"பகத்சிங் நினைவு தின இணையவழி நிகழ்வு - பகத்சிங் அன்றும் இன்றும்"

லிங்கம் தேவா

"பகத்சிங் நினைவு தின இணையவழி நிகழ்வு - பகத்சிங் அன்றும் இன்றும்"

பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு ம.ஜ.இ.க.வால் இணையவழி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் என்ன பேசலாம் என யோசித்தபோது அந்நிகழ்வையே கருப்பொருளாகக் கொண்டு பேசலாம் என முடிவு செய்து நான் பேசியது. எழுத்து வடிவில்...

"பகத்சிங் நினைவு தின இணையவழி நிகழ்வு - பகத்சிங் அன்றும் இன்றும்"

மார்ச் 23 - 2025

-------------------------------------

பகத்சிங் நினைவு தினம் என்பது இரண்டு வகையில் முக்கியத்துவமானதாக இருக்கிறது.

1. நிகழ்வின் பேசுபொருள் - அதாவது யாரைப்பற்றிய நிகழ்வு ?

2. நிகழ்வு நடக்கும் காலச் சூழல் - எந்த மாதிரியான சமூக சூழலில் நிகழ்வு நடைபெறுகிறது ?

நிகழ்வின் பேசுபொருள் /  யாரைப்பற்றிய நிகழ்வு :

"மக்களின் மீது பேரன்பு கொண்ட நெஞ்சமே அவர்களுக்காக முன்னின்று துடிக்கும்" என்று சொல்வார்கள். அப்படி இந்த மண்ணின் உழைக்கும் மக்கள் மேல், "இவர்களை நேசிப்பதில் எங்களுக்கு நிகர் எவரும் இல்லை" என்று துணிந்து சொல்லும் அளவிற்கு தன உயிருக்கும் மேலான பேரன்பு கொண்ட ஒரு தோழரைப் பற்றிய நிகழ்வு என்பது நிகழ்வின் சிறப்பு.

பகத்சிங் - பகத்சிங் என்று பேச வருகையில், எந்த பகத்சிங் என்றும் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் பகத்சிங் குறித்தான பிம்பம் என்பது, ஒருபக்கம் வெகுமக்களிடமும் மாணவர்களிடமும் இந்த ஆளும் வர்க்கத்தின் அரசுகளால் 'சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய இரண்டு மதிப்பெண் வினாக்களின் நாலாவது வரி'யாகவும் இன்னொரு பக்கம் இளைஞர்களிடம் இங்குள்ள பல அமைப்புகளால்,  ';வெறுமனே சாகசக்காரராகவும், கதாநாயக பிம்பமாகவும்' கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.

பகத்சிங் ஆயுதம் வைத்திருந்தார் என சொல்லிக் கொடுப்பவர்கள். பகத்சிங்கே ஆயுதம் தான் என சொல்லிக் கொடுப்பதில்லை. மிகப்பொதுவாக, அவர் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார் எனத் தெரிகிறதே தவிர, "நாடாளுமன்றம் என்பது கேலிக் கூத்தாக" ஆனது எனக் குறிப்பிட்டதோ, குண்டு வீச்சின் வழி "கற்பனாவாத அஹிம்சை வழி போராட்டங்கள் கோலோச்சிய காலத்திற்கு முடிவுரை எழுதியிருக்கிறோம்" எனச் சொன்னதோ அவற்றின் வீச்சோ இங்கு கடத்தப்படுவதில்லை.

பகத்சிங், சிறையில் இருந்து தப்பி இருக்கவோ, இல்லை ஏதேனும் மன்னிப்பின் பொருட்டு வந்திருக்கவோ கூட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தன் மரணம் எப்படி நிகழ வேண்டும் ? எது இந்த வர்க்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என உணர்ந்து தன் மரணத்தை ஏற்றுக் கொண்டார். அதன்வழி தன்னையே வர்க்கத்துக்கான ஆயுதமாக மாற்றிக் கொண்டார்.

குண்டு வீச்சு பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடும்போது, "தனி நபர்களைக் கொல்வதன் மூலம் அவர்கள் கொண்ட லட்சியங்களை கொன்றுவிட முடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டலகாரகளுக்கு பறைசாற்றவே நாங்கள் சரணடைந்தோம்.இரண்டு தனி நபர்களைச் சரணடையச் செய்ததைப் போல நாட்டிலுள்ள எல்லோரையும் அடிபணியச் செய்துவிட முடியாது" என்று குறிப்பிடுகிறார். அவ்வாறே, அவர் கூறியதை நிரூபித்தும் காட்டினார்.

இளம் அரசியல் போராளிகளுக்கு அவர் கூறும் ஒவ்வொரு விஷயங்களும் அத்தனை சித்தாந்தத் தெளிவுடனும் உறுதியுடனும் இருக்கிறது. 

சமூகத்தை எப்படி மதிப்பிடுவது ?

செயல்திட்டங்களை எப்படி வகுப்பது ?

சமரசவாதத்தை எப்படிக் கையாள்வது ?

இலக்கு எவ்வளவு முக்கியம் ?

என, எண்ணற்ற விஷயங்களைத் தன் இளம் அரசியல் போராளிகளுக்குச் சொல்லுகிறார். அவற்றைத் தொடர்ந்து படித்துக் கொண்டே வரும் போது, ஒரு இடத்தில் பகத்சிங் இளம் லெனினாகவே நமக்குத் தெரிகிறார்.

"நான் நாத்திகன் - ஏன் ?" என்ற அவரது கட்டுரையில் சொல்கிறார் "தோழர்களே, நான் என் அங்காரத்தால் அல்ல; எனது ஆராய்ச்சின் தோரணையாலேயே நாத்திகன் ஆனேன்" என. ஆனால், சோகம் என்னவெனில் அவ்வாறு தத்துவ ரீதியாக, சாகும்வரை தன்னால் நாத்திகனாக இருக்க இயல்கிறதா எனத் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு அவர் எழுதிய விரிவான அந்தக் கட்டுரையே கூட வெறுமனே "நாத்திகம், கடவுள் மறுப்பு " என சுருக்கப்படுகிறது.

 

"Don't judge a book by it's cover " எனச் சொல்வார்கள். ஆனால், தற்போது "we don't need books. just the cover" என்ற இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள் போல. எந்த ஒரு புத்தகத்தின் கருத்தும் தேவை இல்லை, அவற்றை படித்துத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை, வெறும் தலைப்பே எங்களுக்குப் போதும் என்ற நிலை தான் அது.

நிகழ்வு நடைபெறும் காலகட்டம் :

"எங்கே கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்களோ, அங்கே பாசிசம் வளர்கிறது" எனச் சொல்வார்கள். நிதிமூலதனப் பெருக்கம் உள்ளிட்ட காரணிகளால் இந்திய ஒன்றிய அரசின் பாசிசத்தன்மை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்தவித எதிர்ப்பும் கண்டுகொள்ளப்படாமல் முன்வாசல் வழியாகவும் பின்வாசல் வழியாகவும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மேலும், போராடுகிற விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள்; அறிவுத்துறையினர் கொல்லப்படுகிறார்கள்; போராடுகிற மாணவர்கள் மேல் கார் ஏற்றுகிறார்கள்; மக்களின் அறிவு மழுங்கடிக்கப்படும் விதமாக குறுகிய தேசிய, இன, மதவாத வெறிகள் தூண்டி விட்டு வளர்க்கப்படுகின்றன. மக்களின் வாழ்கை "இனிமேல் தங்களால் வாழ வழியே இல்லை" எனும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  

ஒவ்வொருநாளும் வாழ்வாதார நெருக்கடி என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும்  மக்கள் கூடுதல் நெருக்கடியையும் கூடுதல் அழுத்தத்தையும் உணர்கிறார்கள். மேலும், தற்போது இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ள பொருளாதார முடிவுகளை வைத்துப் பார்க்கிற போது சீக்கிரமே இன்னும் மிக அதிகமான நிலையில்லாத் தன்மையையும் நெருக்கடியையும் சந்திக்க இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

இந்தப் பாசிச சூழல் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் வலுப்பெற்ற புரட்சிகர கம்யூனிச இயக்கம் என்பது இல்லாததும் இருக்கும் காட்சிகள் தங்களின் சாரத்தை இழந்து உள்ளீடற்றவையாக மாறிக் கொண்டிருப்பதும் நிலையை இன்னும் மோசமாக்குகிறது.

இந்தச் சூழலில் தான் பகத்சிங் நமக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறார். பகத்சிங் சொல்கிறார், "போராட்டத்தின் மூலம் நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்பதும் நமது இலக்கு என்னவென்பதிலும் நாம் எப்போதும் மிகத் தெளிவான புரிதலோடு இருப்பது அவசியமாகிறது". ஆனால், இங்கிருக்கும் பிரதான இடதுசாரிக் கட்சிகளும் இயக்கங்களும் தங்கள் இலக்கு என்ன என்பதை மறந்து, தங்கள் இலக்கு குறித்து பேசாமல், தங்கள் இலக்கை முன்வைக்காமல், தங்கள் இலக்கு குறித்த போதனைகளை, நடைமுறைகளை கட்சித் தோழர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்றுவிக்காமல் வெறுமனே நடைமுறையில் உள்ள சிறு சிறு வெற்றிகளையே இலக்குகளாகக் காட்டுவது என்பது மோசமானது.

இவ்வாறு நாம் குறிப்பிடும் போது, "உடனே புரட்சி நடத்தி முடித்து விடுவீர்களா ?" எனக் கேட்பார்கள். ஆனால், 'இறுதி இலக்கு என்பது எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும். இலக்கை நோக்கிய நமது பாதையில் சிறு சிறு வெற்றிகள் முக்கியமானவை தான். ஆனால், அவ்வெற்றிகளைப் பெற்று நாம் முன்னேறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். இறுதி இலக்கானது, உடனே கைவசப்படாமல் போகலாம். சமரசங்கள் ஏற்படும் நிலை வரலாம். அப்படியான சமரசங்கள் லாவகமாகக் கையாளப்பட வேண்டும். எந்த இடத்திலும் முன்னுக்கு பின் முரணின்றி கொள்கை, கோட்பாடு, லட்சியம்  ஆகியவற்றில் உறுதியுடன் இருக்க வேண்டும்' எனத் தன் எழுத்துகள் தோறும் பகத்சிங் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.

மேலும், சமரசத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது திலகரை வைத்து உதாரணம் சொல்கிறார். திலகரின் கொள்கை, கோட்பாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் அவருடைய செய்லயுக்தி என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதாவது, எதிரியிடம் இருந்து 16 பைசா வாங்குவதற்கான போராட்டத்தில் ஒரு பைசா மட்டுமே கிடைக்கிறதென்றால், நாம் அதை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 15 பைசாக்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறான யுக்தியே திலகர் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்று குறிப்பிட்டு, ஆனால் இந்த மிதவாதக் காங்கிரஸ்காரர்கள் 1 பைசாவையே இலக்காக வைத்துப் போராடி அதையும் பெறமுடியாமல் தவிக்கிறார்கள் எனச் சொல்கிறார்.

அதேபோலத்தான் இன்றும் இங்கிருக்கக் கூடிய பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் நிலை  இருக்கிறது எனத் தோன்றுகிறது. இலக்கு பற்றி எந்தப் பேச்சும் இல்லாமல் நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்றம் தனது மாநில மாநாட்டில் அறைகூவல் விடுகிறது. "பெரியாரின் வழியில் சமூக சீர்திருத்தப் புரட்சியை நடத்துவோம்" என.

மற்றொரு கட்சியின் அகில இந்திய மாநாட்டை ஒட்டி, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கேரள தொழித்துறை மந்திரி பேசுகிறார், 'எங்கள் மூசசு கம்யூனிசம் தான். ஆனால், இந்திய அமைப்பு சட்டத்திற்கு உள்ளாகத்தான் எங்கள் வேலைத் திட்டம் அமையும்' என. மேலும், தொழில் முதலீடுகள் எங்கிருந்து வந்தாலும், அது அம்பானியாக இருந்தாலும் அதானியாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும் சரி. எங்களது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் வந்து தொழில் செய்யலாம் எனவும் குறிப்பிடுகிறார். இதோடு சேது இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டதல்ல இ.எம்.எஸ் காலத்திலிருந்தே எங்களது நிலைப்பாடு இது தான் என்றும் பேசுகிறார். தொழில் மற்றும் தொழிலாளர் வளர்ச்சி குறித்த அந்த நிகழ்வில் உழைப்புச் சுரண்டல் குறித்து ஒரு வரியும் இல்லாமல் 'புரட்சிகரமாக' பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மற்றைய புரட்சிகர இயக்கங்களும் கூட கந்தனைக் காக்கவும், கருப்பனை மீட்கவும், திராவிட நல் திருஆட்சியை பாதுகாக்கவும் சபதமேற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் பகத்சிங்இன் கரங்களை நாம் இன்னும் இன்னுமாய் அழுத்தமாய் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

பகத்சிங் எங்கனம் கேலிக்கூத்தான நாடாளுமன்ற முறைகளை எதிர்த்தும், சுரண்டல் மற்றும் அரசின் பாசிசத்தை தோலுரித்துக் காட்டவும், தத்துவம் மற்றும் இலட்சியத்தைக் கொல்ல முடியாது என உணர்த்தவும் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீச்சை பயன்படுத்தினாரோ அதே போலத்தான், இன்று. 

பெருகி விட்ட சந்தர்ப்பவாத, திருத்தல்வாதப் போக்குகளுக்கு சாவுமணி அடிக்கவும், இங்கு முதலாளித்துவ அடியார்களுக்கோ, அடியார்களின் அடியார்களுக்கோ, அவர்களின் அடிபொடிகளுக்கோ தோள் கொடுப்பதும், அவர்களை தோளில் போட்டு சுமப்பதும் நமது பணி அல்ல என்பதை உணர்ந்து, பாசிச சக்திகளுக்கு மாற்றாக கொள்கை உறுதி கொண்ட பாட்டாளி வர்க்கப் பாதையில் பயணிப்போம் என சூழுரைக்க இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்வோம். 

"புரட்சி என்பது வேட்கை

புரட்சி என்பது ஒரு சிறந்த மாறுதலுக்கான தாகம்"

நாங்கள் சமத்துவ சமூகத்தைப் படைக்க விரும்புகிறோம். எமதன்பு திருத்தல்வாதிகளே இறுதி இலக்காக நீங்கள் காண விரும்பும் புரட்சி இதுவல்ல எனில், "புரட்சி நீடூடி வாழ்க" என்று முழங்குவதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். 

புரட்சி தான்தோன்றித்தனத்திற்கானது அல்ல

தலைமுறைகள் கடந்த வேட்கைக்கானது 

நாங்கள், இன்றும் என்றும் அழுத்தமாய்ச் சொல்லுவோம் புரட்சி நீடூடி வாழ்க! 

இன்குலாப் ஜிந்தாபாத்!  

நன்றி !

- லிங்கம் தேவா

https://www.facebook.com/share/p/18tXRmTwgw/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு