எல்லா அரசியல் கட்சிகளுமே ஒன்று தானோ... லேபிள் தான் வேறு வேறோ...
சாவித்திரி கண்ணன்

இப்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வலுப்பட்டுக் கொண்டே உள்ளது.
எல்லா அரசியல் கட்சிகளுமே ஒன்று தானோ.. லேபிள் தான் வேறு,வேறோ.. என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போகிறது.
சமீபத்திய இந்திய – பாகிஸ்தான் தொடர்பான போரைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை விளக்க 32 நாடுகளுக்கு எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
இதில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக எம்.பிக்களும் இடம் பெற்றுள்ளதை கண்டு குழப்பம் ஏற்பட்டது.
காரணம், ஒரு நாட்டோடு போர் என்ற முடிவை குறைந்தபட்சம் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களை கூட்டி விவாதித்து பாஜக எடுக்கவில்லை.
பயங்கரவாதிகளை ஒடுக்குவதை அனைவரும் வரவேற்போம். சந்தேகமில்லை. ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையே தண்டிக்கும் வண்ணம் சிந்து நதியை தடுக்கும் முடிவையும் பாஜக அரசு தன்னிச்சையாகவே எடுத்தது.
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் பாகிஸ்தான் குழந்தைகள், பெண்கள், முதியோர் அனைவரையும் சம்பந்தமில்லாமல் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற கெடுவை போட்டதிலும் எந்த எதிர்கட்சி எம்.பிக்களையும் கலந்து பேசவில்லை.
பாகிஸ்தான் சந்தையை நம்பி இந்தியாவில் சில கோடி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இருக்கையில் திடீரென்று அவர்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் விதமாக வர்த்தகத்தையும் அராஜகமாக நிறுத்தினீர்கள்.
காந்தி தேசம் இந்த வெறுப்பு அரசியலை ஏற்கிறதா…?
எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் பகைவர்கள் என்று ஒரு முடிவை எடுப்பது ஆரோக்கியமான அரசியல் பார்வையல்ல.
இப்போது வரை பயங்கரவாதிகள் இரு நூறு கீ.மீ பயணித்து உள்ளே வந்து தாக்கி பிறகு மீண்டும் 200 கீ.மீ பயணித்து தப்பியது எப்படி என்பதற்கான பதிலை பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கோ, மக்களுக்கோ விளக்கவில்லை. நாடாளுமன்றத்தை கூட்டி சொல்லவும் இல்லை.
இத்தனை விவகாரங்களில் முரண்கள் இருக்க, எப்படி இத்தனை எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசின் நிலைபாட்டை நியாயப்படுத்தி வெளிநாடுகளின் ஆதரவை கோர முடியும்..? முதலில் உள் நாட்டு சாதாரண மக்களே இதனை ஆதரிக்கவில்லையே.
குறிப்பாக விவசாயத்திற்கும், குடிநீருக்குமான சிந்து நதி தண்ணீரை தடுப்பதற்கான நியாயத்தை எப்படி 32 நாடுகளும் ஏற்பார்கள்..?
வெறுப்பு பாகிஸ்தானை பகை நாடாக அறிவித்ததோடு முடியவில்லை. தற்போது அந்த லிஸ்டில் துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகளும் கூடியுள்ளன. ..!
தற்போது நாம் ஆதரவு கேட்டு செல்லும் நாடுகள் மாற்றுக் கருத்தை வைத்தால், அவர்களும் எதிரிகளாகிவிடுவார்களா..? என பயமாக இருக்கிறது.
பகவத் கீதையின் சாராம்சத்தை சொல்ல வரும் மகாகவி பாரதியார் ஓரிடத்தில் இங்கணம் சொல்வார்;
தன்னைத் தான் ஆளாதவன் தனக்கு பகைவன்.
தன்னை கட்டியாளாமல் தனக்குத் தான் பகைவனாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை. புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்துவிட்டால் புறப் பகை தானே நழுவிப் போய்விடும். என்கிறார், பாரதியார்.
நமது எம்.பிக்கள் குழு வெளிநாட்டிற்கு சென்று பேசுவதைவிடவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பார்த்து கலந்துரையாடி தெளிவு தருவது நல்லதாகும்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/16dfseSVVF/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு