வ. உ .சி. யை ஏன் பிடிக்கிறது?

துரை. சண்முகம்

வ. உ .சி. யை   ஏன் பிடிக்கிறது?

அரசியல் அரங்கில் எப்போதும் அவர் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக் குரலுக்கு  நின்றார்.

அது ஒன்றே போதும் அவரை பிடிக்க!  எனும் அளவுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தில் பெருமுதலாளிகள் குரலாக இல்லாமல் தொழிலாளர்களின் குரலாக அவர் பேசியதும் இயங்கியதும் பிரமிக்க வைக்கிறது.

அவரது வர்க்கப் பின்னணி, வாழ்க்கைச் சூழல், கற்ற தொழில்கல்வி இவைகளை வைத்து அவர் வேறு மாதிரியாக வாழ்ந்திருக்கலாம்!  நாட்டின் சுயமரியாதைக்கும் சுய சார்புக்கும் ஏகாதிபக்திய எதிர்ப்பில் தன்னை பொருத்திக் கொண்ட அவரது சிந்தனை , அந்த சிந்தனைக்கு குறையாத அவரது செயல்பாடு நம்மை ஈர்க்கிறது. 

தெற்கே இருந்த போதும் கோரல் மில் தொழிலாளருக்காக போராட்டம்!

வடக்கே வந்த போதும் ரயில்வே தொழிற்சங்கங்களை உருவாக்கும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வது! 

தொழிற்சங்க அரங்கை பொருளாதார அலகாக மட்டும் பார்க்காமல், " பிரிட்டிஷ் அரசுக்கு முக்கியமான துறைகளாக ரயில்வே தபால் தந்தி போன்றவைகள் இருக்கின்றன! இங்கே நாம் உரிமைகளை பெறும் வெற்றியானது இந்த அரசையே ஆட்டம் காண வைக்கக்கூடிய தன்மை உடையது!" என்று நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் அவர் பேசிய பேச்சு, தொழிற்சங்கப் போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் இணைக்கும் ஆர்வத்தின் மூச்சு! 

காங்கிரஸ் சபையில் நின்று கொண்டு, ஆட்சி நிர்வாக மன்றங்களில் தொழிலாளர்களுக்கான பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக செல்ல வேண்டும் என்று முழங்குவது! 

இத்தனைக்கும் அவர் மார்க்சியவாதியோ! கம்யூனிச சித்தாந்தத்தை முறையாக பயின்றவரோ இல்லை.

தனது கண்ணுக்கு எதிரே நாடும் உழைக்கின்ற மக்களும் அடிமைப்பட்டு கிடப்பதை பார்த்து சகித்துக் கொள்ள முடியாமல், தன்மான உணர்வோடு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை எதிர்த்து, அந்த எதிர்ப்பிலும் தொழிலாளர் வர்க்க உள்ளடக்கத்தோடு அரசியலை பார்ப்பது எனும்  அந்தத் தெளிவில் அரசியல் கண்ணோட்டத்தில் உயர்ந்து நிற்கிறார் வ.உ .சி.!

சமூக நீதி பேசிக்கொண்டு, நாங்களும் பாதி கம்யூனிஸ்டுகள் என்று கிளுகிளுப்பு ஊட்டிக்கொண்டு முழுக்க முழுக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக போலீசை வைத்து அடிப்பது ஒடுக்குவது என்பவர்கள் ஒரு பக்கம். இந்த நடிப்பு சுதேசிகளுக்கு நாடி சுத்தி செய்யும் முற்போக்கு பரம்பரை வைத்திய சிகாமணிகள் ஒரு பக்கம். 

சமுதாயமே போராடிப் போராடி வளர்ந்த இந்தக் காலத்திலும் கார்ப்பரேட்டுகளுக்கு காவடி தூக்கும் அதை மக்களுக்கான வளர்ச்சி என்று நியாயப்படுத்தும் போக்குகளை பார்க்கையில்,  அன்றைய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் துவக்க கால சமூக அடிப்படைகளில் நின்று கொண்டு தொழிலாளர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்த தோழனே வ. உ .சி. 

துயரங்களைச் சுமந்து அரசியல் உயரங்களை காட்டிய உன்னை பிடிக்காமல் வேறு யாரை பிடிக்கும் மனதுக்கு! 

        - துரை. சண்முகம் 

https://www.facebook.com/share/p/14Ha1whEU4x/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு