கரூர் கம்பெனி என்றால், டாஸ்மாக் ஊழியர்கள் அலறுகிறார்கள்…!

சாவித்திரி கண்ணன்

கரூர் கம்பெனி என்றால், டாஸ்மாக் ஊழியர்கள் அலறுகிறார்கள்…!

செந்தில் பாலாஜி அசத்தலான விளக்கம் அளித்தார்.

என்ன ஒரு நிதானம்! தெளிவு, அருமையான விளக்கம்!

கடும் குற்றச்சாட்டுகளை அவர் கண்ணியமாக  எதிர் கொண்டதாகவே நான் உணர்ந்தேன்.

அதாவது 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பது அதிமுக ஆட்சியிலும் இருந்தது, தற்போதும் உள்ளது. அப்போதும் அந்தப் புகார்களுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போதும்  அந்தப் புகார்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ..இத்தனை புகார்கள், இவ்வளவு அபராதத் தொகை என துல்லியமான கணக்கை முன்வைத்தார், செந்தில் பாலாஜி, சபாஷ்.

சரி, விஷயத்திற்கு வருவோம். 

புகார்கள் கொடுத்தால், வாங்கிய ஊழியருக்கு அபராதம்..என பல கோடிப் பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே வந்து, லாபம் மேலும் அதிகமாகிறது. ..! ஆக, ஊழியர்கள்  செய்யும் தவறுகளால் மீண்டும் டாஸ்மாக் நிறுவனமே ஆதாயத்திற்கு மேல் ஆதாயம் அடைகிறது...! 

அதே சமயம் புகார் தந்த வாடிக்கையாளர்களுக்கு அபராதம் வசூலிப்பதால் இழந்த பணம் திரும்பக் கிடைப்பதில்லை.  தொடர்ந்து அவர்கள் நாள்தோறும் இழந்து கொண்டிருப்பதும் தடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமில்லை, இந்தத் தவறுகள் மீண்டும் அதிகரித்தே வருகிறது என்பது அபராத வசூல் அதிகரித்துள்ளதன் மூலம் விளங்குகிறது.

அப்படியானால், இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு கண் துடைப்பு தானே? இவ்வளவு புள்ளி விபரங்களை அள்ளிவிடும் செந்தில் பாலாஜி அவர்கள், புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்ததற்கான சான்றுகளை காட்ட முடியுமா? முடியாது.

ஏன் முடியாது என்றால், வாடிக்கையாளர்கள் புகார்கள் கொடுத்தால் தானே? அப்படியானால், வாடிக்கையாளர்கள் புகார்களே தருவதில்லையா?  வாடிக்கையாளர்கள் தரப்பில் நிறைய புகார்கள்  உள்ளதென்னவோ உண்மை. ஆனால், அதை சொல்வதால், துளியளவும் பலனில்லை எனும் போது யாரும் அதை மீண்டும், மீண்டும் அரசுக்கு எழுதி தெரிவிக்க மெனக்கிடமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

ஆரம்ப நாட்களில் சில வாடிக்கையாளர்கள் புகார்களை எழுதினார்கள்.

ஆனால், தினம், தினம் நடக்கிறது,  தொடர் கதையாக உள்ளது. புகார்கள் மூலம் நிவாரணம் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்துவிட்டது. 

ஆகவே, இப்படி கூடுதல் பணம் வாங்குவதில் நிர்வாக மேலிடத்திற்கும் தொடர்புள்ளது என்பது விளங்கியவுடன் வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் தரப் பழகிவிட்டனர் அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர். 

யாராவது அரசை எதிர்த்து கேட்டாலோ அல்லது வழக்கு தொடுத்தாலோ , ’’பார், இதோ நாங்கள் எடுத்த நடவடிக்கை’’ எனக் காட்டுவதற்கே இந்த கண் துடைப்பு. 

அதிகாரிகளே புகார்களை கிரியேட் செய்து, அபராதம் வசூலித்தாக கணக்கு காட்டி முறைகேடுகளை தொடர்வது என்பது  நடக்கும் அட்டூழியங்களுக்கு தரப்படும் அங்கீகாரமின்றி வேறென்ன  கரூராரே.?

அடுத்தாக பத்து ரூபாய் என்பதெல்லாம் பழைய கதை. ஜெயிலுக்கு போய் வந்த பிறகு, கரூரய்யா அதை ரூ 20 முதல் 40 வரை அதிகரித்துவிட்டார். 

கரூர் கம்பெனி என்றால், டாஸ்மாக் ஊழியர்கள் அலறுகிறார்கள்…! தினசரி எத்தனை பாட்டில் விற்பனையோ, அத்தனைக்கு இவ்வளவு கமிஷன் என அன்றாடம் வசூலிக்கிறது  நூற்றுக்கணக்கான கட்சி இளைஞர்களை கொண்ட கரூர் கம்பெனி.

ஆக, மது பாட்டிலுக்கு கூடுதல் வசூல் என்ற முறைகேட்டை சிஸ்டமேட்டிக்காக முறைப்படுத்தியவரே செந்தில் பாலாஜி!

அந்தத் திறமையே அவரை மேலிடத்தின் செல்லப்பிள்ளையாக்கியுள்ளது.

 ஏமாந்து கொண்டிருப்பது மக்களே!

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/p/19qVt4KZ6y/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு