முதலாளித்துவத்தின் மற்றொரு மூர்க்க நாயகனாக திமுக ஸ்டாலின்
துரை. சண்முகம்

மார்க்சின் புகழ் பெற்ற "லூயீ போன பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்" நூலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது அரசியல் சூழல்.
நெப்போலியன் போன பார்ட்
தன்னை முடியாட்சிக்கு எதிரான கலகக்காரனாகச் சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வருவான்.
ஆனால் வந்த பின்பு மன்னராட்சி கனவுகளை சூடி கொள்வான். பீத்தோவன் கூட இவனுக்காக அமைக்கப்பட்ட பாராட்டு சிம்பொனியை இதன் காரணமாக திரும்பப் பெற்றுக் கொள்வார்.
அந்த நாட்களில் நெப்போலியன் எங்கு போனாலும் அவன் செல்வதற்கு முன்பு ஒரு கும்பல், "நெப்போலியன் வாழ்க! புரட்சி வாழ்க! கோழிக்கறி வாழ்க! கொத்துக்கறி வாழ்க!" என்பதாக அந்த கும்பல் அரசியல் சூழலை கேலிக்குரியதாக கண்ணில் காட்டுவார் மார்க்ஸ்.
இங்கே அந்த "கொத்துக்கறி" பாத்திரத்துக்கு சேகர்பாபு வரலாற்று பொருத்தமாக வாய்க்கிறார்.
அங்கே போன பார்ட்டின்
அவனது கடந்த கால வாய்ச்சவடல்கள் வீர வசனங்கள் கேலிக்குரியதாக மாறும். பலவுமாக பின்னப்பட்டிருக்கும் முதலாளித்துவ அரசியலின் மூடு திரைகளை அம்பலமாக்கி கிழித்து தொங்கவிடுவார் கேலிக்குரிய தனது நடையில் மார்க்ஸ்.
முற்போக்கா? பிற்போக்கா? அதைவிட இது நல்லதா? என்று மயக்குறும் அரசியல் மனநிலையை வர்க்கக் கண்ணோட்டத்தில் தெளிவிக்கும் அற்புதமான நூல்
இது. அரசியல் ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய
நூலும் கூட.
பாட்டாளி வர்க்கம் தன்னை நம்ப வைக்கும் எதிர் வர்க்கத்தின் கடந்த கால வசனங்களின் மீது காலத்தை கடத்த முடியாது. மார்க்ஸ் இப்படி அழகாக சொல்லி இருப்பார்," 19ஆம் நூற்றாண்டுக்கான கவித்துவப் புரட்சி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து எதையும் பெற முடியாது! கடந்தகால எல்லா வகை மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதன் மூலம் மட்டுமே புதிய உலகை அது பெற முடியும்!"
இங்கும் நிலைமை அப்படித்தான் கோருகிறது,
" என்ன இருந்தாலும்!
கடந்த காலத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்துப் பேசிய கட்சி
என்ன இருந்தாலும்!
திமுகவை விட்டால் பாஜக உள்ளே வந்துவிடும்
என்ன இருந்தாலும்!
அந்த அளவுக்கு மோசம் இல்லை
இன்று நீங்கள் எத்தனை "என்ன இருந்தாலும் " போட்டாலும்
வரலாற்றின் வளர்ச்சியில் திமுக உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள் மூலதனத்தின் மூர்க்க நாயகனாகவே விளங்க முடியும்.
பாட்டாளி வர்க்கம் தனது இலட்சிய கனவினை இலட்சிய போராட்டத்தை சொந்தக் கால்களில் ஊன்றிக்கொள்ளவே வரலாறு பணித்திருக்கிறது!
முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மார்க்ஸ் வரையறுத்துச் சொன்ன அந்த வார்த்தைகளுடன் முடிக்கிறேன்,
" கடந்த காலத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவம் புரட்சிகரமானது,
எதிர்காலத்தைப் பொறுத்தவரை அது
எதிர் புரட்சிகரமானது!"
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/19YPjohCwT/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு