கவிதை: கடன்

கதிரவன்

கவிதை: கடன்

வரம் வாங்கி பெத்த புள்ள- நான் பெத்த கடமைக்கு
நம்ம போல் இல்லாமல்
நாலெழுத்து தெரிஞ்சுகிட
நாயா அலைஞ்சி
படிப்பு லோன் ஒன்னு வாங்கி தந்தேன்

 

படிப்பு செலவு போக தங்கத் திங்கன்னு
குழு லோன் ரெண்டு எடுத்து தந்தேன்
தாம் பட்ட கஷ்டத்த எம் புள்ள படக்கூடாதுன்னு
தின தண்டல் ஒன்னு எடுத்து  தந்தேன்

 

கிழவன் ஆனாலும்
கீழ முடங்கல
கிடைக்கிற வேலையெல்லாம் நாளும் கிழமையும்  
ஓடா உழைச்சேன்

 

நல்லா படிக்கிறவன் தான் பள்ளிக்கூட
வாத்தியார்னு பெருமையா நினைச்சேன்
சம்பளம் பத்தலன்னு வேலையை விட்டுட்டான்

 

ஏதோ *ஸ்விக்கி* கம்பெனியாம்
சாப்பாடு கொடுக்கிற வேலையாம்
சம்பளம் வந்தா தானே
பட்ட கடன தீர்க்க முடியும்
என்று மூஞ்சில அடிச்சி பேசுறான்

 

இவன் வெயில் படாமல் இருக்கணும் தான்
நான் வேகாத வெயில்லையும் வெந்து சாவுறேன்
இவன்  வெயில்ல சுத்தி மாடா உழைக்கிறானே

 

மனுசனுக்கு
இன்ன வேலைக்கு
இம்மா சம்பளம்னு இதுவரைக்கும் வகுக்கல
தனியார்   கொழுக்க
சர்க்கார் கொடுக்கிறான்-அவன்
சட்டையை புடிச்சு எவன் கேட்குறான்

 

-          கதிரவன், செந்தளம்