போர்க்காலத்தில் சி பி ஐ (எம் )-இன் துரோகம் - தேசவிரோதிகளின் தேசியவாதம்
ஷாட்மன் அலி கான்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும் .
விவேகமும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட எவரும் குறைந்தபட்சம் இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.
ஆனால் இப்போதும் கூட, எல்லையோரங்களில் வன்முறை குறித்த கவலை தரும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
போர்வெறி சற்றும் தணியாமல் தொடரும் வேளையில், அணு ஆயுதம் தாங்கிய இரு நாடுகளுக்கிடையேயான அதிகரித்து வரும் பதற்றத்திற்கு எதிராக இரு தரப்பிலிருந்தும் சில எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன .
ஆளும் வர்க்கத்தின் தேசியவெறிக்கு துணை நிற்பது(ஆக்ரோஷமான தேசியவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது,) குறிப்பாக இன்றைய இந்திய சூழலில், மிகவும் ஆபத்தான காரியமாகும். ஏனெனில் ஹிந்துத்துவாவால் வடிவமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய தேசபக்திக்கான வரையறை, முழுமையான, நிபந்தனையற்ற விசுவாசத்தையே கோருகிறது. அதனுடன் ஒத்துப் போகாத எவரும் உடனடியாக 'தேசத்துரோகி' என்று முத்திரை குத்தப்படுகிறார்.
ஆனால் போர்க்காலத்தின் போது, இந்த 'தேச விரோகிகள்' என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள், தேசியவெறியர்களைப் போலவே செயலாற்றத் தொடங்கினால் என்ன ஆகும்?
ஆளும் பாஜகவால் அடிக்கடி "தேச விரோதிகள் " என முத்திரை குத்தப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சி.பி.எம். (CPI(M)), அண்மையில் நடந்த மோதலின் போது, போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை மௌனம் காக்கத் தீர்மானித்தது. இதைவிட மோசமாக, 'ஆபரேஷன் சிந்துர்' குறித்த அதன் அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக, மார்க்சிஸ்ட் கட்சி போருக்குத் மறைமுக ஆதரவை அளித்தது. இதன் மூலம், சி.பி.எம். (CPI(M)) ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டதுடன், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாதபோதும் லெனின் போன்ற தலைவர்கள் பின்பற்றிய சர்வதேச போருக்கு எதிரான உன்னதமான பாரம்பரியத்தையும்(ஜிம்மர்வால்ட் மாநாடு –Zimmerwald conference) துச்சமாக கருதி புறக்கணித்துள்ளது.
இவை அத்தனையையும் கடந்த பிறகு, சி.பி.எம். கட்சியின் சிலமுக்கியமான உறுப்பினர்கள், இறுதியாக "உடனடியாக மோதலை கைவிடுக" (“DE-ESCALATE NOW” )போன்ற முழக்கங்களைப் பயன்படுத்தத் துவங்கினர். “தேச விரோதிகள் ”என்று அழைக்கப்பட்டவர்கள், தேசியவாதிகளைப் போலவே செயல்படும் இவர்களின் இந்த திடீர் மாற்றம், போருக்கு எதிரான ஒரு உண்மையான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் போன்றே காட்சியளித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.(எம்)) மே 7, 2025 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, கட்சி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், அனைத்து கட்சி கூட்டத்தில் சி.பி.ஐ.(எம்) சார்பாக ஜான் பிரிட்டாஸ் “நிலைமை மேலும் மோசமாகாதபடி அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தது. அது உண்மை என்றால், அந்த ஆழமான எண்ணம் ஏன் முதற்கட்ட அறிக்கையிலேயே வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை? அந்த அறிக்கை வெறும் சில விவரங்களை மட்டும் தவிர்த்து விடவில்லை -அது போருக்கு நேரடியான ஒத்துழைப்பு வழங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்.
இத்தகைய நேரங்களில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி போருக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள மறுக்கும் போது, அந்த மௌனமே ஒப்புதலாக மாறுகிறது.
இது ஏதோ தவறாக நடந்த தனிப்பட்ட சம்பவமல்ல. இது அந்தக் கட்சி நகரும் உண்மையான அரசியல் திசையை வெளிக்கொணருகிறது.
காங்கிரஸ் கட்சி கூறுவதையே மீளச்சொல்லிக்கொண்டே, கம்யூனிஸ்ட் சொற்களையும் சின்னங்களையும் பயன்படுத்தினால், சில விசுவாசிகளை திருப்தி செய்ய இயலும். ஆனால் கவனமாக பார்த்து வருபவர்கள் யாரும் இந்த நிலைமையைப் பார்த்துவிட்டு – இது ஒரு கொள்கையளவிலான சீர்குலைவு என்பதை தவிர வேறு எதுவும் சொல்லமுடியாது. சிபிஐ(எம்) தற்போது “பாதுகாப்பான” எதிர்ப்புப் பாதையை தேர்வு செய்திருப்பதாகஉணர்கிறது.
இந்துதுவ அரசியலுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டு வரும் தேசியவாத பொதுபுத்தியுடன் நேரடியாக மோதுவதைத் தவிர்க்கிறது.
போரை எதிர்ப்பதைவிட தாம் மக்கள் மத்தியில் அந்நியமாகி விடுவோமோ (தனிமைப்பட்டுவிடுவோமா) என்று கட்சி அதிகமாகப் பயப்படுவது போல உள்ளது. எதிர்த்து நின்று போராடுவதைவிட ஒத்துப்போவதையே விரும்புகிறது.
ஒருவேளை, போருக்கு எதிரான நிலை மக்கள் மத்தியில் உருவாகும் வரை கட்சி காத்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் அப்படியேதும் நடக்கவில்லை. போருக்கு எதிரான குரல் ஒருபோதும் பிரபலமடையவில்லை —முதல் உலகப்போருக்கு எதிராக லெனின் பேசினபோதும், ரோசா லக்ஸம்பர்க் எதிர்த்தபோதும், அதுவே நடந்தது.
வளர்ந்துவரும் தேசியவெறி மற்றும் அதிகரிக்கும் போர்வெறி நிலவும் தற்போதைய சுழலில் போர் எதிர்ப்பு கருத்து எவ்வித வரவேற்பையும் பெற முடியாது. மேலும், ஊடகங்களையும் மக்களின் கருத்துகளையும் கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரத்தை எதிர்க்க நாட்டின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியே தயங்கும் போது , மக்கள் போருக்கு ஆதரவாகத்தான் தள்ளப்படுவார்கள். மிகவும் மோசமான நிலைமை என்னவென்றால், தன்னை ஒரு புரட்சிகரக் கட்சியாகக் கூறிக்கொள்ளும் கட்சி, ஆளும்வர்க்கத்தின் தேசியவாத குரலையே ஒலிக்க தொடங்கும் போது பின்வரும் நாட்களில் சத்தமில்லாமல் தனிமைப்பட்டுவிடும்.
சிபிஐ(எம்)மிடம் இருந்து வரும் இந்த மாற்றம் பாகிஸ்தானிலுள்ள பல தோழர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தைக் ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் இந்த சரிவு திடீரென ஏற்பட்டது அல்ல. சிபிஐ(எம்)-இன் வீழ்ச்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. இப்போது, “பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்” என்ற ஒரே ஒரு நேர்மையான வாசகத்தையே கூட இந்தக் கட்சி தைரியமாகச் சொல்ல முடியாத நிலைக்கு வந்திருக்கிறது. அந்த எளிய வாசகம்கூட இன்று “தீவிரமானது”, “துணிச்சலானது ”, “அதிக அபாயகரமானது” எனக் கருதப்படுகிறது. எனவே, கட்சி வெறும் பொதுவான, மங்கலமான வார்த்தைகளில் பேசுகிறது. இது 1962-இல் இருந்த சிபிஐ(எம்) அல்ல. அப்போது, தேசியத்தைவிட, தொழிலாளர் வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதன் தலைவர்கள் சிறைசெல்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால் , ஜனநாயகம், சுதந்திரம், மக்களின் உரிமைகள் என அனைத்தையும் அழிக்க அரசு தன்னுடைய ஆயுதங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிற இந்நேரத்தில், கட்சி இத்தகைய பலவீனமான அறிக்கைகளையே வெளியிடுகிறது,
அரிவாள்-சுத்தியல் சின்னங்கள், இந்திய இடதுசாரி அரசியல் இன்னும் ஏதோ புரட்சிகரமானதாக இருப்பதுபோல பாகிஸ்தானில் உள்ள தோழர்களை நம்ப வைக்கக்கூடும். ஆனால் அது உண்மை அல்ல. கட்சி தனது புகைப்படங்கள்மீதும் சின்னங்களும் மீதும் அதிக கவனம் செலுத்தும் பொழுது, அதன் அரசியல் உள்ளடக்கமற்றதாகவே உள்ளது . இதுபோன்ற முக்கியமான தருணங்களில் இது தெளிவாகக் காணப்படுகிறது.
இன்றைய இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் படோடமான மார்க்சிய சொற்களையும், சிக்கலான கோட்பாடுகளையும் பேசி வந்தாலும்,
லெனின் தனது ‘சோசலிசமும் போரும்’ என்ற படைப்பில் எச்சரித்த எதிர்ப்புரட்சி சக்திகளின் நிலைப்பாடுகளுக்கு மிக நெருக்கமான நிலைப்பாட்டையே பேசி வருவதை பார்க்க முடிகிறது.
லெனின் எழுதியிருந்தார்:
“வர்க்க போராட்டத்திற்கு பதிலாக வர்க்கங்களின் ஒத்துழைப்பு, புரட்சிகர போராட்ட முறைகளை கைவிடுவதும் ஆளும் வர்க்கத்திற்கு நெருக்கடியான சூழல்களை உண்மையான புரட்சிகர மாற்றத்திற்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆட்சி வகிக்கும் வர்க்கத்துடன் சேர்ந்து செயல்படுவதன் உதவிசெய்வதன் உள்ளடக்கம் என்பது “சந்தர்ப்பவாதத்தின், சமூக தேசியவெறியின் ஒரே மாதிரியான சித்தாந்த அரசியல் உள்ளடக்கத்தையே கொண்டுள்ளன.”என்பதையே காட்டுகிறது.
நாம் எந்தவொரு கட்சியையும் சாராதவர்களாததால் , இப்படியொரு சூழ்நிலையில் எச்சரிக்கையாய் நடக்க வேண்டிய அவசியமே இல்லை.
கட்சிகள் சொல்வதற்கு தயங்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது நம்முடைய கடமை: "போர் வேண்டாம், அமைதியே வேண்டும்!" — மக்களிடையே எவ்வளவு பிரபலமற்றதாக இருந்தாலும் கூட. எப்போதும் இதுவே நம் கோரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள உழைக்கும் மக்களுக்கு தேவையானது நிலம், உணவு மற்றும் அமைதியே தவிர போரல்ல!
இந்தப்போர் "இடைநிறுத்தம்" யாருக்குப் பயன் அளிக்கிறது? இரு நாடுகளின் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கே பயனளிக்கிறது. இது இந்தியாவில் பாஜகவின் தீவிரமான தேசியவாதத்துக்குப் புதிய உத்வேகமாக செயல்படுகிறது; பாகிஸ்தானில் இராணுவத்தின் பிடியை மேலும் இறுக்குகிறது. ஆனால், இதனால் படுகொலைசெய்யப்படுபவர்கள் யார்? சாதாரண மக்கள் தான் — தொழிலாளர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள் — அவர்கள் தான் துன்பத்தையும் வன்முறையையும் எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நாம் முட்டள்களாகியிருக்க கூடாது. நம் ஆதரவு மக்களுக்கே!! - மக்களிடமே செல்ல வேண்டும் — தங்களைப் மட்டுமே பாதுகாத்துக்கொள்ள விரும்பும் கட்சிகளின் பின்னால் செல்லக் கூடாது.
ஏனெனில், நாளை போரின் பெயரில் ஜனநாயகம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டாலும், அந்தக் கட்சிக்கு ஒன்றும் ஆகாது. கூடவே, “முழுமையான ஆதரவு” என்ற மற்றொரு விளம்பர அறிக்கையைப் பிறப்பிக்க கூட அக்கட்சி தயங்காது. ஏனெனில், சி பி ஐ (எம்) யின் சமீபத்திய அரசியல் ஆவணத்தின் படி, பாஜக பாசிசக் கட்சி அல்ல — அது வெறும் “நவ-பாசிச பண்புகள் கொண்டது” என்பதே நிலைப்பாடு.
சரி. இப்போது அவர்கள் அளிக்கின்ற போர் ஆதரவு பாசிசிம் வெறும் ஆரம்ப நிலையிலிருப்பதால்தான் என்று சொல்வார்களா என்ன? உண்மையான எதிர்ப்பு என்பது பாசிசம் முழுமையாக உருவெடுக்கும் போதுதான் வருகிறது எனில், அது தாமதமான நீதிதானே.
அந்த நாள் வரைக்கும், நமது முழக்கம் மாறாது: நிலம், உணவு, அமைதி.
பழைய புரட்சிகளின் சவால்களை இன்றும் நாமே எதிர்கொள்கிறோம்! போரின் சத்தத்தில் புதைந்தாலும், அமைதியின் தேடல் எப்போதும் மக்களின் மொழியிலேயே ஒலிக்க வேண்டும்
(சத்மான் அலி கான்: கேரளாவிலுள்ள கட்சி சாரா எழுத்தாளர்)
- செந்தாரகை (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.frontierweb.in/post/cpi-m-s-war-time-betrayal