மக்களிடம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகளிடமும் செல்வாக்கு இழந்த சிபிஐ சிபிஎம் கட்சிகள்
துரை. சண்முகம்
சி.பி.ஐ., சி.பி.எம். கேட்ட ஆறு சீட்டுகளை கூட கொடுத்து திமுக மதிக்கவில்லை என்று பலருக்கும் குமுறல் இருக்கிறது.
கூடவே தேமுதிக, காங்கிரசை விட அவ்வளவு குறைந்து போய்விட்டார்களா? கம்யூனிஸ்டுகள்! என்று ஆதங்கமும் இருக்கிறது.
மக்களுக்காக போராடுவது கடந்த காலங்களில் அந்த இயக்கத்தின் தோழர்கள் செய்த அளப்பரிய வரலாற்று தியாகம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த வருத்தம் பலருக்கும் மேலிடுகிறது.
ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்தால் கம்யூனிஸ்டுகளின் பெருமைமிகு காலம் என்பது தேர்தல் பாதைக்கு வெளியே அது நிலபிரபுத்துவத்தையும் முதலாளிகளையும் எதிர்த்து பெறப்பட்ட களத்தின் வரலாற்று கட்டமாக இருக்கிறது.
என்றைக்கு தேர்தல் அரசியலில் மத்தியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தேமுதிக போன்ற பாட்டாளி வர்க்க கொள்கையற்ற கொள்கைக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைத்தே வாழ ஆரம்பித்ததோ அன்றே மக்களிடமும் அதன் செல்வாக்கு இழந்தது! ஆளும் கட்சிகளிடமும் மதிப்பு குறைந்தது.
இதில் திமுகவை முதன்மையாக குறை சொல்வதற்கு ஏதுமில்லை. ஒரு முதலாளித்துவ- கார்ப்பரேட்மய கட்சி என்ற வகையில் அது தேர்தல் கணக்கின்படி வாக்கு வங்கி, தங்களது சின்னத்தில் அதிகப்படியான நபர்களை பிடித்து போடுவது, சாதி ஓட்டுகளை வாரிக் கொண்டு வருவது, பேரம் பேசுவதற்கு இலகுவான தன்மை கொண்ட கட்சிகளுக்கு முதலிடம் தருவது
எனும் ஆட்சி அதிகார கணக்கின்படி அதன் பாதையில் தெளிவாக இருக்கிறது.
நேற்று முளைத்த கட்சி எல்லாம் தனித்து நின்று தங்கள் வாக்கு வங்கியை தேடுவதற்கான முழக்கங்களை கவர்ச்சிகளை முன்வைத்து அரசியல் களத்தில் பரவலாகிறது.
நூற்றாண்டுகளை கண்ட கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை லட்சியப் பாதையில் தேர்தலை தனித்து நின்று மக்களிடம் சந்திக்க தெம்பற்றுப் போனதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம். இந்த வருத்தத்தை திமுக தந்ததாக நினைப்பது அரசியலற்ற கழிவிரக்க வாதம்.
திமுக பாஜகவை எதிர்க்கவும் பாசிசத்தை எதிர்க்கவும் நான் தான் ஆள் எனும்! சித்திரத்தை எழுப்புவதற்கு சேர்ந்து வேலை செய்து கொண்டு நாங்கள் ஒரு பொருட்டு இல்லையா? என்று கேட்பது அவலம்.
காரணம் பாசிசத்தை எதிர்ப்பதற்கான எந்த கொள்கை திட்டமும் ஒப்பந்த வரைவும் இல்லாமல் பொதுவாக தேர்தல் கூட்டாக மற்ற கட்சிகளை மெயின்டய்ன் செய்கிறது திமுகவின் செயல் தந்திரம். இதை ஜனநாயகமாக ஒரு கூட்டு ஒப்பந்தத்திற்கு திமுகவை வரவழைக்கும் எந்த அரசியல் வேலையையும் கூட செய்யாமல் கூடவே போனால் தருவதை வாங்கிக் கொண்டு வர வேண்டியதுதான்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை வளர விடாமல் செய்வதில் கடந்தகால பங்காற்றியது திமுகவின் வரலாறு. அதன் நிழலில் போய் தேர்தலில் நின்று வளர்ந்து விடலாம் என்பதெல்லாம் அம்புலிமாமா கதைக்கே அடுக்காத கற்பனைகள்.
இன்னும் சொல்லப்போனால் மதவாத சக்திக்காக திமுகவை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் சிபிஐ ,சிபிஎம் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே கூட வேறுபட்ட அணுகுமுறையை திமுக கையாளும்.
விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கி மற்றும் கள வேலைகளுக்காக சிபிஐ, சிபிஎம் கோரிக்கை நிலைகளை விட கூடுதலாக ஒரு சில சீட்டுகளை கூட கொடுக்கலாம்.
இந்த ஓட்டு சீட்டு தேர்தல் அரசியல் கணக்கீடுகளின் மூலம் இவர்களுக்கு உள்ளே கூட சமநிலையற்ற அரசியல் விகிதங்களை உருவாக்க திமுக விரும்பும்.
முதலாளித்துவக் கட்சிகள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தில் தற்கால நிலைமைகளுக்கு மட்டுமல்ல எதிர்கால கணக்கிலும் அரசியல் சக்திகளை வகைப்படுத்தியும் பிளவு படுத்தியுமே தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.
முதலாளித்துவ பொருளாதார நிகழ்வில் மட்டுமல்ல அதன் அரசியல் நிகழ்வு போக்குகளிலும் அடுத்தது கெடுத்தும் அடுத்ததை விழுங்கியும் தன்னை வளர்த்துக் கொள்ளவே அது முனையும்.
ஆகவே திமுக தன்னுடைய அரசியல் சித்தாந்த கொள்கையின் படி நடை போடுகிறது.
தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள்தான் தங்கள் அரசியல் சித்தாந்தத்திற்கு ஏற்ற நடைபழகவில்லை.
இதுவெல்லாம் புரியாதது மாதிரி நடிப்பதும், தங்களுக்குரிய தத்துவ அரசியல் சித்தாந்தத்திலிருந்து தமக்கான தனித்தன்மை அரசியல் நடை இன்றி முடங்கிக் கிடப்பதும்தான் வருத்தத்திற்கும் சிந்தனைக்கும் உரிய விசயம்.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/963062023067261/?rdid=JCWA5GpSYWpIkwZQ
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு