தரமற்ற மருந்து நிறுவனங்கள் தழைத்தோங்கும் தமிழ்நாடானதே..?
அறம் இணைய இதழ்

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற பிரபல இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்து தமிழக மெடிக்கல் ஷாப்களிலும் பரவலாக விற்கப்பட்டவையே. தமிழ் நாட்டில் தரக்குறைவாக மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்கி பெருகியுள்ளதற்கு காரணம் என்ன?
குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெட்ரோலில் இருந்து கிடைக்கும் ரசாயனமாகும். இது தொழிற்சாலை உபயோகத்திற்கும், பெயிண்ட் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதாகும். இதை இருமல் மருந்தில் அதிகம் கலந்ததே குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருப்பது உறுதிப்பட்டுள்ளது. சளி மருந்தில் டை எத்திலீன் கிளைகால் அளவு அனுமதிக்கப்படும் 0.1 சதவீதத்திற்கு பதிலாக 48 சதவீதமாக இருந்துள்ளது. இதுவே குழந்தைகள் மரணத்திற்கு காரணம். இப்படி கலந்து துணிச்சலாக விற்கும் தைரியம் இந்த நிறுவனங்களுக்கு எப்படி ஏற்படுகிறது.
இதை உட்கொண்ட குழந்தைகளுக்கு சிறு நீரகம் செயல் இழந்துள்ளது. ஜீரண மண்டலமே சிதைந்துள்ளது. உண்மையில் தமிழகத்திலேயே கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏராளமானோர் இந்த மருந்தால் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து பேசியுள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ”மருந்து நிறுவனங்கள் எங்கு அமைந்திருந்தாலும், மருந்துகளுக்கான இறுதிப் பொறுப்பு அந்த மாநிலத்திடம் உள்ளது என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில் தமிழக அரசு சரியாக ஒத்துழைக்கவில்லை…” என வருத்தப்பட்டுள்ளார்.
”தங்களுடைய மாநிலத்தில் செயல்படும் ஒரு மருந்து நிறுவனத்தின் தரத்தை சோதித்து அனுமதியளிப்பதில் தமிழ் நாடு அரசு காட்டிய அலட்சியமே இந்த சாவுகளுக்கு காரணம்’’ எனச் சொல்லி உள்ளார், மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர பாட்டில் சிவாஜி.
எந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடர்ந்து ‘இன்ஸ்பெக்ஷன்’ செய்து, சரி பார்க்க வேண்டிய பொறுப்பு மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உள்ளது. அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரமற்ற மருந்து தயாரிப்புகளுக்கு உடன்பட்டார்களா? அல்லது தங்கள் கடமையை சரிவர செய்யாததால் இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானார்களா? தெரியவில்லை. ஆனால், தமிழகம் முழுக்கவே பரவலாக தரமற்ற மருந்து நிறுவனங்கள் பல்கி பெருகி வருகின்றன…என இந்த துறை சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். ஆட்சியாளர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் இவற்றை கண்காணித்து, முறைப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டாதே இது போன்ற பெரும் சோகங்களுக்கு காரணமாகிவிடுகிறது.
இவ்வளவு குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட சுங்குவார்சத்திரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிற ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை ஆய்வு செய்ததில் கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்து வந்த அந்த நிறுவனம் மிக மோசமான சுகாதாரமற்ற சூழலில் மருந்து தயாரித்து வருவதை அதிகாரிகள் கண்டறிந்த இந்த ஆய்வில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை தனது 41 பக்க அறிக்கையில் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் 364 விதி மீறல்கள் செய்துள்ளதை பட்டியலிட்டுள்ளது. ஆக, இத்தனை விதி மீறல்களோடு தான் அந்த நிறுவனம் பல்லாண்டுகளாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதுவும் குறிப்பாக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து தயாரிப்பு தொழிலில் உள்ளவர். இவரிடம் வேலை பார்த்த பலர் தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த தொழிலின் முன்னோடியாக அறியப்பட்டவர். அவர் நடத்தும் நிறுவனமே இந்த லட்சணம் என்றால், தமிழ் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 600 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் யோக்கியதை எப்படி இருக்குமோ என்ற ஐயம் தான் நமக்கு ஏற்படுகின்றது. ஏனெனில், பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எந்த முறையான சுகாதார வழிகாட்டலையும் பின்பற்றாமல் படுமோசமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கொடுக்க வேண்டியவர்களுக்கு கமிஷனை தந்து மருந்துகளை தள்ள வேண்டிய இடத்தில் தள்ளி பணத்தை அள்ளிவிடுகின்றனர். வெகு சில நிறுவனங்களே முறையாக செயல்படுகின்றன.
ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு 70 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால், பிரான்சாய்சாக தன் தொழிலை அனுபவமில்லாத பலருக்கு தந்து விட்டு, மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்கிறார். இந்த மருந்து தொழிலில் அவருடைய கம்பெனி பிராண்டுக்கு உள்ள மதிப்பு காரணமாக நிறுவனம் நடத்தப்படும் விதம், மருந்தின் தரம் போன்றவை பற்றி அக்கறையில்லாமல் பணத்தை மட்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார். அதாவது சேவையாக கருதி பயபக்தியுடன் அணுக வேண்டிய மருந்து உற்பத்தி தொழில் வெறும் பணம் ஈட்டும் வழிமுறையாக மட்டும் அணுகப்பட்டதில் தான் இந்த கோளாறு நடந்துள்ளது.
மேலும் முன்பு டிரக் கண்ரோல் இயக்குனராக இருந்த மருத்துவத் துறை சார்ந்த அதிகாரியை மாற்றிவிட்டு, மருத்துவத்தை பற்றி எதுவும் அறியாத ஐ.ஏ.எஸ் அதிகாரியை இத்துறைக்கு நியமித்தது தற்போதைய தமிழக அரசு. இதுவும் பல தவறுகளுக்கு காரணம் என்கிறார்கள் இத் துறை சம்பந்தப்பட்டவர்கள்.
ஆனால், தங்களின் தவறுகளை பற்றி சுய விமர்சனம் செய்து சீர்திருத்திக் கொள்ள வேண்டிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் மத்திய பிரதேசத்தில் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பான செய்தி வந்தவுடன் அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகள் விடுமுறை நாள் என்ற போதும் நாங்கள் ஆய்வு நடத்தி அந்த மருந்தின் ஆபத்தை தெரியப்படுத்தினோம். அசம்பாவிந்தங்களை தவிர்த்துவிட்டோம்’’ என பெருமை பொங்க பேட்டி அளிக்கிறார்.. என்றால், இவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா? எந்த குற்றவுணர்ச்சியும் இவர்களுக்கு ஏற்பட்டதாகவே தெரியவில்லையே என்று ஆதங்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதுவரை உலகளவில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்திய இருமல் மருந்தை உட்கொண்டு ஏற்கனவே உஸ்பெக்கிஸ்தானிலும், காம்பியாவிலும் ஏற்கனவே ஏராளமான குழந்தைகள் இறந்த செய்திகள் உலகையே உலுக்கி எடுத்து இந்தியாவின் மதிப்பு சரிந்தது. அப்போதே நாம் சுதாரித்து இருக்க வேண்டாமா?
அரசு மருத்துவமனைகளுக்கு இந்திய பொதுத் துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாம் முன்பு மிகத் தரமான மருந்துகளை தயாரித்து தந்தனர். விலையும் குறைவு. ஆனால், மருந்து தயாரிப்பை முழுக்க, முழுக்க தனியார்மயப்படுத்தி மருந்து கொள்முதலில் காசு பார்க்க தொடங்கிய காலகட்டத்தில் இருந்து மருந்தின் தரம் வெகுவாக குறைந்து போனது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கான மூலப் பொருள்களான இரசாயனங்களை 90 சதவிகிதம் சீனாவில் இருந்தே பெறுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் அரிய மூலிகைகளை முறைப்படி விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தி இந்திய மூலப் பொருட்களைக் கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிப்பதற்கான ஆர்வம் இல்லாமை கவலையளிக்கிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23002/children-deaths-cough-syrup/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு