யானை மிதித்து பாரதி இறந்தார் என்பது உண்மையா?

அறம் இணைய இதழ்

யானை மிதித்து பாரதி இறந்தார் என்பது உண்மையா?

பாரதியார் ஒரு கதாநாயகனுக்குரிய கம்பீரத்துடன் அச்சம் என்பதையே அறியாத வீரனாகவும், உயிர்களிடத்து பேரன்பு கொண்ட ஜீவராசிகளின் காதலனாகவும் எவ்வாறெல்லாம் திகழ்ந்தார் என்பதை அறிகையில் பெருவியப்பு ஏற்படுகிறது. இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கிறானா? என மலைக்க வைக்கிறது. தன்னை தாக்கிய யானை குறித்து பாரதியார் சொன்னது சிலிர்க்க வைக்கிறது;

ஆட்சியாளர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்! அருமையாக நடித்து மக்கள் மனதை அள்ளும் திரைநாயகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்! இவர்கள் அந்தந்த காலத்தின் பெரும் ஆளுமையாக வலம் வந்திருந்தாலும், தாங்கள் வாழ்ந்த நிகழ்காலத்தில் மட்டுமே நினைக்கப்பட்டார்கள்! கொண்டாடப்பட்டார்கள்!

ஆனால், பாரதியோ ஒரு யுகக் கவிஞர்! ஒன்றரை நூற்றாண்டுகளைக் கடந்தும் மக்களுக்கு அவர் மீதுள்ள ஈர்ப்பும், வியப்பும் விலகியபாடில்லை! மக்கள் அவரை நாளும், பொழுதும் நினைக்கிறார்கள். எழுதியும், பேசியும் கொண்டாடுகிறார்கள்! காரணம், தங்கள் வாழ்க்கையை செதுக்கிய வழிகாட்டியாக பாரதியை மக்கள் நினைக்கிறார்கள்! ஆகவே, என்றென்றுமாக நம் இதயங்களில் கதாநாயகனாக ஆளுமை செலுத்துகிறார் மகாகவி பாரதி!

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை…

கொண்டவராக பாரதியார் வலம் வந்தார்.

புதுவையிலே அவர் குடி இருந்த போது 30க்கு மேற்பட்ட சீடர்கள் அவருக்கு இருந்துள்ளனர். பாரதிதாசன், வ.ரா, குவளைக் கண்ணன்..எனப் பலர் பாரதியின் அடியொற்றி நடந்தவர்களாவர்.

பாரதியார் தோற்றப் பொலிவுள்ளவர். அவர் மிக நேர்த்தியாக உடையணிவார். பஞ்ச்கச்சம் கட்டிய வேட்டி, மேலுக்கு ஒரு உள்ளாடை, அதன் மீது சட்டை, அதற்கு மேல் கோட்டு போட்டுக் கொள்வார். சிகையை அழகாக்கி அதற்கு மேல் தலைப்பாகை வைத்துக் கொள்வார். நிமிர்ந்த நடையோடு கம்பீரமாக நடப்பார். அவர் குரல் வெண்கலக் குரலாகும். பேச்சு கணீரென இருக்கும். அவர் பாடத் தொடங்கினாலோ கேட்போர் நெஞ்சு உருகும். மேடைப் பேச்சோ கேட்பவர்களை தீ போல பற்றிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அவரோடு ஒரே ஒரு முறை பழக நேர்ந்தவர்கள் கூட, வாழ்க்கையில் அவரை என்றென்றும் மறக்க முடியாது என்பதான அன்பும், நேசமும் கொண்ட ஆளுமைக்குரியவர்…!

இவையாவும் பாரதியாரோடு பழகிய அவரது சீடர்கள் கூறியவைகளாகும்…!

சக மனிதர்களோடு மட்டுமின்றி, சக உயிரினங்களிடமும் பேரன்புடன் பழகிக் களித்தவர் பாரதி.

சக ஜீவராசிகளை பாகுபாடின்றி நேசித்தவர் பாரதி. இதில் அழகு, அழகின்மை என்றெல்லாம் அளவுகோள் பார்க்கமாட்டார் பாரதி. சிட்டுக் குருவிகள், பச்சைக் கிளிகள், அழகிய குயில்களை மாத்திரமன்று, காக்கைகளிடமும் பேரன்பு கொண்டிருந்தார் பாரதியார்!

திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவிலே அவர் குடியிருந்த போது அவரது சீடனான குவளைக் கண்ணன் தினசரி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வழிபட்டுவிட்டு, அங்கு தரும் நெய் மணக்கும் பொங்கல் பிரசாதத்தை பாரதிக்கு கொண்டு வந்து தருவாராம்.

பாரதியோ அதில் சரி பாதியை காக்கைக்கு தந்து, அவை உண்பதை பார்த்து மகிழ்ந்து கொண்டே தானும் உண்பாராம்.

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா..

என்று அந்த கண்ணபிரானையே அவர் காக்கையிடத்து கண்டவர் என்பதோடு, அதையே நிஜத்திலும் தன் வாழ்விலேயே உணர்ந்தவராக இருந்துள்ளார்..!

”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று தன் கவிதையில் பிரகடனப்படுத்தியவரல்லவா, பாரதியார்!

எட்டயபுரத்தில் இருக்கையில் அவர் தெருவில் நடக்கையில் ஒரு முறை எதிரில் வந்த ஒரு கழுதைக் குட்டியை பார்த்தவுடன் அதனை தோள் மேல் தூக்கி வைத்துக் கொஞ்சியுள்ளார். இதைப் பார்த்த தெருவாசிகளில் சிலர், வீடு சென்று செல்லம்மாளை அழைத்து வந்து, ”உன் புருஷன் என்ன பைத்தியக்காரனா? கழுதையைப் போய் கொஞ்சிக் கொண்டுள்ளானே…கருமம், கருமம்” எனக் கூறியுள்ளனர்.

செல்லம்மாள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாராம். ‘இவரால் நம் குடும்ப மானம் போகிறதே..இதை அவரிடத்து சொன்னாலோ பெரிய பிரசங்கமே நிகழ்த்திவிடுவாரேயன்றி தீர்வு கிடைக்காது’ என மனம் நொந்தாராம். ஆனால், காலம் செல்ல செல்லத் தான் ‘பாரதி ஒரு ஆத்ம ஞானி’ என்றும், ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருப்பதை நடைமுறையில் கொண்டிருந்ததால் அவரது தூய உள்ளந்தனில் எப்போதும் பேரன்பு பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கும்..அதை யாராலும் தடுக்க முடியாது’ என்றும் உணர்ந்தாராம்!

‘இரைதேடும் பறவைகளிடம் நாம் இரக்கம் கொள்ள வேண்டும்’ என்பதில் பாரதி உறுதியுள்ளவாராக இருந்தார்.

ஒரு மாதக் கடைசி நாள். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. பால்காரனுக்கு சென்ற மாதப் பாக்கியையே தர முடியவில்லை. இந்த மாதமும் தர முடியாத சூழலை செல்லம்மாள் கஷ்டப்பட்டு சமாளிக்கிறார். வீட்டிலோ அரிசி சுத்தமாக இல்லை. செல்லம்மாள் குழந்தைகளை அனுப்பி பக்கத்தில் உள்ள பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவியிடம் கேட்டு அன்றைய உணவுக்கான அரிசியை பெற்று வரச் செய்து, அந்த அரிசியில் உள்ள கற்களை பொறுக்கி எடுத்துவிட்டு, அரிசியுள்ள முறத்தை தாழ்வாரத்தில் வைத்துவிட்டு உள்ளே சென்று, சேலை மாற்றி வரும் போது, பாரதி முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இறைத்துவிட்டு, அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு, சந்தோஷமாக பாடிக் கொண்டிருந்தாராம்.

அரிசியை களைந்து உலையில் போடுவதற்காக வந்த செல்லம்மாளுக்கு இந்த காட்சியை கண்டதும் மனம் பொறுக்கவில்லை. அழுகையே வந்துவிட்டது. செல்லம்மாளின் அழுகையை பார்த்த பாரதியார், ”வா, செல்லம்மா, இந்தக் குருவிகளை பார். எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன. நாமும் அவை போல ஏன் இருக்கக் கூடாது? நமக்கு இந்த குருவிகள் ஒற்றுமையை கற்றுத் தருகின்றன’’ என்றாராம்…!

உடனே, செல்லம்மாள் மிச்சமுள்ள அரிசியையேனும் காப்பாற்ற எண்ணி, அதனை எடுத்துச் சென்றுவிட, பாரதியோ, ”விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த சிட்டுக் குருவியைப் போல..” என்று பாட்டு பாடத் தொடங்கவும், அவர் மகளான சகுந்தலா பாப்பா மகிழ்ச்சியில் கைகொட்டி குதித்து சிரித்தாளாம். பாரதியார் மேலும் உற்சாகமாகி மெய் மறந்து பாடலை மிகுந்த லயித்துப் பாடிக் காண்பித்தாராம்…!

ஏற்கனவே பாரதியார் தான் எழுதிய பாப்பா பாடலில்,

சின்னஞ்சிறு குருவி போலே நீ
திரிந்து பறந்து வா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!

என்ற இந்தப் பாடல் வரிசையில் காக்கை, கோழி, பசு, நாய், குதிரை, உழவுமாடு, ஆடு போன்றவற்றை ஆதரிக்க வேண்டும் என எழுதி இருந்தார்.

ஒருமுறை பாரதியார் திருவனந்தபுரத்தில் உள்ள மிருககாட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே சென்ற பாரதியார் எல்லா மிருகங்களையும் கையால் தொட்டு அன்பு பாராட்டியுள்ளார். குரங்குகள், கரடிகள்..என எல்லாவற்றுக்கும் கடலை மற்றும் பழங்களை அதன் கைகளில் தந்து அவை உண்பதைக் கண்டு மகிழ்ந்துள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர் பாரதியிடம், ”சாமி, புலியையும், சிங்கத்தையும் மட்டும் தொட்டு பார்க்காதீர்கள். அவை தீடீரென்று தாக்கிவிட்டால் தப்ப முடியாது” என்றாறாம்.

ஆனால், பாரதியோ, ”தம்பி நீ பயப்படாதே, அவை என்னை ஒன்றும் செய்யாது. அவற்றை சமீபத்தில் கூப்பிடு. நான் தழுவிக் கொண்டால் ஒரு தீங்கும் செய்யாது” எனக் கூறியுள்ளார்.

அந்தப் பணியாளரோ, சிறிது தயக்கத்திற்குப் பிறகு சிங்கத்தை பாரதி அருகில் அழைத்து வந்தாராம். குடும்பத்தார் அஞ்சி நடுங்கினார்களாம்.

பாரதி அந்த சிங்கத்திற்கு முன்பாகச் சென்று அன்பாகவும், கம்பீரமாகவும், ”மிருகராஜ், நான் கவிராஜ் வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்கு தரமாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவன் என்று பயப்படுகிறார்கள். உங்கள் இனம் தான் மனிதரைப் போல உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்தமாட்டீர் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து,ராஜா..’’ என்றாராம்.

அப்போது அங்கே எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் சிங்கம் கம்பீரமாக பத்து நிமிஷம் கர்ஜித்ததாம்….! அதைக் கண்டு மகிழ்ந்த பாரதி, அதனை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த சிங்கத்தின் பிடரி, தலை, காதுகளை எல்லாம் தடவிக் கொடுத்தாராம். குடும்பத்தார் மிகுந்த பதற்றத்துடன், ”வாயில் மட்டும் கைவிட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சியதையடுத்து அதை தவிர்த்து, சிங்கத்தின் மேனியை வருடிக் கொடுத்து விடை பெற்றாராம்.

‘விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும், எந்த ஒரு விலங்கிற்கும் அச்சப்பட வேண்டியதில்லை..’ என்பதை பாரதி எளியோருக்கும் புரியும் வண்ணம் பாடி இருக்கிறார்.

தின்ன வரும் புலி தன்னையும், அன்போடு
சிந்தையில் போற்றிடுவாய் – நன் நெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினாள்
அவளைக் கும்பிடுவோம் நன் நெஞ்சே!

இந்தப் பாட்டின்படியே வாழ்ந்து காட்டியுமுள்ளார் என்பதற்கு உதாரணம் தான் அவரது வாழ்வின் இறுதிகட்டத்தில் நடந்த சம்பவமாகும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைக்கு மதம் பிடித்திருந்தது. அதனால் அதன் நான்கு கால்களிலும் சங்கிலியிட்டு பிணைத்திருந்தார்கள். யானையை சுற்றிலும் இரும்பு கம்பியால் வேலியும் போட்டு இருந்தார்கள். பாரதியார் அந்த யானைக்கு நாள் தோறும் தேங்காயும், பழமும் கொடுப்பார். அன்றைய தினம் மக்கள் யாரும் அந்த யானையிடம் செல்ல பயந்து நடுங்கி இருந்தனர்.

ஆனால், பாரதியோ கையில் பழத்துடன் யானையின் அருகில் போய் அதன் கண்களை ரசித்த வண்ணம் இருந்தார். தீடீரென்று யானை சிலும்பிக் கொண்டு துதிக்கையால் ஒரு அடி தந்தது. அவ்வளவு தான், பாரதியார் தடாலென்று அதன் கால்களுக்கு கீழே விழுந்துவிட்டார். கால்களின் கீழே நினைவற்றுக் கிடந்த பாரதியை அதற்கு மேல் யானை எதுவும் செய்யவில்லை. இதை கண்ட மக்கள் பதைத்தனர். ஆனால், யானையின் கால்களுக்கு கீழே கிடக்கும் பாரதியை மீட்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. சில நிமிடங்கள் போனது.

இந்த தகவல் குவளைக் கண்ணனுக்கு கிடைத்ததும், அவர் ஒடோடி வந்து வேலியை ஒரே தாண்டாகத் தாண்டி, ரத்த வெள்ளத்தில் சுய நினைவிழந்து கிடந்த பாரதியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் பாரதியை இரும்பு வேலிக்கு வெளியில் கொண்டு வந்து சேர்க்க உதவி செய்தனர்! ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாரதி, மெல்ல மெல்ல குணமடைந்தார் என்றாலும், ஏற்கனவே சரியான ஊட்டசத்தில்லாமல் மெலிந்து பலவீனமாகி இருந்த அவரால், முன்பு போல துடிப்பாக செயல்பட முடியாமலே இருந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஆறு மாதங்கள் பாரதி வாழ்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாரதி சொல்கையில், ”யானை இன்னாரென்று தெரியாமல் தள்ளிவிட்டது. தெரிந்திருந்தால் தள்ளி இருக்காது. அப்படி துன்புறுத்தும் எண்ணம் இருந்தால், நான் கீழே விழுந்ததும் என்னை மிதித்து துவம்சம் செய்திருக்கும். துதிக்கையால் தூக்கி வீசி இருக்கும். அது அப்படியே நின்றதனானது என்னிடம் அதற்குள்ள அன்பை உணர்த்துகிறதல்லவா?’’ என்று சொல்லி நெகிழ்ந்துள்ளார்.

பாரதியார் ஜீவராசிகளிடம் காட்டிய உண்மையான அன்பும், பரிவும் கடைசி வரை மாறவில்லை. யானையின் பலத்த தாக்குதலுக்கு பிறகும் அவரது ஜீவராசிகள் மீதான நேசம் சிறிதளவும் குன்றவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/33332/bharathiyar-love-birdsanimals/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு