நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் ஆசிரியரை ஊபா (UAPA) சட்டத்தில் கைது
சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கண்டனம்
ஊடகங்களின் விமர்சனங்களை தேச விரோத செயலாக சித்தரிக்கும் போக்கை உடனடியாக கைவிடவும் வலியுறுத்தல்
நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்கள், அதன் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் என 46 பேரின் வீடுகளில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆய்வு மேற்கொண்டதுடன், அவர்களின் மடிக்கணினி, செல்போன்கள் மற்றும் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நியூஸ்கிளிக் டெல்லி அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா, மனித வளத்துறை தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிடம் நிதி பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பரப்புரையை நியூஸ்கிளிக் மேற்கொண்டு வருவதாக பாஜகவும் டெல்லி காவல்துறையும் கூறியுள்ளது. இதற்கு ஆதாரமாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை ஒன்றை குறிப்பிடுகின்றனர். ஆனால் நியூஸ்கிளிக் வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் அந்த இணையதளத்திலேயே உள்ளன. அவற்றில் இருந்து சீனாவின் பரப்புரையை மேற்கொண்டதற்கான ஆதாரம் எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.
மேலும், நியூஸ்கிளிக் பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்திய டெல்லி சிறப்புக் காவல் துறையினர், விவசாயிகள் போராட்டம், டெல்லி கலவரம் தொடர்பான செய்திகள் குறித்தே விசாரித்துள்ளனர்.
ஒன்றிய அரசு இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விமர்சிக்கும் ஊடகங்களின் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக இருப்பதையே உறுதி செய்கின்றன.
எனவே, பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாடுகளையும் ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அரசின் மீதான ஊடகங்களின் விமர்சனங்களை தேசத் துரோகமாகவோ தேச விரோத செயலாகவோ சித்தரிக்கும் ஒன்றிய அரசின் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
ஊடகங்களை அச்சுறுத்துவது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு பத்திரிகை பணி ஒன்றும் பயங்கரவாதப் பணி அல்ல. எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு ஊடகத் துறைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை உடனடியாக தடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) வேண்டுகோள் விடுக்கிறது.
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு