மருத்துவ மாபியாக்களே மத்திய அரசை ஆட்டுவிக்கிறார்கள்!
அறம் இணைய இதழ்
மகத்தான இளைஞர் எழுச்சி எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மத்திய ஆட்சியாளர்களிடம்! வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தமாம்! ஆர்.எஸ்.எஸின் முரட்டுத் தளகர்த்தர் புதிய கல்வி அமைச்சராம்! நீட் மோசடிகளுக்கு காரணமான மூல வேர்களை பழுதில்லாமல் பாதுகாத்து, புதிய தந்திரோபாயங்களுடன் பாயவுள்ளது பாஜக அரசு; முழுமையான அலசல்;
மேன்மேலும் மூர்க்கமாக செயல்படவும், நடைபெற்ற குற்றங்களுக்கு பொறுப்பேற்காமல், யாரோ செய்ததைப் போலவும் அவர்களுக்கு சிறை, மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம், வினாத்தாள் கசிவை தண்டிக்க ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதன் மூலமாகவும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதாக நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்!
# தேர்வு மோசடியில் ஈடுபட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை!
# அபராதத் தொகை ரூ 50லட்சம் முதல் ரூ.10 கோடி!
# தேர்வு மோசடி வழக்குகளுக்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்!
நீட் தேர்வின் நோக்கமே கரன்ஸி நோட்டுகளை பார்க்கும்படியான டிசைனில் வைத்துவிட்டு, தவறிழைத்தால் கடும் தண்டனை என கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்! மருத்துவக் கல்வியை பெரும் வணிகமாக பார்க்கும் மனநிலையில் இருந்து எப்போது மத்திய ஆட்சியாளர்கள் விடுபடுகிறார்களோ, அப்போது தேர்வுகளை நடத்த கடுமையான சட்டங்கள் அவசியப்படாது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிஎன்ற தனியார் நிறுவனம் தான் இந்த தேர்வை நடத்துகிறது. இது தான் தலையாய குற்றமாகும்!அதாவது கறை படிந்த கார்ப்பரேட்களே இதை நடத்துகின்றனர், கல்வியாளர்களில்லை. தற்போதுமே கூட இந்த தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக கார்ப்பரேட்களுக்கெல்லாம் கார்ப்பரேட்டான இன்போசிஸ் நந்தன் நிலகணியை தலைவராக நியமித்துள்ளார்கள்!
மாநில அரசுகள் அதிகாரத்தில் மருத்துவ கல்வியை ஒப்படைத்து 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு அந்தந்த மாநில அரசுகளே கல்வியாளர் குழு அமைத்து தேர்வை வடிவமைத்து மருத்துவ தேர்வை நடத்த வாய்ப்பளித்தாலே 90 சதவிகித தவறுகள் முடிவுக்கு வந்துவிடும்.
மத்திய அரசு மருத்துவ கல்வியை ஹைஜாக் செய்து, அதற்கு நீட் தேர்வு என இல்லாத ஹைப் தந்து, சகலத்தையும் மருத்துவ மாபியாக்களிடம் தாரை வார்த்துவிட்டுள்ளதே குற்றம் செய்வதற்கான லைசென்ஸ் தானே!
இது மட்டுமா? அட இந்தியாவில் பல பள்ளிகளில் நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் நீட் கோச்சிங் சென்று படிப்பதற்காக பள்ளிக்கூடம் வராமலே அவர்களுக்கு வருகைப் பதிவு தரக்கூடிய நடைமுறைகளைப் பார்க்கும் போது, பள்ளி இறுதி ஆண்டு படிப்பை இப்படி அலட்சியப்படுத்தும் துணிச்சலை ஆட்சியாளர்களே அனுமதிக்கும் போக்கை என்னென்பது? நீட் கோச்சிங் சென்டர்களின் ஆண்டு வருமானம் என்பது சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கும் அதிகமாகும்.
நீட் தேர்வுக்கு முன்னும்,பின்னும் தனியார் மருத்து கல்வி கட்டணங்கள்;
நீட் (NEET) தேர்வு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு (அதாவது 2016-17 ஆம் கல்வியாண்டுக்கு முன்பு), தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டா இடங்களுக்கான அதிகாரப்பூர்வ ஆண்டுக் கட்டணம் ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை மட்டுமே இருந்தது.
நீட் தேர்வு அறிமுகமான பிறகு தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டா சீட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதே போல நீட் வருவதற்கு முன்பு மானேஜ்மெண்ட் கோட்டா 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக இருந்தது. ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் இதற்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுவே நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் ஆண்டுக் கட்டணம் ரூ.18 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பை முடிக்க ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை செலவாகிறது.
ஆக, இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர் நிலை பல்கலைக் கழகங்களும் ஆண்டுக்கு ரூ30,000 கோடிகள் வருமானம் ஈட்டுகிறார்கள்!
இதன் மூலம் தனியார் முதலாளிகள் கல்வி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதை சட்ட பூர்வமாக உறுதிபடுத்தவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட மருத்துவச் சந்தை!
நீட் தேர்வு அறிமுகத்திற்கு முன்பு 2014-ல் இந்தியாவில் மொத்தம் மருத்துவ கல்விக்கான இடங்கள் 51,348 தான். ஆனால் நீட் தேர்வுக்கு பிறகு 12 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ கல்விக்கான இடங்கள் 1,36.939 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 -ல் இருந்த மொத்த மருத்துவ கல்லூரிகள் 387 தான். ஆனால் 12 ஆண்டுகளில் அது தற்போது அவற்றின் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கு பெரியதொரு மவுசை உருவாக்கி, மருத்துவச் சந்தையை விரிவாக்கி, தனியார் முதலாளிகள் லாபம் ஈட்டவே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தனை அசூர வேகத்தில் மருத்துவ கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் அதிகரித்தற்கான காரணம் இதில், பெரு லாபம் ஈட்டத் தோதாக நீட் தேர்வு முறைகள் வணிக நோக்கில் வழிவகுத்து தந்தது தான்!
இத்தனை கோடிகள் புரளும் ஒரு துறையில் இந்த முதலாளிகள் எப்படி நியாயமான தேர்வுகளை அனுமதிப்பார்கள்?
கோச்சிங் சென்டர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கைகோர்த்து மருத்துவ மாபியாக்களை உருவாக்கி தான் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியை ஆட்டுவிக்கிறார்கள்! இவர்களின் நலன்களுக்கு செயல்படுவதற்கே மத்திய ஆட்சியாளர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பிறகு மாணவர்கள் நலனாவது, மண்ணாங்கட்டியாவது?
மத்திய கல்வி அமைச்சர் இவர்களுக்கு மண்டியிட்டு வேலை செய்வதையே தன் தலையாய பணியாகக் கருதுகிறார். தர்மேந்திர பிரதானுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி அவரைக் காட்டிலும் அராஜகமான வழிமுறைகளில் செயல்படவே ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி!
இதன் மூலம் வினாத்தாள் கசிவை செய்ய வைத்து பல கோடி கையூட்டு தருகிறார்கள். குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் தர வைத்து பல கோடி கையூட்டு தருகிறார்கள். இப்படி முறைகேடாக கருணை மதிப்பெண் தருவதையும் சட்டபூர்வமாக்கிவிட்டதும் தான் மாணவர்களின் கோபத்திற்கு காரணம். கருணை மதிப்பெண் யாருக்கு போடப்பட்டது? எதற்காக போடப்பட்டது? என்பதெல்லாம் ரகசியமாக பேணுகிறார்கள் என்றால்,
இவர்கள் அநீதியை துணிச்சலாக அரங்கேற்ற சட்ட பாதுகாப்பும் தரப்படுகிறது என்றால்,
இதனால் தான் நாம் நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்கிறோம்.
இதே போல தரமானவர்களை, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவே நீட் தேர்வு என்றார்கள்!
இதுவும் ஒரு அப்பட்டமான பொய்யாகும்.
நீட் தேர்வு ஒரு மாணவனின் சிந்திக்கும் திறனை அளவிடும் தேர்வு அல்ல. எது சரியான விடை என டிக்கடித்து தருவதே மொத்த தேர்வுமாகும். எந்த வினாவிற்கு எந்த விடையை டிக் செய்ய வேண்டும் என்பதை மனப்பாடம் செய்து கொள்பவர் வெற்றி பெறுகிறார். இதற்காகத் தான் ஆண்டுதோறும் 23 லட்சம் பேர் போட்டி இடுகின்றனர். நீட் தேர்வில் மொத்த மார்க்கில் 720 -க்கு 212 மார்க் பெற்றாலே பாஸ். அதுவும் தலித்தாக இருந்தால் 177 தான். நிர்வாக கோட்டாவில் சேர்வதற்கு 720 மதிப்பெண்ணுக்கு 105 மதிபெண் இருந்தாலே போதுமாம்.
ஆக, நீட் தேர்வு என்பதே அப்பட்டமாக காசு தருபவருக்கே கல்வியை உத்திரவாதப்படுத்தும் நோக்கத்தில் வந்ததாகும்!
இவ்வளவு குறைவான மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி எனும் போது தேர்ச்சி ஆகிறவர்கள் எண்ணிக்கையே 11,21,000 ஆகும்.
தேர்ச்சி ஆனாலும் கூட அதில் பத்தில் ஒருவருக்கே மருத்துவ சீட் கிடைக்கிறது. அதிலும் அரசு மருத்துவ கல்லூரியில் 63,296 இடங்கள் தான் இருக்கிறது எனும் போது, 18 பேரில் ஒருவர் தான் அந்த வாய்ப்பை பெற முடிகிறது. இத்தகு போட்டியில் வினாத்தாளை விற்பதன் மூலமும், கருணை மதிப்பெண் தருவதன் மூலமும் குறுக்கு வழியில் மருத்துவ சீட்டுகள் பறிபோவதால், நேர்மையாக கஷ்டப்பட்டு படித்து நன்கு தேர்வு எழுதியவர்கள் விரக்தியடைந்து, போராட்டங்கள் வெடித்தது.
இத்தனை பெரும் போராட்டங்களுக்கு பிறகு, ”அரசு அடி பணிந்தது. அமைச்சர் மாற்றப்பட்டார். ஆகா, வெற்றி!” என பல அப்பாவிகள் புளகாங்கிதம் அடைந்தார்கள்!
அதிகாரத்தில் உள்ளவர்கள் பின் வாங்கியது என்பது, முன்னைக் காட்டிலும் வேகமாக, மூர்க்கமாக குற்றங்களை செய்வதற்கு தோதாக ஒரு ஆர்.எஸ்.எஸ் அராஜகவாதியை அந்தத் துறைக்கு அமைச்சராக்கி உள்ளதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சாவித்திரி கண்ணன்
https://aramonline.in/27916/neet-exam-malpratices-bjp-govt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு