நூல் திறனாய்வு: பின்னை மார்க்சியம் அறிமுகம்

அ.கா.ஈஸ்வரன்

நூல் திறனாய்வு: பின்னை மார்க்சியம் அறிமுகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரை ஆசிரியரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம். பின்நவீனத்துவம் கம்யூனிஸ்ட் கட்சிகளை கலைப்பதை நோக்கமாக கொண்டு ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட அபாயகரமான தத்துவம். இதனை ஜனநாயகமாக அணுக இயலாது. இதை மார்க்சியர்கள் கடுமையாக எதிர்த்து போராட வேண்டும் என்ற புரிதலோடு இந்த நூல் திறனாய்வினை படிக்க கோருகிறோம். – செந்தளம் செய்திப் பிரிவு

=================================

நூல் திறனாய்வு: பின்னை மார்க்சியம் அறிமுகம்

(பேராசிரியர் இரா. முரளி அவர்களின் நூல் குறித்த திறனாய்வு, MELS இணையவழிப் பயிலரங்கில் (13-11-2026) நிகழ்த்தப்பட்டது.)

பேராசிரியர் இரா. முரளி அவர்கள் எழுதிய “பின்னை மார்க்சியம் அறிமுகம்” என்கிற நூலை அண்மையில் என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் கண்டவுடன் பலர் கொதிப்படைந்துள்ளனர். “இதுபோன்ற நூல்களை என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் வெளியிடலாமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மார்க்சிய நூல்களை மட்டும் படிப்பதன் மூலம் மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மனிதயினம் இதுவரை உருவாக்கியுள்ள அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, அவற்றை விமர்சனவழியிலாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று லெனின் வலியுறுத்தியிருக்கிறார்.

மார்க்சிய நூல்களை மட்டுமல்ல, பிற அறிவுத்துறைகளையும் சிந்தனை மரபுகளையும் கற்றறிவதே மார்க்சிய மரபு. அப்படியிருக்க, மார்க்சியத்தின் மீது சில கேள்விகளை பின்னை மார்க்சியம் எழுப்புகின்றன என்பதற்காக அவற்றைப் படிக்காமல் ஒதுக்கிவிட முடியுமா? கண்டிப்பாக முடியாது.

இதற்கு மாறாக, அவற்றைப் படித்து, அவற்றின் கருத்துகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சனவழிலாக ஆராய வேண்டும். அவ்வாறு விமர்சிக்க வேண்டுமானால், முதலில் அவற்றைப் பற்றிய புரிதல் வேண்டும். அந்த வகையில், “பின்னை மார்க்சியம் அறிமுகம்” என்கிற நூலைப் படிப்பது அவசியமாகிறது. நாம் படிக்க வேண்டிய ஒரு நூல் வெளிவந்திருக்கிறது என்பதற்காகவே அதனை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருளல்ல; அதைப் படித்து, அதன் கருத்துகளை ஆராய்ந்து, அதன்மீதான விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்பதே இங்கு முக்கியமானது.

இந்த நூலுக்கான பதிப்புரை, “அரசியல் களத்தில் உள்ள தோழர்களும், கல்வியாளர்களும், தத்துவ மாணவர்களும் இந்த நூலை வாசித்து இந்த உரையாடலை வளர்த்துக்கொள்ள முன்வருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது திறனாய்வு அந்த வகையிலான ஓர் அறிவார்ந்த உரையாடலாகவே அமையும் என்று கருதுகிறேன்.

பின்னை மார்க்சியம் என்பது ஒரு குறிப்பிட்ட, ஒரே மாதிரியான தத்துவப் போக்கைக் குறிக்கவில்லை என்று பேராசிரியர் இரா. முரளி அவர்கள் தமது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

“மார்க்சியத்திடம் சில அடிப்படைக் கருத்துகளை மறுபரிசீலனை செய்தும், சிலவற்றை விரிவுபடுத்தியும், சிலவற்றை விமர்சித்தும் உருவான பல்வேறு சிந்தனை முயற்சிகளின் தொகுப்பாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்” (6) என்று தமது கருத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.

பின்னை மார்க்சியம் எத்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரு முக்கியமான கருத்தில் ஒன்றுபடுகின்றன. அதாவது, மார்க்ஸ் முன்வைத்த அடித்தளம்–மேற்கட்டமைப்புக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் அடிப்படைகளை மறுக்கின்றன.

மார்க்சியத்தை விமர்சிப்பவர்கள் அனைவரும், குறிப்பாக முதலாளித்துவ அறிவுத்துறையினர், பெரும்பாலும் மார்க்ஸ் முன்வைத்த அடித்தளம்–மேற்கட்டமைப்புக் கோட்பாட்டையே தங்களது விமர்சனத்தின் மையமாகக் கொண்டுள்ளனர். பின்னை மார்க்சியர்களும் இதே கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கின்றனர். எனவே, முதலாளித்துவ அறிஞர்களின் விமர்சனங்களுக்குப் நாம் அளிக்கும் பதில்களே பின்னை மார்க்சியர்களின் விமர்சனங்களுக்கும் பொருந்தும்.

பேராசிரியர் தமது நூல் பின்னை மார்க்சியத்தைப் புகழ்வதற்காக எழுதப்படவில்லை, அதனை நிராகரிப்பதற்காகவும் எழுதப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்தக் கூற்றும் பலரை திகைக்க வைத்துள்ளது. புகழ்வதற்காகவும் எழுதவில்லை, நிராகரிப்பதற்காகவும் எழுதவில்லை என்றால், இத்தகைய அணுகுமுறையால் என்ன பயன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தக் கேள்விக்கான தெளிவை நூலின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கிறது. அதை பிறகு பார்ப்போம்.

இந்த நூல் 16 அத்தியாயங்களைக் கொண்டதாக விரிவாக எழுதப்பட்டுள்ளது. இறுதி அத்தியாயத்தின் தலைப்பு: “பின்னை மார்க்சியம் உண்மையில் மார்க்சியம்தானா?”

இந்தத் தலைப்பே, பின்னை மார்க்சியம் குறித்துத் தனது இறுதியான முடிவை முன்வைப்பதற்குப் பதிலாக, அதைப் பற்றிய விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாசகர்களுக்குப் பேராசிரியர் அழைப்பு விடுக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

பின்னை மார்க்சியம் குறித்துப் பேச்சுகள் தமிழ் அறிவுலகில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், அது குறித்த விரிவான விவாதங்கள் போதுமான அளவில் நடைபெறவில்லை. இந்த நூல் அத்தகைய விரிவான விவாதங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துவைத்துள்ளது.

ஒரு கருத்தைப் படிக்காமலேயே நிராகரிப்பதும், ஆராயாமல் ஏற்றுக்கொள்வதும் அறிவார்ந்த அணுகுமுறையாகாது. ஒரு கருத்தைப் படித்து, அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டு, மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சனவழியில் ஆராய்ந்து விவாதிப்பதே சரியான அணுகுமுறையாகும்.

அத்தகைய விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்கிய பேராசிரியர் இரா. முரளி அவர்களுக்கும், இந்த நூலை வெளியிட்ட என்சிபிஎச் பதிப்பு நிறுவனத்துக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நூல் மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளதால், அதன் உள்ளடக்கம் முழுவதையும் இங்கே எடுத்துரைப்பது சாத்தியமில்லை. அதேபோல், நூலைப் பொதுவான முறையில் அறிமுகப்படுத்துவதும் இயலாது. எனவே, இது ஒரு திறனாய்வு அடிப்படையிலான அறிமுகமாகவே அமையும் என்பதைத் தொடக்கத்திலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலின் தொடக்கத்தில் மார்க்சியத்தின் வரலாறு குறித்து பேராசிரியர் இரா. முரளி அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கருத்தில் அவர் முழுமையாக உறுதியாக நின்றிருந்தால், பின்னை மார்க்சியத்தைப் புகழ்வதற்காகவோ நிராகரிப்பதற்காகவோ தமது நூலை எழுதவில்லை என்ற பொதுவான முடிவுக்கு வந்திருக்க மாட்டார். 

அவர் முன்வைக்கும் கருத்தை அவரது எழுத்துகளிலிருந்தே பார்ப்போம்.

"மார்க்சியத்தின் வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளாதாரக் கோட்பாட்டின வரலாறு மட்டுமல்ல, அது நவீன உலகின் பொருளாதார அமைப்பு, வர்க்க உறவுகள், அரசியல் அதிகாரம், சமூக மாற்றம், பண்பாடு, கருத்தியல், புரட்சி மற்றும் மனித விடுதலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயன்ற மிகப்பெரிய அறிவுத்துறை மரபின் வரலாறாகும்."  (11) முதல் அத்தியாயம் இவ்வாறே தொடங்குகிறது

மார்க்சியம், வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்துவதால், அது பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், பேராசிரியர் மார்க்சியத்தின் ஆய்வுப் பரப்பைப் பொருளாதாரத்துடன் மட்டும் சுருக்கிவிடாமல், அரசியல், பண்பாடு, கருத்தியல், சமூக மாற்றம், மனித விடுதலை ஆகியவற்றையும் உள்ளடக்கிய விரிவான அறிவுத்துறை மரபாக முன்வைக்கிறார். 

மார்க்சியத்தை இவ்வாறு விரிவான அறிவுத்துறை மரபாகப் புரிந்துகொள்வது முக்கியமானது.

அதேவேளையில், மார்க்சியத்தின் இந்த விரிவான ஆய்வுப் பரப்பை ஏற்றுக்கொள்வதாலேயே, பின்னை மார்க்சியத்தின் கருத்துகளாகப் பேராசிரியர் முன்வைக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. பின்னை மார்க்சியம் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்தையும் மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, அவற்றின் முரண்பாடுகளை விமர்சனவழியிலாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பின்னை மார்க்சியம் ஏன் மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது என்பதைப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

"மார்க்சியத்தின் சில விளக்கங்கள் வரலாற்றை அதிகமாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும், வர்கத்தை ஓரே அரசியல் அடையாளமாகவும், பொருளாதார அடித்தளத்தைச் சமூகத்தின் பிறதளங்களை இறுதியில் நிர்ணயிக்கும் ஒன்றாகவும் கருதியபோது, அவற்றின் வரம்புகள் குறித்து எழுந்த கேள்விகளிலிருந்தே ஒரு புதிய மறுவாசிப்பு உருவானது."(12) என்று பேராசிரியர் மார்க்சியத்தை மறுவாசிப்புக்கு நம்மை அழைக்கிறார்.

என்னைப் போன்றவர்களுக்கு மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பது, கரும்பு தின்னக் கூலி கிடைத்ததைப் போன்றதாகும். சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மார்க்சியத்தின் மூல நூல்களையே அதிகம் படித்து வருகிறேன். இப்போது மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். 

பின்னை மார்க்சியத்தின் கருத்துகள் சிலவற்றைப் பாப்போம்.

மார்க்சியத்தை நிர்ணயவாதமாக பின்னை மார்க்சியம் கருதுகிறது. மார்க்சியம் ஒரு நிர்ணயவாதம் என்பது ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட பழைய குற்றச்சாட்டுதான்.  இதற்கான பதில் பலமுறை வழங்கப்பட்ட ஒன்றாகும். மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்தாலும், இதற்கான பதில் மாறப்போவதில்லை.

மார்க்சியத்தின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு மிகத் தெளிவாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த நிர்ணயவாதச் சிக்கலும் கிடையாது. அதைப் படித்துப் புரிந்து கொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள்தான் மார்க்சியத்தை நிர்ணயவாதமாக கருதுகின்றனர். 

மார்க்சியம் கூறுகிற அடித்தளம் நிர்ணயிக்கிறது என்பதும் நிர்ணயவாதமும் ஒன்றல்ல, இரண்டும் வேறுவேறு. அதனால்தான் மார்க்சும் எங்கெல்சும் நிர்ணயவாதத்தை விமர்சித்தனர், தங்களது அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்கிற கோட்பாட்டை மறுக்கவில்லை. அதாவது அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்பதை அவர்கள் எங்கேயும், எப்போதும் மறுக்கவில்லை.

பிரான்சில் மார்க்சியத்தை சூத்திரவாதமாக பின்பற்றுவதைப் பார்க்கும் போது  “நல்லவேளை, நான் ஒரு மார்க்சியவாதி அல்ல” என்று மார்க்ஸ் கூறினார். 1880-களின் தொடக்கத்தில் பிரான்சில் சிலர் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதத்தின் மீதான அவரது அதிருப்தியின் வெளிப்பாடுதான் இந்தக் கூற்று.  

மார்க்ஸ் சமூகத்தின் இயக்க விதிகளை ஆராய்ந்து, அதன் முரண்பாடுகளையும் மாற்றத்திற்கான அடிப்படைகளையும் கண்டறிவதில் கவனம் செலுத்தினார். ஆனால், அவரைப் பின்பற்றிய சிலர் மார்க்சியத்தைச் சூத்திரவாதங்களாகப் புரிந்துகொண்டனர். தமது பெயரைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தமது கருத்துகளைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் கருதவில்லை. எனவே, இந்தக் கூற்று மார்க்சியம் மீதான அவரது மறுப்பைக் குறிக்கவில்லை; ஆனால் இது மார்க்சியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் கருத்துகளையும் நடைமுறைகளையும் விமர்சன வழியாக ஆராய வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகிறது.

அடுத்து பின்னை மார்க்சியர்களின் மார்க்சியம் ஒரு நிர்ணயவாதம் என்கிற குற்றச்சாட்டு எவ்வாறு தவறானது என்பதைப் பார்ப்போம். 

அடித்தளம் மேற்கட்டமைப்பு தீர்மானிக்கிறது என்று கூறியது மார்க்ஸ்தான், தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்பது ஒரே பொருளையே குறிக்கிறது. அதேபோல இறுதியில் தீர்மானிக்கிறது என்று கூறியது மார்க்சியத்தைத் தவறாகப் புரிந்தவர்களின் கூற்றல்ல, மார்க்சையும் மார்க்சியத்தையும் நன்றாகப் புரிந்த, அறிந்த எங்கெல்ஸ் கூறியது.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் அடித்தளம்–மேற்கட்டமைப்புக் கோட்பாடு  மிகமிக முக்கியமான ஒன்றாகும். இக்கோட்பாட்டை மறுதலித்தாலோ அல்லது சரியாகப் புரிந்துகொள்ளத் தவறினாலோ, நம்மால் மார்க்சிய வழியில் செயல்பட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்சின் மறைவுக்குப்பிறகு எங்கெல்ஸ் இறுதிகால கடிதங்களில் அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்பதற்கு அழுத்தம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டார் என்று பேசுவது அப்பட்டமானப் பொய்யாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிவற்றுக்கு இடையில் உள்ள இடைத் தொடர்பைத்தான் இறுதிக்கால கடிதங்களில் வலியுறுத்தினார். பொருளாதார நிலைமைகள் தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்தும் என்பதையே இறுதிகால கடிதங்களில் நிர்ணயவாதமாகக் கருதி எங்கெல்ஸ் மறுக்கிறார். 

பொருளாதார நிலைமைகள் தானே செயல்படும் என்று கூறுவதே  நிர்ணயவாதம், அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்பது மார்க்சியம்.

நிர்ணயவாதம் என்பதற்கும், நிர்ணயிக்கிறது என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு சொற்களையும் ஒன்றாகக் கருதுவதன் மூலமே பலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

எங்கெல்ஸ் போர்கியுசுக்கு எழுதிய கடிதத்தில் (25-01-1894) தனது கருத்துகளை தெளிவாக முன்வைத்துள்ளார்.  அந்தக் கடிதத்தில் உள்ளப் பகுதியை அப்படியே பார்ப்போம்.

"ஆகவே சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்—ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது), ஏற்கனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில்; இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்—அரசியல் மற்றும் சிதாந்த உறவுகள்—எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) இறுதியில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன; அவை (அதாவது பொருளாதார உறவுகள்) சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன; அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இட்டுச் செல்கின்றன."

மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது எவ்வளவு தாக்கத்தை செலுத்தினாலும் இறுதியில் பொருளாதார உறவுகள் இன்னும் தீர்மானகரனமான உறவுகளாக இக்கின்றன என்பதே எங்கெல்சின் கருத்தாக இருக்கிறது. 

பின்னை மார்க்சியம் கூறுவத போல் அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்பது மார்க்சியத்தின் குறைபாடு கிடையாது, அதுவே அடிப்படை ஆகும்.

அடுத்து, அனைத்திற்கும் வர்க்கப் போராட்டமே அடிப்படையாக இருக்கிறது என்ற மார்க்சியக் கருத்தைப் பின்னை மார்க்சியம் கேள்விக்குள்ளாக்குகிறது.

"வர்க்கத்தைச் சமூகத்தின் ஒரே அடிப்படை முரண்பாடாகக் கருதுவதற்கு எதிரான விமர்சனம் வலுப்பெறுகிறது. இதுதான் பின்னை மார்க்சியத்தின் ஒரு முக்கியமான தன்மையை உருவாக்குகிறது. சமூக முரண்பாடுகள் பல்வேறு தளங்களில் உருவாகின்றன. அவற்றை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க வேண்டியிருக்கலாம்; ஆனால் அவை அனைத்தும் முன்கூட்டியே ஒரு ஒரே வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடுகள் என்று கருத முடியாது." (21) என்கிறார் பேராசிரியர் இரா.முரளி அவர்கள்.

சமூகத்தில் காணப்படும் அனைத்து வகையான வேறுபாடுகளையும் கணக்கில் கொண்டே மார்க்சியம் சமூகத்தை ஆராய்கிறது. ஆனால், சமூகத்தில் வர்க்கங்கள் தோன்றிய பிறகு, சமூகத்தின் பல்வேறு வேறுபாடுகளும் வர்க்க உறவுகளுடனும் வர்க்க முரண்பாடுகளுடனும் தொடர்புபட்டுள்ளன என்பதை மார்க்சியம் நிறுவுகிறது.

வர்க்கச் சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. இம்முரண்பாடுகளிலிருந்து வர்க்க நலன்களும் வர்க்கப் போராட்டங்களும் உருவாகின்றன. இவை சிந்தனை, தத்துவம், இலக்கியம், கலை, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.

எனவே, வர்க்கச் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கு, அவற்றின் வர்க்க அடிப்படையை ஆராய்வது அவசியமாகிறது. அந்த ஆராய்வின் காரணமாகவே, மார்க்சியம் வர்க்க முரண்பாட்டைச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடாகக் கருதுகிறது. அதாவது, சமூகத்தில் நிலவும் பல்வேறு வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் உள்ளடக்கியே வர்க்க முரண்பாட்டை அணுகுகிறது.

வர்க்கமற்ற சமூகத்தையும் மார்க்சியம் தனது ஆய்வில் கணக்கில் கொள்ளாமல் இல்லை. இதற்குச் சான்றாக, மார்கன் எழுதிய பண்டைய சமுதாயம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் விரிவான குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். எங்கெல்சும் இதே ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற சிறப்புமிக்க நூலை எழுதியுள்ளார். இவை வர்க்கங்கள் தோன்றுவதற்கு முந்தைய சமூக அமைப்புகளையும் அவற்றின் வரலாற்று வளர்ச்சியையும் மார்க்சிய அணுகுமுறை ஆராய்கிறது என்பதற்குச் சான்றுகளாகும்.

வர்க்கமற்ற சமூகத்தையும் வர்க்கம் தோன்றிய பிறகு உள்ள சமூகத்தையும் நன்றாக ஆராய்ந்தப் பிறகே மார்க்சியம் வர்க்க சமூகதில் வர்க்க முரணே சமூகத்தின் அடிப்படை என்கிற முடிவுக்கு வருகிறது.

பின்னை நவீனத்துவம் என்கிற பின் நவீனத்துவமும் மார்க்சியம், பாட்டாளி வர்க்கத்தை முன்வைத்துப் பேசுவதை பெருங்கதையாடலாக கூறி மறுக்கிறது. வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் சமூகத்தில் காணப்படும் பன்மைத்தன்மையை மறுத்து, அனைத்தையும் ஒரே பெருங்கதையாடலின் வழியாக மார்க்சியம் அணுகுகிறது என்ற குற்றச்சாட்டைப் பின்னை நவீனத்துவமும் முன்வைக்கிறது.

இந்தகையக் குற்றச்சாட்டு மார்க்சியத்தின் விளங்களைப் புரிந்து கொள்ளாமல் கூறியக் கருத்தாகும்.

மார்க்சியம் சமூகத்தில் பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பதை மறுப்பதில்லை. அந்த வேறுபாடுகள் எவ்வாறு தோன்றின, அவற்றுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்ந்துள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், முதலாளித்துவச் சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு மார்க்சியம் முதன்மை அளிக்கிறது. அதே நேரத்தில், சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலான தொடர்புகளையும், அவற்றுக்குப் பொதுவான அடிப்படைகளையும் புரிந்துகொண்டுள்ளது. ஆனால், பின்னை மார்க்சியமும் பின்னை நவீனத்துவமும் இத்தகைய தொடர்புகளை மறுத்து, ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கின்றன.

ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்தப் பிரச்சினையை மட்டும் தனித்துப் பார்க்கக் கூடாது. அதனுடன் தொடர்புடைய பிற பிரச்சினைகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், எந்தவொரு பிரச்சினையும் தனக்குள்ளே மட்டும் உருவாவதில்லை. அது உருவாவதற்கான சமூக நிலைமைகளும் புறநிலைக் காரணிகளும் இருக்கின்றன. எனவே, ஒரு பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, அது தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களையும் ஆராய வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வதில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிலப்பிரபுத்துவ உறவுகளைப் புறக்கணித்துவிட்டு, சாதியப் பிரச்சினையை மட்டும் தனியாகப் பேசுவது, அந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களைப் புறக்கணிப்பதாகும். பின்னை மார்க்சியர்களும் பின் நவீனத்துவமும் இதனை புரிந்து கொள்ளவதில்லை. ஒரு பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பதைவிட, அந்தப் பிரச்சினையைப் பற்றிய கேள்விகளை தொடர்ந்து எழுப்புவது அவர்களது அணுகுமுறையாக உள்ளது.

சமூக வளர்ச்சியில் சில பொதுவான விதிகள் செயல்படுகின்றன என்று மார்க்சியம் கூறுவதை பின்னை மார்க்சியமும் பின்னை நவீனத்துவமும் மறுக்கின்றன. 

சமூக நிகழ்வுகள் தாமாகவே, எந்த ஒழுங்கும் இல்லாமல் நடைபெறுகின்றன என்ற கருத்தை அது முன்வைக்கிறது. சமூகப் புரட்சியின் தேவையையும் மறுக்கிறது. அதற்குப் பதிலாக, மக்கள் தாங்களாகவே திடீரென எழுச்சி பெறுவதை முதன்மைப்படுத்துகிறது. இத்தகைய மக்கள் எழுச்சியை வழிநடத்தி, ஒன்றிணைத்துச் செயல்படுத்தும் அரசியல் கட்சியின் தேவையையும் மறுப்பதற்கு இட்டுச்சொல்கிறது.

மார்க்சியப் பார்வையில், மனிதயினத்தின் விடுதலை என்பது அனைவரும் ஒரே நேரத்தில் விடுதலை பெற வேண்டும் என்ற பொதுவான விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூக அடித்தளமும் வரலாற்று அடிப்படையும் உள்ளன. 

மனிதர்களைச் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் காரணமாக இருக்கும் சமூகப் பொருளாதார உறவுகளை ஒழிப்பதையும், அவற்றை மாற்றுவதற்குத் தேவையான புற மற்றும் அக நிலைமைகளை வளர்ப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. இதற்கு, மனிதர்களின் விடுதலைக்குத் தடையாக உள்ள சமூக உறவுகள் எவை, அவற்றை மாற்றுவதற்கான வரலாற்று நிலைமைகள் என்ன, அந்த மாற்றத்திற்குத் தலைமை தாங்கும் வரலாற்றுப் பாத்திரம் எந்தச் சமூக வர்க்கத்திற்கு உள்ளது என்பவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்வது அவசியமாகிறது.

முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியை முதலாளிகளுக்கு விற்று வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். உற்பத்தியில் பல தொழிலாளர்கள் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளின் தனிப்பட்ட உடைமையாக இருக்கின்றன. இதனால், உற்பத்தியில் கிடைக்கும் விளைவுகளும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதுவே தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

எனவே, தொழிலாளர்கள் தங்களுடைய விடுதலைக்காக ஊதிய உயர்வு, வேலை நேரக் குறைப்பு, வேலைப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளுக்காக மட்டும் போராடினால் போதாது. இந்தச் சுரண்டலைத் தொடர்ந்து உருவாக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைகளை போக்குவதற்குப் போராட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஏன் மனிதயினத்தின் ஒட்டுமொத்த விடுதலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது? என்கிற கேள்விக்கு மார்க்சியத்திடன் தெளிவான் பதில் இருக்கிறது.

தொழிலாளர்கள் சுரண்டலிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், உற்பத்திச் சாதனங்களைத் தனியாரின் உடைமையாக வைத்திருக்கும் முதலாளித்துவ முறையையும் அதன் அடிப்படையில் உருவான வர்க்க உறவுகளையும் ஒழிக்க வேண்டும். இந்த மாற்றம் தொழிலாளர்களின் விடுதலைக்கு மட்டுமல்லாமல், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் பிற உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் வழிவகுக்கும்.

ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான சமூக அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதே பாட்டாளி வர்க்கத்தின் நோக்கமாகும்.

எனவே, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கானப் போராட்டம் என்பது தனது வர்க்க நலனை மட்டும் பாதுகாத்துக்கொள்வதற்கான போராட்டமல்ல. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டும் நிலைமையை உருவாக்கும் பொருளாதார அடிப்படைகளை ஒழித்து, வர்க்க வேறுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டமாகும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக, தொழிலாளர்கள் தங்களுடைய வர்க்கப் போராட்டத்தில் பிற உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் ஒன்றிணைத்துக்கொள்கின்றனர்.

இங்கு, பிற உழைக்கும் மக்களின் விடுதலை என்பது அவர்களுக்காகப் பாட்டாளி வர்க்கம் செய்யும் உதவியோ அல்லது அவர்களுக்கு வழங்கும் சலுகையோ அல்ல. மாறாக, அவர்களைச் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் அடிப்படையாக இருக்கும் சமூக உறவுகளை மாற்றுவதன் மூலம், அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் அடையக்கூடிய பொதுவான விடுதலைக்கு அது வழிவகுக்கிறது.

பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காகப் போராடும்போது, தன்னை ஒடுக்குகின்ற அனைத்து பொருளாதார நிலைமைகளையும் சமூக உறவுகளையும் ஒழிப்பதற்காகவும் போராடுகிறது. இதன் மூலம், தன்னை மட்டுமின்றி, பிற உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் விடுவிப்பதற்கான சமூக மாற்றத்தையும் முன்னெடுக்கிறது. எனவே, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விடுதலையோடு நின்றுவிடுவதில்லை; அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக அமைகிறது. 

பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தின் வழியாகவே, வர்க்க ஒடுக்குமுறையின் அடிப்படைகளையும் ஒழிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறது.

மனிதயினம் முழுவதையும் விடுவிக்க வேண்டும் என்ற பொதுவான விருப்பத்தை மட்டும் முன்வைப்பது மார்க்சிய அணுகுமுறையல்ல. மனிதயினத்தின் விடுதலையைச் சாத்தியமாக்குவதற்கான சமூக மாற்றங்கள் என்ன, அந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சமூக வர்க்கம் எது, அத்தகைய மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குவதே மார்க்சிய அணுகுமுறையாகும்.

எனவே, மார்க்சியப் பார்வையில், மனிதயினத்தின் முழுமையான விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாகப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அமைகிறது

பாட்டாளிகள் தங்களுடைய விடுதலைக்காக நடத்தும் போராட்டத்தை, அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதற்கான போராட்டமாக வளர்த்தெடுப்பதில்தான் அவர்களுடைய வரலாற்றுப் பங்கு அடங்கியுள்ளது. அதாவது, தங்களுடைய வர்க்க விடுதலையை அடைவதோடு நின்றுவிடாமல், வர்க்கங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

ஆக, மார்க்சியம் தமது கருத்தை தெளிவாகத்தான் முன்வைத்திருக்கிறது. இதனைப்படித்து புரிந்து ஏற்றுக் கொள்வதில்தான் சிக்கல் காணப்படுகிறது.

அடித்தளம்–மேற்கட்டமைப்புக் கோட்பாடு தொடர்பாக மற்றொரு பெரும் பிழையான புரிதலும் உள்ளது. 

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் வினைபுரிகின்றன. இவற்றுக்கிடையிலான உறவு ஒருவழிப்பாதை அல்ல; இருவழிப்பாதையாகும். அதாவது, அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிப்பதோடு, மேற்கட்டமைப்பும் அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது. அதாவது இரண்டும் பரஸ்பர வினைபுரிகிறது

இதுபோன்ற அபத்தமான கருத்தை இதுவரை எங்கும் கண்டதில்லை.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. இதுவே மார்க்சிய அடிப்படைக் கருத்தாகும்.

பின்னை மார்க்சியத்தையும் பின்னை நவீனத்துவத்தையும் எடுத்துக் கொண்டுவந்து, அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்பதை மட்டும் கூறுவது நிர்ணயவாதம்  என்று மார்க்சியத்தை விமர்சிப்பது தவறானப் பார்வையாகும். அதுமட்டுமல்ல இது இயக்கவியலுக்கு மாறானது. 

ஆனால் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானிக்கிறது என்று கூறுவதே இயக்கவியல் பார்வை என்று கூறுபவர்கள் நமது நாட்டிலும் இருக்கிறார்கள்.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் ஒன்றையொன்று வினைபுரிகின்றன என்பதை மார்க்சியம் ஏற்றுக்கொள்கிறது. அதேபோல், மேற்கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவிலான சுதந்திரம் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்த இடைவினை அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையில் சமமான தீர்மானிக்கும் ஆற்றல் உள்ளது என்பதைக் குறிக்காது. அடித்தளமே இறுதியில் தீர்மானிக்கும் பாத்திரத்தை வகிக்கிறது என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் நிலைப்பாடாகும்.

மார்க்சியம் ஒவ்வொரு கருத்தையும் தத்துவத் துல்லியத்துடன் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கிறது. ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையிலான பொருள் வேறுபாட்டைக்கூட அது அலட்சியப்படுத்துவதில்லை. இதனை மார்க்ஸ் எழுதிய கோத்தா வேலைத்திட்டத்தின் மீதான விமர்சனத்தைப் படிக்கும்போது நம்மால் நன்கு உணர முடிகிறது. ஒரு கருத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுப்பதில் மார்க்சியம் காட்டும் கவனத்தை அந்த விமர்சனம் எடுத்துக்காட்டுகிறது.

எங்கெல்ஸ், அக்டோபர் மாதம் 27ஆம் நாள், 1890ஆண்டில் ஷிமிட்டுக்கு எழுதியக் கடிதத்தைப் பார்ப்போம்.

"இந்தக் கனவான்கள் அனைவரிடமும் இல்லாதது இயக்கவியல்தான். அவர்கள் எப்போதும் இங்கே காரணம், அங்கே விளைவு என்று மட்டுமே பார்க்கிறார்கள். இது வெறும் சாரமற்ற அருவமான பிரித்துப் பார்ப்பதாகும். இத்தகைய இயக்கமற்ற எதிர்நிலைகள், உண்மையான உலகில் நெருக்கடிக் காலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமான விரிவான இயக்கப்போக்கு இடைச்செயலின் வடிவத்திலேயே நடைபெறுகிறது. -இருப்பினும், இந்த வினையில் செயல்படும் சக்திகள் சமமானவை அல்ல. பொருளாதார இயக்கமே அனைத்திலும் மிக வலிமையானதாகவும், மிக அடிப்படையானதாகவும், மிகத் தீர்மானகரமானதாகவும் விளங்குகிறது.- இங்கு அனைத்தும் ஒப்பீட்டுத்தன்மை கொண்டவை; எதுவும் அறுதியானதல்ல. இதனைப் புரிந்துகொள்ள அவர்கள் முற்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஹெகல் என்ற ஒருவர் வாழ்ந்ததே இல்லை."

அதாவது ஹெகலைப் பற்றி குறிப்பிட்டு இயக்கவியலை அறிந்து கொள்ளவே இல்லை என்கிறார் எங்கெல்ஸ்.

அந்தக் கடிதத்தில், அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிய இரண்டுக்கும் இடையே இடைச்செயல் இருக்கிறது ஆனால் அது சமமில்லாதவை என்று எங்கெல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். பொருளாதார இயக்கமே அனைத்திலும் மிக வலிமையானதாகவும், மிக அடிப்படையானதாகவும், மிகத் தீர்மானகரமானதாகவும் விளங்குகிறது என்பதை வலியுறுத்திச் சொல்லியுள்ளார். 

அப்படி இருந்தும், அடித்தளத்தின் தீர்மானிக்கும் தன்மையை எங்கெல்ஸ் தனது இறுதிக்கால எழுத்துகளில் குறைத்துக்கொண்டு, மேற்கட்டமைப்பும் அடித்தளத்தின் மீது தீர்மானகரமான தாக்கத்தைச் செலுத்துகிறது என்றும், இரண்டும் பரஸ்பரம் வினைபுரிகின்றன என்றும் கூறியதாகச் சிலர் கூறிவருகின்றனர். 

ஆனால், எங்கெல்ஸ் விதிவிலக்குகளைச் சுட்டிக்காட்டியதன் மூலமே அடித்தளத்தின் தீர்மானிக்கும் பாத்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எங்கெல்சின் இறுதிக்காலக் கடிதங்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன.

விதியையும் விதிவிலக்கையும் ஒன்றாகக் கலந்து விளக்குவது சரியான அணுகுமுறையல்ல. விதி என்பது விதிதான்; விதிவிலக்கு என்பது விதியாகிவிடாது. விதிவிலக்குகள் இருப்பதால் விதியின் அடிப்படைத் தன்மை மாறிவிடுவதில்லை.

அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. அதேவேளையில், மேற்கட்டமைப்பு ஒப்பீட்டளவிலான சுதந்திரத்துடன் அடித்தளத்தின் மீது தாக்கத்தைச் செலுத்துகிறது. இங்கு எது தீர்மானிக்கும் பாத்திரத்தை வகிக்கிறது, எது தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மார்க்சியம் தெளிவாக வேறுபடுத்தி விளக்கியுள்ளது. இவ்விரண்டையும் சமமான தீர்மானிக்கும் ஆற்றல்களாகக் கருதுவதற்கு மார்க்சியப் பொருள்முதல்வாதத் தத்துவத்தில் இடமில்லை.

மார்க்சிய மூலநூல்களை மீண்டும் ஆழமாக வாசித்து ஆராயும்போது, இந்த வேறுபாடுகளும் அவற்றின் தத்துவத்தின் முக்கியத்துவமும் இன்னும் தெளிவாகப் புரிகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்று கூறுவதன் மூலம், மேற்கட்டமைப்பின் தனித்தன்மையையும் அதன் செயல்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது என்று குற்றம்சாட்டுபவர்கள், தங்களது வாதத்திற்கு ஆதரவாக மேலும் ஒரு கருத்தையும் முன்வைக்கின்றனர்.

முதலாளித்துவம், தொழிலாளர்களை பொருளாதார வழியில் மட்டும் சுரண்டப்படுவதில்லை, கருத்தியல் வழியிலும் கட்டுப்படுத்துகிறார்கள். மேற்கட்டமைப்பின் தீர்மானகரமான பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதனால் மார்க்சியத்தில் இதனை சேர்க்க வேண்டும், அதாவது மேற்கட்டமைப்பும் அடித்தளத்தின் மீது தீர்மானிக்கிறது என்பதை சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இத்தகையக் கூற்றுகள் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துவதுடன் நீர்த்துப்போகவும் செய்கிறது.

மேற்கட்டமைப்பின் பாத்திரத்தை மார்க்சியம் நன்றாக அறிந்துள்ளது. இதை பிறர் சொல்லி புரிந்து கொள்ள வேண்டியநிலையில் மார்க்சியம் இல்லை.

மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய  “ஜெர்மன் சித்தாந்தம்” என்கிற தொடக்ககால நூலிலேயே தெளிவாக கூறியுள்ளனர்.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஆளும் கருத்துகளாக இருக்கின்றன. அதாவது, சமூகத்தின் பொருள்சார்ந்த சக்தியை ஆளும் வர்க்கம், அதே நேரத்தில் அதன் அறிவுசார்ந்த சக்தியையும் ஆளும் வர்க்கமாக இருக்கிறது. பொருள்சார்ந்த உற்பத்திக்கான சாதனங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கம், அதே நேரத்தில் சிந்தனைசார்ந்த உற்பத்திக்கான சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதன் காரணமாக, பொதுவாகச் சொல்லப்போனால், சிந்தனைசார்ந்த உற்பத்திக்கான சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துகள் அந்த ஆளும் வர்க்கத்தின் கருத்துகளுக்கு உட்பட்டவையாகின்றன.

ஆளும் கருத்துகள் என்பவை மேலாதிக்கம் செலுத்தும் பொருள்சார்ந்த உறவுகளின் கருத்துநிலை வெளிப்பாடுகளைத் தவிர வேறொன்றுமல்ல. அதாவது, மேலாதிக்கம் செலுத்தும் பொருள்சார்ந்த உறவுகள் கருத்துகளாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. எனவே, ஒரு வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக ஆக்கும் உறவுகளே இவை; அதாவது, அந்த வர்க்கத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் உறவுகளாகும்."

(ஜெர்மன் சித்தாந்தம்)

ஆதிக்க வர்க்கத்தில் மேலாதிக்கக் கருத்துகளை மார்க்சியம் புரிந்து கொள்ளவில்லை என்கிற பின்னை மார்க்சியம் வைக்கின்ற குற்றச்சாட்டு பொய்யானதும் அவதூறானதும் ஆகும்.

அடுத்து, பேராசிரியர் இரா.முரளி தமது நூலில், மார்க்சியத்தைப் பொருளாதாரக் குறைப்புவாதமாக (Economic Reductionism) விளக்குவதைப் பார்ப்போம்.

"மார்க்சியத்தின் வலிமை முதலாளித்துவ உற்பத்தி முறையின் சுரண்டல் உறவுகளை வெளிப்படுத்துவதில் உள்ளது. மூலதனச் சேர்க்கை (capital accumulation), உழைப்புச் சக்தி (labour-power), சுரண்டல், வர்க்கப் போராட்டம், உற்பத்தியின் சமூகமயமாக்கல், பொருளாதார நெருக்கடி ஆகிய கருத்துகள் இல்லாமல் நவீன முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. பாலிபர் இவற்றில் எதையும் கைவிடுவதில்லை. அவரது விமர்சனம் வேறொரு இடத்தில் தொடங்குகிறது: வர்க்க உறவுகளால் சமூகத்தின் அனைத்து முரண்பாடுகளையும் விளக்கிவிடும் பொருளாதாரக் குறைப்புவாதம்." (223)

பின்னை மார்க்சியர்கள், சமூகத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளையும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் மார்க்சியம் விளக்குவதால், அதை பொருளாதாரக் குறைப்புவாதம் என்று விமர்சிக்கின்றனர்.

மார்க்சியம் சமூகத்தில் உள்ள எல்லா முரண்பாடுகளையும் ஒரே மாதிரியாகக் கருதுவதில்லை. பொருளாதார அடித்தளத்திற்கும் அரசியல், கருத்தியல், பண்பாடு ஆகிய மேற்கட்டமைப்புகளுக்கும் இடையிலான உறவுகளை வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையில் விளக்குகிறது. மார்க்சியம் எந்த வகையிலும் பொருளாதாரக் குறைப்புவாதம் அல்ல. ஏனென்றால், அது சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் ஆராய்ந்த பிறகே, உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை அளிக்கிறது. எனவே, பொருளாதாரக் குறைப்புவாதத்தை விமர்சிப்பதற்காக மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுப்பது சரியானதல்ல. பொருளாதாரக் குறைப்புவாதத்தையும் மார்க்சியத்தையும் ஒன்றாகக் கருதுவது மார்க்சியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாகும்.

மார்க்சுக்கு முன்பான கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டு தத்துவங்களும் சமூகத்தைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் கருத்துமுதல்வாதத் தன்மைக் கொண்டதாக இருந்தது. இதனை விமர்சித்தே மார்க்ஸ் தமது கருத்தை உருவாக்கினார்.

மார்க்சின் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவம் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.

அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்று கூறுவது, சமூகம் பற்றிய பொருள்முதல்வாத அணுகுமுறையாகும். மாறாக, மேற்கட்டமைப்பே அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறுவது, சமூகம் பற்றிய கருத்துமுதல்வாத அணுகுமுறையாகும். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையில் ஒரு நடுநிலையான தத்துவப் பாதை என்பது கிடையாது. அதேபோல், இவ்விரு தத்துவக் கண்ணோட்டங்களையும் ஒன்றிணைக்கும் பொதுவான பாதையும் கிடையாது. இவ்விரு கண்ணோட்டங்களையும் சமரசப்படுத்தி, அவற்றுக்கு இடையில் ஒரு பொதுவான நிலைப்பாட்டை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் இறுதியில் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையை மறுத்து, கருத்துமுதல்வாதத்திற்கே சேவை செய்கின்றன. 

அடித்தளம் மேற்கட்டமைபைத் தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கட்டமைப்பு என்னதான் அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தினாலும் இறுதியில் பொருளாதாரமே அதாவது அடித்தமே தீர்மானகரமான பங்காற்றுகிறது. இதுவே அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையிலான இயக்கவியல் தொடர்பாகும். இந்தத் தொடர்பை எங்கெல்ஸ் தனது இறுதிக்காலக் கடிதங்களில் மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளார். இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு, எங்கெல்சின் இறுதிக்காலக் கடிதங்களைக் கட்டாயம் படிக்க வேண்டும். அக்கடிதங்கள் மாஸ்கோ பதிப்பின் தமிழாக்கத்தில் 12ஆம் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இதை மறுத்து அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் வினைபுரிகிறது என்று சிலர் நம்நாட்டிலும் கூறிவருகின்றனர். இந்தக் கருத்து பொருள்முதல்வாதமாகவும் இல்லாமல் கருத்துமுதல்வாதமாகவும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்து எப்படி விளக்கம் கொடுத்து, காப்பாற்ற முயன்றாலும் அது இறுதியில் கருத்துமுதல்வாதமாவே வெளிப்படும்.

அதுமட்டுமல்லாது வேறொரு குழப்பமும் நம்நாட்டில் நிலவுகிறது, ஒன்றை அடித்தளத்திலும் இருக்கிறது மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்கிற கூற்று. இது மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டையே கொச்சைப்படுத்துவதாகும்.

அந்தக் கருத்தை இங்கே சாதியை மையமாகக் கொண்டு பார்ப்போம்.

சாதி என்பது சமூகத்தில் நிலவும் ஓர் உண்மையான சமூக உறவாகும். அதை ஆராயும்போது, அதன் பொருளாதார அடிப்படையையும், அரசியல், சட்டம், மதம், சடங்கு, பண்பாடு, கருத்தியல் ஆகிய தளங்களில் அது வெளிப்படும் தன்மையையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி ஆராய வேண்டும்.

அவ்வாறு சமூகத்தை முழுமையாக ஆராயும்போது, சாதியும் சமூகத்தின் பிற கூறுகளைப் போலவே உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடையது என்பதை மார்க்சியம் விளக்குகிறது. அதாவது, சாதி என்பது தனித்துப் பிரிந்து இயங்கும் ஓர் அமைப்பு அல்ல. அது நிலவும் பொருளாதார உறவுகளுடனும் உற்பத்தி முறையுடனும் தொடர்பு கொண்டுள்ளது. உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் சாதிய உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சாதியைப் புரிந்துகொள்வதற்கும் அதன் வரலாற்றுத் தோற்றம், வளர்ச்சி, சமூகத்தில் அது வகிக்கும் பங்கு ஆகியவற்றை ஆராய்வதற்கும் உற்பத்தி உறவுகளுடனான அதன் தொடர்பைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதுதான் மார்க்சியப் பார்வை

சாதி அடித்தளத்திலும் இருக்கிறது, மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்று கூறுவது, சாதியத்தை அடித்தளம்–மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் மூலம் விளக்க முடியாது என்பதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கூற்று பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாதத்தையும் இணைக்கும் போக்காகவும் இருக்கிறது.

சாதி அடித்தளத்திலும் மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்று முடிவு செய்வது சரியான மார்க்சிய அணுகுமுறையாகாது. ஏனெனில், சாதி என்பது ஒரு சமூக நிகழ்வு. அது பொருளாதார அடித்தளத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள், சொத்துடைமை உறவுகள், உழைப்புப் பிரிவினை ஆகியவற்றுடன் தொடர்புகொண்டுள்ளது. அதேவேளையில், அரசியல், சட்டம், மதம், சடங்கு, பண்பாடு, கருத்தியல் ஆகிய தளங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இந்த வடிவங்களை எவ்வகையிலும் தீர்மானகரமான பாத்திரம் வகிக்க முடியாது என்றே மார்க்சியம் கூறுகிறது.

அடித்தளம் தீர்மானிக்கும் நிலையிலும் மேற்கட்டமைப்பு தாக்கம் செலுத்தும் நிலையிலும் இருக்கிறது. இதனை அடித்தளம் மேற்கட்டமைப்பும் பரஸ்வரம் வினைபுரிகிறது என்று கூறுவபவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சாதி பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் எவ்வாறு அணுகுகிறது, கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் எவ்வாறு அணுகுகிறது என்பதை வேறுபடுத்திப் பார்ப்போம். இவ்விரு அணுகுமுறைகளுக்கும் இடையிலான அடிப்படையான தத்துவ வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

பொருள்முதல்வாதம் புறநிலை யதார்த்தத்தையும், மனிதர்களின் பொருள்சார்ந்த வாழ்க்கை நிலைமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமூக நிகழ்வுகளை விளக்குகிறது. கருத்துமுதல்வாதம் கருத்துக்கள், சிந்தனைகள் அல்லது ஆன்மீகக் காரணிகளுக்கு முதன்மை கொடுத்து விளக்குகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தத்துவ அணுகுமுறைகள். சாதியதியின் தோற்றத்தையும் மறைவையும் அதன் அடித்தளமான நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் காண்பது பொருள்முதல்வாத அணுகுமுறை, மேற்கட்டமைப்பில் பார்ப்பது கருத்துமுதல்வாத அணுகுமுறை ஆகும்.

இதற்கு மாறாக, சாதி அடித்தளத்திலும் இருக்கிறது மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்பது பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாதத்தையும் சேர்த்துக் குழப்பும் போக்காகும்.

இந்தியாவில் நிலவும் சாதியமைப்பை மார்க்ஸ் பொருள்முதல்வாதப் பார்வையிலிருந்தே அணுகியுள்ளார். நாமும் அதே அடிப்படையில் சாதியமைப்பை விரிவாக ஆராய வேண்டும். இந்த அணுகுமுறையைப் பின்பற்றி கோசாம்பி, சட்டோபாத்யாயா, நா. வானமாமலை போன்றோர் சாதியத்தை ஆராய்ந்து காட்டியுள்ளனர். மார்க்சிய வழியில் செல்ல விரும்புபவர்கள் இத்தகைய அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக, தெளிவற்ற குழப்பமான அணுகுமுறைகளைப் பின்பற்றினால், சரியான பாதையை அடையாளம் காண முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிக்க நேரிடும்.

பின்னை மார்க்சியம் என்கிற ஐரோப்பியப் போக்கு, மார்க்சியம் கூறுகிற முதலாளித்துவ சுரண்டலையும் குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அதனை தீர்ப்பதற்கான பொருளாதாரக் காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுக்கிறது. இதுதான் பின்னை மார்க்சியத்தின் குறைபாடாகும். முதலாளித்துவத்தில் உள்ள குறைபாடுகளை முதலாளித்துவ அறிஞர்களே ஏற்றுக் கொள்வார்கள், சுரண்டல் என்கிறதை மட்டும்தான் மறுப்பார்கள். 

முதலாளித்துவ சுரண்டலுக்கும் குறைபாடுக்கும் தீர்வாக மார்க்ஸ் கண்டிபிடித்துக் கூறப்பட்டதை மறுப்பது எந்த வகையில் மார்க்சியமாகும். முதலாளித்துவத்தில் உள்ள குறைபாடுகளை முதலாளிகளே அறிந்திருக்கிறார்கள். அதனால், அந்தக் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. அந்தக் குறைபாடுகளுக்கான காரணங்களைப் பொருளாதார அடிப்படையில் விளக்கி, அவற்றைத் தீர்ப்பதற்கு மார்க்சியம் முன்வைக்கும் வழிமுறைகளையும் முடிவுகளையும் ஏற்றுக்கொள்வதே மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது என்பது மார்க்சியத்தை மறுப்பதே ஆகும். அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை மறுப்பதே ஆகும்.

நான் இவ்வாறு கூறுவது சிலருக்கு முதலில் வியப்பாகவோ, புரிந்துகொள்ளக் கடினமாகவோ இருக்கலாம். ஆனால், மார்க்ஸ் தனது கடிதத்தில் கூறியுள்ள கருத்துகளைப் படித்துப் பார்த்தால், நான் கூறுவதன் பொருளை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். யோசிஃப் வெய்டமையருக்கு  மார்க்ஸ்  1852 ஆண்டு மார்ச் 5 நாள், எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதியினை அப்படியே படிக்கிறன்.

“… என்னைப் பொருத்தவரையிலும், நவீன சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அல்லது அவர்களுக்கிடையே நடைபெறுகின்ற போராட்டத்தையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேர்ந்ததல்ல. எனக்கு வெகு காலத்துக்கு முன்பே முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுவழியிலான வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்ளமைப்பையும் வர்ணித்திருக்கிறார்கள்.

நான் புதியதாக என்ன செய்தேன் என்றால், அது கீழ்க் கண்டவற்றை விளக்கியது தான்:

1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.

3) இந்த சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும், வர்க்கபேதமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது."

ஆக மார்க்ஸ் கூறுவதிலிருந்து நமக்கும் தெளிவாகிறது என்னவென்றால்,  முதலாளித்துவத்தில் வர்க்க வேறுபாடு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வது மார்க்சியம் அல்ல, அதனைத் தீர்ப்பதற்கு மார்க்ஸ் புதியதாகக் கண்டுபிடித்ததை ஏற்பதே மார்க்சியம் ஆகும். இதனை மறுப்பது மார்க்சியத்தை மறுப்பதே ஆகும்.

மார்க்சியம் உலகில் தோன்றும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஏற்கெனவே தயாரான தீர்வுகளை வைத்திருப்பதாகக் கம்யூனிஸ்டுகள் கருதுவதில்லை. ஆனால், பழைய பிரச்சினைகளாக இருந்தாலும் புதிய பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றின் காரணங்களைக் கண்டறிந்து, தீர்வுகளைத் தேடுவதற்குத் தேவையான வழிகாட்டுதலை மார்க்சியம் வழங்குகிறது. மார்க்சியத்தின் இந்த வழிகாட்டும் திறனைச் சந்தேகிப்பவர்களே மார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

மார்க்சியம் வறட்டுச் சூத்திரவாதமல்ல, ஆனால் அது  அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகுவதற்கு வழிகாட்டியாக இருக்கிறது. இதனை லெனின் எவ்வாறு விவரிக்கிறார் என்பதை அவரது எழுத்துகளிலேயே பார்ப்போம்.

 

“மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார்செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாமல் இறுகிவிட்ட போதனையும் அல்ல. அது செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி. 

சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவுக்குத் திடீரென நிகழும் மாறுதல்களை மார்க்சியம் நிச்சயமாகப் பிரதிபலித்துக் காட்டும். ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பலவகையான ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால், மார்க்சியத்துக்கு உள்ளேயே ஏற்பட்ட மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. 

இந்தச் சிதைவை எதிர்த்து மூர்க்கத்தனமாகப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. மார்க்சியத்தின் அடிப்படைகளைக் காப்பதற்காக மூர்க்கத்தனமான, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையும் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.”

(மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்)

சமூகத்தில் எழுகிற புதியப் பிரச்சினைகளை மார்க்சிய வழியில் அணுகுவதே கம்யூனிஸ்டுகளின்  பணியே தவிர, மார்க்சிய அடிப்படையினை பின்னை மார்க்சியம் அல்லது பின்னை நவீனத்துவம் போன்று மார்க்சியத்தை கேள்வி கேட்பதல்ல.

முடிவாக பேராசிரியர் இரா.முரளி அவர்களின் நூலின் இறுதி அத்தியாயத்தைப் பார்ப்போம். இந்த அத்தியாயத்தின் தலைப்பு, பின்னை மார்க்சியம் உண்மையில் மார்க்சியம்தானா?

இதுவரை நாம் ஆராய்ந்து பார்த்த கருத்துகளிலிருந்தே இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொண்டிருப்போம். எனவே, இங்கே அதைப் பற்றி மீண்டும் விரிவாகப் பேசப்போவதில்லை. 

பேராசிரியர் இரா.முரளி அவர்களைப் பற்றிதான் பேச விரும்புகிறேன். அவர் தம் நூலின் முன்னுரையில் இந்த நூல் பின்னை மார்க்சியத்தைப் புகழ்வதற்காக எழுதப்படவில்லை, அதனை நிராகரிப்பதற்காகவும் எழுதப்படவில்லை என்று கூறியிருப்பதை நாம் எப்படிப் பார்க்க வேண்டும். அதற்கான பதில்தான் இந்த இறுதி அத்தியாயத்தில் காணப்படுகிறது.

பேராசியிர் இரா.முரளி அவர்கள், மார்க்சியத்தின் அடிப்படையான கருத்துகளை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு, "மார்க்ஸ்" என்ற பெயரை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஒரு சிந்தனை மார்க்சியமாகிவிடாது என்று தெளிவாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறுகிறார்.

"இந்த இடத்தில் பின்னை மார்க்சியத்தின் மீது வைக்கப்படும் மிகக் கடுமையான கேள்வி எழுகிறது: எல்லாவற்றையும் மறுவாசித்த பிறகு மார்க்சியத்தில் எது மீதமிருக்கிறது? வர்க்கம் தேவையில்லை என்றால்? மூலதனம் வெறும் பல்வேறு அடையாளங்களுள் ஒன்றாக மட்டுமே கருதப்பட்டால்? உற்பத்தி உறவுகள் அரசியல் கதையாடலின் ஒரு விளைவாக மட்டுமே மாற்றிவிட்டால்? சுரண்டலின் பொருளாதார அடித்தளம் அரசியல் மொழிக்குள் கரைந்துவிட்டால்? புரட்சி என்பது புதிய அடையாளங்களை உருவாக்கும் ஜனநாயக செயல்முறையாக மட்டுமே மாற்றிவிட்டால்? இத்தகைய நிலையில் “மார்க்சியம்” என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு என்ன பொருள் இருக்கும்?" (315)

-என்று பேராசிரியர் இரா.முரளி அவர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியமானதாகும்.

ஆனால் பின்னை மார்க்சியம் அல்லது பின்னை நவீனத்துவம் இத்தகையை விமர்சனத்தைக் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மையாகும். பேராசிரியரிடம் காணப்படும் இந்த நல்ல எண்ணம் பின்னை மார்க்சியத்தில் கிடையாது என்பதே உண்மையாகும்.

பேராசிரியர் இரா. முரளி அவர்களும் பின்னை மார்க்சியவாதிகளும் கூறுவதுபோல் மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்து ஆராய்ந்தால், பின்னை மார்க்சியவாதிகள் சுட்டிக்காட்டும் குறைபாடுகள் மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இல்லை என்பது தெளிவாகிறது. 

சமூகத்தை ஒரே கோணத்தில் மார்க்சியம் அணுகுவதில்லை. பொருளாதார உறவுகள், வர்க்க உறவுகள், அரசியல், கருத்தியல், பண்பாடு உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளையும் முரண்பாடுகளையும் வரலாற்று அடிப்படையில் ஆராய்கிறது. சமூகத்தில் நிலவும் புதிய பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் ஆராய்வதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது. எனவே, மார்க்சியம் புதிய சமூகப் பிரச்சினைகளை விளக்க முடியாதது என்ற வாதம் அதன் அடிப்படைக் கோட்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் விளைவாகும்.

‘‘பின்னை மார்க்சியம் அறிமுகம்’’ என்ற நூலைப் பற்றிய எனது எதிர்வினையைத் தனி நூலாகவே எழுதியுள்ளேன். அதில், பின்னை மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்துகள், அதன் தத்துவ அணுகுமுறை, மார்க்சியத்தின் மீதான அதன் விமர்சனங்கள் ஆகியவற்றை விரிவாக எழுதியுள்ளேன். மேலும், அவற்றுக்கு மார்க்சியக் கண்ணோட்டத்தில் எதிர்வினையாற்றுவதற்கே முதன்மை அளித்துள்ளேன்.

பின்னை மார்க்சியத்தின் கருத்துகளை விமர்சன வழியாக ஆராய்வதும், மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கி அவற்றின் பொருத்தத்தை எடுத்துக்காட்டுவதும் அந்த நூலின் முதன்மையான நோக்கமாகும்.

ஆனால், இங்கு நான் அந்த நூலைப் பற்றிப் பேசும்போது வேறொரு பார்வையினையும் சேர்துக்கொள்கிறேன். 

நூலாசிரியரான பேராசிரியர் இரா. முரளி அவர்களின் அணுகுமுறை, அவர் முன்வைக்கும் கருத்துகள், மார்க்சியத்தைப் பற்றிய அவரது புரிதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே எனது கருத்துகளை முன்வைக்கிறேன். அதாவது, பின்னை மார்க்சியத்தை விமர்சிப்பதுடன், பேராசிரியர் இந்த நூலில் எவ்வாறு அணுகுகிறார், எத்தகைய கேள்விகளை எழுப்புகிறார், அவற்றின் வழியாக மார்க்சியத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முயற்சிக்கிறார் என்பதற்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

எனவே, இந்த இரண்டு எழுத்துகளையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. பின்னை மார்க்சியத்திற்கு எதிர்வினையாக எழுதப்பட்டுள்ள நூல் ஒரு விரிவான மார்க்சிய விமர்சன ஆய்வு. இங்கு நான் முன்வைக்கும் கருத்துகள், பேராசிரியரின் நூலை அறிமுகப்படுத்துவதோடு, அவரது அணுகுமுறையை விளக்கி மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டவை. இரண்டின் நோக்கமும் அணுகுமுறையும் வேறுபட்டவை. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டால், இங்கு நான் முன்வைக்கும் கருத்துகளின் நோக்கத்தையும் வரம்பையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

பேராசிரியர் இரா. முரளி அவர்கள், மார்க்சிய அடிப்படையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது என்ற எச்சரிக்கையை இந்நூலில் முன்வைக்கிறார். ஆனால், இந்தத் தெளிவு பின்னை மார்க்சியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பின்னை மார்க்சியம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை, இங்கு முன்வைக்கப்பட்ட விளக்கங்களையும் விமர்சனங்களையும் பரிசீலிக்கும்போது பேராசிரியர் உணர்ந்து, தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்வார் என்றே நான் கருதுகிறேன்.

இங்கு முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களின் அடிப்படையில் மார்க்சியத்தைப் பேராசிரியர் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அவ்வாறு ஆராயும்போது, பின்னை மார்க்சியர்கள் மார்க்சியத்தின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பேராசிரியர் மட்டுமல்லாமல், பின்னை மார்க்சியத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் மார்க்சியத்தை மீண்டும் ஆழமாகப் படித்து, அதன் அடிப்படைக் கோட்பாடுகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த வகையில், இத்தகைய கருத்தியல் விவாதத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என்.சி.பி.எச். பதிப்பு நிறுவனத்திற்கும் பேராசிரியருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியரின் இந் நூலும் என்சிபிஎச் நிறுவனத்தின் பதிப்புரையும் பின்னை மார்க்சியம் மீதான விவாதத்துக்கு நம்மை அழைத்திருக்கிறது. ஆரோக்கியமான விவாதம் மார்க்சியத்தை வலுப்படுத்தவே செய்யும். அதனால் பலரும் அவரவர் பார்வையில் விவாதத்தைக் கொண்டு செல்ல வேண்டும். நான் எனது பார்வையில் விவாதத்தை முன்வைத்துள்ளேன். மற்ற தோழர்களும் இதில் இறங்க வேண்டும்.

விவாதிப்போம் வலுபெறுவோம் என்று கூறி எனது திறனாய்வினை முடித்துக் கொள்கிறேன்.


-அ.காஈஸ்வரன்