தொழிலாளர் வர்க்கத்தின் தோழர் வ.உ.சி. !

துரை. சண்முகம்

தொழிலாளர் வர்க்கத்தின் தோழர் வ.உ.சி. !

தொழிலாளர் வர்க்கத்தின்

தோழர் வ.உ.சி. !

        ………152 ஆவது பிறந்தநாள்.

எங்கே குத்தினால் 

வெள்ளைச் சீழை 

வெளியேற்ற முடியும் எனும்

விவரமறிந்த அரசியல் ஊசி

வ.உ.சி.!

கோரமான ஆளும் வர்க்கத்தை

தகர்க்கும் வெடிமருந்து

வீரமான தொழிலாளி வர்க்கமே

என நேரம் அறிந்து,

கோரல் மில் போராட்டத்தை

வெடிக்க வைத்த வர்க்க சக்தி

வ.உ.சி.!

கதர் கட்சி மேல் கையில் 

மேல்தட்டு சுகவாசிகள்.

காவியோ! 

கால் நக்கும் கடுதாசிகள்;

நீதிக்கட்சியும் 

ஏகாதிபத்திய விசுவாசிகள்,

ஆங்கிலேய அடிமை மோகம் அறவே வெறுத்த 

சுயமரியாதை கதிர்வீச்சுகள்

வ. உ. சி. யின் எதிர் மூச்சுகள்!

கடல் போல் வெள்ளையர் அதிகாரம்! - அதன் மேல்

கப்பலை ஏற்றினார் வ. உ. சி.!

காலனியாதிக்க மானம் மட்டுமா கப்பல் ஏறியது?

களவாணி வெள்ளைக்காரன்

கப்பல் தொழிலும் ஊனமானது.

ஏகாதிபத்தியம் கடுப்பானது

வ. உ. சி. பெயர் 

விடுதலை துடிப்பானது!

அகிம்சையின் 

இம்சை பொறுக்காமல்,

அடிக்கவேண்டிய இடத்தில்

வெள்ளை இருட்டை

வெளுத்தார்! அதனால்;

சுகம் இழந்தார் சொத்திழந்தார்

மாடும் வாடும் மரச்செக்கிழுத்தார்

இரட்டை ஆயுள் தண்டனை..

வழக்கறிஞர் உரிமம் பறிப்பு..

என, ஏகாதிபத்தியம்

எதைப் பறித்தபோதும்

சதை இரத்தம் நாடி நரம்பொடு

நாட்டுப்பற்றும் 

விடுதலை உணர்வும் கலந்திட்ட வ.உ.சி. யின்!

அரசியல் உணர்வை

ஆங்கிலேய அரசால்

பறிக்க முடியவில்லை!

தேசத்தின் தன்மானம்

சுயமரியாதைப் பரிமாணம்

தொழிலாளர் வர்க்கத்தின்

உரிமைக்குரல்..

தோழர் வ.உ.சி.யை!

சுரண்டும் வர்க்கத்துக்கு

எதிரான அரசியலாய்

உயர்த்திப் பிடிப்போம்!

- துரை. சண்முகம்

(முகநூலில்)