக்கும் பாசிச அரசுகளின் அடக்குமுறை நடவடிக்கைகள்!
புரட்சிகரக் கட்சி இந்தியாவில் தோன்றி வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக புரட்சியாளர்களை ஒடுக்க முயலும் பாசிச நடவடிக்கைகள்! ஆளும் வர்க்கங்களின் ஒரு கட்சி மற்றொரு கட்சிமீது தொடுக்கும் அடக்குமுறைகள் ஆகட்டும், அல்லது புரட்சியாளர்களின் மீதான அடக்குமுறைகள் ஆகட்டும் இரண்டையுமே எதிர்த்து நின்று தலைமை தாங்கி, போராடக்கூடியது ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இதுபோன்ற ஒரு புரட்சிகரக் கட்சி இங்கு தோன்றி வளராமல், எந்தவொரு பாசிச எதிர்ப்பு போராட்டங்களும் வெற்றிபெறாது! வெறும் முழக்கங்களாகவே நீடிக்கும்! புரட்சிகர குழுக்கள் இந்தப் பணியை முதன்மைப்படுத்திச் செயல்படுவதில் கவனம் செலுத்தாமல், காங்கிரஸ், திமுக கட்சிகள் உதட்டளவில் உச்சரிக்கும் 'தேர்தல்வழிப் பாசிச எதிர்ப்பு' கூட்டணிகளுக்கு ஆதரவுதெரிவித்துக் கொண்டு நீடிப்பது உண்மையான பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு உதவாது. இன்று தேர்தல் அரசியல் கட்சிகளில் எதுவொன்றும் ஆளும் கட்சியான பாஜ க -வின் அடக்குமுறையை எதிர்த்துநின்று போராடும் வலிமையும் கிடையாது. உறுதியான நோக்கமும் கிடையாது! தேர்தலில் வெற்றிபெறுவது ஒன்றே அவற்றின் நோக்கம்!
வலிமையான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதே இன்றைய தலையாய நோக்கமாக இருக்கவேண்டும்! கவனத்தைச் சிதறவிடக்கூடாது!
ஓரளவு மார்க்சியப் புரிதலும் 55 ஆண்டுகால நேரடி அனுபவமும் மேற்கூறிய எனது கருத்துக்கு அடிப்படையாகும்.
- தெய்வசுந்தரம் நயினார்
https://www.facebook.com/100004424580477/posts/3597489200408531/?rdid=y2W4NfYORcflINUQ
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு