நாட்டின் பெரும் அச்சுறுத்தலான இந்துத்துவ பாசிசத்திற்கு மாற்று திராவிடமல்ல!
மொழி வழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுக்கொணடு தமிழ் மொழியின் மீதான ஆங்கில ஆதிக்கத்தை திணிப்பவையே திராவிட இயக்கங்கள்!
இந்துமதவெறி பாசிச கும்பலால் திணிக்கப்படும் இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் அவைகளின் எதிர்ப்பு போராட்டங்கள் எத்தகைய நோக்கம் கொண்டவை என்பதை பின்வரும் ஈவெராவின் கூற்றிலிருந்தே அறியலாம்..
"எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணரவேண்டும். பிறகு எதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்கே... உங்கள் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன், வேலைக்காரியுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; தமிழ் பைத்தியத்தை விட்டொழியுங்கள்." (விடுதலை 27.1.169)
ஆக ஈவெராவும் திராவிட இயக்கமும் தமிழ் மீது கொண்ட அக்கறையால் இந்தி எதிர்ப்பை அவர்கள் முன்னெடுப்பதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால் ஈ.வெ.ரா வையோ திராவிடத்தையோ விமர்சித்தால் சில செங்கொடி சீமான்கள் கூச்சலிடுகின்றனர்.
அன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுயராஜிய முழக்கங்கள் அதன் காதுகளை கிழித்துக் கொண்டிருந்த வேலையிலும் ஈ.வெ.ரா டொமினியன் அந்தஸ்து கோரிக் கொண்டிருந்தார். நாட்டை சுரண்டி மக்களின் இரத்தம் குடித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார்.
சர்க்கார் விரும்பாவிட்டால் நாத்திக பிரச்சாரத்தை கூட நிறுத்திவிடுவதாக கூறியவர்தான் இந்த பெரியார்!
பெரியாரின் திராவிட இயக்கம்
அன்றும் இன்றும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு வெள்ளை கொடி காட்டி தங்களுக்கே உரிய விவேகத்துடன் நடந்து கொள்வதை இன்றைய திராவிடல் மாடல் ஆட்சி வரை காணலாம்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அமல்படுத்திவரும் தனியார்மய, தாரளமய, உலகமய கொள்கைகளை மக்கள் மீது திணிக்கும் காங்கிரசு - பாஜக கட்சிகளை போலவே, அதை ஏற்று மாநித்தில் அமல்படுத்தி தமிழகத்தை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு திராவிடத்தின் பேரால் ஆட்படுத்திவருவதை எவர் மறுக்க இயலும்?
இன்றும் கூட பாஜக அமல்படுத்தும் ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார கொள்கைகளைதானே திராவிட இயக்கம் சிரமமின்றி அமல்படுத்தி வருகிறது..
அவர்கள் ஆரியத்தின் பெயரால் நாட்டை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு திறந்து விடுகிறார்கள். இவர்கள் திராவிடத்தின் பெயரால் திறந்து விடுகிறார்கள். இப்படி நாட்டில் பாசிசம் தீவிரம் பெற அடிப்படையான ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார கொள்கைகளை ஆதரித்துக் கொண்டே பாசிச பாடமெடுப்பது விசத்தை கக்க துடிக்கும் பாசிச பாம்பு படமெடுப்பதன்றி வேறில்லை!
குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-1
குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே! - பகுதி-2
இந்து மதவெறி பாசிசத்தை பண்பாட்டு துறையில் கூட எதிர்க்க துணிவற்றவர்கள் என்பதையே திராவிடமாடலின் ஓராண்டுக்கும் மேலான ஆட்சி காட்டுகிறது!
(ஈவெராவே சர்க்கார் விரும்பாவிட்டால் நாத்திக பிரச்சாரத்தை நிறுத்திகொள்வேன் என்று கூறியவராயிற்றே!)
கடந்த காலங்களில் பாஜகவிற்கு பல்லக்கு தூக்கியதை நாட்கள் நகர்ந்து விட்டதால் மறந்து விடவா முடியும்?
தவறான கட்சியில் உள்ள சரியான நபர் என்று வாஜ்பாயை கருணாநிதி சொன்னதை போல், மோடியை இன்னும் எப்படியெல்லாம் பாராட்டி ஆனந்த மழையில் குளிர்விக்கப் போகிறாரோ ஸ்டாலின்.
கருணாநிதி சொன்னாரே ஆர்.எஸ்.எஸ் ஒரு சமுக கலாச்சார இயக்கம் என்று அதில் மாறுபடுகிறதா இந்த திராவிட மாடல் அரசு? பகலில் ஊடலும் இரவில் கூடலுமான இந்துமதவெறி பாசிஸ்டுகளுடனான திமுகவின் உறவினை அறிவோர் அறிவர்.
தரகு முதலாளிய நிலவுடமை கும்பலின் நலன்களை அன்றிலிருந்து இன்றுவரை பாதுகாத்து ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் திராவிடத்திடம் முற்போக்கை எதிர்ப்பார்ப்பதுதான் முட்டாள் தனம்!
இன்று இந்தி மொழியை திணிக்கும் போது அதை எதிர்ப்பதோடு தமிழ் மீதான ஆங்கில ஆதிக்கத்தையும் எதிர்த்தால் திராவிட நண்பர்களுக்கு ஏன் எரிச்சலாய் இருக்கிறது? அவர்கள் அன்னை தமிழின் இடத்தில் ஆங்கில கவர்ச்சி அழகியை வைத்து அழகு பார்க்கிறார்கள்!
ஆங்கிலமே உலகம் முழுவதும் பரவி உள்ளதென்றும் ஆங்கிலத்தில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்றும், ஆங்கில வழி கல்வி மூலம்தான் உலகின் அனைத்து அறிவையும் பெற முடியும் என்றும் வாயாடுகிறார்கள்.
மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும், அரசின் போக்கை புரிந்து கொள்ளவும் விமர்சிக்கவும் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்கவும் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, மக்களின் தாய் மொழி தமிழ் மொழியாக இருந்தால்தான் சாத்தியம். எனவே தாய்மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும்!
இந்தியா போன்ற புதிய காலனியாக உள்ள நாடுகளில் ஏகாதிபத்திய ஆதிக்கம் மொழியிலும் காணப்படுகிறது என்பதே உண்மையாகும். இந்த நாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்திற்கும் ஏகாதிபத்தியவாதிகளை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்த நாடுகளிலிருந்து அபகரிக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாகவோ, அதிகார பூர்வமற்ற ஆட்சி மொழியாகவோ, ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது மொழி வழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கமாகும். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம் செய்கிறது.
இத்தகைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் மொழி ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொண்ட திராவிடம் ஆங்கில அழகியை தனது இதயத்தில் வைத்து தமிழ் அன்னையை எட்டி உதைப்பதை கண்டு கண்களை மூடிக்கொண்டா இருக்க முடியும்?
-செங்காற்று
(முகநூலிலிருந்து)
பதிவரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு