முன்னணி போர் விமானங்களை இழந்த இந்தியா: எதிர்கால வான்வெளி போர் சக்தியில் பெரும் பின்னடைவு

தமிழில்: விஜயன்

முன்னணி போர் விமானங்களை இழந்த இந்தியா: எதிர்கால வான்வெளி போர் சக்தியில் பெரும் பின்னடைவு

இந்தியா பயன்படுத்தி வந்த குறைந்தது மூன்று பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் போர்(ஜெட்) விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த ரஃபேல் விமானங்கள், சீன-பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான J-10 போர் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட சீன ஏவுகணைகளைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த ஏவுகணைகள் போர் விமானங்களிலிருந்தும், காஷ்மீர் எல்லையோரப் பகுதியிலிருந்து தரையிலிருந்தும் ஏவப்பட்டன என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். 

ரஃபேல் விமானங்கள் இந்தியாவின் தலைசிறந்த போர் விமானங்கள் என்றே பரவலாகக் கருதப்படுகின்றன. இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு முன்னதாக, இந்தியாவிடம் மொத்தம் 34 ரஃபேல் ஜெட் விமானங்கள் கையிருப்பில் இருந்தன. இந்த ஜெட் விமானங்கள் பலதரப்பட்ட போர் மற்றும் உளவுப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றும் வல்லமை கொண்டவை. அவற்றுள்: வான்வெளியை தங்கள் கட்டுப்பாடுகளின்கீழ் நிலைநிறுத்துதல், எதிரி விமானங்களின் தாக்குதல்களை முறியடித்தல், தரைப்படைக்குத் துணை நிற்றல், ஊடுருவித் தாக்குதல் நடத்துதல், உளவு பார்த்தல், கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல், மேலும் தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று குறிவைக்கப்பட்ட இலக்குகளை தாக்குதல் என பலதரப்பட்ட திறன்களை பெற்றுள்ளது; இந்த ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதோடு,  இந்தியா பயன்படுத்தி வந்த ஒரு ரஷ்யத் தயாரிப்பு சுகோய் ஜெட் விமானம், ஒரு மிக் ஜெட் விமானம் மட்டுமல்லாது ஒரு பெரிய இஸ்ரேலிய உளவு ட்ரோன் ஒன்றையும் பாகிஸ்தான் தாக்கி அழித்துள்ளது.

வானிவெளியில் நிகழ்ந்த இந்தப் போரானது ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சண்டை நடைபெற்றபோது, ரஃபேல் விமானங்கள் SCALP குரூஸ் ஏவுகணைகளைச் தன்வசம் வைத்திருந்தன (இவை இங்கிலாந்தில் 'Storm Shadow' ஏவுகணைகள் என்று அறியப்படுபவை). இவை உக்ரைன் போரிலும் பயன்படுத்தப்படும் நீண்ட வீச்செல்லை கொண்ட ஏவுகணைகள் ஆகும். மேலும், ரஃபேல் விமானங்கள் MICA ஏவுகணைகளையும் உடன் வைத்திருந்தன; இவை வான்வெளிச் சண்டைக்கும் தற்காப்புக்கும் பயன்படுபவை. முதல் ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், அதன் விபத்து நடந்த இடத்திற்கு அருகில், குறைந்தது ஒரு MICA ஏவுகணையாவது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானத்தின் வால் பகுதியில்(பின்புறத்தில்) BS-001 என்ற பதிவு எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தது; இது இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதலாவது ரஃபேல் விமானம் என்பதைக் காட்டுகிறது. மேலும், "BS" என்பது அந்த விமானம் ஒற்றை இருக்கையைக் கொண்டது என்பதற்கான குறியீடு ஆகும்.

இந்தச் சண்டை வெகுதொலைவிலிருந்தபடியே நடைபெற்றதே தவிர அருகாமையில் நடந்த நேருக்கு நேர் வான்வெளிச் சண்டை அல்ல. சீனாவில் உருவாக்கப்பட்டு, பாகிஸ்தானிலும் உற்பத்தி செய்யப்படும் J-10 போர் விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. இந்தப் போர் விமானங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுத்துள்ளன. ஒரு PL-15 ஏவுகணையின் சில பாகங்கள் இந்திய எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் அதன் ராடார் அமைப்பின் ஒரு பகுதியும் அமைந்திருந்ததை காணமுடிந்தது; இந்த ராடார் அமைப்பு AESA (Active Electronically Scanned Array-தானியங்கி ராடார்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஎல்-15 ஏவுகணையானது, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏஐஎம்-120டி AMRAAM (மேம்பட்ட நடுத்தர வீச்செல்லை கொண்ட வான்) ஏவுகணைக்கு போட்டியாக தயாரிக்கப்பட்ட சீன ஏவுகனையாகும். இந்த இரண்டுமே, எந்தவொரு வானிலைச் சூழலிலும், நீண்ட தொலைவு வான்வழிப் போர்களுக்காகவே தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்டவையாகும். பிஎல்-15 ஏவுகணையின் தாக்குதல் எல்லை 200 முதல் 300 கிலோமீட்டர் (124 முதல் 186 மைல்கள்) வரை இருப்பதாய் அறியப்படுகிறது. ஆயினும், அதன் ஏற்றுமதிக்கான வடிவமானது, கிடைத்த தகவல்களின்படி, 145 கிலோமீட்டர் (90 மைல்கள்) என்ற குறைந்த வீச்செல்லையுடன் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதிக்கான வடிவத்தையே பாகிஸ்தான் பயன்படுத்துவதாய் பரவலாக நம்பப்படுகிறது. பிஎல்-15 ஏவுகணை அதிவேகப் பாய்ச்சல் திறன் வாய்ந்தது; ஏவப்பட்ட கணமே, இது மணிக்குச் சுமார் மாக் 5 வேகத்தில் (தோராயமாக 6,173 கிமீ அல்லது 3,836 மைல்கள்) சீறிப் பாயக்கூடியது.

இதற்கு நேர்மாறாக, பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பான MICA(தற்காப்பு-தாக்கு) ஏவுகணை மிகவும் குறுகிய தாக்குதல் எல்லையைக் கொண்டுள்ளது. இதன் வீச்செல்லை வெறும் 60 முதல் 80 கிலோமீட்டர் (37 முதல் 50 மைல்கள்) மட்டுமே. ஆகவே,  வெகுதொலைவிலிருந்து தாக்குதல் தொடுக்கும் சமயங்களில் பிஎல்-15 ஏவுகணைக்கு குறிப்பிடத்தக்க சாதகமான நிலை உருவாகிறது. அண்மையில் நிகழ்ந்த வான்வெளி மோதலில் பாகிஸ்தானுக்கு இதுவே சாதகமாக அமைந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

அமெரிக்க விமானப்படை தனது போர் விமானங்களின் வடிவமைப்பில் முக்கியமாகக் இரு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறது. ஒன்று, மறைதாக்குத் திறன் (Stealth): எஃப்-22, எஃப்-35 போன்ற போர் விமானங்களை ராடார் கருவிகளின் பிடியில் எளிதில் அகப்படாதவாறு வடிவமைத்தல். இரண்டு, தொலைதூரத் தாக்குத் திறன்: எதிரிகளை மிக நீண்ட தொலைவில் இருந்தே, பெரும்பாலும் நமது கண்ணுக்குப் புலப்படுவதற்கு முன்பேகூட, தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளைப் பயன்படுத்துதல், என்ற இரு அம்சங்களுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் தருகிறது.

இந்தத் தனித்துவமான போர் உத்தியின் விளைவாகவே, F-35 ரக விமானங்கள், எதிரிகளுக்கு அருகாமையிலிருந்தோ அல்லது கூரிய திருப்பங்களில் பறந்து-பறந்து சண்டையிடுவதற்காகவோ வடிவமைக்கப்படுவதற்கு மாறாக, அவை பகைவரின் கண்களில் படாமல் மறைந்திருந்து தாக்குவதற்கும், அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டு மிக நெடுந்தொலைவிலிருந்தே எதிரிகளைத் தாக்கி அழிப்பதற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

ரஃபேல் விமானம், மறைந்திருந்து தாக்கும் தொழில்நுட்பத்துடன் (Stealth Technology) கட்டமைக்கப்படவில்லை. இது அதிக நவீனமும், போர்க்களத்தில் சிறந்த திறன்களையும் கொண்ட விமானமாக விளங்கினாலும், சீனப் போர் விமானங்களுடனும், அவற்றின் வான்வழி ஏவுகணைகளுடனும் ஒப்பிடுகையில், நெடுந்தொலைவு ஏவுகணைத் தாக்குதல்கள் என்று வரும்பொழுது ரஃபேல் விமானம் அத்துணை வலிமை வாய்ந்ததாகக் கருதப்படவில்லை. அமெரிக்காவின் AMRAAM ஏவுகணை கூட, தற்போது பின்தங்கத் தொடங்கிவிட்டது. மிக விரைவிலேயே, அதைவிட அதிக வீச்சும், மிகுந்த வேகமும் கொண்ட வேறொரு ஏவுகணையால் இது மாற்றீடு செய்யப்பட வேண்டிய அவசியம் எழலாம்.

ரஷ்யாவும் 'R-77' எனப்படும் நெடுந்தொலைவு வீச்செல்லை கொண்ட வான்வழி ஏவுகணை ஒன்றை வைத்துள்ளது. தனது புதிய 'Su-57' போர் விமானத்திற்காக, இந்த ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான 'R-77M' என்ற ஏவுகனையை உருவாக்கி வருகிறது. இந்த 'R-77M' ஏவுகணை, சீனாவின் PL-15 ஏவுகணையைப் போன்றே, இரட்டை- உந்துதிறன் கொண்ட ஏவுகனை இயந்திரத்தை(dual pulse motor) பயன்படுத்துவதோடு, AESA ராடார் அமைப்பையும் கொண்டுள்ளது. இதில் சீனத் தொழில்நுட்பத்தின் சில கூறுகள் கூட பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும். இவற்றைத் தாண்டி, ரஷ்யா ஸ்க்ராம்ஜெட் ரக(உயர்வேக) ஏவுகனை எஞ்சின் மூலம் இயங்கும் வகையில், இன்னும் மிக மேம்பட்ட வேறொரு வகை ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய ரஷ்ய ஏவுகணைகளின் வீச்சுத் திறன் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 'R-77'இன் முந்தைய பதிப்பு, AMRAAM(Advanced Medium-Range Air-to-Air Missile) ஏவுகணையை விட குறைந்த வீச்செல்லையையே கொண்டிருந்தது.

இந்த வான்வெளி மோதலில் இந்தியா சந்தித்த இழப்பு என்பது, நேட்டோ நாடுகளுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. ஏவுகணை தொழில்நுட்பத்திலும், வான் போர் தொழில்நுட்பத்திலும் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதை இந்தியாவின் இழப்பு தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும், தொலைதூர வீச்செல்லையுடன் வானில் பறந்தபடியே வானிலுள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் சிறந்த ஏவுகணைகளை விரைவாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவுக்கு ஆணித்தரமாக உணர்த்தும் ஒரு செய்தியாகவும் இந்தச் சம்பவம் அமைகிறது.

AMRAAM (மேம்பட்ட நடுத்தர வீச்செல்லை கொண்ட வான்) ஏவுகணைக்கு மாற்றாக, AIM-260 JATM (முப்படைகளின்/களால்/களுக்கு உயர் போர்திறன் கொண்ட ஏவுகணை) எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. ஆயினும், இது இன்னும் ஆரம்பக்கட்ட தயாரிப்பு நிலையிலேயே உள்ளதால், முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இது சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்கள்) வரையிலான தொலைவை எட்டும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது சீனாவின் PL-15 ஏவுகணையின் மிக நவீனப் பதிப்பை விடக் குறைவான தூரத்திலிருக்கும் இலக்குகளையே தாக்க முடியும்.

அண்மையில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய விமானப் படைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுவரை வெளிவந்துள்ள செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையவில்லை.

ஸ்டீபன் பிரையன், ஏஷியா டைம்ஸின் சிறப்புச் செய்தியாளராகவும், அமெரிக்க பாதுகாப்புத் துறை கொள்கைக்கான முன்னாள் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். இக்கட்டுரை முதலில் அவரது ஆயுதங்களும் வியூகங்களும் (Weapons and Strategy) என்ற சப்ஸ்டாக் செய்திமடலில் வெளியானது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://asiatimes.com/2025/05/india-loses-top-fighter-jet-bad-news-for-its-future-air-combat/?fbclid=IwY2xjawKSPMlleHRuA2FlbQIxMQABHn5JiiuNZhJG5Aikg42j8jJyp4SN2mFyT5mzvQw__0nYJmTZUKnExojrpiXK_aem_0oN5VO_Pr1NNzJEI1EpTIQ